என் மலர்tooltip icon

    சிவகங்கை

    மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்.

    சிவகங்கை

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், சிவகங்கை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை செயற்பொறியாளர் (பகிர்மானம்) தலைமையில் காரைக்குடி கோட்டத்தில் நடைபெறுவதால் அக்கோட்டத்திற்குட்பட்ட மின் பயனீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் மேற்படி கூட்டத்தில் மின்வாரியம் சம்பந்தமான குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • சிங்கம்புணரியில் இலவச வீட்டுமனை வழங்கக்கோரி தாசில்தாரிடம் மனு கொடுக்கப்பட்டது.
    • வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் இந்த மக்கள் கடந்த 1 வருடமாக இலவச வீட்டு மனை கேட்டு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

    ங்கம்புணரி, ஜூன். 22-

    சிவகங்கை மாவட்டம் வடசிங்கம்புணரி விழுப்புனிக்களம், சிலோன் காலனி பகுதிகளில் வசிக்கும் 26 பேர் 2021 ஜூலை மாதம் ஆன்லைன் மூலம் இலவச வீட்டு மனை கேட்டு விண்ணப்பித்தனர். அது சம்பந்தமான எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாத காரணத்தால் சர்வதேச உரிமைகள் கழக மாவட்டத் தலைவர் பெரியய்யா என்ற ராஜா தலைமையில் சிங்கம்புணரி தாசில்தாரிடம் மீண்டும் ஒரு கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது. வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் இந்த மக்கள் கடந்த 1 வருடமாக இலவச வீட்டு மனை கேட்டு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. இந்த நிகழ்வில் மாவட்ட துணைத்தலைவர் துஸ்யந்தன், திருப்பத்தூர் தொகுதி பொறுப்பாளர் அன்பரசன், ஒன்றிய செயலாளர் ராமன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • சிங்கம்புணரி அருகே வடுக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான அதிகாரிகள், பரம்பரை ஸ்தானிகம் ரவி குருக்கள் செய்திருந்தனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சிவபுரி பட்டியில் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் வடுக பைரவருக்கு நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.

    முன்னதாக ம்ருத்ஜெய ஹோமம், நவகிரக ஹோமம், சத்ருசம்ஹார ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்று பூர்ணாகுதியுடன் பூஜைகள், யாக பூஜைகள் நிறைவு பெற்றன.

    அதன்பின் பால், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மகா தீப ஆரத்தியுடன் பூஜைகள் நிறைவு பெற்றன.

    இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான அதிகாரிகள், பரம்பரை ஸ்தானிகம் ரவி குருக்கள் செய்திருந்தனர்.

    • சிங்கம்புணரி அருகே பைக்கில் சென்ற வாலிபர் பாலத்தில் மோதி பலியானார்.
    • சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிங்கம்புணரி

    சிதம்பரம் ஆயக்குடியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் கார்த்திக் (வயது 22). இவர் சிங்கம்புணரி அருகே உள்ள ஒடுவன்பட்டியில் தனது பெரியம்மா இல்ல நிகழ்ச்சிக்கு வந்தார். பெரியம்மா மகன் அருண்குமாருடன் சிங்கம்புணரி வங்கியில் பண பரிவர்த்தனைக்காக சென்றனர்.

    அதற்கான ஆவணம் தேவைப்பட்டதால் கார்த்திக் மட்டும் இருசக்கர வாகனத்தில் ஒடுவன்பட்டி நோக்கி சென்றார். அதிவேகமாக பைக்கில் வந்த கார்த்திக் அணைக்கரைப்பட்டி பாலாற்றில் அமைந்துள்ள பாலத்தில் எதிர்பாராத விதமாக மோதியதில் படுகாயம் அடைந்தார்.

    உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

    பின்னர் கார்த்திக்கை சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கார்த்திக் இறந்து விட்டதாக கூறினர்.

    சிங்கம்புணரி காவல்துறையினர் கார்த்திக்கின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பட்டாசுக்கடை, பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு இணையவழி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் தகவல் தெரிவித்தார்.
    • தடையின்மைச்சான்று பெற தமிழ்நாடு ஒற்றைச் சாளர போர்டல் வாயிலாக இணையவழி மூலமாக மட்டுமே விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் நிரந்தர பட்டாசுக்கடை உரிமம் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைப்பதற்கான தடையின்மைச்சான்று பெறுவதற்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பம் செய்ததின் பேரில் தடையின்மை சான்று வழங்கப்பட்டு வந்தது.

    தற்போது சென்னை முதன்மைச் செயலர் , வருவாய் நிர்வாக ஆணையரின் 7.6.2022-ம் நாளிட்ட கடிதத்தில் நிரந்தர பட்டாசுக்கடை உரிமம் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலைய சேவைகளுக்கான தடையின்மைச்சான்று பெற, தமிழ்நாடு ஒற்றைச் சாளர போர்டல் வாயிலாக இணையவழி மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    எனவே, எதிர்வரும் காலங்களில் சிவகங்கை மாவட்டத்தில் நிரந்தர பட்டாசுக்கடை உரிமம் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலைய சேவைகளுக்கான தடையின்மைச்சான்று பெற தமிழ்நாடு ஒற்றைச் சாளர போர்டல் வாயிலாக இணையவழி மூலமாக மட்டுமே விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆத்தங்கரைபட்டியில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
    • மஞ்சுவிரட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திருப்பத்தூர் போலீசார் செய்திருந்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா அருகே உள்ள ஆத்தங்கரை பட்டியில் பெரியகருப்பர், சின்ன கருப்பர் கோவில் திருவிழா நடந்தது.

    இதை முன்னிட்டு ஆத்தங்கரைபட்டி கிராம தலைவர் செல்வம் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் ஆகியோரின் தலைமையில் மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான காளைகள் கலந்து கொண்டன. வயல்வெளி பகுதிகளில் ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி பரிசுகளை வென்றனர்.

    மஞ்சுவிரட்டு காண வந்த விருந்தினர்களுக்கும் மாடுகளைக் கொண்டு வந்த வீரர்களுக்கும் அனைத்து வீடுகளிலும் விருந்தோம்பல் நிகழ்ச்சி நடந்தது. மஞ்சுவிரட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திருப்பத்தூர் போலீசார் செய்திருந்தனர்.

    • குறைதீர்க்கும் கூட்டத்தில் 42 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • பொதுமக்களிடமிருந்து 375 மனுக்கள் பெறப்பட்டன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் (பொறுப்பு) மணிவண்ணன் தலைமையில் நடந்தது.

    இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, வங்கிக்கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளு க்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 375 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கமாறு அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    மேலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.30 ஆயிரம் மதிப்பீட்டில் இலவச தையல் எந்திரங்களும், 1 பயனாளிக்கு ரூ.5 ஆயிரம் மதிப்பீட்டில் இலவச தேய்ப்பு பெட்டியும், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரத்து 580 வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600 மதிப்பீட்டில் இலவச தையல் எந்திரங்கள், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் 15 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் என மொத்தம் 42 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 46 ஆயிரத்து 600 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் (பொறுப்பு) மணிவண்ணன் வழங்கினார்.

    இதில் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் காமாட்சி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மங்களநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல், உதவி ஆணையர் (கலால்) கண்ணகி, உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • 7 தடுப்பணைகள் கட்டும் பணி இந்த ஆண்டு தொடங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
    • இந்த தடுப்பணை ரூ.5.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம், ஒ.சிறுவயல் கிராமம் அருகே, தேனாற்றின் குறுக்கே ஒய்யகொண்டான் கண்மாய்க்கு பாசன வசதி அளிக்கும் வகையில் தடுப்பணை கட்டப்படுகிறது.

    தடுப்பணைக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் பெரியகருப்பன் கலந்து கொண்டு தடுப்பணை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்துத்தரப்பு மக்களும் சமமான வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காகவும், அனைத்துறைகளையும் வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும் என்பதற்காகவும் பாடுபட்டு வருகிறார். குறிப்பாக, வேளாண்துறைக்கு முக்கியத்துவம் அளித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். சிவகங்கை மாவட்டம் ஏராளமான விளைநிலைங்களையும் ஏரி, குளம், கண்மாய்கள் நிறைந்த மாவட்டமுமாக உள்ளது. மேலும், பாலாறு, தேனாறு, வைகையாறு, மணிமுத்தாறு போன்ற ஆறுகள் சிவகங்கை மாவட்டத்தை கடந்து செல்கின்றன. இருப்பினும் கடைமடை பகுதியாக இருப்பதால் போதுமான அளவு நிரந்தரமான நீர் ஆதாரம் இல்லாமல் வறட்சி சூழ்ந்த மாவட்டமாக உள்ளது.

    இதனைக் கருத்தில் கொண்டு சிவகங்கை மக்களின் வேளாண் சார்ந்த தொழிலை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்தாண்டு 7 தடுப்பணைகள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட உள்ளன. ஏற்கனவே 4 தடுப்பணை கட்டும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

    இந்த தடுப்பணை ரூ.5.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. 380 ஏக்கர் நிலங்கள் நேரடி பாசன வசதி பெற உள்ளன. 7 கண்மாய்களுக்கு இதில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லப்பட உள்ளது. மேலும் மறைமுகமாக இந்த பகுதிகளில் உள்ள அரண்மனைப்பட்டி, பலவான்குடி, ஒ.சிறுவயல், குன்றக்குடி, பாதரக்குடி போன்ற கிராமங்கள் பாசன வசதி பெற உள்ளன. ஏக்கர் ஒன்றுக்கு இதற்காக ரூ.1.42 லட்சம் செலவிடப்படவுள்ளது.

    இந்த திட்டத்தில் தடுப்பணை, மணல்போக்கி கட்டுதல் மற்றும் ஒய்யகொண்டான் கண்மாய்க்கும் சிறுவயல் கண்மாய்க்கும் புதிய தலைமதகுகள் கட்டுதல், வௌ்ளக்கரைகளை உயர்த்தி புனரமைத்தல், கால்வாய் மராமத்து பணி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதோடு, வேளாண் சார்ந்த தொழில்க ளுக்கு உறுதுணையாக உள்ள ஆடு, மாடுகளுக்கு போன்ற கால்நடைகளுக்கும் கூடுதல் நீர் ஆதாரமாக அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், செயற்பொறியாளர் (நீர்வள ஆதாரத்துறை) கார்த்திகேயன், கோட்டையூர் பேரூராட்சித் தலைவர் கார்த்திக் சோலை, உதவி செயற்பொறியாளர்கள் பஞ்சவர்ணம், சங்கர், சீனிவாசன், விக்னேஸ்வரன், சரவணன், காரைக்குடி வட்டாட்சியர் மாணிக்கவாசகம், உதவிப்பொறியாளர்கள் பாலமுருகன், கலைவாணி, பிரகாஷ், ஆனந்த மாரியவளவன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராதா பாலசுப்பிரமணியம், ஊராட்சி மன்றத்தலைவர் குழந்தைவேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • யோகா பயிற்சியில் போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்றார்.
    • மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார், நேருயுவகேந்திரா முன்னாள் ஒருகிணைப்பாளர் ஜவகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேருயுவ கேந்திரா, ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அத்தாரிட்டி ஆப் தமிழ்நாடு, சிவம் மார்ஷியல் ஆர்ட்ஸ் மற்றும் யூத் வெல்பேர் அசோசியேஷன் இணைந்து யோகா நிகழ்ச்சியை நடத்தியது.

    இதில் திரளான குழந்தைகள், பெற்றோர் பங்கேற்று யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு நேருயுவகேந்திரா மாவட்ட ஒருகிணைப்பாளர் பிரவீன்குமார் தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் ஆகியோர் பங்கேற்று குழந்தைகளுக்கு யோகா சான்றிதழ் வழங்கினர்.

    இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார், நேருயுவகேந்திரா முன்னாள் ஒருகிணைப்பாளர் ஜவகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பத்தூர் போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது
    • முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட திருப்பத்தூர் நகர் காவல் நிலையம், திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையம், கண்டவராயன்பட்டி, கீழச்சிவல்பட்டி, நாச்சியாபுரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையிலுள்ள புகார் மனுக்கள் மீதும், முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பிய மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

    விசாரணைக்கு பின், 53 புகார் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது. மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாபன் தலைமையில் காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த முகாமில் நிலப் பிரச்சினை, சிறு குற்ற வழக்குகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர். மனு அளித்தவர்கள், தொடர்புடையவர்கள் என இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காணப்பட்டது. 53 புகார் மனுக்கள் பெறப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டது.

    • பிளஸ்-2 தேர்வில் சிவகங்கை மாவட்டம் 96.58 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • சிவகங்கை மாவட்டத்தில் 15 ஆயிரத்து 660 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர்.

    சிவகங்கை

    தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி சென்னை கோட்டூர்புரம் நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை வெளியிட்டார்.

    சிவகங்கை மாவட்டத்தில் 15 ஆயிரத்து 660 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் 15 ஆயிரத்து 125 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 96.58 சதவீதம் ஆகும்.

    • எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிவகங்கை மாவட்டம் 93.62 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • சிவகங்கை மாவட்டத்தில் 17 ஆயிரத்து 664 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர்.

    சிவகங்கை

    தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி சென்னை கோட்டூர்புரம் நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை வெளியிட்டார்.

    சிவகங்கை மாவட்டத்தில் 17 ஆயிரத்து 664 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர். இதில் 16 ஆயிரத்து 537 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 93.62 சதவீதம் ஆகும்.

    ×