என் மலர்
சிவகங்கை
- காரையூர் கிராமத்தில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடந்தது.
- இந்த முகாமில் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கார்த்திகேயன் வரவேற்றார்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவர்கள் காரையூர் கிராமத்தில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடத்தினர். இந்த முகாமில் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கார்த்திகேயன் வரவேற்றார், கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் செந்தமிழ் செல்வி மதியழகன் முகாமை தொடங்கி வைத்தார்.
ஊராட்சி மன்ற துணை தலைவர் அருணகிரி, கிராம செயலர் ஜெயந்தி, கிராம நிர்வாக அலுவலர் ஐரிஸ் ஆஷ்மின், ஒன்றிய கவுன்சிலர் சுமதி செல்வகுமார், வார்டு உறுப்பினர்கள் ஆறுமுகம், ஆனந்த வள்ளி, விஜயா, தலையாரி சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் ஊராட்சி மன்ற வளாக பகுதி, அங்கன்வாடி மைய பகுதி, ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகப்பகுதி, துணை சுகாதார நிலையம், அம்மன் கோவில் மற்றும் கிராமத்தின் சுற்றுப்புற பகுதிகளை கல்லூரி மாணவர்கள் சுத்தம் செய்தனர்.
கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் நாகராஜன் நன்றி கூறினார்.
- சாலையோர வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன.
- ரூ.84.44 லட்சம் மதிப்பீட்டில் நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் வழங்கினார்.
சிவகங்கை
சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கான ஆதரவு திட்டத்தின் கீழ் 98 இலவச தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன. காய்கறி கடை 15 வண்டிகள், உணவுக்கடைகள் 40, பூக்கடைகள்20, மற்றவைகள் 23 என மொத்தம் 98 இலவச தள்ளுவண்டிகள் ரூ.84.44 லட்சம் மதிப்பீட்டில் நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் வழங்கினார்.
நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், பொறியாளர் பாண்டீஸ்வரி, நகரமைப்பு அலுவலர் திலகவதி, கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், சண்முகராஜன், துபாய்காந்தி, விஜயகுமார், கார்த்திகேயன், ராமதாஸ், மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
- திருப்பத்தூரில் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
- முகாமில் 50-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நெற்குப்பை
உலக வெறி நோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கால்நடை மருத்துவமனையில் கால்நடை பராமரிப்புத்துறை சிவகங்கை மண்டலம் சார்பில் நாய்களுக்கு தடுப்பூசி முகாம் நடந்தது.
முகாமில் திருப்பத்தூர் கால்நடை மருத்துவர் ராமச்சந்திரன் நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி செலுத்தினார். முகாமில் கால்நடை மருத்துவமனை முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர் கருப்பையா, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் முருகானந்தம், அக்பர் அலி, முகமது யாசின் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் 50-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
- கொந்தகையில் 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சிக்காக 4 குழிகள் தோண்டப்பட்டன.
- தாழிகளில் இருந்து எலும்பு துண்டுகள், மண்டை ஓடுகள் மற்றும் பல பொருட்கள் கிடைத்தன.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் அகழாய்வு பணி நடந்து வருகிறது. கொந்தகையில் 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சிக்காக 4 குழிகள் தோண்டப்பட்டன. இதில் மொத்தம் 57 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. இதில் ஏற்கனவே பல முதுமக்கள் தாழிகள் திறக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டன.
தாழிகளில் இருந்து எலும்பு துண்டுகள், மண்டை ஓடுகள் மற்றும் பல பொருட்கள் கிடைத்தன. தற்போது 2-வது குழியில் உள்ள முழுமையான ஒரு முதுமக்கள் தாழியை திறந்து ஆய்வு செய்ததில் கருப்பு, சிவப்பு நிற குவளைகளும், இரும்பினாலான வாளும் கண்டெடுக்கப்பட்டன.
இந்த வாள் 40 சென்டிமீட்டர் நீளம் கொண்டது. மேலும், அது ஆய்வுக்கு அனுப்பப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சாகிர் உசேன் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டது.
- பயிற்சி பெற்றவர்களுக்கு சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் ஓட்டுநர் உரிமம் பெற்று தரப்படுகிறது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவியருக்கு இருசக்கர மற்றும் 4 சக்கர வாகன ஓட்டுநர் பயிற்சி கல்லூரி நேரத்தில் அளிக்கப்படுகிறது. கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி ஓட்டுநர் உரிமம் பெற்ற 17 மாணவிகளுக்கு ஓட்டுநர் உரிமத்தை வழங்கினார். இதில் ஒருங்கிணைப்பாளர் செய்யது அபுதாஹிர் கலந்து கொண்டார்.
இந்த திட்டம் தொடங்கிய நாள் முதல் இதுவரை 895 மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் ஓட்டுனர் பயிற்சி பெற்று ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளனர். மிக குறைத்த கட்டணத்தில் ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பயிற்சி பெற்றவர்களுக்கு சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் ஓட்டுநர் உரிமம் பெற்று தரப்படுகிறது.
- மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன காதொலிக் கருவியை கலெக்டர் வழங்கினார்.
- மேலும் 75 மாற்றுத்திறனாளிகளுக்கு யூ.டி.ஐ.டி. பதிவு, 59 மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு பதிவு செய்யப்பட்டன.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாற்றுத்திறனா ளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
இதில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி கலந்து கொண்டு ரூ.30 ஆயிரம் மதிப்பில் 6 மாற்றுதிறனாளிகளுக்கு காதுக்கு பின்னால் அணியும் நவீன காதொலிக் கருவிகள், 33 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை ஆகியவைகளை வழங்கினார். மேலும் 75 மாற்றுத்திறனாளிகளுக்கு யூ.டி.ஐ.டி. பதிவு, 59 மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு பதிவு செய்யப்பட்டன.
இந்த முகாமில் வங்கி கடனுதவி, உதவி உபகரணம், பராமரிப்பு உதவித்தொகை, உயர் ஆதரவு தேவைபடுவோருக்கான உதவித்தொகை மற்றும் பிற துறைகளின் மூலம் வழங்கப்படும் உதவி களுக்கென மாற்றுதிறனாளிகளி டமிருந்து 88 மனுக்கள் பெறப்பட்டது.
முன்னதாக இளை யான்குடி வட்டத்திற்கு ட்பட்ட தன்னார்வலர் அப்துல்மாலிக் ஏற்பாடு செய்த மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் கலெக்டர் கலந்து கொண்டு பனைவிதை மற்றும் மரக்க ன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். இதில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, மாவட்ட மாற்றுத்தி றனாளிகள் நலத்துறை அலுவலர் கதிர்வேல், வட்டாட்சியர் அசோக்கு மார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிவகங்கை மாவட்டத்தில் காந்தி பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் 12-ந் தேதி நடக்கிறது.
- சிவகங்கை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் போட்டிகள் நடைபெறும்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-2022-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க, சிவகங்கை மாவட்டத்தில் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டத்தில் செயற்பட்டு வரும் அனைத்துப் பள்ளிகளில் (அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில்; (பதின்மப் பள்ளிகள் உள்பட) படித்து வரும் மாணவர்களுக்கும் (6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை), அனைத்துக் கல்லூரிகளில் (அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கலைக்கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள், பல்தொழில் நுட்பக் கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள் முதலியவை) படித்து வரும் மாணவர்களுக்கும் வருகிற 12-ந் தேதி (புதன்கிழமை)சிவகங்கை மருதுபாண்டியர் நகர், அரசு மேல்நிலைப்பள்ளி வளாக அரங்கில் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில் பற்கேற்று வெற்றி பெறும் பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.
அத்துடன், பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுள் சிறப்புடன் திறமையை வெளிப்படுத்தும் அரசுப்பள்ளி மாணவர்கள் இருவரை தேர்வு செய்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகையாக ரூ.2ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்; வழங்கப்படும்.
இந்த போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் உரிய பங்கேற்புப் படிவத்தைப் பூர்த்தி செய்து பள்ளித் தலைமையாசிரியர் கல்லூரி முதல்வர் பரிந்துரையுடன் ஒப்பமும் பெற்று, சிவகங்கை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் போட்டிகள் நடைபெறும் நாளன்று நேரில் அளித்து போட்டிகளில் பங்கேற்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரை நேரிலோ, 04575-241487 என்ற தொலைபேசி வாயிலாகவே தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குற்ற வழக்கில் தொடர்புடைய வாகனங்கள் ஏலம் விடப்பட்டது.
- இதன் மூலம் அரசுக்கு பல லட்சம் வருவாய் ஈட்டப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, 34 இரண்டு மற்றும் 3 சக்கர வாகனங்கள் ஏலம் ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. இருசக்கர வாகனத்திற்கு விலையை நிர்ணயித்து ஏலம் தொடங்கியது.
இருசக்கர வாகன விற்பனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று ஏலம் எடுத்தனர். அதிகபட்ச விலையை கேட்கும் நபருக்கு வாகனம் வழங்கப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு பல லட்சம் வருவாய் ஈட்டப்பட்டது.
- கோட்டையூரில் பேரூராட்சி கூட்டம் நடந்தது.
- அனைத்து வசதிகள உள்ள வார்டு அது. உறுப்பினரின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என்றார்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் பேரூராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் கார்த்திக் சோலை தலைமையில் நடந்தது.
துணை தலைவர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் கவிதா வரவேற்றார். 2-வது வார்டு உறுப்பினர் ராஜா (விடுதலை சிறுத்தைகள் கட்சி) தனது வார்டில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்று கூறி வெளிநடப்பு செய்தார்.
தலைவர் கார்த்திக் சோலை பேசுகையில், அமைச்சர் பெரியகருப்பன் 4-வது முறையாக வெற்றி பெற்ற திருப்பத்தூர் தொகுதியை சேர்ந்த கோட்டையூர் 2-வது வார்டு அம்பேத்கர் நகர், காந்திநகர் பகுதியில் அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த போதும், தற்போது அமைச்சரான பின்னரும் பல்வேறு நலத்திட்டஙகளை செய்துள்ளார்.
எம்.எல்.ஏ. நிதி மற்றும் பேரூராட்சி நிதிகளில் இருந்து அங்கு 3 கலையரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது.போர்வெல் அமைக்கப்பட்டு 7 சின்டெக்ஸ் தொட்டி கட்டப்பட்டுள்ளது.சமுதாயக் கூடம், அங்கன்வாடிகள் உள்ளன.துணி துவைக்கும் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
பேரூராட்சியில் வேறு வார்டுகளில் இல்லாத உயர் கோபுர ஹைமாஸ் மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 20 லட்சம் மதிப்பில் நவீன கழிப்பறை உள்ளது. 25-க்கும் மேற்பட்ட பொது குடிநீர் குழாய்கள் உள்ளன.தெருவிளக்குகள் 100 சதவீதம் உள்ளன.
அனைத்து பகுதிகளிலும் சிமெண்டு மற்றும் தார் சாலைகள் போடப்பட்டுள்ளன.ஒரே ஒரு சாலை மட்டும் குறுகலாக உள்ளதால் பேவர் பிளாக் சாலை 150 மீட்டர் தூரம் மட்டுமே அமைக்க வேண்டி உள்ளது. அனைத்து வசதிகள உள்ள வார்டு அது. உறுப்பினரின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என்றார்.
கூட்டத்தில் பல்வேறு உறுப்பினர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு நிதிநிலைமை அடிப்ப டையில் நிறைவேற்றப்படும் என்றும் தலைவர் கூறினார். இதில் வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- தமிழ்நாடு மகளிர் கிரிக்கெட் அணிக்கு காரைக்குடி மாணவி தேர்வு செய்யப்பட்டார்.
- இந்த மாதம் இறுதியில் சென்னையில் நடைபெறும் ரவுண்ட் ராபின் போட்டிகளில் பிரியதர்ஷினி விளையாட உள்ளார்.
காரைக்குடி
காரைக்குடி சுப்பிரமணியபுரம் 5-வது வீதியில் வசித்து வரும் பாலமுருகன் மகள் பிரியதர்ஷினி. இவர் அழகப்பா மெட்ரிகுலேசன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ள இவர் சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பயிற்சியாளர் வரதராஜனிடம் பயிற்சி பெற்று வருகிறார். வலது கை லெக்ஸ்பின்னர், ஆல்ரவுண்டரான இவர் கடந்த ஆகஸ்டு 18-ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த தமிழ்நாடு பெண்கள் 16 வயதுக்குட்பட்டோர் அணிக்கான தேர்வில் கலந்து கொண்டார்.
நேற்று வெளியான அணித்தேர்வு முடிவில் மாணவி பிரியதர்ஷினி 15 வயதுக்குட்பட்டோருக்கான ரவுண்ட் ராபின் போட்டிகளுக்காக தமிழ்நாடு பெண்கள் அணிக்கு தேர்வாகி உள்ளார்.சிவகங்கை மாவட்டம் சார்பில் தமிழ்நாடு பெண்கள் அணிக்கு தேர்வான முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.இந்த மாதம் இறுதியில் சென்னையில் நடைபெறும் ரவுண்ட் ராபின் போட்டிகளில் பிரியதர்ஷினி விளையாட உள்ளார். சாதனை படைத்த மாணவி பிரியதர்ஷினியை சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், பயிற்சியாளர் வரதராஜன், கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்தினர்.
- தேவகோட்டையில் பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்கின்றனர்.
- ஆனால் காவலர்கள் பஸ் நிலையத்தில் உள்ள காவல் உதவி மையத்தில் இல்லாதது கேள்விக்குறியாக உள்ளது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் 15-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளன. தேவகோட்டை நகர் மற்றும் கிராமங்களை சுற்றியுள்ள மாணவ-மாணவிகள் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அரசு பஸ்கள் வாயிலாக பள்ளி, கல்லூரிகளுக்கு வந்து செல்கின்றனர். பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் தேவகோட்டை-காரைக்குடி சாலையில் உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்கள் பஸ்களில் ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர்.
பஸ்களில் பயணம் செய்யும் மாணவர்களை ஒழுங்குபடுத்த காவல்துறையினர் பஸ் நிலையத்தில் உள்ள காவல் உதவி மையத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் இருந்தால் மட்டுமே ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்களை தடுக்க முடியும் என போக்குவரத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தெரிவித்தனர். மாவட்ட துணை கண்காணிப்பாளர் காலை நேரங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் காவலர்கள் பஸ் நிலையத்தில் உள்ள காவல் உதவி மையத்தில் இல்லாதது கேள்விக்குறியாக உள்ளது.
- கண்ணங்குடி ஒன்றியத்தில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என யூனியன் கூட்டத்தில் தீர்மானம் எழுந்துள்ளது.
- பெண்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாமல் அச்சத்துடன் வாழும் அவல நிலை உள்ளது.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்குடி யூனியன்கூட்டம் தலைவர் மெய்யப்பன் கார்த்திக் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் சந்திர போஸ், ஆணையாளர் முத்துக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் பழனியம்மாள், உதவி பொறியாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) சுப்பிரமணியன் வரவேற்றார். யூனியன் தலைவர் பேசுகையில், ஒன்றியத்தில் நடைபெறும் திட்ட பணிகளை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக பால பணிகள் நடைபெறும் பொழுது அதிகாரிகள் முன்னிலையில் கான்கிரீட் போடப்பட வேண்டும் என்று ஒப்பந்ததாரருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றார்.
சில மாதங்களாக தேவகோட்டை நகரில் இருந்து கண்ணங்குடி ஒன்றிய பகுதிகளுக்கு வரும் சாலையில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் தலைவர் பேசுகையில், சித்தானூர், தாழையூர், கோடகுடி, தேரளப்பூர் சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளன. இதுகுறித்து காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து 10-க்கும் மேற்பட்ட நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்த நிலையில் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடந்து வருகிறது. இது வேதனையாக உள்ளது.
கண்ணங்குடி ஒன்றியத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வழிப்பறி சம்பவங்களால் தற்போது பொதுமக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
துணைத் தலைவர் சந்திர போஸ் பேசுகையில், கண்ணங்குடி ஒன்றியத்தில் மற்ற இடங்களை காட்டிலும் அதிகமாக வழிப்பறி நடக்கிறது. இதுகுறித்து தலைவர் காவல்துறைக்கு பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க ப்படவில்லை, பெண்கள் பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாமல் அச்சத்துடன் வாழும் அவல நிலை உள்ளது. மேலும் ஆண்கள் தற்பொழுது இரவு நேரங்களில் அச்சத்துடன் சாலைகளில் வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.






