என் மலர்
சிவகங்கை
- மீனாட்சி-சொக்கநாதர் கோவிலில் மகிஷா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது.
- 4 ரத வீதியில் வலம் வந்து ஈசானிய மூலையில் அமைந்துள்ள மகர்நோன்பு பொட்டலில் எழுந்தருளினார்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் நவராத்திரி நிறைவு நாளை முன்னிட்டு மகிஷாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி பக்தர்கள் முன்னிலையில் நடந்தது.முறையூர் மீனாட்சி- சொக்கநாதர் கோவிலில் கடந்த மாதம் 26-ந் தேதி நவராத்திரி விழா தொடங்கியது. கடந்த 9 நாட்களாக அம்மன் பல்வேறு அலங்காரங்களில் கொலு மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.
நிறைவு நாளான நேற்று விஜயதசமியை முன்னிட்டு அன்னை மீனாட்சி குதிரை வாகனத்தில் எழுந்தருளி 4 ரத வீதியில் வலம் வந்து ஈசானிய மூலையில் அமைந்துள்ள மகர்நோன்பு பொட்டலில் எழுந்தருளினார்.
அங்கு அமைக்கப்ப ட்டிருந்த மகிஷாசூரன் குடிலை நோக்கி 4 திசையிலும் சிவாச்சாரியார் அம்புகளை எய்தார். இதனை காண மகர்நோன்பு பொட்டலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம், தேவஸ்தானம், கிராமத்தார்கள் செய்திருந்தனர்.
- கானூர் பெரிய அம்மன் கோவில் திருவிழா நடந்தது.
- பால்குடம்-முளைப்பாரி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கானூர் கிராமத்தில் பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு 5-ம் ஆண்டாக முளைபாரி மற்றும் பால்குட திருவிழா நடந்தது.
திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றங்கரையில் இருந்து கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து சென்றனர். சில பக்தர்கள் அலகு குத்தி சென்றனர்.
இதில் 80-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
இதேபோல் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர். இதில் கானூர் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
- 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் போராளி குயிலி நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
- ஆங்கிலேயர்கள் குவித்து வைத்திருந்த ஆயுதக்கிடங்குக்குள் தன் உடல் முழுவதும் எண்ணெய் தடவி தீ வைத்துக்கொண்டு குதித்தார்.
சிவகங்கை
சிவகங்கையில் 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் போராளி குயிலி என்பவர் நவராத்திரி விழாவின் கடைசி நாளான விஜயதசமி தினத்தன்று சிவகங்கை அரண்மனைக்குள் ஆங்கிலேயர்கள் குவித்து வைத்திருந்த ஆயுதக் கிடங்குக்குள் தன் உடல் முழுவதும் எண்ணெய் தடவி தீ வைத்துக்கொண்டு குதித்தார். இதனால், ஆங்கிலேயர்களின் ஆயுதக்கிடங்கு முழுவதுமாக அழிக்கப்பட்டது.
குயிலி ஆயுதக்கிடங்கை அழித்த 242-வது நினைவு தினத்தை முன்னிட்டு வேலுநாச்சியார் மணிமண்டபத்தில் அமைந்துள்ள குயிலியின் நினைவுத் தூணுக்கு அனைத்து சமுதாய தலைவர்களும், அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வான செந்தில்நாதன் தலைமையில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன், நகரசெயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், ஸ்டீபன், சிவாஜி, கோபி, ஸ்ரீதர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், தகவல் தொழில்நுட்ப மண்டல இணை செயலாளர் தமிழ்செல்வன், சங்கர் ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிவகங்கை மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
- இதில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்றனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் அதிகளவில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, அதனை முறையாக பராமாிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்திய மருத்துவக்கழக காரைக்குடி கிளையின் சார்பில், கல்வி நிறுவனங்களில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் இயக்கம் செயல்படுத்திட திட்டமிடப்பட்டது.
அதன் தொடக்கமாக காளையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு ''பசுமை தமிழகம்'' திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் வானதி, இந்திய மருத்துவக்கழக காரைக்குடி கிளை மருத்துவர்கள் மணிவண்ணன், காமாட்சி சந்திரன், ராசு, குமரேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் திருப்பதிராஜன், சத்தியன், ராஜேஸ்வரி, பள்ளி தலைமையாசிரியர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 5-வது முறையாக மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்ட திருப்பத்தூரில் அமைச்சர் பெரியகருப்பனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
- அமைச்சர் பெரிய கருப்பனுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்
நெற்குப்பை
சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளராக அமைச்சர் பெரியகருப்பன் 5-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து திருப்பத்தூர் அண்ணா சாலையில் ஒன்றிய, பேரூர் சார்பில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அமைச்சர் பெரியகருப்பனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து திருப்பத்தூர், சிங்கம்புணரி, நெற்குப்பை, எஸ்.புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஒன்றிய தலைவர்கள், நகர செயலாளர்கள், பேரூராட்சி தலைவர்கள்,ஊராட்சி மன்ற தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் அமைச்சருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். சில தினங்களுக்கு முன்பு ஊரகத் வளர்ச்சி துறையை அகில இந்திய அளவில் தமிழகம் 3-வது இடத்தில் வருவதற்கு சிறப்பாக செயல்பட்டதற்காக அமைச்சர் பெரிய கருப்பனுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இளையான்குடி புறவழிச்சாலை ஓரங்களில் பனைவிதை மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
- தேசிய மாணவர்படை பொறுப்பு அலுவலர் காளிதாசன் மாணவர்களை ஒருங்கிணைத்தார்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி புறவழிச்சாலை ஓரங்களில் பனைவிதை மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் மதுசூதனன்ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழா ஏற்பாடுகளை இளையான்குடி கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் சமூக ஆர்வலர் மாலிக் ஆகியோர் செய்திருந்தனர். டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்கள் 50 பேர் கலந்து கொண்டு மரக் கன்றுகளையும், பனை விதைகளையும் நட்டு வைத்தனர். தேசிய மாணவர்படை பொறுப்பு அலுவலர் காளிதாசன் மாணவர்களை ஒருங்கிணைத்தார். சமூக சேவைப் பணியில் ஈடுபட்ட மாணவர்களை கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி வாழ்த்தினார்.
- மானாமதுரையில் குழந்தை தெரசாள் ஆலய தேர்பவனி நடந்தது.
- 83-ம் ஆண்டு பெருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் புகழ்பெற்ற குழந்தை தெரசாள் ஆலயம் உள்ளது. இங்கு 83-ம் ஆண்டு பெருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி பூஜை, சிறியபல்லக்கில் குழந்தை தெரசாள் ஆலய வளாகத்தில் வலம் வரும் நிகழ்ச்சியில் இறைசெய்தி வாசிக்கப்பட்டது.
முக்கிய நிகழ்ச்சியான திருவிழா திருப்பலி, மின்சார சப்பர தேர்பவனி நடந்தது. அருட்தந்தை செங்கோல் விவசாயம் செழிக்க வேண்டியும், தொழில் வளம் சிறக்க வேண்டியும், மாணவ- மாணவிகள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டியும் திருப்பலி பூஜைகளை நடத்தினார்.
முடிவில் ஆலயம் முன்பு குழந்தை தெரசாள் சொரூபத்திற்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரம் மெயின் கடை வீதி வழியாக பவனி வந்து ஆலயம் வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை எஸ்.எஸ். பாஸ்டின் மற்றும் அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள் செய்திருந்தனர்.
- சிங்கம்புணரி தாலுகா எஸ்.மாத்தூர் ஊராட்சியில் நியாய விலை கடை திறப்பு விழா நடந்தது.
- இதில் கூட்டுறவு சங்கத் தலைவர், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.எஸ்.கோட்டை அருகே உள்ள எஸ்.மாத்தூர் ஊராட்சியில் நியாய விலை கடை திறப்பு நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ஹேமலதா சதாசிவம் தலைமை தாங்கினார். சிங்கம்புணரி யூனியன் ஆணையாளர் லட்சுமணன் ராஜ் முன்னிலை வகித்து கடையை திறந்து வைத்தார். இதில் கூட்டுறவு சங்கத் தலைவர் துரைப்பாண்டியன், துணைத் தலைவர் ஜானகிராமன், வருவாய் ஆய்வாளர் முரளி, கிராம நிர்வாக அலுவலர் செல்வம், மன்ற துணைத் தலைவர் மனோகரன், நியாயவிலைக் கடை மேலாளர் சங்கர் மற்றும் கவுன்சிலர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் கிராம மக்கள் பங்கேற்றனர்.
- சிவகங்கை மாவட்டத்தில் 8,553 பயனாளிகளுக்கு ரூ.8¾ கோடி மதிப்பீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
- இந்த தகவலை அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன், பிரதமரின் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் மற்றும் சிறப்பாக பணிபுரிந்த மருத்துவவர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார்.
விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பேசுகையில், சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம ரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் மூலம் 13 அரசு மருத்துவமனைகள், 16 தனியார்மருத்துவமனைகள் அங்கீகாீக்கப்பட்டு மக்களுக்கு மருத்துவச் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்று கடந்த 1 வருடத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 8 ஆயிரத்து 553 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியே 88 லட்சத்து 72 ஆயிரத்து 675 மதிப்பீட்டில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பயனடையவதற்கு தகுதியாக ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மற்றும் அதற்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்கள் பயனடையலாம்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை தேவைப்படுவோர்குடும்ப அட்டை, ஆதார்அட்டை மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களிடம் இருந்து பெற்ற ஆண்டு வருமானச்சான்று ஆகிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மையத்தை அணுகி, இணையதளத்தில் பதிவு செய்து காப்பீட்டு அட்டை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சாின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 6 அரசு மற்றும் தனியார்மருத்துவமனைகள், 7 காப்பீட்டு திட்ட தொடர்பு அலுவலர்கள் ஆகியோருக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள், மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளி களுக்கு இனிப்பு மற்றும் பழவகைகள், மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் புதிதாக சோ்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் ஆகியவற்றை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
இதில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, நகர்மன்றத் தலைவர் முத்துத்துரை, இணை இயக்குநர் (மருத்துவம்) இளங்கோ மகேஸ்வரன், சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி, நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன், நகராட்சி ஆணையர் லட்சுமணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செந்தில்குமார், காரைக்குடி வட்டாட்சியர் மாணிக்கவாசகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- சிவகங்கை மாவட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அமைச்சர் சீருடைகளை வழங்கினார்.
- ஒவ்வொரு ஆண்டும் ஆயுதபூஜையையொட்டி சீருடை வழங்குவது வழக்கம்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளர்- திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆண்டு தோறும் தனது தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஊர்களிலும் உள்ள ஆட்டோ வாகன ஓட்டுநர்களுக்கு ஆயுதபூஜையையொட்டி சீருடை வழங்குவது வழக்கம்.
அதன்படி சாக்கோட்டை மேற்கு ஒன்றியம் கோட்டையூர் பேரூராட்சியில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கிய சீருடையை சாக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் டாக்டர் கே.ஆர். ஆனந்த் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வழங்கினார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.சுந்தரம், கோட்டையூர் பேரூராட்சி மன்ற தலைவர் கே.எஸ்.கார்த்திக் சோலை முன்னிலை வகித்தனர். இதில் கோட்டையூர் பேரூர் செயலாளர் வி.சி.டி.ராசு, மாவட்ட மீனவரணி செயலாளர் ஈஸ்வரன், முன்னாள் நகர் செயலாளர் ராமு, கவுன்சிலர் ராமன் சங்கர், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் ஏ.ஆர். அழகப்பன், மாவட்ட பிரதிநிதி கானாடுகாத்தான் எஸ்.ஆர்.பி. ரமேஷ், ஒன்றிய பொருளாளர் மணசை பாண்டி, ஒன்றிய துணை செயலாளர் கோட்டையூர் கே. சுப்பிரமணியன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள் கலந்து கொண்டனர்.
- நெற்குப்பையில் மலைப்பாம்பு பிடிபட்டது
- தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள 5-வது வார்டில் பொன்னமராவதி- திருப்பத்தூர் செல்லும் நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்துள்ள சாத்தப்பா செட்டியார் என்பவர் வீட்டில் இன்று அதிகாலை 10 அடி நீளம் கொண்ட வெங்கனத்தி வகையைச் சேர்ந்த மலை பாம்பு ஒன்று வீட்டின் பின்புறம் இரை தேடி வந்தது.
இதனை கண்ட வீட்டின் உரிமையாளர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். ஆனால் தீயணைப்பு துறையினர் உடனடியாக வரவில்லை. இதைத்தொடர்ந்து நெற்குப்பை பேரூராட்சி 5-வது வார்டு உறுப்பினர் சேர்க்கப்பன் தூய்மை பணியாளர்களை அழைத்தார். அதன்பேரில் வந்த தூய்மை பணி மேற்பார்வையாளர் சிற்றரசு தலைமையிலான தூய்மைப்பணியாளர்கள் மலைப்பாம்பை லாவகமாக பிடித்து அருகில் உள்ள வேலங்குடி வனப் பகுதியில் விட்டனர்.
- சிங்கம்புணரியில் ரசாயன கலப்பில்லாத பொரி தயாரிக்கப்பட்டு வருகிறது.
- கொல்கத்தாவில் இருந்து லாலாட் அரிசி முதல் ரகமும் கொள்முதல் செய்யப்படுகிறது.
சிங்கம்புணரி
ஒவ்வொரு ஆண்டும் ஆயுதபூஜை நாளன்று வீடுகள், தொழிற்சாலைகள் மெக்கானிக் கடைகள் வர்த்தக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களில் ஆயுதங்களை சுத்தம் செய்து சரஸ்வதிக்கு பூஜை செய்வது வழக்கம்.
அந்த வகையில். நாளை ஆயுதபூஜைக்கு தமிழகம் முழுவதும் பொரி உற்பத்தி செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சுமார் 200 ஆண்டுகளாக பாரம்பரிய பொரிக்கு பெயர் பெற்ற சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பொரி உற்பத்தியாளர்கள் ஆயுத பூஜைக்கான பொரி
தயாரிப்பில் இரவு-பகலாக ஈடுபட்டுள்ளனர்.
பொரி தயாரிப்பிற்கு தேவையான அரிசி கர்நாடகத்தில் இருந்து ஐ.ஆர். 64 அரிசியும், கொல்கத்தாவில் இருந்து லாலாட் அரிசி முதல் ரகமும் கொள்முதல் செய்யப்படுகிறது. ரசாயன கலப்படம் இல்லாமல் அரிசியில் தண்ணீர், சீனி, உப்பு உள்ளிட்ட பொருட்களின் விகிதாச்சார கலவைகளால் 3 தினங்கள் ஊற வைக்கப்பட்டு எந்திரங்கள் மூலம் சரியான அளவு வெப்பத்துடன் மொரு மொரு தன்மையுடன் பொரி உற்பத்தி செய்யப்படுகிறது.
இங்கு தயார் செய்யப்படும் பொரி ஆயுதபூஜை மட்டுமின்றி விநாயகர்சதுர்த்தி, கோவில் திருவிழாக்கள் உள்பட வழிபாட்டிற்கும், தினசரி சாப்பிடும் உணவு பொருளாகவும் பயன்படுகிறது.
தற்போது ஆயுத பூஜைக்காக ஒரு நாளைக்கு சுமார் 200 மூடை முதல் 300 மூடைகள் வரை உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒரு மூடையில் 120 லிட்டர் கொண்ட பொரி நிரப்பப்பட்டு அனுப்பப்படுகின்றன.
ஒரு மூடை பொரி ரூ 480 வரை விற்பனை செய்யப்படுகிறது. 2, 3 தலைமுறைகளாக பொரி உற்பத்தி செய்துவருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். பொரி உற்பத்தியாளா் சுந்தரசேகரன் கூறுகையில், சிங்கம்புணரி பகுதியில் தயாரிக்கப்படும் பொரி சிங்கப்பூர், அமெரிக்கா இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ''ஸ்டப் ரைஸ்'' என்ற பெயரில் அனுப்பப்படுகிறது.
திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கோவை, மதுரை, தேனி, விருதுநகர் மாவடங்களுக்கும் அனுப்பப்படுகிறது. முக்கிய நகரங்களில் சிங்கம்புணரி பொரி கிடைக்கும் என்ற பதாகைகளுடன் விற்பனைசெய்யப்படுவது எங்கள் பொரிக்கு கிடைத்த பெருமையாக நினைக்கிறோம் என்றார்.






