என் மலர்tooltip icon

    சிவகங்கை

    • நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள சாத்தப்பா அரசு மேல்நிலைப்பள்ளியில் கிரிக்கெட் போட்டி நடந்தது.
    • உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடந்தது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள சாத்தப்பா அரசு மேல்நிலைப்பள்ளியில் வளாகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடந்தது.

    32-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றனர். இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற இரு அணியினரை நகர செயலாளர் கே.பி. எஸ் பழனியப்பன முன்னிலையில், வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், எஸ்.புதூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் ஆகியோர் அறிமுகம் செய்து ேபாட்டியை தொடங்கி வைத்தனர். முதல் பரிசை துவார் அணியும், 2-ம் பரிசை குளத்துப்பட்டி அணியும், 3-ம் பரிசை துவார் செந்தில் நினைவு குழு அணியும், 4-வது பரிசை சாத்தப்பா அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அணியும் தட்டிச் சென்றனர். மாவட்ட பிரதிநிதி மாரியப்பன், ஒன்றிய துணை செயலாளர் கஸ்தூரி சின்னையா, முன்னாள் மாவட்ட பிரதிநிதி சோமசுந்தரம், குளத்துப்பட்டி ஊராட்சி மன்றதலைவர்சேதுராமன்,ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் முத்தையா, கூட்டுறவு சங்க தலைவர் செல்வம், துவார் முக்கையா, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் திருநாவுக்கரசு, மாவட்ட பிரதிநிதிகள் ஜலாலுதீன், நடராஜன், பேரூர் கவுன்சிலர்கள் அழகு, அமுதா மற்றும் பலர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தமிழ்செல்வம், நகர இளைஞரணி அமைப்பாளர் பாண்டியன், துணை அமைப்பாளர் வீரமணி, மன்சூர், விக்னேஷ், ஆகியோர் செய்திருந்தனர்.

    • கீழசெவல்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலியானார்.
    • இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி அருகே உள்ள ஆவிணிப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் தியாகராஜ கேசரி (வயது 68). இவர் தனியாக வசித்து வந்தார்.

    இந்தநிலையில் இவரது வீட்டின் முன்புறம் உள்ள கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இவரது மகன் சிவசுப்பிரமணியனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கிணற்றில் தியாகராஜ கேசரியின் உடல் கிடப்பதை பார்த்துள்ளார். உடனடியாக சுப்பிர மணியன் திருப்பத் தூர் தீயணைப்பு நிலையத் திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் நிலைய அலுவலர் பெரி.கணேசன் தலைமையிலான பேரிடர் மீட்பு குழுவினர் கிணற்றில் அழுகிய நிலையில் இருந்த தியாகராஜ கேசரியின் உடலை மீட்டு கீழச் செவல் பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியவரின் உடலை பிரேத பரிசோத னைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமணமான 10 மாதத்தில் புதுப்பெண் திடீரென இறந்தார்.
    • இதுகுறித்து தேவகோட்கோடை ட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள ஊர்குளத்தான்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி. இவருக்கும் சினேகா (வயது 21) என்பவருக்கும் கடந்த இவருக்கும் சினேகா என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்தநிலையில் சினேகாவுக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், சிகிச்சைக் காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் பரிதாபமாக இறந்த தாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து தகவலறிந்த கண்டவராயன்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த சினேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் திருமணமாகி 10 மாதங்களே ஆன நிலையில் சினேகா இறப்பு குறித்து சந்தேகத்தின் அடிப்படையில் நெடுமரம் கிராம நிர்வாக அலுவலர் கோகிலா தேவி கொடுத்தபுகாரின் பெயரில் தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை திருப்புத்தூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு குறித்த தன்மையை மருத்துவர் சிவக்குமாரிடம் விசாரணை மேற்கொண்டார்.

    விசாரணையின் போது திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, திருப்புத்தூர் நகர் காவல் ஆய்வாளர் சுந்தரமகாலிங்கம், சார்பு ஆய்வாளர் மலைச்சாமி, கண்டவராயன்பட்டி சார்பு ஆய்வாளர் சேதுராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து கண்டவராயன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது படத்திற்கு தி.மு.க.வினர் மரியாதை செய்தனர்.
    • பேரூராட்சி சேர்மன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் பேருந்து நிலையம் அருகே முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரது படத்திற்கு யூனியன் சேர்மன் சண்முகவடிவேல் தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் திருப்பத்தூர் நகர செயலாளர் கார்த்திகேயன், பேரூராட்சி சேர்மன் கோகிலா ராணி மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • தேவகோட்டையில் உள்ள ஒரு தியேட்டர் அருகே வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • அரவிந்த் உடல் பிரேத பரிசோதனைக்காக சிவங்ககை அரசு மருத்து வமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை திருகப்பூரார் தெருவை சேர்ந்தவர் ஜேசுராஜ் (வயது 52). இவரது மனைவி ராக்கம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

    2-வது மகன் அரவிந்த் (வயது 23) படித்து முடித்து விட்டு இன்னும் சில நாட்களில் வெளிநாட்டு வேலைக்கு செல்ல இருந்தார். இந்த நிலையில் நேற்று அரவிந்த் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார்.

    தேவகோட்டையில் உள்ள ஒரு தியேட்டர் அருகே வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த அரவிந்த்தை வழி மறித்து நிறுத்திய போலீசார் ஆவணங்களை கேட்டு சரிபார்த்தனர். பின்னர் அதில் விபரங்கள் சரியில்லை என்று கூறி அரவிந்த்தை நீண்ட நேரம் காத்திருக்க வைத்து மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்ததாக தெரிகிறது.

    போலீசாரின் அடாவடியால் மன உளைச்சலில் அரவிந்த் வீடு திரும்பினார். இதற்கிடையில் நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் தனியறையில் இருந்த அரவிந்த் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது தந்தை ஜேசுராஜ் தேவகோட்டை டவுன் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், போக்குவரத்து போலீசார் ஆவணங்களை சரியில்லை என்று கூறி எனது மகன் சென்ற மோட்டார் சைக்கிளை பறித்து கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த நான் உடனே சம்பவ இடத்திற்கு சென்று போலீசாரிடம் அபராதம் கட்டி விடுகிறேன். மோட்டார் சைக்கிளை விடுவித்துக் கொடுங்கள் என்று கூறினோம். அதன்படி வாகனத்தை விடுவித்த போலீசார் எனது மகன் அரவிந்த்தின் செல்போனை பறித்து கொண்டனர். இதனால் மன உளைச்சலில் இருந்த அரவிந்த் வீட்டிற்கு வந்தபின் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. தனியாக பேசியபடி இருந்த அரவிந்த் தலைமுடியை பிடுங்கிக் கொண்டார். மறுநாள் காலையில் ஆஸ்பத்திரி செல்ல திட்டமிட்ட நிலையில் தனியறையில் அரவிந்த தூக்குப்போட்டுக் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    போலீசார் விசாரணை என்றபேரில் செல்போனை பறித்து கொண்டதால் மன உளைச்சலில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தேவகோட்டை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சில நாட்களில் வெளி நாட்டு வேலைக்கு செல்ல இருந்த மகனின் உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    இதற்கிடையில் அரவிந்த் உடல் பிரேத பரிசோதனைக்காக சிவங்ககை அரசு மருத்து வமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தேவகோட்டையில் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • ஒவ்வொரு மாதமும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தனது மகளை அழைத்துச் சென்று சங்கீதா சிகிச்சை அளித்து வந்தார்.
    • தினமும் தங்களின் மகள் படும் கஷ்டத்தை பார்த்து ஜெயராஜூம், சங்கீதாவும் வேதனை அடைந்தனர்.

    சிங்கம்புணரி:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அரசினம்பட்டி கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஜெயராஜ். இவரது மனைவி சங்கீதா (வயது 25). இவர்களது 5 வயது மகள் பிரகன்யா.

    சிறுமி பிரகன்யா பிறக்கும் போதே ஆசனவாய் துவாரம் இல்லாமல் இருந்தது. இதனால் அவளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் குணப்படுத்த முடியவில்லை. மேலும் நாட்கள் செல்லச்செல்ல சிறுமியின் உடல்நிலை மோசமடைந்தது.

    ஒவ்வொரு மாதமும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தனது மகளை அழைத்துச் சென்று சங்கீதா சிகிச்சை அளித்து வந்தார். அதற்கு செலவு அதிகமாக ஆகியுள்ளது. ஆனாலும் பிரகன்யாவின் உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்பட வில்லை.

    தினமும் தங்களின் மகள் படும் கஷ்டத்தை பார்த்து ஜெயராஜூம், சங்கீதாவும் வேதனை அடைந்தனர். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் சங்கீதா தனது மகளை மதுரையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு வந்தார்.

    அப்போதிருந்தே அவர் யாருடனும் பேசாமல் கவலையுடன் இருந்ததாக கூறப்படுகிறது. ஜெயராஜ் வேலைக்கு சென்றிருந்ததால் சங்கீதாவும், சிறுமி பிரகன்யாவும் வீட்டில் தனியாக இருந்தனர்.

    இந்த நிலையில் வேலை முடிந்து இரவில் வீட்டுக்கு ஜெயராஜ் வந்தார். அவர் வீட்டு கதவை தட்டிய போதிலும் சங்கீதா திறக்கவில்லை. நீண்ட நேரமாக தட்டியும் கதவை மனைவி திறக்காததால் சந்தேகமடைந்த ஜெயராஜ், கதவை உடைத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது அவரது மனைவி சங்கீதா தூக்கில் பிணமாக தொங்கினார். மேலும் மகள் பிரகன்யா துண்டால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கதறி அழுதார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

    இந்த சம்பவம் குறித்து சிங்கம்புணரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தாய் மற்றும் மகள் ஆகிய இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அரிய வகை நோயால் அவதிப்பட்ட மகள் பிரகன்யாவை, தாய் சங்கீதா துண்டால் கழுத்தை நெரித்து கொலைசெய்து விட்டு, தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியவகை நோயால் அவதிப்பட்ட 5 வயது மகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிங்கம்புணரி பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சிவகங்கை அருகே 150 கிலோ மின் கம்பிகள் திருடிய 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
    • திருப்பத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர்

    திருப்பத்தூர்-சிவகங்கை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 150 கிலோ அலுமினிய கம்பிகளை 3 பெண்கள் திருடிக்கொண்டு சென்றனர். இதை பார்த்த மின்வாரிய ஊழியர்கள் அவர்களை பிடித்து திருப்பத்தூர்போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் திருச்சி கீரைக்கோட்டை காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி அய்யம்மாள் (37), ஜெயராஜ் மனைவி குருவம்மாள் (55), வீராச்சாமி மனைவி கலா (55) என தெரியவந்தது.

    மின் கம்பிகள் திருட்டு தொடர்பாக மின்பாதை ஆய்வாளர் செந்தில்வேல் கொடுத்த புகாரின்பேரில் 3 பெண்களையும் திருப்பத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து 3 பெண்களையும் கைது செய்தனர்.

    • காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.
    • விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

    காரைக்குடி

    காரைக்குடி செல்லப்பன் வித்யாமந்திர் சர்வதேசப் பள்ளியில் 12-ம் ஆண்டு தடகளப்போட்டிகள் மற்றும் விளையாட்டு விழா பள்ளி நடந்தது. தாளாளர் சத்யன் தலைமை தாங்கினார். திருப்பத்தூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆத்மநாதன், காரைக்குடி தேசிய மாணவர் படை பட்டாலியன் தலைமை அதிகாரி கர்னல் ரஜனீஷ் பிரதாப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர். பள்ளியின் கல்வி இயக்குநர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார்.

    மழலையர்கள் கைகளில் பூக்கள் ததும்பும் மலர் நடனம், உடற்பயிற்சி நடனம், வானவில் தோரண நடனம், மேற்கத்திய நடனம் ஆகியவை பார்வையாளர்களை கவர்ந்தன. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிர்வாக அதிகாரி பாலாஜி நன்றி கூறினார்.

    • காரைக்குடி நகர தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடந்தது.
    • கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்கி பேசினார்.

    காரைக்குடி

    காரைக்குடி நகர தி.மு.க. சார்பில் முன்னாள் பொது செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் 5 விளக்கு அருகில் நடந்தது. மாவட்ட செயலாளரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை தாங்கி பேசினார். நகர்மன்ற தலைவர் முத்துதுரை வரவேற்றார். நகர செயலாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார். தலைமை கழக பேச்சாளர்கள் தாமரை பாரதி, அறந்தை செல்வம், பா.கணேசன், ஓசூர் அப்துல் பாரி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    மாவட்ட துணை செயலாளர் ஜோன்ஸ் ரூசோ, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் துரைராஜ், மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சசிவர்ணன், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஹேமலதாசெந்தில், ஒன்றிய செயலாளர்கள் கே.ஆர்.ஆனந்தன், சின்னதுரை, பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் ரவி, ஒன்றிய துணை செயலாளர் சத்யா ராஜா, நகர தலைவர் சன்சுப்பையா, கவுன்சிலர்கள் அன்னை மைக்கேல், பேராசிரியை கலாகாசிநாதன், ஹரிதாஸ், தனம்சிங்கமுத்து, திவ்யாசக்தி, பூமிநாதன், கார்த்திகேயன், மாவட்ட பிரதிநிதிகள் சேவியர், சொக்கலிங்கம், முன்னாள் நகர இளைஞரணி அமைப்பாளர் காரை சுரேஷ், வட்ட செயலாளர்கள் முகமதுகனி, விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர துணை செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

    • வாழ்ந்து காட்டுவோம் திட்ட மண்டல ஆலோசகர், தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு உலக வங்கி நிதியுதவியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்தி வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், ஊரக தொழில்களை மேம்படுத்தல், வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழி வகுத்தல் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்ப டுத்தப்பட்டு வருகின்றது.

    இந்த திட்டம் சிவகங்கை மாவட்டத்தில் காளையா ர்கோவில், மானாமதுரை மற்றும் தேவகோட்டை வட்டாரங்களை சேர்ந்த 124 ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டத்தின் வாயிலாக ஊரகப்பகுதிகளில் உள்ள சுய உதவி க்குழு உறுப்பினர்கள், தனிநபர் தொழில் முனை வோர், குழு தொழில், உற்பத்தியாளர்குழு, உற்பத்தியாளர் நிறுவனம் போன்றவற்றிற்கு தொழில் சார் ஆலோசனைகள் வழங்கவும், நடைமுறையில் உள்ள உற்பத்திசார் தொழில் நுட்பங்களை வழங்கவும், மதிப்புக்கூட்டு செயல்பாடுகள் மற்றும் சந்தை வாய்ப்புகள் குறித்த ஆலோசனைகளை வழங்கவும் மண்டல ஆலோசகர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

    விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தகுதிகள் பற்றிய விபரங்கள் https://www.tnrtp.org/notification.in என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து நேரடியாகவோ, தபால் மூலமாகவோ மாவட்ட திட்ட அலுவலகத்தில் வருகிற 27-ந் தேதிமாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க ேவண்டும்.

    தொழில் நுட்ப ஆலோசகர் (Technical Consultant /Advisior) பணிகளுக்கு பண்ணை தொழில் (நெல், கடலை, பயிறு வகைகள், தென்னை உற்பத்தி) M.Sc Agri, B.Tech Agri, B.Tech Biotechnology, MBA Agri, M.Sc. horticulture or any other Agri related Course கல்வித்தகுதியும், பண்ணை சார் தொழில் (மாடு, ஆடு கோழி மற்றும் மீன் வளர்ப்பு) M.Sc Animal husbandry, M.Sc. fisheries or any other related courses கல்வித்தகுதியும் மற்றும் பண்ணை சாரா தொழில் (பாரம்பரிய கைவினைப் பொருட்கள், அப்பளம், சர்க்கரை, தையல், மண்பாண்டம், பனை இலை பொருட்கள், கடல் சங்கு மற்றும் வெல்டிங்) M.Sc. Agribusiness Management,M.B.A. Marketing, M.B.A. Agribusiness Management or any other related courses கல்வித்தகுதியும் மற்றும் 7 மற்றும் அதற்கு மேற்பட்ட வருடம் அனுபவம் இருக்க வேண்டும். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மண்டலங்களில் 5 பணியிடங்கள் உள்ளன.

    வாழ்ந்து காட்டு வோம் திட்டத்தின் அங்கீகரி க்கப்பட்ட வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள கூகுள்படிவத்தில் 27.12.2022-க்குள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். விண்ணப்பத்தின் மீதான பரிசீலினை மாநில திட்ட மேலாண்மை அலுவ லகத்தில் மேற்கொள்ள ப்பட்டு தகுதியானவர்களை நேர்காணலுக்கு அழைக்கப்ப டுவார்கள். தகுதியானவர்களின் இறுதிப்பட்டியல் மாநில திட்ட மேலாண்மை அலகின் முதன்மை செயல் அலுவலரால் தேர்வு செய்யப்படும்.

    மேலும் விபரங்களுக்கு https://www.tnrtp.org/notification என்ற இணையதளத்தின் வாயிலாகவும், மாவட்ட செயல் அலுவலர், தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம், பல்நோக்கு கட்டிடம், கோர்ட் வாசல், மேலூர் ரோடு, சிவகங்கை என்ற முகவரியிலும், 04575 – 248096 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பனங்குடி கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் வரி வசூல் செய்யப்பட்டது.
    • வரி வசூல் மூலம் கிடைத்த ரூ. 1 ½ கோடி மதிப்பில் புதிய பள்ளிவாசல் கட்டப்பட்டது.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பனங்குடி கிராமத்தில் பெரும்பாலும் இந்துக்கள் வசித்து வருகின்றனர். கணிசமான அளவில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் வசிக்கின்றனர். ஜாதி, மத வேறுபாடின்றி இந்தப்பகுதி மக்கள் கோவில் திருவிழாக்களை முன் நின்று நடத்துவது வழக்கம்.

    பனங்குடி கிராமத்தில் பழமையான பள்ளிவாசல் இருந்தது. இந்த பள்ளிவாசலின் கட்டிடம் சிதிலமடைந்து மோசமான நிலையில் காணப்பட்டது. இதனால் அங்கு தொழுகை நடத்துவதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லை. இதையடுத்து புதிய பள்ளிவாசல் கட்ட ஜமாத் நிர்வாகிகள் முடிவு செய்தனர். இதற்கான ஆலோசனை கூட்டம் ஜமாத் தலைவர் தலைமையில் நடந்தது.

    இதில் அந்தப்பகுதி இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். மும்மதத்தினரும் இணைந்து பள்ளிவாசலை கட்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி பனங்குடி கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் வரி வசூல் செய்யப்பட்டது. இதன்மூலம் கிடைத்த ரூ. 1 ½ கோடி மதிப்பில் புதிய பள்ளிவாசல் கட்டப்பட்டது.

    இதன் திறப்பு விழா நடந்தது. விழாவில் அந்தப்பகுதி மக்கள் அனைவரும் அங்குள்ள கோவில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் நடத்தினர். அதன்பின் பள்ளிவாசல் திறப்பு விழா நடந்தது. இதில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டனர். சமூக நல்லிணக்கத்திற்கு உதாரணமாக இந்த சம்பவம் விளங்குவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    • மலைமீது தேடிய கிராமத்து இளைஞர்கள் பாறை இடுக்கில் காயத்துடன் விஷ்ணுராம் இருந்ததை பார்த்தனர்.
    • கிராம இளைஞர்களுக்கு விஷ்ணுராமின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.

    சிங்கம்புணரி:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பொன்னடபட்டியை சேர்ந்த பழனிவேல் மகன் விஷ்ணு ராம் (வயது21). நேற்று மாலை இவர் தாயாரிடம் பிரான்மலைக்கு செல்வதாக கூறிவிட்டு அங்கு மலை மேல் உள்ள கொடுங்குன்ற நாதரை தரிசனம் செய்ய தனியாக சென்றார். பொழுது சாய்ந்த நேரத்தில் பாதை தெரியாமல் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்ற விஷ்ணுராம், அங்குள்ள பாறையில் வழுக்கி புதருக்குள் விழுந்தார்.

    அங்கிருந்து தாயாருக்கு பாதை மாறி சென்றுவிட்டதாக செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பினார். மேலும் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகியது. குறுந்தகவலை பார்த்த தாயார் உடனடியாக பிரான்மலை ஊருக்குள் வந்து கிராம மக்களிடம் மகன் காணாமல் போன விவரத்தை கூறி அழுதார். இதையடுத்து பிரான்மலை, மற்றும் பாப்பாபட்டியை சேர்ந்த இளைஞர்கள் மலையில் ஏறி இரவு முழுவதும் வாலிபர் விஷ்ணுராமை தேடினர்.

    அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாததால் இரவில் திரும்பி விட்டனர்.இன்று காலை மீண்டும் கிராமத்து இளைஞர்கள் மலைமீது தேடியபோது பாறை இடுக்கின் இடையே தலையில் காயத்துடன் விஷ்ணுராம் இருந்ததை பார்த்தனர். பின்னர் அவரை பத்திரமாக மீட்டு மலையை விட்டு இறங்கினர். காயமடைந்த விஷ்ணுராமை உடனடியாக பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சுமார் 2,500 அடி உயரம் உள்ள பிரான்மலையில் நேரம், காலம் பார்க்காமல் மாலையில் இருந்து இன்று காலை வரை தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாப்பாபட்டி கிராம இளைஞர்களுக்கு விஷ்ணுராமின் பெற்றோர் ஆனந்த கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் பிரான்மலை மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் பரபரப்பு காணப்பட்டது. 

    ×