என் மலர்
உள்ளூர் செய்திகள்

பலியான கார்த்திக்
கார் மோதி மதுரை வாலிபர் பலி
- திருப்பத்தூர் அருகே நடந்த கார் விபத்தில் மதுரை வாலிபர் பலியானார்.
- இவர் மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு புறப்பட்டபோது விபத்தில் சிக்கி பலியாகி உள்ளார்.
திருப்பத்தூர்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள நாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் பழனிவேல்.
சம்பவத்தன்று பழனி வேல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காரில் சென்று விட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தார். காரை சதீஷ் கான் என்பவர் ஓட்டி வந்தார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கும்மங்குடி என்ற இடத்தில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்புறமாக கனரக வாகனங்களை முந்தி வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மீது கார் பயங்கரமாக மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் தூக்கி வீசப்பட்டார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இருந்தார். காரில் பயணித்த பழனிவேல், சதீஷ் கான் ஆகியோர் படுகாயம் அடைந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த நாச்சியார்புரம் போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி வேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் விபத்தில் இறந்த வாலிபர் மதுரை திருப்பரங்குன்றம் கோவில் தெருவை சேர்ந்த அரிச்சந்திரன் மகன் கார்த்திக் (வயது 24) என தெரியவந்தது. காரைக்குடி பகுதியில் வேலை பார்த்து வந்த இவர் மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு புறப்பட்டபோது விபத்தில் சிக்கி பலியாகி உள்ளார்.
விபத்தில் பலியான கார்த்திக்கு முனியம்மாள் என்ற மனைவியும், 3 மாத பெண் குழந்தையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






