என் மலர்tooltip icon

    சேலம்

    • குளிரை தாங்க முடியாமல், குழந்தைகள், வயதானவர்கள், சுற்றுலா பயணிகள் சிரமப்படுகின்றனர்.
    • பனி மூட்டம் காரணமாக அவ்வப்போது வானில் இருந்து மேக கூட்டங்கள் ஏற்காடு மலையில் படர்ந்து வருவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது.

    ஏற்காடு:

    சுற்றுலா தலங்களில் பிரசித்தி பெற்ற ஏற்காட்டில் வானுயர்ந்த மரங்கள், காபி செடிகள், அரியவகை தாவரங்கள், உள்ளன. இங்கு கிளியூர் நீர்வீழ்ச்சி, பூங்கா, ஏரி என பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இதை காண தினமும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதையொட்டி ஏற்காட்டில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் 2 மணிக்கு பெய்ய தொடங்கிய சாரல் மழை நள்ளிரவு 1.30 மணி வரை நீடித்தது. இதனால் தாழ்வான இடங்களில் குளம்போல் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    இதனிடையே குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது. இரவில் நடுங்க வைக்கும் அளவுக்கு குளிர் நிலவுகிறது. காலையில் சூரிய வெளிச்சம் நன்கு பரவிய பின்னரே பொதுமக்களால் வெளியே நடமாட முடிகிறது.

    குளிரை தாங்க முடியாமல், குழந்தைகள், வயதானவர்கள், சுற்றுலா பயணிகள் சிரமப்படுகின்றனர். மேலும் தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால், பருகுவதற்கும், குளிப்பதற்கும் வெந்நீரையே பயன்படுத்துகின்றனர்.

    தினமும் காலை 11 மணி வரை பனி மூட்டம் காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பனி மூட்டதால், மலை பகுதிகளில் உள்ள சாலைகள் தெளிவாக காண முடியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சாலையில் மெல்ல ஓட்டிச் செல்கின்றனர்.

    பனி மூட்டம் காரணமாக அவ்வப்போது வானில் இருந்து மேக கூட்டங்கள் ஏற்காடு மலையில் படர்ந்து வருவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது. வெளியூர் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்துள்ள சுற்றுலா பயணிகள் மேக கூட்டங்களால் நிலவிய குளுகுளு சூழலை ரசித்தவாறு சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்கின்றனர். இந்த குளுகுளு சீசனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • முதலமைச்சர் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் முகாமை தொடங்கி வைப்பதற்காக காரில் புறப்பட்டு தருமபுரி மாவட்டம் தொப்பூருக்கு சென்றார்.
    • பாதுகாப்பு ஏற்பாடுகளை சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, போலீஸ் சூப்பிரண்டுகள் சிவகுமார், ஸ்டீபன் சேசுபாதம் துணை கமிஷனர்கள் செய்திருந்தனர்.

    ஓமலூர்:

    தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பங்களை பதிவு செய்ய இன்று முதல் 35 ஆயிரம் 923 முகாம்கள் நடைபெற உள்ளன.

    இந்த முகாமினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தருமபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைத்தார்.

    இதற்காக இன்று காலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து புறப்பட்டு தனி விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்தார்.

    விமான நிலையம் முன்பு காவல்துறை சார்பில் நடந்த அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார். அவருக்கு விமான நிலையத்தில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கலெக்டர் கார்மேகம், மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர்கள் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.சிவலிங்கம், டி.எம். செல்வகணபதி, பார்த்திபன் எம்.பி. மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பூங்கொத்து, புத்தகம் கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

    விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து முதலமைச்சர் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் முகாமை தொடங்கி வைப்பதற்காக காரில் புறப்பட்டு தருமபுரி மாவட்டம் தொப்பூருக்கு சென்றார்.

    வழிநெடுகிலும் அவருக்கு சாலையின் இருபுறமும் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் விமான நிலையத்தில் இருந்து தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, போலீஸ் சூப்பிரண்டுகள் சிவகுமார், ஸ்டீபன் சேசுபாதம் துணை கமிஷனர்கள் செய்திருந்தனர்.

    • இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கை கொடுக்காததால் அணைக்கு வரும் நீர்வரத்தும் குறைந்து காணப்பட்டது.
    • அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட போது நீர்மட்டம் 103.35 அடியாக இருந்தது. இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து தேவைக்கு ஏற்ப தண்ணீர் குறைத்தும், அதிகரித்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கை கொடுக்காததால் அணைக்கு வரும் நீர்வரத்தும் குறைந்து காணப்பட்டது. அணைக்கு வரும் தண்ணீரை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது.

    இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    இதனால் கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 987 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் நாளை முதல் தமிழத்துக்கு வரத்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கர்நாடகாவில் மழை அதிகரித்து உள்ளதால் தமிழகத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 67.91 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 165 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • தமிழக அரசு, தொழில் அதிபர்களுடன் கைகோர்த்து கொண்டு விலைவாசி உயர்வை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டது.
    • தற்போது தக்காளி விலை ஆப்பிள் விலையை விட அதிகமாக விற்பதை நாம் அறிவோம்.

    சேலம்:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கொங்கணாபுரத்தை அடுத்த குரும்பப்பட்டி ஊராட்சி நாச்சியூரில் அ.தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது.

    விழாவில் அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து எடப்பாடி பழனிசாமி பேசும் போது கூறியதாவது:-

    தி.மு.க. அரசு தேர்தல் நேரத்தில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் ஆயிரம் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றனர். இன்று, குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்குவதாக கூறுகின்றனர்.

    இதனால் சாதாரண ஏழை எளிய குடும்ப தலைவிகள் கூட உரிமைத்தொகை பெற முடியாத நிலையில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. இந்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்.

    தமிழக அரசு, தொழில் அதிபர்களுடன் கைகோர்த்து கொண்டு விலைவாசி உயர்வை கண்டுகொள்ளாமல் விட்டு விட்டது.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையின்போது கட்டுமான பொருட்கள் அனைத்தும் அத்தியாவசிய பட்டியலில் சேர்க்கப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். ஆனால் அந்த வாக்குறுதி இன்று காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.

    தற்போது தக்காளி விலை ஆப்பிள் விலையை விட அதிகமாக விற்பதை நாம் அறிவோம். இந்த விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பெண்களுக்கு திருமண உதவித்தொகை, மடிக்கணினி திட்டம், தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கட்டிலில் அமரும் போது இந்த திட்டங்கள் கொண்டு வரப்படும்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான முகாமை நாளை திங்கட்கிழமை தருமபுரி மாவட்டத்தில் தொடங்கி வைக்க உள்ளார்கள்.
    • சேலம் மாவட்டத்தில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான முகாமை நாளை திங்கட்கிழமை தருமபுரி மாவட்டத்தில் தொடங்கி வைக்க உள்ளார்கள்.

    இதற்காக, நாளை காலை சென்னையில் இருந்து விமா னம் மூலம் சேலம் மாவட்டம், காமலாபுரம் விமான நிலையம் வருகைபுரிந்து, அங்கிருந்து சாலை வழியாக தருமபுரி மாவட்டத்தில் நிகழ்ச்சி நடைபெறும் தொப்பூருக்குச் சென்று, நிகழ்ச்சி முடிந்து மீண்டும் சாலை வழியாக சேலம் மாவட்டம்,காமலாபுரம் விமான நிலையம் வருகைதந்து, விமானம் மூலம் சென்னை செல்ல உள்ளார்கள். இதனையொட்டி, சேலம் மாவட்டத்தில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட அவர் தெரிவித்துள்ளார்.

    • ராசிபுரம் அருகே உள்ள பில்லா நல்லூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் இவரது தந்தை நாச்சிமுத்துவிற்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    • அப்போது இவருக்கு அருகில் நின்றிருந்த ஒரு வாலிபர் ரமேஷின் பாக்கெட்டில் இருந்து ரூ.500 திருடினார்.

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பில்லா நல்லூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (36) இவரது தந்தை நாச்சிமுத்துவிற்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ரமேஷ் உடன் இருந்து கவனித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று காலை மருத்துவர்கள் எழுதிக் கொடுத்த மருந்து மாத்திரைகளை வாங்குவதற்காக மருத்துவமனை வளாகத்தில் வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு அருகில் நின்றிருந்த ஒரு வாலிபர் ரமேஷின் பாக்கெட்டில் இருந்து ரூ.500 திருடினார்.இதைக் கண்ட ரமேஷ் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    போலீசாரின் விசாரணையில் அந்த வாலிபர் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அம்பேத்கார் நகர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (34) என்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் சீனிவாசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு நேற்று மதியம் சூரமங்கலம் கல்யாணசுந்தரம் காலனி பகுதியில் உள்ள ஒரு காலி நிலத்தில் பணம் வைத்து சேவல் சண்டை நடப்பதாக தகவல் வந்தது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சில வாலிபர்கள் பணம் வைத்து சேவல் சண்டை விளையாட்டில் ஈடுபடுவது தெரியவந்தது.

    சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு நேற்று மதியம் சூரமங்கலம் கல்யாணசுந்தரம் காலனி பகுதியில் உள்ள ஒரு காலி நிலத்தில் பணம் வைத்து சேவல் சண்டை நடப்பதாக தகவல் வந்தது. அதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சில வாலிபர்கள் பணம் வைத்து சேவல் சண்டை விளையாட்டில் ஈடுபடுவது தெரியவந்தது.அப்போது அங்கு பணம் வைத்து சேவல் சண்டை விளையாட்டில் ஈடுபட்ட திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கோரையர் பாலம் பகுதியைச் சேர்ந்த ராஜா (34), சூரமங்கலம் அருகே உள்ள கல்யாண சுந்தரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் பூபதி (44), சுபாஷ் (30), பிரபு (33),ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் 11 சேவல்களையும் பறிமுதல் செய்தனர்.

    • மனைவியுடன் கள்ளக்காதலால் அண்ணனை கொல்ல முயன்ற தம்பியை ஜெயிலில் அடைத்தனர்.
    • போலீசார், விவேக் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு அவரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு கொம்மக்காடு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி வினோத் (வயது 26). இவர், நேற்று முன்தினம் எஸ்.புத்தூர் செல்லும் வழியில் சாலையோர பள்ளத்தில் படுகாயங்களுடன் சுயநினைவு இல்லாமல் கிடந்தார். காட்டெருமை தாக்கி காயம் அடைந்ததாக கூறி அவரது தம்பி விவேக், வினோத்தை மீட்டு நாகலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    சந்தேகம்

    இது தொடர்பாக ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத் படுகாயங்களுடன் கிடந்த எஸ்.புத்தூர் பகுதிக்கு சென்று அங்கு காட்டெருமையின் கால் தடங்கள் எதுவும் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து விட்டு அப்பகுதி பொதுமக்களிடம் விசாரித்தனர். இந்த பகுதியில் சமீபகாலமாக காட்டெருமை நடமாட்டம் கிடையாது என அவர்கள் தெரிவிக்கவே சந்தேகம் அடைந்த போலீசார், வினோத்தை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

    கள்ளத் தொடர்பு

    வினோத்துக்கும் அவரது தம்பி விவேக்கின் மனைவிக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. அதாவது, திருமணத்துக்கு முன்பே இருவரும் காதலித்ததாக கூறப்படுகிறது. தம்பியின் திருமணத்துக்கு பிறகும் வினோத் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இதனை அறிந்த விவேக், தனது அண்ணனை தீர்த்துக்கட்ட முடிவு செய்து காத்திருந்தார்.

    சம்பவத்தன்று கள்ளத் தொடர்பு சம்பந்தமாக எஸ்.புதூர் செல்லும் வழியில் விவேக்குக்கும், வினோத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த சண்டையில் விவேக் அங்கு கிடந்த கல்லை எடுத்து வினோத்தின் தலையில் தாக்கினார். இதில் அவர் சுயநினைவு இழந்து சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். அவரை காட்டெருமை முட்டியதாக விவேக் அனைவரையும் நம்ப வைத்து நாடகமாடியது தெரியவந்தது.

    ஜெயிலில் அடைப்பு

    இதையடுத்து போலீசார், விவேக் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு அவரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.  

    • ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை குறி வைத்து அரசு மது பாட்டில்களை வாங்கி சட்ட விரோதமாக சந்து கடைகளில் வைத்து விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இதில் அங்குள்ள அங்கமுத்து என்பவரது வீட்டில் இருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 91 அரசு மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.

    ஏற்காடு:

    ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை குறி வைத்து அரசு மது பாட்டில்களை வாங்கி சட்ட விரோதமாக சந்து கடைகளில் வைத்து விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    மது பாட்டில்கள் பறிமுதல்

    இந்த நிலையில் ஏற்காடு பிலியூர் கிராமத்தில் சந்துகடை நடைபெறுவதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்று போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதில் அங்குள்ள அங்கமுத்து என்பவரது வீட்டில் இருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 91 அரசு மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கமுத்தை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    எச்சரிக்கை

    இதுகுறித்து ரூரல் டி.எஸ்.பி அமலா ஆட்வின் கூறியதாவது:-

    ஏற்காட்டில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் திருத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    லாட்டரி, மது, கஞ்சா, ஆகியவை விற்பனை செய்தால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். எனவே ஏற்காட்டில் யாரும் குற்றச் செயல்களில் ஈடுபட கூடாது.

    குற்றச் செயல்கள் ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் எங்கு நடந்தாலும் எனது செல்போன் எண். 8300127780 -க்கு தகவல் கொடுக்கலாம். தகவல் கொடுப்பவர்கள் விவரம் பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2 ஆண்டுகளாக ஓமலூர் வட்டாரத்தில் பெய்த மழை காரணமாக நீர் நிலைகளில் போதுமான தண்ணீர் உள்ளது.
    • தோட்டங்களில் விளையும் தக்காளியை அறுவடை செய்து, மொத்தமாக வாகனங்களில் கொண்டு வந்து, 2 கிலோ தக்காளி ரூ.150 என விற்பனை செய்கின்றனர்.

    ஓமலூர்:

    ஓமலூர்,காடையாம் பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டார கிராமங்களில் காய்கறி சாகுபடி அதிகள வில் செய்யப்படும். கடந்த 2 ஆண்டுகளாக ஓமலூர் வட்டாரத்தில் பெய்த மழை

    காரணமாக நீர் நிலைகளில் போதுமான தண்ணீர் உள்ளது. அதனால், பெரும்பா லான விவசாயிகள் குறு கிய கால பயிர்களை தவிர்த்து நெல், கரும்பு, வாழை, மஞ்சள் போன்ற பயிர்களை சாகுபடி செய்து காய்கறி வருகின்றனர்.

    இந்த நிலையில் குறைந்த நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகள் மட்டும் காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த காலங்களில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து இருந்ததால் விவசாயிகள் தக்காளி அதிகளவில் பயிரிடுவதை தவிர்த்து வந்தனர். சில விவசாயிகள் மட்டும் தக்காளி சாகுபடி செய்திருந்தனர். அதனால், சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்தது.

    கடந்த மாதம் தக்காளி விலை பன்மடங்கு உயர்ந்து தற்போது கிலோ ரூ.120 முதல் ரூ.130 வரை விற்பனையாகி வருகிறது. அதனால் மக்கள் குறைந்த அளவிலேயே தக்காளியை வாங்குகின்றனர்.

    இந்த நிலையில் தற்போது ஓமலூர் வட்டாரத்தில் 2 கிலோ தக்காளி ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்தில் சாகுபடி செய்துள்ள நாட்டு தக்காளி தற்போது நல்ல விளைச்சல் கொடுத்து வருகிறது. இந்த தக்காளி அளவில் சிறியதாக இருப்பதாலும், 4,5 நாட்கள் வரை மட்டுமே வைத்து பயன்படுத்த முடியும் என்பதாலும் விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர். தோட்டங்களில் விளையும் தக்காளியை அறுவடை செய்து, மொத்தமாக வாகனங்களில் கொண்டு வந்து, 2 கிலோ தக்காளி ரூ.150 என விற்பனை செய்கின்றனர்.

    விலை குறைவு மற்றும் நாட்டு தக்காளி என்பதால் மக்கள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.

    • சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அனைத்து கிளைகளும் 4-வது வார சனிக்கிழமை மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ரத்து செய்யப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
    • இன்றும் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்டது.

    சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அனைத்து கிளைகளும் 4-வது வார சனிக்கிழமை மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ரத்து செய்யப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.நேற்றும்,இன்றும் தமிழக அரசு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற இலவச வங்கி கணக்கு தொடங்க ஏதுவாக செயல்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-நேற்றும், இன்றும் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயல்பட்டது. புதிய கணக்குகள் தொடங்கும் நடைமுறையினை மேற்கொள்ள பட்டது. எனவும் இதர பணபரிவர்த்தனைகள் மேற்கொள்ள வில்லை எனவும் தெரிவித்துள்ளனர். குடும்பத் தலைவிகள் ரூ 1000 உரிமைத் தொகை பெற இலவச வங்கி கணக்கு துவங்க வங்கிக்கு வரலாம். இந்த வாய்ப்பை மகளிர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

    • அம்மாப்பேட்டை அருகே உள்ள தனியார் கல்லூரி அருகே வந்தபோது மோட்டார்சைக்கிள் மீது திடீரென ஒரு வாகனம் அதிவேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
    • இதில் படுகாயம் அடைந்த ரமேஷ் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

    சேலம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அத்திபாடி பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராஜ். இவரது மகன் ரமேஷ் (வயது 29). இவர் நேற்று இரவு வீட்டில் இருந்து மோட்டார்சைக்கிளில் சேலத்திற்கு வந்தார்.

    வாகனம் மோதி பலி

    நள்ளிரவு 2 மணி அளவில் அம்மாப்பேட்டை அருகே உள்ள தனியார் கல்லூரி அருகே வந்தபோது மோட்டார்சைக்கிள் மீது திடீரென ஒரு வாகனம் அதிவேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த ரமேஷ் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

    இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் அம்மா பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ரமேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் ரமேஷின் உறவினர்கள் கிருஷ்ணகிரி யில் இருந்து சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். பலியான ரமேஷ் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

    சி.சி.டி.வி. காமிராவில் ஆய்வு

    இந்த விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ் மீது மோதிவிட்டு சென்ற வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் விபத்து நடந்த காட்சி பதிவாகி உள்ளதா? எனவும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    ×