என் மலர்tooltip icon

    சேலம்

    • சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சி தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது.
    • பேரூராட்சில் சார்பில் அள்ளப்படும் குப்பைகளை மாநகராட்சி எல்லையும் பேரூராட்சி நுழைவாயிலும் கொட்டப்பட்டு வந்தது.

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சி தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. முன்பு பேரூராட்சில் சார்பில் அள்ளப்படும் குப்பைகளை மாநகராட்சி எல்லையும் பேரூராட்சி நுழைவாயிலும் கொட்டப்பட்டு வந்தது. தற்போது இந்த குப்பைகள் கொட்டி கொட்டி குப்பைமேடாக மாறிவிட்டது.

    அங்குள்ள கழிவுநீர் கன்னங்குறிச்சி ஏரிக்கு சென்றது. தற்போது இந்த பகுதியை சுற்றிலும் வீடுகள் அதிகரித்து விட்டது. இதனால் கழிவு நீர் செல்லமுடியாமல் குடியிருப்புகளை சுற்றி குட்டைபோல் தேங்கி கிடக்கிறது. இதனால் கொசு தொல்லை அதிகரித்து உள்ளது. மேலும் குப்பைமேட்டில் இருந்து தொடர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது:-

    கன்னங்குறிச்சி செல்லும் பொதுமக்கள் பேரூராட்சி நுழைவுவாயில் குப்பை மேட்டில் இருந்து வரும் துர்நாற்றம் விசுவதால் முகம் சுழிக்க வைக்கிறது. இதனால் இந்த பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் ஒவ்வாரு நாளும் துர்நாற்றத்தை சுவாசிப்பதால் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. தேங்கி உள்ள குட்டையில் எருமை மாடுகள் படுத்து உருளுவதால் அந்த துர்நாற்றத்திற்கு அதிகளவு கொசு உற்பத்தி அதிமாகிறது. இதனால் இரவு நேரங்களில் மக்கள் தூங்கமுடியாமல் தவித்து வருகிறோம். இதனால் அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது சேலம் மாநகராட்சி சார்பில் ஏரியை சுற்றுலா தளமாக மாற்றி வருகிறது. கழிவுநீர் செல்வதை தடுக்க வேண்டும். மேலும் குப்பைகளை கொட்டுவதை தவிர்த்து அந்த குப்பைமேட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • போலீசாருக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் புத்தாக்கப்பயிற்சி இன்று காலை சேலம் லைன்மேடு காவலர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
    • இந்த நிகழ்ச்சியை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தொடங்கி வைத்தார்.

    சேலம்:

    சேலம் மாநகர போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீசாருக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் புத்தாக்கப்பயிற்சி இன்று காலை சேலம் லைன்மேடு காவலர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி தொடங்கி வைத்தார். இதில் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் லாவண்யா (தெற்கு), கவுதம் கோயல் (வடக்கு), கூடுதல் கமிஷனர் ரவிசந்திரன், நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் மனநல டாக்டர்கள், விவேகானந்தன், தேன்மொழி தலைமையிலான மருத்துவ குழுவினர் பங்கேற்று மன அழுத்தத்தை போக்குவதற்கான பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்கள். இதில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர்.

    • கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் ஏமாற்றம்.
    • கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் ஏமாற்றம்.

    மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 -ந் தேதி முதல் டிசம்பர் 15-ந் தேதி வரை 137 நாட்களுக்கு 9.60 டி.எம்.சி, தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் 16,443 ஏக்கர், நாமக்கல் மாவட்டத்தில் 11,327 ஏக்கர், ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கர் என மொத்தம் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

    தென்மேற்கு பருவமழை

    கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. இதனால் முன்கூட்டியே மே மாதம் 24-ல் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கு திறக்கப்பட வேண்டிய தண்ணீரை முழுமையாக வழங்கவில்லை இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வந்தது.

    மேலும் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    ஏமாற்றம்

    மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடிக்கு மேல் இருக்கும் போது கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம். தற்போது அணையில் நீர்மட்டம் 63 அடியாக உள்ளது அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் குறித்த நாளான நேற்று கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை இதனால் கால்வாய் பாசன விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். எனவே கர்நாடகா அரசு ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கான நிலுவையில் உள்ள தண்ணீரை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கால்வாய் பாசன விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த 24-ந் தேதி உடல்நிலை ்பாதிக்கப்பட்டதால் சேலம் அக்ரகாரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
    • மர்ம நபர் நீ குளித்ததை நான் வீடியோ எடுத்து வைத்திருக்கிறேன், நான் சொல்லும் இடத்திற்கு வர வேண்டும், இல்லா விட்டால் வெளியில் பரப்பி விடுவேன் என கூறி மிரட்டினார்.

    சேலம்:

    சேலம் பெரிய வீராணத்தை சேர்ந்தவர் 45 வயது தொழிலாளி. கடந்த 24-ந் தேதி உடல்நிலை ்பாதிக்கப்பட்டதால் சேலம் அக்ரகாரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    ஆபாச வீடியோ

    அந்த நபர் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் இருந்த போது அவரது மனைவி அருகில் இருந்து கவனித்து கொண்டார். அப்போது அந்த பெண் அங்குள்ள குளியல் அறையில் குளித்துள்ளார்,

    இந்த நிலையில் கணவருக்கு சிகிச்சை முடிந்து அந்த பெண் வீடு திரும்பிய நிலையில் கடந்த 27-ந் தேதி அந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது.

    அதில் பேசிய மர்ம நபர் நீ குளித்ததை நான் வீடியோ எடுத்து வைத்திருக்கிறேன், நான் சொல்லும் இடத்திற்கு வர வேண்டும், இல்லா விட்டால் வெளியில் பரப்பி விடுவேன் என கூறி மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்ட பெண் சேலம் டவுன் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் அந்த செல்போன் எண்ணை வைத்து விசாரித்தனர். அப்போது சிக்கிய நபர் நான் பேசவில்லை என்றும், எனது செல்போனில் இருந்து வேறு நபர் பேசியதாகவும் கூறினார்.

    ஆஸ்பத்திரி ஊழியர்

    தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திய போது, ஆஸ்பத்திரியில் 8 ஆண்டுகளாக வார்டு பாயாக வேலை செய்து வந்த கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி. காலனியை சேர்ந்த விவேகானந்தன் (32) என்பவர் மற்றொருவர் செல்போனை வாங்கி பேசியது தெரிய வந்தது . இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவரிடம் விசாரித்த போது ஆஸ்பத்திரி பதிவேட்டில் இருந்து அந்த பெண்ணின் செல்போன் எண்ணை எடுத்து அவரிடம் உல்லாசம் அனுபவிக்கும் நோக்கில் வேறு ஒருவர் செல்போனில் இருந்து பேசி மிரட்டியதாக கூறி உள்ளார்.

    சிறையில் அடைப்பு

    தொடர்ந்து இது போல வேறு யாரையும் ஆபாச படம் எடுத்து மிரட்டினாரா ? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இதற்கிடையே விவேகானந்தனை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சேலம் மாவட்டம் ஆத்தூர் நரசிங்கபுரம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன.
    • இதில் 71 தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

        ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் நரசிங்கபுரம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 71 தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

    71 ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கும் ஒப்பந்த நிறுவனம் கடந்த 3 மாத காலமாக சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து இன்று காலை பணிக்கு வந்த ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 71 பேரும் பணிக்கு செல்லாமல் நிலுவையில் உள்ள 3 மாத சம்பளத்தை உடனடியாக வழங்க கோரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் கடந்த 18 மாதங்களாக இதற்கு முன்னால் இருந்த நிறுவனமும் வருங்கால வைப்பு நிதி பணம் முறையாக செலுத்தவில்லை என்று தெரிவித்தனர்.

    2 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நகராட்சி ஆணையாளர், நகராட்சி சுகாதார ஆய்வாளர், பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் எங்களுக்கு சம்பளம் போடாமல் போராட்டத்தை கைவிட போவதில்லை என தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் இடையப்பட்டி கிராமத்தில் மயிலைமலை முத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
    • நூற்றுக்கணக்கான பெண்கள் சிறுதானியங்களில் கூழ் சமைத்து அம்மன் சன்னதிக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் இடையப்பட்டி கிராமத்தில் மயிலைமலை முத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்படும் இந்த அம்மன் கோவிலில் திருவிழா, நேற்று நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பெண்கள் சிறுதானியங்களில் கூழ் சமைத்து அம்மன் சன்னதிக்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர். வறட்சி நீங்கி மழை பொழிய வேண்டி கூழ் வைத்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். சக்தி வாய்ந்த தெய்வமான முத்து மாரியம்மனிடம் வேண்டுதல் வைத்துள்ளதால் நல்ல மழை பெய்து வறட்சி நீங்கி வளம் கொழிக்குமென நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக, இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • பேட்டரி கடை முன்பாக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளை நேற்று இரவு மர்மநபர் ஒருவர் திருடிக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றார்.
    • இதனைக் கண்ட பேட்டரி கடையில் இருந்த வாலிபர்கள் தப்பிச் செல்ல முயன்ற மர்மநபரை பிடிப்பதற்கு துரத்தி சென்றனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி தம்மம்பட்டி சாலையில் தனியார் தியேட்டர் எதிரே இயங்கி வரும் பேட்டரி கடை முன்பாக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளை நேற்று இரவு மர்மநபர் ஒருவர் திருடிக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றார்.

    தர்ம அடி

    இதனைக் கண்ட பேட்டரி கடையில் இருந்த வாலிபர்கள் தப்பிச் செல்ல முயன்ற மர்மநபரை பிடிப்பதற்கு துரத்தி சென்றனர். அப்போது அவர் சாலையில் சென்று கொண்டிருந்த மற்றொரு மோட்டார்சைக்கிள் மீது மோதி கீழே விழுந்தார். இருப்பினும் உடனே அவர் எழுந்து ஓடிச் சென்று அருகிலுள்ள தேங்காய் மண்டிக்குள் புகுந்து கொண்டார். அவரை சுற்றி வளைத்து பிடித்து வாலிபர்கள் தர்ம அடி கொடுத்தனர். இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் கூடியது.

    இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார் மோட்டார்சைக்கிள் திருடிய நபரை மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்

    இது பற்றி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மோட்டார்சைக்கிள் திருடிய நபர் தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பகுதியை சேர்ந்த அல்லிமுத்து (23) என்பதும், இவர் மீது ஏற்கனவே மோட்டார்சைக்கிள் திருடியதாக கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

    போலீசார் தொடர்ந்து வாலிபர் அல்லிமுத்துவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காவிரி கரையோர பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா கோலா கலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் மேட்டூருக்கு 1 லட்சத்திற்கும் அதிக மான பொது மக்கள் வந்து செல்வார்கள்.

    சேலம்:

    காவிரி கரையோர பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா கோலா கலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், அனைவரது வாழ்வில் காவிரி போல மகிழ்ச்சியும், வளமும் பொங்கி வாழ வேண்டும் என்று காவிரிக்கு படையிலிட்டு வழிபாடு செய்வது வழக்கம்.

    மேள தாளங்கள்....

    அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு பண்டிகையையொட்டி தொலை தூர கிராம மக்கள் தங்களது குல தெய்வங்களை தலையில் சுமந்த படி விடிய விடிய நடந்து வந்து ஆடி 18 அன்று மேட்டூர் காவிரியில் நீராட்டி மீண்டும் தங்களது கிராமங்களுக்கு மேள தாளங்களுடன் எடுத்து செல்வார்கள்.

    பொது மக்களும் காவிரியில் நீராடி மகிழ்வார்கள். புது மண தம்பதியர் தங்களது திருமண மாலைகளை வாழை இலையில் வைத்து வழிபட்டு காவிரி ஆற்றில் விட்டு செல்வார்கள். இதற்காக தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் மேட்டூருக்கு 1 லட்சத்திற்கும் அதிக மான பொது மக்கள் வந்து செல்வார்கள்.

    கூடுதல் பாதுகாப்பு

    மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த மேட்டூர் ஆர்.டி.ஓ. தணிகாசலம், டி.எஸ்.பி. மரியமுத்து ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அணை கட்டு முனியப்பனை பக்தர்கள் இடையூறின்றி தரிசித்து செல்ல முனியப்பன் கோவில் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. பொது மக்கள் முண்டியடித்து செல்வதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பொது மக்கள் நீராட காவிரி பாலப்பகுதியில் உள்ள 2 படித்துறைகள், மட்டம் பகுதியில் உள்ள 3 படித்துறைகள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன. காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதால் மற்ற பகுதிகளில் குளிக்க அனுமதி கிடையாது.

    மேட்டூர் நகராட்சி சார்பில் தற்காலிக உடைமாற்றும் அறைகள் , கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் மேட்டூர் டி.எஸ்.பி. தலைமையில் 200 போலீசார் ஊர்க்காவல் படையினர், என்.எஸ்.எஸ். மாணவர்கள், சாரண சாரணியர்கள் ஈடுபடுகிறார்கள்.

    ஆம்புலன்ஸ்கள்

    தீயணைப்பு வீரர்கள் 20 பேர் காவிரி கரையில் படகுகளில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட உள்ளனர். 5 பரிசல்கள், ரப்பர் படகுகள் நிறுத்தப்படும் . தற்காலிக புறக்காவல் நிலையம், முதல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தயார் நிலையில் ஆம்புலன்ஸ்களகள் , தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

    5 இடங்களில் கண்கா ணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இது தவிர 12 இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு காவல் உதவி மையத்தில் இருந்து போலீசார் கண்காணிக்கிறார்கள். சேலம், மேச்சேரி, ஈரோடு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் மேட்டூர் அரசு ஆண்கள் பள்ளியிலும்,

    கூடுதலாக வாகனங்கள் வந்தால் 4 ரோடு பகுதியிலும் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கொளத்தூர் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் மேட்டூர் அணை வலது கரை பகுதியில் ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்தப்பட வேண்டும், திருடர்கள், குற்ற வாளிகளை கண்காணிக்க சாதாராண உடையில் குற்றப்பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று முதல் ஆடிப்பெருக்கு விழாவிற்கான கடைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் காவிரி கரையோர பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • கடந்த 20-ந் தேதி இரும்பு பொருட்களை கொள்முதல் செய்யும் நிறுவனம் பெயரில் போலி மின்னஞ்சல் வந்தது.
    • பணம் சென்றடைந்ததும் இரும்பு பொருட்கள் வரவில்லை.

    சேலம்:

    சேலம் பொன்னம்மாப்பேட்டை தண்ணீர் தொட்டி சாலையை சேர்ந்தவர் சிவக்குமார் (43), இரும்பு வியாபாரி.

    இவருக்கு கடந்த 20-ந் தேதி இரும்பு பொருட்களை கொள்முதல் செய்யும் நிறுவனம் பெயரில் போலி மின்னஞ்சல் வந்தது. இதனை வழக்கமாக கொள்முதல் செய்யும் நிறுவனம் என நம்பி இமெயிலில் தெரிவித்திருந்த கல்ப் ஸ்டீல்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அபுதாபி பெயரிலான போலி நிறுவன வங்கி கணக்குக்கு 71.93 லட்சம் ரூபாயை செலுத்தினார்.

    பணம் சென்றடைந்ததும் இரும்பு பொருட்கள் வரவில்லை. இதுகுறித்து அவர் விசாரித்தபோது தான் போலி இமெயில் மூலம் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். தொடர்ந்து அவர் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மோசடியில் ஈடுபட்டது அபுதாபி நிறுவனமா? அல்லது வடமாநிலத்தை சேர்ந்த கும்பலா? என்பது குறித்து அந்த வங்கி கணக்கை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
    • இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 62.490 அடியாக இருந்தது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணை மூலம் தமிழகத்தில் 12 மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்திற்கு குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்போது 103.35 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது மளமளவென குறைந்து வருகிறது.

    வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை அதிகளவில் பொழிந்து காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை கைகொடுக்கவில்லை. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அதிகபட்சமாக தமிழகத்திற்கு 23ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இந்த தண்ணீர் வரத்தொடங்கியதால் சுமார் 4 நாட்கள் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதற்கிடையே மழை நின்றதால் கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் தண்ணீரும் குறைக்கப்பட்டது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 62.490 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு வெறும் 305 கனஅடி தண்ணீரே வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து கடந்த ஒரு வாரமாக டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி 26.5 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இதில் 6 டி.எம்.சி. குடிநீர் திட்டங்கள் மற்றும் மீன்வளத்துக்கு பயன்படுத்தப்படும். தற்போது அணையில் இருந்து தினமும் 1 டி.எம்.சி.வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையில் இருந்து இன்னும் 20 நாட்களுக்கு மட்டுமே டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இதனால் டெல்டா விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    • பெட்ரோல் பங்க் அருகே சுமார் 45 வயது மதிக்க தக்க நபர் இரு சக்கர வாகனம் மோதி காயமடைந்தார்.
    • அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.

    சேலம்:

    சேலம் இரும்பாலை போலீஸ் சரகம் கணபதி பாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சுமார் 45 வயது மதிக்க தக்க நபர் இரு சக்கர வாகனம் மோதி காயமடைந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று உயிரிழந்தார். இறந்தவரின் பெயர் ராமசாமி என மருத்துவமனை பதிவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து இரும்பாலை போலீசார் வழக்கு பதவு செய்து சம்பவ இடத்தில் விசாரணை செய்தனர். இதில் அந்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டு அந்த பகுதியில் சுற்றித் திரிந்தது தெரியவந்தது.

    ஆனால் அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

    • கல்வி உதவித்தொகை திட்டத்தில் தகுதியான மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து எழுத்துத் தேர்வின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெற்றுப் பயன் பெறலாம்.
    • முப்பதாயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்ப தாவது:-

    கல்வி உதவிதொகை

    மத்திய அரசின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் தகுதியான மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து எழுத்துத் தேர்வின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெற்றுப் பயன் பெறலாம்.

    2023-24 நிதி யாண்டில், நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபின பழங்குடியினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த முப்பதாயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    9-ம் வகுப்பு

    தமிழ்நாட்டைச் சேர்ந்த 3,093 மாணவ, மாணவிகளுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் (மாணவ, மாணவியர்கள்) பெற்றோர், அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருத்தல் வேண்டும். பள்ளிகளில் 9 அல்லது 11 - ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்க வேண்டும்.

    10-ந்தேதிக்குள்...

    9 மற்றும் 10 -ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையிலும் 11 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தேசியத் தேர்வு முகமை நடத்தும் நுழைவுத் தேர்வில் (YASASVI Entrance Test) தேர்ச்சி பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இத்தேர்விற்கு 10.08.2023 க்குள் https://yet.nta.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் 12.08.2023 முதல் 16.08.2023 தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும்.

    எழுத்துத் தேர்வு

    எழுத்துத் தேர்வு 29.09.2023 -ம் தேதி நடைபெறும். விண்ணப்பத்துடன் கைப்பேசி எண், ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண், வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    ×