என் மலர்tooltip icon

    சேலம்

    • மோரூர் பிட் 1 கிராமம் அரசன் காட்டில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான புளியமர தோட்டம் உள்ளது.
    • இந்த தோட்டத்தில் உடல் முழுவதும் அழுகி சிதைந்த நிலையில் தலை தனியாகவும், உடல் தனியாகவும் ஆண் பிணம் கிடந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மோரூர் பிட் 1 கிராமம் அரசன் காட்டில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான புளியமர தோட்டம் உள்ளது. சம்பவத்தன்று இந்த தோட்டத்தில் உடல் முழுவதும் அழுகி சிதைந்த நிலையில் தலை தனியாகவும், உடல் தனியாகவும் ஆண் பிணம் கிடந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கிராம நிர்வாக அலுவலர் குணசேகரனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு சங்ககிரி போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். அதன் பேரில் சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி பிரேதத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த கிடந்த ஆணின் வலது கையில் சுமன் என்று ஆங்கிலத்தில் பச்சை குத்தப்பட்டு உள்ளது. அவர் பச்சை நிறத்தில் வெள்ளை நிற கட்டம் போட்ட முழு கை சட்டையும், அடர் நீல நிற ஜீன்ஸ் பேன்ட்டும் அணிந்துள்ளார். மேலும் இவர் இறந்து சுமார் 3 முதல் 5 வாரம் இருக்காலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர். இவர் யார்? எதற்காக இங்கு வந்தார்? எப்படி இறந்தார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாமரைச்செல்வன்(26), கூலித் தொழிலாளி. இவருக்கும் எடப்பாடியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த மாதம் 21-ந் தேதி, சங்ககிரி வட்ட மலையில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.
    • இது குறித்த தகவலின் பேரில் சேலம் மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) அருள்மொழி விசாரணை செய்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா, செலவடை, வென்னானப்பட்டியைச் சேர்ந்த தங்கவேல், பாப்பாத்தியின் மகன் தாமரைச்செல்வன்(26), கூலித் தொழிலாளி. இவருக்கும் எடப்பாடியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த மாதம் 21-ந் தேதி, சங்ககிரி வட்ட மலையில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. இது குறித்த தகவலின் பேரில் சேலம் மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) அருள்மொழி விசாரணை செய்தார். இதையடுத்து, சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வளர்மதி, சப்-இன்ஸ்பெக்டர் சாரதா ஆகியோர் 17 வயது சிறுமியை திருமணம் செய்த தாமரைச்செல்வன் மற்றும் திருமணம் செய்து வைத்த பெரியோர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வாழப்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் புதுமண தம்பதிகளுக்கான விழிப்புணர்வு விழா பேளூரில் நடைபெற்றது.
    • இந்த விழாவிற்கு குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார அலுவலர் அருள்மொழி தலைமை வகித்தார்.

    சேலம்:

    வாழப்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் புதுமண தம்பதிகளுக்கான விழிப்புணர்வு விழா பேளூரில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார அலுவலர் அருள்மொழி தலைமை வகித்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர் கீர்த்திகாதேவி வரவேற்றார். பேளூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வெற்றிவேல் மற்றும் செவிலியர்கள், புதுமணத் தம்பதிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் வாயிலாக கர்ப்பிணிகள், குழந்தை பிரசவித்த தாய்மார்கள், வளரிளம் குழந்தைகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள், இணை உணவுகள் குறித்தும் ஊட்டச்சத்து உணவு முறை குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர்கள் சாந்தி, பிரேமா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், புதுமணத் தம்பதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    • காய்ச்சல் பாதிக்கப்பட்ட 40 பேர் தனிமைபடுத்தப்பட்டு உள்ளனர்.
    • 14 பேருக்கு காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு தீவிரமாக உள்ளது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரில் காவலர் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு காவலர் தேர்வில் வெற்றி பெற்ற 492 ஆண் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த வாரம் நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு பணிக்காக திருப்பூர், காங்கேயம் மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    பணிகள் முடிந்து மீண்டும் காவலர் பயிற்சி பள்ளிக்கு திரும்பிய நிலையில் 54 பயிற்சி போலீசாருக்கு மர்ம காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதில் 14 பயிற்சி போலீசார் மேட்டூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 40 பயிற்சி போலீசார் காவலர் பயிற்சி பள்ளி விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், காய்ச்சல் பாதிக்கப்பட்ட 40 பேர் தனிமைபடுத்தப்பட்டு உள்ளனர். 14 பேருக்கு காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு தீவிரமாக உள்ளது. அவர்களுக்கு ரத்தம் மற்றும் டெங்கு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அதன் முடிவுகள் வந்த பிறகு தான் டெங்கு காய்ச்சலா அல்லது சாதாரண காய்ச்சலா என்பது தெரிய வரும் என்றனர்.

    மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பயிற்சி போலீசாரை மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ. மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்ததோடு மருத்துவர்களிடம் பாதிக்கப்பட்ட போலீசாருக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.

    அதனைத் தொடர்ந்து காவலர் பயிற்சி பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 40 போலீசாரையும் நேரில் சென்று நலம் விசாரித்தார். மேலும் சுகாதாரத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட பயிற்சி போலீசாருக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

    • தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
    • கர்நாடக அணைகளில் இருந்தும் தண்ணீர் 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசன தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை கை கொடுக்காததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. மேலும் பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததாலும் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது.

    இந்த நிலையில் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. அதே நேரம் கர்நாடக அணைகளில் இருந்தும் தண்ணீர் 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    தற்போது தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததாலும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதாலும் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 37.05 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 524 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 10.8 டி.எம்.சி.தண்ணீர் மட்டுமே உள்ளது. மீன் வளம் மற்றும் குடிநீர் தேவைக்கு 6 டி.எம்.சி. தண்ணீர் அணையில் தேக்கி வைக்கப்படும். மீதி உள்ள 4.8 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே பாசனத்துக்கு திறக்கப்படும். தற்போது திறக்கப்படும் தண்ணீரே தொடர்ந்து வெளியேற்றப்பட்டதால் காவிரி டெல்டா பாசனத்துக்கு இன்னும் 5 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் சூழல்நிலை உருவாகி உள்ளது.

    • தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பவித்ரா கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி புகார் கொடுத்தார்.
    • உடல் நலம் பாதிக்கப்பட்ட பவித்ரா ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வேலக்கவுண்டனூரை சேர்ந்தவர் மோகன்ராஜ். சென்னையில் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். இவர் தனது வீட்டருகே வசிக்கும் பி.எஸ்சி மயக்கவியல் படித்துள்ள பவித்ரா என்ற பெண்ணை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

    இவர்களது காதலுக்கு பவித்ரா வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த மே மாதம் அவரை காஞ்சிபுரம் அழைத்து சென்று மோகன்ராஜ் திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்து வந்தார்.

    இந்நிலையில் மோகன்ராஜ் தனது சகோதரி சவுமியாவுக்கு பிறந்த குழந்தையை பார்ப்பதற்காக கடந்த 2 மாதம் முன்பு சொந்த ஊரான வேலகவுண்டனூருக்கு வந்தார். அதன்பின்னர் மனைவி பவித்ராவை அவர் தொடர்பு கொள்ளவில்லை.

    இதையடுத்து கணவரை தேடி 3 மாத கர்ப்பணியான பவித்ரா வேலாக்கவுண்டனூரில் உள்ள மோகன்ராஜின் வீட்டுக்கு வந்தார். அப்போது மோகன்ராஜின் பெற்றோர் முருகன், சாரதா மற்றும் உறவினர்கள் சேர்ந்து பவித்ராவை அவரது கணவரை பார்க்க அனுமதிக்காமல் விரட்டி அனுப்பினார்கள்.

    இதையடுத்து தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பவித்ரா கடந்த ஜூலை மாதம் 22-ந் தேதி புகார் கொடுத்தார். ஆனால் போலீசார் ஒரு மாதமாக விசாரித்தும் மோகன்ராஜை கண்டுபிடிக்கவில்லை. மேலும் பவித்ராவை கணவர் வீட்டிற்குள் அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் மறைத்து வைத்துள்ள தனது காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி கடந்த ஆகஸ்டு மாதம் 23-ந் தேதி முதல் மோகன்ராஜின் வீட்டின் முன்பு அமர்ந்து பவித்ரா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இதனிடையே வீட்டை பூட்டிவிட்டு வெளியேறிய மோகன்ராஜ் குடும்பத்தினர் அவர்களது உறவினர்களை அனுப்பி பவித்ராவை அச்சுறுத்தி கடுமையாக தாக்கினர். இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பவித்ரா ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    சிகிச்சை முடிந்து திரும்பிய அவர் மீண்டும் மோகன்ராஜ் வீட்டு முன்பாக அமர்ந்து தொடர்ந்து 35-வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்.

    கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார். 

    • காயம்பட்ட நிலையில் பச்சை கிளி ஒன்று ஆசிரியர் பக்தவத்சலம் மடியில் வந்து அமர்ந்துள்ளது.
    • ஆசையாக வளர்த்து வந்த ஆண்டாள் கிளியை ஆசிரியர் பக்தவத்சலம் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் பெரிய மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பக்தவத்சலம். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கைலாசநாதர் கோவில் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். சற்று ஓய்வெடுக்க அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்துள்ளார்.

    அப்போது காயம்பட்ட நிலையில் பச்சை கிளி ஒன்று ஆசிரியர் பக்தவத்சலம் மடியில் வந்து அமர்ந்துள்ளது. இதையடுத்து கிளியை மீட்ட ஆசிரியர் அதனை வீட்டில் எடுத்து வந்து சிகிச்சை அளித்தார். மேலும் அதற்கு ஆண்டாள் என பெயரிட்டு ஆசையுடன் வளர்த்தும் வந்தார்.

    இதனிடையே கிளியை வீட்டில் வளர்த்துக்கொள்ள அனுமதி கேட்டு சென்னை முதன்மை வனச்சரக அலுவலருக்கு விண்ணப்பித்தார். இந்த தகவலை அறிந்த மாவட்ட வனத்துறை அதிகாரிகள் நேற்று தாரமங்கலத்தில் உள்ள ஆசிரியர் பக்தவத்சலத்தின் வீட்டிற்கு வந்தனர்.

    கிளியை வீட்டில் வளர்க்க அனுமதி அளிக்க முடியாது என தெரிவித்தனர். மேலும் கிளியை வனத்தில் விட அரசு ஆணை பிறப்பித்த நகலை காண்பித்தனர். இதனை தொடர்ந்து தான் ஆசையாக வளர்த்து வந்த ஆண்டாள் கிளியை ஆசிரியர் பக்தவத்சலம் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். 

    • திடீரென கதவு திறக்கவும் மறுபுறத்தில் 5-வது பிளாட்பார்மில் பவுலேஷ் தவறி விழுந்தார்.
    • விபத்து நடந்த வந்தே பாரத் ரெயிலின் சி3 பெட்டியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தார்.

    சேலம்:

    சென்னை-கோவை இடையே சேலம் வழியாக வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 26-ந் தேதி வந்தே பாரத் ரெயிலில் சென்னை கீழக்கட்டளை திருவள்ளுவர் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற போக்குவரத்து ஆய்வாளர் பவுலேஷ் (வயது 70). அவரது மனைவி ரோஸ் மார்க் கரெக்ட் ஆகியோர் சி3 பெட்டியில் ஈரோட்டிற்கு பயணித்தனர்.

    மாலை 6 மணிக்கு சேலத்திற்கு வந்த வந்தே பாரத் ரெயில் 4-வது பிளாட்பார்மில் வந்து நின்றது. அப்போது தனது இருக்கையில் இருந்து எழுந்த பவுலேஷ் ரெயிலின் அவசர கதவு அருகே வந்து நின்றிருந்தார். அப்போது திடீரென கதவு திறக்கவும் மறுபுறத்தில் 5-வது பிளாட்பார்மில் பவுலேஷ் தவறி விழுந்தார்.

    இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு ரெயில்வே போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனை செய்து அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

    இந்த விபத்தில் அவசர கதவின் பட்டனை யாரும் அழுத்தி திறக்காத நிலையில் அது எப்படி தானாக திறந்து பவுலேஷ் கீழே விழுந்தார் என ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்கா நேரடியாக சேலம் ரெயில்வே நிலையத்துக்கும் சென்று விசாரித்தார். பின்னர் கோவை புறப்பட்டு சென்ற அவர் விபத்து நடந்த வந்தே பாரத் ரெயிலின் சி3 பெட்டியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தார்.

    அதில் சேலம் ரெயில்வே நிலைய பகுதியில் இருந்து 2 ரெயில்வே ஊழியர்கள் தண்டவாள பாதைகளில் இறங்கி வந்து வந்தே பாரத் ரெயிலின் அவசரக் கதவு பட்டனை அழுத்தி திறந்து ரெயிலில் ஏறி மறுமுனையில் 4-வது பிளாட்பார்மில் இறங்கி சென்றது தெரியவந்தது.

    இந்த இருவரும் சென்ற சிறிது நேரத்தில் அவசர கதவு பகுதிக்கு பவுலேஷ் சென்று கதவின் மீது கை வைக்கவும் அது திறந்து கீழே விழுந்து உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவசர கதவை திறந்து வைத்த ரெயில்வே ஊழியர்கள் குறித்து கோட்ட மேலாளர் விசாரணை நடத்தினார்.

    அப்போது அவர்கள் சேலம் ரெயில்வே நிலைய பாயிண்ட் மேன்களாக பணியாற்றி வரும் தாமரைச்செல்வன், மீனா ஆகியோர் என தெரியவந்தது. அவர்கள் இருவரையும் சஸ்பெண்டு செய்து கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்கா உத்தரவிட்டார். தொடர்ந்து துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

    • செல்வநாயகம் (வயது 85). இவர் அந்த பகுதியில் உள்ள சந்தை அருகில் நேற்று முன்தினம் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.
    • அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மணியனூரை சேர்ந்தவர் செல்வநாயகம் (வயது 85). இவர் அந்த பகுதியில் உள்ள சந்தை அருகில் நேற்று முன்தினம் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொன்னுசாமி விவசாயி இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார்.
    • நேற்று காலை மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த சிலர் பொன்னுசாமியின் வீட்டில் இருந்து ஆடுகளை திருட முயன்றனர். சத்தத்தை கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ஊத்துக்காடு அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. விவசாயி. இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த சிலர் பொன்னுசாமியின் வீட்டில் இருந்து ஆடுகளை திருட முயன்றனர். சத்தத்தை கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

    தொடர்ந்து அவர்களை பிடிக்க முயன்றனர். அதில் ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதையடுத்து பிடிபட்ட நபரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் ஆடு திருட வந்தது வீராணம் தாதம்பட்டி அடுத்த நாகர்படையாச்சி காடு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தப்பிச் சென்ற அவரது கூட்டாளியை தேடி வருகின்றனர்.

    • 1,330 திருக்குறட் பாக்களையும் முற்றோதல் செய்யும் மாணவச் செல்வங்களுக்கு 2021-ம் ஆண்டு முதல் பரிசுத் தொகை ரூ.10,000-த்திலிருந்து ரு.15,000 ஆக உயர்த்தி பாராட்டு சான்றிதழும் வழங்கி சிறப்பிக்கப் பெறுகின்றனர்.
    • திறனறி குழுவினரால் திறனாய்வு செய்து தகுதி பெற்றவர்கள் தெரிவு செய்யப்பெற்று, பரிசு பெறுவதற்கு அரசுக்குப் பரிந்துரை செய்யப் பெறுகிறார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 1,330 திருக்குறட் பாக்களையும் முற்றோதல் செய்யும் மாணவச் செல்வங்களுக்கு 2021-ம் ஆண்டு முதல் பரிசுத் தொகை ரூ.10,000-த்திலிருந்து ரு.15,000 ஆக உயர்த்தி பாராட்டு சான்றிதழும் வழங்கி சிறப்பிக்கப் பெறுகின்றனர்.

    திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுக்கு கலந்து கொள்ளும் மாணவர்கள், திறனறி குழுவினரால் திறனாய்வு செய்து தகுதி பெற்றவர்கள் தெரிவு செய்யப்பெற்று, பரிசு பெறுவதற்கு அரசுக்குப் பரிந்துரை செய்யப் பெறுகிறார்கள். திருக்குறள் முற்றோதல் திறனாய்வு சேலம் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை தெரிவுக் குழுவால் மேற்கொள்ளப்பெறும். தெரிவு செய்யப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுத் தொகை ரூ.15,000-ம் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெறும்.

    திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு பெறுவதற்கு 1,330 திருக்குறட்பாக்களையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவராகவும், இயல் எண், பெயர், அதிகாரம் எண், பெயர், குறள் எண், பெயர் போன்றவற்றை தெரிவித்தால் அதற்குரிய திருக்குறளைக் கூறும்திறன் பெற்றவராகவும், திருக்குறளின் அடைமொழி கள், திருவள்ளுவரின் சிறப்புப் பெயர்கள், திருக்கு றளின் சிறப்புகள் ஆகிய வற்றை அறிந்தவராகவும், சேலம் வருவாய் மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளியில் பயில்பவராக இருத்தல் வேண்டும்.

    அரசு, அரசு உதவிபெறும், தனியார் பதின்மப்பள்ளிகள் போன்ற பள்ளிகளில் 1- ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரைபயிலும் மாண வர்கள் பங்குபெறலாம். தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பெறும் இப்பரிசினை ஏற்கனவே பெற்ற வராக இருத்தல் கூடாது. திருக்குற ளின் பொருளும் அறிந்திருப்பின் கூடுதல் தகுதியாகக் கருதப்பெறும். மாணவர்கள் தமிழ் வளர்ச்சி துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைதள முகவரியில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து நிறைவு செய்யப் பெற்ற விண்ணப்பங்களை சேலம் மாவட்ட கலெக்டர் அலுவ லக வளாகத்தில் 2-ம் தளத்தில் அமைந்துள்ள மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ, அஞ்சல் மூலமாகவோ 31.10.2023-க்குள் அளிக்கு மாறு கேட்டுக்கொள்ளப் பெறுகிறார்கள். இவ்வாறு அவர்  தெரிவித்துள்ளார்.

    • 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
    • இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    சேலம்:

    நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், பல்லடம், கரூர் உள்பட பல பகுதிகளில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால் ஏராளமானோர் விரதம் இருந்து வருகிறார்கள். இதனால் கறிக்கோழி தேவை குறைந்து வருவதால் அதன் விலை படிப்படியாக சரிந்து வருகிறது.

    10 நாட்களுக்கு முன்பு கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை 114 ரூபாயாக இருந்த நிலையில் படிப்படியாக சரிந்து 5 நாட்களுக்கு முன்பு 106 ரூபாயாக குறைந்தது.

    இந்த நிலையில் பல்லடத்தில் இன்று நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கறிக்கோழி விலையை மேலும் கிலோவுக்கு 9 ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 106 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை 97 ரூபாயாக குறைந்தது.

    இனிவரும் நாட்களில் கறிக்கோழி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கோழி பண்ணை சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    ×