என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • பரமக்குடி நகராட்சிக்கு வரி பாக்கி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • நகராட்சியில் வரி வசூல் 100 சதவீதம் இருந்தால் மட்டுமே நகர வளர்ச்சிக்கு தேவையான திட்ட பணிகளை உடனுக்குடன் செய்ய முடியும் என்றார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சிக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, காலியிட வரி, குத்தகை பாக்கியை நீண்ட நாட்கள் கட்டாமல் வைத்துள்ளவர்களின் பெயர் பட்டியல் விவரங்களை நாளிதழ்கள், விளம்பர பதாதைகள் மூலம் வெளியிடப்படும் என நகராட்சி ஆணையாளர் திருமால் செல்வம் எச்ச ரித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-

    பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகளில் வசிக்கும் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நகராட்சி நிதியில் இருந்து மேற்கொள்ள திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் நகராட்சி மூலம் அறிவிப்புகள் வழங்கியும், நகராட்சி பணி யாளர்கள் தொடர்ந்து வலி யுறுத்தியும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், உடனுக்குடன் செய்ய இயலாத சூழ்நிலை உள்ளது.நகராட்சி சட்ட விதி களின்படி ஒவ்வொரு ஆண்டும் முதல் அரை யாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் 31-ந் தேதிக்குள், 2-ம் அரை யாண்டுக்கான சொத்து வரியினை அக்டோபர் 30-ந் தேதிக்குள்ளும் நகராட்சிக்கு செலுத்த வேண்டும். நகராட்சியில் வரி வசூல் 100 சதவீதம் இருந்தால் மட்டுமே நகர வளர்ச்சிக்கு தேவையான திட்ட பணிகளை உடனுக்குடன் செய்ய முடியும்.

    எனவே சொத்து வரி விதிப்புதாரர்கள், குடிநீர் கட்டண நிலுவைதாரர்கள், காலிமனை வரி நிலுவை தாரர்கள் கடை மற்றும் குத்தகைதாரர்கள் தொழில் வரி இதர கட்டணங்களை நகராட்சிக்கு செலுத்தாமல் நிலுவை வைத்துள்ள அனைவரும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்களை 7 தினங்களுக்குள் நகராட்சி கருவூலத்தில் செலுத்த வேண்டும். பொதுமக்கள் நலன் கருதி சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வரி வசூல் மையம் செயல்படும்.அதே நேரம் அறிவிப்பு கள், தொடர் அறிவிப்பு கள் மூலமும் நகராட்சி பணியாளர்களால் பல முறை வலியுறுத்தியும், இதுவரை வரி மற்றும் கட்டணம் செலுத்தாத நிலுவைதாரர்களின் பெயர் பட்டியல், நாளிதழ்கள் மற்றும் விளம்பர பலகை மூலம் வெளியிட்டும் 1920-ம் ஆண்டு மாவட்ட நகராட்சிகளின் சட்ட பிரிவுகளின் படி ஜப்தி மற்றும் சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரத்தில் கூட்டுறவு வாரவிழா நடந்தது.
    • இதில் 1531 பயனாளிகளுக்கு ரூ. 11.58 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. அமைச்சர் ராஜகண்ணப்பன் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் வழங்கினார். தொடர்ந்து 1531 பயனாளிகளுக்கு ரூ. 11.58 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கி பேசியதாவது:-

    விவசாயிகள் பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மக்கள் நலன் தான் இந்த அரசின் நோக்கம் என்ற அடிப்படையில் முதல்-அமைச்சர் பல்வேறு திட்ட ங்களை செய்து வருகிறார்.

    மழை காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மழை பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.

    ராமநாதபுரம் மாவட்ட த்தில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் முன்கூட்டியே கொண்டு வரப்பட்டுள்ளன. வைகை தண்ணீரை விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ வசதி, கல்வி, மின்சாரம், சாலை வசதி, குடிநீர்வசதி இவை அனைத்தையும் முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் ராம.கருமாணிக்கம், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் திசைவீரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் முத்துக்குமார், மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் மனோகரன், துணை பதிவாளர்கள் ஜெய்சங்கர், முருகன், புஷ்பலதா, சுப்பையா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கால்நடை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • சிறந்த முறையில் கால்நடைகள் வளர்த்த விவசாயிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியதில் உள்ள கிழவனேரி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் பரமக்குடி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் டாக்டர் சிவகுமார், கிழவனேரி பஞ்சாயத்து தலைவர் ராமலட்சுமி, துணைத்தலைவர் கார்த்திக், உதவி மருத்துவர்கள் சுந்தரமூர்த்தி, மோகன், ஆய்வாளர் வீரன் மற்றும் கால்நடை உதவியாளர்கள் செந்தில்வேல், விஜயராணி கலந்து கொண்டனர்.

    இந்த முகாமில் 105 விவசாயிகள் பயனடைந்தனர். 116 மாடுகளுக்கும், 416 வெள்ளாடுகளுக்கும், 524 செம்மறியாடுகளுக்கும், 16 நாய்களுக்கும், 286 கோழிகளுக்கும் சிகிச்சை தரப்பட்டது. சிறந்த முறையில் கால்நடைகள் வளர்த்த விவசாயிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    • இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சிறுவன் உள்பட 15 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
    • விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 15 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

    ராமேசுவரம்:

    கச்சத்தீவு அருகே உள்ள கடல் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து வருகிறது.

    அதனை தடுக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

    இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சிறுவன் உள்பட 15 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கான நீதிமன்ற காவல் இன்று முடிவ டைந்தது. இதையடுத்து ராமேசுவரம் மீனவர்கள் 15 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி, 15 மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் விடுவிக்கப்பட்ட 15 பேரும் மீண்டும் எல்லைதாண்டி மீன்பிடிக்க வந்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவித்த நீதிபதி, படகின் உரிமையாளர் 6 மாதத்திற்குள் கோர்ட்டில் ஆஜராகுமாறு தெரிவித்தார்.

    விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 15 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் ஒரு சில தினங்களில் நாடு திரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்பில் மீனவர்களின் குடும்பத்தினர் உள்ளனர்.

    • பால் விலையை குறைக்கும் வரை பா.ஜ.க. தொடர்ந்து போராடும் என உச்சிப்புளியில் நடந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் பேசினார்.
    • பால் விலையை குறைக்கும் வரை பா.ஜ.க. தொடர்ந்து போராடும் என உச்சிப்புளியில் நடந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் பேசினார்.

    பனைக்குளம்

    தமிழகத்தில் பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்சியின் தலைவர் இ.எம்.டி. கதிரவன் உத்தரவின்படி, பா.ஜ.க.வினர் மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி முழக்கமிட்டனர்.

    மண்டபம் ஒன்றியம் உச்சிப்புளி பஸ் நிறுத்தம் அருகில் பிரமாண்ட அளவில் ஆர்ப்பாட்ட ஏற்பாடுகளை ஒன்றிய தலைவர் விக்ராந்த் சந்துரு செய்திருந்தார்.

    இந்த போராட்டம் பா.ஜ.க. மாவட்ட தலைவர் இ.எம்.டி.கதிரவன் தலைமையில் நடந்தது. இதில் பா.ஜ.க. முக்கிய பிரமுகரும், உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான சண்முகநாதன், மாவட்ட பொதுச் செயலாளர் ஆத்மா கார்த்திக், மாவட்டத் துணைத் தலைவர் அழகர், ஓ.பி.சி. பிரசார பிரிவு மாவட்ட தலைவர் தவமணி, தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் பரமேசுவரன், தரவு தளம் மாவட்ட துணைத் தலைவர் பாலமுருகன், ஒன்றிய பொதுச் செயலாளர் கோபால், ஒன்றிய பொருளாளர் ஜோதி, பா.ஜ.க.வை சேர்ந்த முருகானந்தம், கோபி, தீபக், பூவேந்திரன், கண்ணன், கார்த்தி, பிரித்திவிராஜ் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

    முன்னதாக பா.ஜ.க. மாவட்ட தலைவர் இ.எம்.டி. கதிரவன் பேசுகையில், தமிழகத்தில் பா.ஜ.க. மாநில தலைவராக பொறுப்பேற்றது முதல் அண்ணாமலை தமிழக மக்களின் நலனில் முழு கவனம் எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார்.

    பொதுமக்களுக்காக பல்வேறு ஆர்ப்பாட்டங்க ளை நடத்தி மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வருகிறார். பிரதமர் மோடி இந்திய திருநாட்டில் நல்லாட்சியை நடத்தி மக்களையும், நாட்டையும் பாதுகாத்து வருகிறார். பிரதமர் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்.

    தமிழகத்தில் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே வருகிறது. இதை கண்டிக்கும் வகையில் மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவின்படி, மாநில அரசைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    பால் விலை, மின் கட்டணம், சொத்து வரி என அனைத்தும் உயர்த்தப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதை குறைக்கும் வரை பா.ஜ.க. தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி போராடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார். இதுபோல் மாவட்டத்தில் பல்வேறு ஒன்றியங்களில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான பா.ஜ.க.வினர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

    • கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • மாவட்ட தலைவர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி சமத்துவபுரம் பகுதியில் கோவில் பூசாரிகள் நல சங்க மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. தென் மண்டல தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார்.

    மாநில ஆலோசனை குழு உறுப்பினர் முருகேசன், மாவட்ட செயலாளர் பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் ராமமூர்த்தி வரவேற்றார். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ராமநாதபுரம் மாவ ட்டத்தில் அதிக அளவில் ஓய்வு பெற்ற பூசாரிகள் இருப்பதால் தமிழக அரசிடம் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பம் செய்து உள்ளனர். தகுதியான பூசாரிகள் விண்ணப்பத்தை தேர்வு செய்து ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பூசாரிகள் நல வாரியத்திற்கு அலுவல்சாரா உறுப்பினர்களை தமிழக அரசு விரைந்து நியமனம் செய்ய வேண்டும். இந்து சமய அறநிலைத்துறை மூலம் பூசாரிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவே ற்றப்பட்டன.

    பொறுப்பாளர்கள் ராமநாதபுரம் மாவட்டத் துணைத் தலைவர் பொன் முனியசாமி, கடலாடி ஒன்றிய செயலாளர் லோகநாதன், மாவட்ட துணை செயலாளர் அய்யனகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட தலைவர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.

    • அபிராமம் அருகே நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தத்தால் பயணிகள்- மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
    • பொட்டகுளம் கிராம மக்கள் பயன் பெறும் வகையில் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள பொட்டகுளம் கிராம மக்களும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் வெளியூர் செல்லவேண்டும் என்றால் அபிராமம் - பார்த்திபனூர் செல்லும் மெயின் ரோட்டுக்கு வந்து பஸ் ஏற வேண்டும்.

    பொட்டகுளம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் வெயில் காலங்களிலும், மழை காலங்களிலும் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ-மாண விகள் அவதிப்படுகின்றனர்.

    இந்த கிராமத்தில் சுமார் 250 குடும்பத்திற்கும் மேற்பட்டவர்கள் குடியிருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து பொட்ட குளம் கிராம மக்க கூறுகையில், எங்கள் ஊரிலிருந்து பஸ் நிறுத்தம் இருக்கும் மெயின் ரோட்டுக்கு 5.கி.மீ தூரம் நடந்தே வரவேண்டி உள்ளது.

    அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும், பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் படிப்பதற்கும், வெளியூர் செல்லவும் சிரமப்படுகிறோம்.இந்த பஸ் நிறுத்த்தில் மழையிலும், வெயிலிலும் நிற்க முடியாமல் வயதா னவர்களும், குழந்தைகளும், கர்ப்பிணிகளும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

    இந்த பஸ் நிறுத்தத்திற்காக 30 ஆண்டுகளாக நிழற்குடை கேட்டு பல முறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. மாவட்ட நிர்வாகம் பொட்டகுளம் கிராம மக்கள் பயன் பெறும் வகையில் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • கீழக்கரையில் சாலையோர வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டிகளை எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • 5-வது வார்டு முத்துசாமிபுரத்தில் உள்ள குடிநீர் குழாய்களை பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

    கீழக்கரை

    தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சாலையோர வியாபாரி களுக்கான ஆதரவு திட்டத்தின் கீழ் கீழக்கரையில் உள்ள சாலையோர வியாபா ரிகளுக்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள தள்ளுவண்டிகள் வழங்க 15 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான காதர் பாட்ஷா முத்து ராமலிங்கம் எம்.எல்.ஏ. முதற்கட்டமாக 5 தள்ளு வண்டிகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து புதிய ஜெட்டி பாலத்தில் அமைந்துள்ள உயர் கோபுர மின் விளக்கை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். 1-வது மற்றும் 7-வது வார்டுகளில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காக்கள் மற்றும் குடிநீர் தொட்டிகளை திறந்து வைத்தார். 5-வது வார்டு முத்துசாமிபுரத்தில் உள்ள குடிநீர் குழாய்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

    மேலும் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.25 லட்சம் மதிப்பில் அமைய உள்ள சமுதாயக் கூட இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதில் நகராட்சி தலைவர் செஹனாஸ் ஆபிதா, துணைத்தலைவர் ஹமீது சுல்தான், ஆணையாளர் செல்வராஜ், பொறியாளர் அருண், ராமநாதபுரம் நகராட்சி துணைத் தலைவர் பிரவீன் தங்கம், கீழக்கரை நகர் தி.மு.க. செயலாளர் பஷீர் அகமது, மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் பிரவீன், வடக்கு தெரு ஜமாஅத் தலைவர் ரத்தின முஹம்மது, இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சுபியான், நயீம் மற்றும் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தொண்டியில் அரசு பள்ளியில் உணவுத்திருவிழா நடந்தது.
    • நேரு பற்றி மாணவ-மாணவிகள் பேச்சு, பாடல்கள் மூலம் நினைவுகூர்ந்தனர்.

    தொண்டி

    தொண்டியில் உள்ள திருவாடானை பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு உணவுத் திருவிழா தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவஹர் அலிகான் தலைமையில் நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் உறுப்பினர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், தெற்கு தெரு ஜமாத்தார்கள், நண்பர்கள் அறக்கட்டளை, தன்னார்வலர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நேரு பற்றி மாணவ-மாணவிகள் பேச்சு, பாடல்கள் மூலம் நினைவுகூர்ந்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் கார்த்திக், ஆசிரிய பயிற்றுனர் தனலெட்சுமி, சுரேஷ்குமார் உட்பட பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதில் துரித உணவுகளின் தீமைகள், கலப்படமற்ற பாரம்பரிய இயற்கை உணவின் நன்மைகளை பற்றிய விழிப்புணர்வு குழந்தைகளுக்கு ஏற்படும் வகையில் பெற்றோர்கள் தானியங்களில் உணவுகளை தயார் செய்து கொண்டு வந்தனர். சிறந்த இயற்கை உணவுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • பரமக்குடி அரசு கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தினர்.
    • இந்த நிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த அரசாணையை ரத்து செய்து, புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு கலைக் கல்லூரி யில் 66-க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர். தற்போது தமிழக அரசின் உயர்கல்வித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள் பணி பாதுகாப்பு இல்லாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    கடந்த அ.தி.மு.க ஆட்சியில் டி.ஆர்.பி மூலம் நேர்முகத் தேர்வு மற்றும் பணி அனுபவம் மூலம் 2,391 உதவி பேராசிரியர்கள் நியமிக்க குறிப்பானை வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதனைத் தொடர்ந்து, கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு அரசாணை வெளியிடப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தது. இந்த நிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த அரசாணையை ரத்து செய்துவிட்டு, கவுரவ விரிவுரையாளர்களை பழி வாங்கும் வகையில் புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. இதனால், பணி பாதுகாப்பு இல்லாத நிலையில் கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    புதிய அரசாணையை ரத்து செய்து பழைய அரசாணையின்படி உதவி பேராசிரியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்று கூறி வகுப்புகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • பாம்பன் நுழைவுப்பகுதியில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • பாறாங்கற்களில் சரிவு ஏற்பட்டு பாலம் சேதமடைய வாய்ப்புள்ளது.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் தீவையும் மண்டப பகுதியையும் இணைக்கும் வகையில் கடல் பரப்பில் 2.5 கி.மீட்டர் தூரத்திற்கு சாலை பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பாலத்தில் 2 புறமும் தொடங்கும் பகுதியில் கருவேல மரங்கள் அதிகமாக காணப்படுகிறது.

    இந்த மரங்கள் சாலைக்கு பாதுகாப்பாக பாறாங்கற்களால் அமைக்கப்பட்டுள்ள சரிவு பகுதிகளில் அதிகமாக வளர்ந்துள்ளன. இதனால் பாறாங்கற்களில் சரிவு ஏற்பட்டு பாலம் சேதமடைய வாய்ப்புள்ளது.

    இந்த கருவேல மரங்களால் சாலை பாலத்தில் இரு புறமும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் நுழையும்போது அழகு மிகுந்த நீண்ட பரப்புடைய கடல் பகுதியையும், கடலில் அமைக்கப்பட்டுள்ள ரெயில் தண்டவாளத்தையும், கடலில் அமைக்கப்பட்டுள்ள வளைவான சாலை பாலத்தையும், ரெயில் செல்லும் அழகையும் ரசிக்க முடியாமல் தவிக்கின்றனர்.

    சாலை விபத்தை தவிர்க்கும் வகையில் இந்த மரங்களை அகற்ற வேண்டும் என்று இந்த பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

    • ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • இந்த கூட்டத்தில் 269 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கையில் குறித்த 269 மனுக்கள் பெற்று நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட்டார்.

    மனுதாரரின் முன்னி லையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்பு டைய அலுவலர்களிடம் மனு க்களை வழங்கி உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தர விட்டார்.

    மேலும் பெறப்பட்ட மனுக்களில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனி நபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் குறித்த மனுக்களே அதிகளவு வரப்பெற்றன. ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒரு மாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும். தீர்வு வழங்க முடியாத மனுக்கள் குறித்து மனுதாரர்களிடம் உரிய காரணம் குறித்து எடுத்துரைக்க வேண்டும், அப்பொழுதுதான் அது போன்ற மனுக்கள் திரும்பத் திரும்ப வராது.

    எனவே பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறை அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், பயிற்சி உதவி ஆட்சியர் நாராயண சர்மா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×