என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • அபிராமம் பகுதியில் தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன.
    • இழப்பீடு கேட்டு அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கீழப்பச்சேரி, நீர்தாண்டதானம், அச்சங்குளம், விரதக்குளம், உடையநாதபுரம், போத்தநதி, ஏ.புதூர், புல்லந்தை நந்திசேரி, காடனேரி, நரியன், முத்தாதிபுரம் உள்பட 75-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 3,750 ஏக்கரில் மானாவாரியாக நெல் விவசாயம் செய்துவருகின்றனர்.

    75 நாட்களுக்கு முன்பு அவ்வப்போது மழை பெய்ததால் நெற்பயிர் ஒரளவு வளர தொடங்கியது. இதனால் விவசாயிகள் கூலி வேலைக்கு ஆட்களை வைத்து களை எடுத்தல், உரமிடுதல், பூச்சிக்கொல்லி மருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தனர். தற்போது பருவமழை போதிய அளவு பெய்யாததால் கண்மாய் ஊருணிகள் வறண்டு தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகி வருகிறது.

    இது குறித்து அபிராமம் பகுதி விவசாயிகள் அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை மனு அளித்து வருகின்றனர். அபிராமம் பகுதிக்கு நீர் ஆதாரமாக விளங்கும் கிருதுமால் நதி மற்றும் கால்வாய்கள் தூர்வாரப்படாமலும் புதர்மண்டியும் கிடக்கிறது. இதனால் பலமுறை வைகையில் தண்ணீர் வந்தும் அபிராமம் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை.

    கிருதுமால் நதியை தூர்வார ேகாரியும், அக்கிரமிப்புகளை அகற்ற ேகாரியும் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனால் அபிராமம் பகுதி விவசாயிகள் கருகிய நெற்பயிர்களை மாடுகளுக்கு எடுத்து செல்லும் நிலை உள்ளது

    இதுகுறித்து நீர் தாண்டதானம் விவசாயி தர்மமுனியாண்டி கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் பருவமழை பொய்த்ததால் நெற்பயிர்கள் கருகும் நிலை உள்ளது. இந்த பகுதிக்கு நீர் ஆதாரமாக விளங்கும் கிருதுமால் நதி தூர்வாரப்படாமல் கருவேல மரங்களால் புதர்மண்டி கிடக்கிறது.

    அதிகாரிகளின் அலட்சியத்தால் தூர்வாரப்படாததால் கண்மாய்களுக்கு தண்ணீர் வரவில்லை. விவசாயம் செய்ய கடன் வாங்கி செலவு செய்தோம். மழை இல்லாததால் மேலும் கடனாளியாகும் நிலை உள்ளது. அரசும், மாவட்ட நிர்வாகமும் இதில் தலையிட்டு பயிர்கடனை தள்ளுபடி செய்வதுடன் ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.26 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

    • கீழக்கரையில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    கீழக்கரை

    கீழக்கரையில் நகராட்சி சார்பில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் கீழக்கரை நகர் மன்ற தலைவரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நகரச் செயலாளர் பாசித் இல்யாஸ் கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. உள்ளாட்சித் தேர்தலில் கீழக்கரை மக்களுக்கு 8 வாக்குறுதிகள் அளித்தனர். அதில் கீழக்கரை நகருக்கு பல்நோக்கு மருத்துவமனை கொண்டு வருதல், அரசு கட்டிடத்தில் பெண்களுக்கு புதிதாக ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தருதல், பாதாள சாக்கடை திட்டம், கீழக்கரை விரிவடைந்த பகுதிகளில் மின்விளக்கு அமைத்து தருதல், இளைஞர்களுக்கு அதி நவீன விளையாட்டு மைதானம், நூலகம், பல்நோக்கு மருத்துவமனை, மின் கட்டண செலுத்தும் முறையை ஊருக்கு கொண்டு வருதல், கீழக்கரை நகராட்சி சார்பாக அரசு பள்ளி போன்றவை வாக்குறுதியாக கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் 2 வருடம் நெருங்கி வரும் நிலையில் ஒரு வாக்குறுதியும் நிறைவேறவில்லை.

    போர்க்கால அடிப்படையில் அரசு சார்ந்த நிலங்களில் ஒவ்வொரு வாக்குறுதியாக நிறைவேற்ற வேண்டும். கீழக்கரையில் வெறிபிடித்த நிலையிலும், நோய் வாய்பட்ட நிலையி லும் நாய்கள் சுற்றித் திரிகிறது. இதனால் குழந்தைகளை பொது மக்கள் பள்ளிக்கு விட கூட அச்சப்படுகிறார்கள். இதற்கு முன்பு நாய்க்கு கடித்து இறப்பும் நடந்துள்ளது. நாய்கள் விஷயத்தில் நகராட்சி கவனம் செலுத்தி முழுமையாக இதனை சரி செய்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும், மேலும் வடக்கு தெருவில் அமைந்துள்ள தண்ணீர் தொட்டியை விழுவதற்கு முன்பு இடித்துவிட்டு புதிதாக தண்ணீர் தொட்டிகள் அமைத்து தர வேண்டும். பொதுமக்களிடையே மனுக்கள் வாங்கி சரி செய்வது வரவேற்கத்தக்கது மனுகளோடு நின்றுவிடாமல் அதற்குண்டான என்னென்ன தீர்வு செய்தோம் என்று அடுத்த கூட்டத்தில் சேர்மன் துணை சேர்மன் கீழக்கரை பொது மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    • உத்திரகோசமங்கையில் காப்புக்கட்டுதலுடன் ஆருத்ரா தரிசனம் விழா தொடங்கியது.
    • வருகிற 5-ந் தேதி கடந்த ஆண்டு பூசப்பட்ட சந்தனக்காப்பு படியை களையும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடக்க உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோவில் பிரசித்தி பெற்ற சிவாலயமாக விளங்குகிறது. இங்கு பச்சை மரகத கல்லால் ஆன நடராஜர் சிலை உள்ளது.

    மரகத நடராஜரின் மீது ஒளி, ஒலியால் ஏற்படும் அதிர்வுகளை கட்டுப்படுத்தவும், வருடம் முழுவதும் பாதுகாக்கும் பொருட்டும் சந்தனம் பூசுவது வழக்கம். வருட த்திற்கு ஒருமுறை மட்டுமே நடராஜர் சிலையில் பூசப்பட்ட சந்தனம் படி களையப்பட்டு பொது மக்கள் தரிசனத்திற்காக வைக்கப்படும். இந்த நிகழ்வை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    இந்த நிலையில் உத்திர கோசமங்கை கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று தொடங்கியது. இதை முன்னிட்டு இரவு 7 மணியளவில் கோவில் முன்புறமுள்ள நர்த்தன விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜையுடன் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.தினமும் காலை 10 மணிக்கு மாணிக்கவாசகரின் உட்பிரகார வீதி உலாவும், திருவெம்பாவை பாடுதல் நிகழ்ச்சியும் நடைபெறும். வருகிற 5-ந் தேதி (வியாழக்கிழமை) அன்று காலை 8 மணிக்கு மேல் கடந்த ஆண்டு பூசப்பட்ட சந்தனக்காப்பு படியை களையும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடக்க உள்ளது.

    அன்று காலை 11 மணியளவில் மரகத நடராஜருக்கு 32 வகையான அபிஷேக, ஆராதனை நிறை வேற்றப்பட்டு சந்தனாதி தைலம் பூசப்படும். பின்னர் இரவு 10.30 மணிய ளவில் ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெற்று, கல்தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமான் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மறுநாள் 6-ந்தேதி (வெள்ளிக்கிழமையன்று) அதிகாலை 5.30 மணியளவில் அருணோதய நேரத்தில் நடராஜர் சிலைக்கு மீண்டும் சந்தனக் காப்பிடுதலும் நடக்கும்.

    இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ராணி ராஜேஸ்வரி நாச்சியார், திவான் பழனிவேல் பாண்டியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • கோவில் உள் பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
    • கோவிலில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவை போலீசார் ஆய்வு செய்தனர்.

    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள நயினார்கோவிலில் நாகநாதர் சுவாமி கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் விசேஷம் மற்றும் திருவிழா நாட்களில் அந்தப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கூடுவது உண்டு. மார்கழி மாதத்தை முன்னிட்டு இந்த கோவிலில் அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் கோவிலை திறந்து பூஜை ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது கோவில் உள் பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கோவில் ஊழியர்கள் உடனே நயினார் கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.

    கோவிலில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது இன்று அதிகாலை 2.10 மணிக்கு கோவிலுக்குள் புகுந்த மர்மநபர் உண்டியலை உடைத்து பணத்தை திருடுவதும், அதனை தொடர்ந்து கோவில் ஊரணி கரை வழியாக தப்பிச்செல்வது போன்ற காட்சி பதிவாகி உள்ளது. இதனை வைத்து போலீசார் மர்மநபரையும், அவருடைய கூட்டாளிகளையும் தேடி வருகின்றனர்.

    கோவில் உண்டியலில் ரூ. 3 லட்சம் வரை காணிக்கை இருந்திருக்கலாம் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் நடந்த துணிகர சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • இருமேனி சாலையை சீரமைக்க கோரி கலெக்டரிடம் மனு வழங்கினர்.
    • மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர், இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியத்துக்கு உட்பட்ட இருமேனி ஊராட்சியில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அப்பகுதியில் சாலையை சீரமைக்க கோரி எஸ்.டி.பி.ஐ.கட்சியின் ராமநாதபுரம் கிழக்கு தொகுதி தலைவர் நவ்வர்ஷா தலைமையில் தொகுதிச் செயலாளர் நூருல் அன்வர், மாவட்ட செயலாளர் நஜ்முதீன், உச்சிப்புளி நகர் துணைத் தலைவர் சகுபர் சாதிக் ஆகியோர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில், ராமநாதபுரத்தில் இருந்து ராமேசுவரம் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இருமேனிக்கு செல்லக்கூடிய பிரதான சாலை, சுமார் 10 வருடங்களுக்கு மேலாக சீர் செய்யாமல் குண்டும் குழியுமாக இருந்து வருகிறது. இந்த சாலை பழுதாக இருப்பதால், அவசர காலங்களில் மருத்துவமனை போன்ற இடங்களுக்கு உரிய நேரத்தில் சென்றடைய முடியாத நிலை உள்ளது.

    வாகன ஓட்கள் இரவு நேரங்களில் தடுமாறி கீழே விழும் நிலையில் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர். இந்த சாலை சம்பந்தமாக ஊராட்சி மன்ற தலைவர், மண்டபம் ஒன்றிய சேர்மன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர்களிடம் மனு அளிக்கப்பட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, தாங்கள் போர்க்கால அடிப்படையில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர், இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    • கமுதி அருகே உள்ள கூட்டுறவு நூற்பாலையில் அமைச்சர் ஆய்வு செய்தார்.
    • இந்த நூற்பாலை ஆதி திராவிட மக்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தில் ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை இயங்கி வருகிறது. இந்த நூற்பாலை ஆதி திராவிட மக்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.

    இந்த நூற்பாலையை ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நூற்பாலை தரப்பில், மின்சார கட்டணம் அதிகமாக வருவதால் சோலார் பேனல் அமைத்து,மின் கட்டணத்தை குறைக்கவும், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டது.

    இதனையடுத்து ஆலையை முழுமையாக ஆய்வு செய்த அமைச்சர் கயல்விழிசெல்வராஜ், முதல்வரிடம் ஆலோசனை பெற்று விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ், தாட்கோ இயக்குனர் கந்தசாமி, தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., பரமக்குடி உதவி ஆட்சியர் அப்தாப் ரசூல், பரமக்குடி சட்ட மன்ற உறுப்பினர் முருகேசன்.

    தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன்,தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன், வட்டாட்சியர் சிக்கந்தர் பபிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அமைச்சருக்கு நூற்பாலையின் மேலாண்மை இயக்குநர் வஜ்ரவேல் தலைமையில், உதவி மேலாளர் கண்ணன், தொ.மு.ச. கவுரவத் தலைவர் சக்திவேல், தலைவர் மச்சக்கிழவன்,செயலாளர் பாரதிராஜா மற்றும் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

    • மருத்துவ மனையில் கொரோனா தொற்று நோய் சிகிச்சை குறித்த ஒத்திகை நடந்தது.
    • ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஏதுமில்லை என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் கொரோனா தொற்று நோய் சிகிச்சை குறித்த ஒத்திகை நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டார். அப்போது அவர் கூறிய தாவது:-

    நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கும் வகையில் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் தயார் படுத்தப்பட்டுள்ளன. ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 70 படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு அதில் கோவிட் -19 நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட உள்ளன.

    மேலும் போதியளவு மருத்துவர்கள் மற்றும் கோவிட்-19 நோய் தொற்று தடுப்புக்கான சிகிச்சை வழங்குவதற்கான சிறப்பு பயிற்சி பெற்ற செவிலியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    மேலும் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 11 கேஎல் மற்றும் 10 கே.எல். கொள்ளளவு திறன் கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப ஆக்சிஜனுடன் தயார் நிலையில் உள்ளன.

    மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏதுமில்லை. கோவிட்-19 நோய் தொற்று வரும் நிலை இருந்தாலும் அதை முழுமையாக தடுத்திடும் வகையில் மாவட்ட நிர்வாகமும், மருத்துவத்துறையும் ஒருங்கி ணைந்து தேவை யான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை களையும் மேற்கொண்டு தயார் நிலையில் உள்ளன. பொது மக்களை பொறுத்தவரை கோவிட்-19 நோய் தொற்று குறித்து எவ்வித அச்சமும் கொள்ளாமல் மருத்துவத்துறை வழங்கும் ஆலோசனைகளை கடைபிடித்து முககவசம் பயன்படுத்தி பாதுகாப்புடன் இருந்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மரு.செந்தில் குமார், சுகாதார ஒருங்கிணைப்பாளர் திலீப்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
    • உஸ்வத்துல் ஹசனா சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் கிழக்குத் தெரு ஜமாத் நிர்வாகிகள், உறுப்பினர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்கு தெருவில் அமைந்திருக்கும் கிழக்கு நண்பர்கள் தர்ம அறக்கட்டளை கடந்த 2001-ம் ஆண்டு 25 இளைஞர்களால் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகை, ஏழைகளுக்கு மருத்துவ உதவி போன்றவற்றை செய்து வருகிறது. மேலும் நோன்பு காலங்களில் வறுமையில் உள்ளவர்களுக்கு "ஜகாத் உதவி",கொரோனா காலத்தில் பல்வேறு உதவிகளையும் இந்த அமைப்பு செய்தது.

    இந்த நிலையில் இந்த அறக்கட்டளை மூலம் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி, கீழக்கரை கைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் மாணவர்களுக்கான கல்வித்தொகை மற்றும் மருத்துவ நிதி உதவிகள் 50 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உஸ்வத்துல் ஹசனா சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் கிழக்குத் தெரு ஜமாத் நிர்வாகிகள், உறுப்பினர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

    • ராமேசுவரம், மண்டபம், ராமநாதபுரத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
    • இன்று காலை மீன் வளத்துறை அதிகாரிகள் அனுமதி டோக்கன் பெற்று கொண்டு 500-க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்கு புறப்பட்டனர்.

    ராமேசுவரம்:

    வங்கக்கடலில் கடந்த 19-ந் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு, 21-ந் தேதி அது புயலாக மாறியது. இதன் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. ராமேசுவரம் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

    இதனால் ராமேசுவரம், மண்டபம், ராமநாதபுரத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. மீனவர்கள் துறைமுகங்களில் தங்களது விசைப்படகுகளை நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர்.

    கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்ததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது கடலில் காற்றின் வேகம் குறைந்து இயல்பு நிலை திரும்பி உள்ளது. இதன் காரணமாக கடலுக்கு செல்ல மீனவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன்படி அவர்கள் இன்று காலை மீன் வளத்துறை அதிகாரிகள் அனுமதி டோக்கன் பெற்று கொண்டு 500-க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்கு புறப்பட்டனர்.

    10 நாட்களுக்கு பின்பு இன்று (28-ந் தேதி) கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றதால் ராமேசுவரம், பாம்பன் துறைமுகம் பரபரப்புடன் காணப்பட்டது.

    • தூக்குப்பாலத்தில் தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய கடந்த 2 நாட்களாக ரெயில்வே என்ஜினீயர்கள் குழுவினர் ஆய்வு செய்து வந்தனர்.
    • திருச்சியில் இருந்து ராமேசுவரம் வரும் பயணிகள் ரெயில்கள் வருகின்ற 31-ந்தேதி வரை ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே உள்ள ரெயில் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த 4 நாட்களாகவே பயணிகள் ரெயில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    தூக்குப்பாலத்தில் தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய கடந்த 2 நாட்களாக ரெயில்வே என்ஜினீயர்கள் குழுவினர் ஆய்வு செய்து வந்தனர்.

    இந்த நிலையில் தூக்குப்பாலத்தில் இன்னும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் வருகிற 31-ந்தேதி வரையிலும் மண்டபம்-ராமேசுவரம் இடையே பயணிகள் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. ராமேசுவரத்தில் இருந்து தினமும் சென்னை புறப்படும் ரெயில்கள் மண்டபம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்றும் மதுரை மற்றும் திருச்சியில் இருந்து ராமேசுவரம் வரும் பயணிகள் ரெயில்கள் வருகின்ற 31-ந்தேதி வரை ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் பேட்டை துள்ளல், ஆராட்டு விழா நடந்தது.
    • விழாவில் ஆயிரக்கணக்கானோருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.



    ராமநாதபுரம் அருகே ெரகுநாதபுரம் சித்திரவல்லபை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு இன்று காலை உற்சவருக்கு 16 வகையான அபிஷேகதத்துடன் ஆராட்டு விழா நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரத்தில் புகழ் பெற்ற வல்லபை அய்யப்பன் ஆலயம் உள்ளது. எருமேலிக்கு அடுத்தபடியாக பேட்டை துள்ளல் விழாவும், பம்பைக்கு அடுத்தபடியாக ஆராட்டுவிழாவும் ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. தென் மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு ஊர்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2 ஆண்டுகள் கொரோனா கட்டுப்பாடு காரணமாக கோவில் வளாகத்திற்குள் எளிமையாக மண்டல பூஜை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தற்போது கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டதால் வெகு விமர்சையாக நடத்த முடிவு செய்தனர்.

    கார்த்திகை மாதம் முதல் நாளில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கோவிலில் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த டிச. 18-ந்தேதி மண்டல பூஜை விழாவுக்கான கொடியேற்றம் நடந்தது. நேற்று 26-ந்தேதி மாலை கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க பள்ளி வேட்டை புறப்பாடு (நகர் ஊர்வலம்) நடந்தது. அப்போது கோவில் நடை சாத்தப்பட்டது.

    இன்று மண்டல பூஜையை முன்னிட்டு காலை 5 மணிக்கு தலைமை குருக்கள் ஆர்.எஸ்.மோகன்சுவாமி தலைமையில் கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் நூற்றுக்கணக்கான பக்தர்கள்

    ரெகுநாதபுரம் முத்துநாச்சியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, கோவிலிலிருந்து அய்யப்ப பக்தர்கள் ரெகுநாதபுரம் வீதிகளின் வழியாக ஆடிப்பாடி, வேடமிட்டு, வண்ணக்கலவை பூசி அய்யப்பா முழக்கத்துடன் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடத்தினர். அலங்காரம் செய்யப்பட்ட வல்லபை அய்யப்பன் உற்சவர் பஸ்மகுளத்திற்கு பக்தர்கள் ஊர்வலமாக சுமந்து சென்று அங்கு உற்சவருக்கு 16 வகையான அபிஷேகதத்துடன் ஆராட்டு விழா நடந்தது. தொடர்ந்து சன்னிதானத்தின் முன்புறம் உள்ள தங்கமுலாம் பூசப்பட்ட கொடி கம்பத்தில் கொடியிறக்கம் செய்யப்பட்டது. அப்போது பக்தர்கள் சாமியே சரணம் அய்யப்பா என்று பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டனர். இதையடுத்து மூலவருக்கு 33 வகையான மகா அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை, பஜனை நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கானோருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

    வருகிற 31-ந்தேதி காலையில் இருமுடி கட்டுதலும். இரவு சிறப்பு பஜனை, சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 12 மணிக்கு புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சபரிமலை யாத்திரை புறப்பாடு நடக்கிறது.

    இதற்கான சிறப்பான ஏற்பாடுகளை வல்லபை அய்யப்பன் சேவை நிலையம் அறக்கட்டளை நிறுவனர் ஆர்.எஸ். மோகன்சுவாமி ஆலோசனையின் பேரில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • பரமக்குடியில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து முத்தாலம்மன் கோவில் திடலை வந்தடைந்தனர்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ் அணி சார்பில் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. தர்மர் எம்.பி. தலைமை தாங்கினார்.

    பரமக்குடி நகர செயலாளர் வின்சென்ட் ராஜா முன்னிலை வகித்தார். எம்.ஜி.ஆர். படத்திற்கு நிர்வாகிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பின்பு ஊர்வலமாக புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து முத்தாலம்மன் கோவில் திடலை வந்தடைந்தனர். அங்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இதில் பரமக்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர்-வக்கீல் நவநாதன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செய லாளர் திசை நாதன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திலகர், மாவட்ட பொருளாளர் பால சுப்பிரமணியன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ரமேஷ், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் முத்தரசு, பரமக்குடி நகர ஐ.டி.பிரிவு செயலாளர் ஜாவா பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் லாட.செல்வம், சுரேஷ், வாணியவல்லம் ஊராட்சி மன்ற தலைவர் நாகநாதன், வெங்கலக்குறிச்சி செந்தில்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் சிவா தேவன், வர்த்தக அணி செயலாளர் பாபு, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் விஜய் கார்த்திக், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் பழனிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×