என் மலர்
உள்ளூர் செய்திகள்

பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாதர் சுவாமி கோவில் உண்டியல் உடைத்து ரூ. 3 லட்சம் கொள்ளை
- கோவில் உள் பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
- கோவிலில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவை போலீசார் ஆய்வு செய்தனர்.
பரமக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள நயினார்கோவிலில் நாகநாதர் சுவாமி கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் விசேஷம் மற்றும் திருவிழா நாட்களில் அந்தப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கூடுவது உண்டு. மார்கழி மாதத்தை முன்னிட்டு இந்த கோவிலில் அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் கோவிலை திறந்து பூஜை ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது கோவில் உள் பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கோவில் ஊழியர்கள் உடனே நயினார் கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
கோவிலில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது இன்று அதிகாலை 2.10 மணிக்கு கோவிலுக்குள் புகுந்த மர்மநபர் உண்டியலை உடைத்து பணத்தை திருடுவதும், அதனை தொடர்ந்து கோவில் ஊரணி கரை வழியாக தப்பிச்செல்வது போன்ற காட்சி பதிவாகி உள்ளது. இதனை வைத்து போலீசார் மர்மநபரையும், அவருடைய கூட்டாளிகளையும் தேடி வருகின்றனர்.
கோவில் உண்டியலில் ரூ. 3 லட்சம் வரை காணிக்கை இருந்திருக்கலாம் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் நடந்த துணிகர சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.