என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • திருவாடானையில் அரசு மருத்துவமனை பிணவறை பழுதடைந்த நிலையில் உள்ளது.
    • புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டது.

    திருவாடானை

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையானது தாலுகாவின் தலைமையிடமாகும். இந்த தாலுகாவை சுற்றிலும் சுமார் 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் அனைத்திற்கும் தாலுகா அரசு பொது மருத்துவ மனையாக திருவாடானையில் உள்ள அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது.

    இந்த மருத்துவமனையில் உள்ள பிணவறை கட்டிடம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பல ஆண்டுகளாகவே இந்த கட்டிடம் எந்த அடிப்படை வசதியுமின்றி பழுதடைந்து ஜன்னல், கதவு உடைந்து பாதுகாப்பின்றி உள்ளது. எந்த நேரத்திலும் இடிந்து விழும் என்ற நிலையில் உள்ளது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பிணவறை கட்டிடம் பெயரளவுக்கு மட்டுமே உள்ளது. இது வேதனை அளிக்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்டு இறந்தவர்களின் உடல்களை உடற்கூறாய்வுக்காக இங்கு தரையில் கிடத்தப்படும் அவலநிலை தான் உள்ளது.

    குளிர்சாதனப்பெட்டி போன்ற எந்த அடிப்படை வசதியும் இங்கு இல்லை. பழுதடைந்த இந்த கட்டிடத்தை முற்றிலும் அகற்றிவிட்டு நவீன வசதிகளோடு புதிய கட்டிடம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    • அபிராமம் பகுதியில் மழை இல்லாததால் எள் விதைப்பு செய்த விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.
    • விவசாயிகளின் பொருளாதாரமும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள அச்சங்குளம், தரைக்குடி, வல்லகுளம் உள்பட 150-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த ஆண்டு பருவமழை இல்லாததால் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கோடை சாகுபடியாக எள் விதைப்பு செய்துவருகின்றனர்.

    அதிக தண்ணீர் தேவை யின்றி குறைந்த ஈரப்பதத்தில் மகசூல் கிடைக்கக்கூடிய தன்மை வாய்ந்த எள் என்பதால் விவசாயிகள் எள் விதைப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த பகுதியில் எள் முளைப்பிற்கு ஏற்ற மழை இல்லாததால்.எள் செடிகள் முளைப்பின்றி வறண்டு காணப்படுகிறது.

    இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த விவசாயி பாலு கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் நெல் அறுவடைக்கு பின் எள் விவசாயம் செய்வது வழக்கம். இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் நெல் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டதுடன், எள் விதைப்பிலும் ஆர்வம் காட்டி எள் விதைப்பு செய்த நிலையில் போதிய மழை இல்லாததால் எள் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விவசாயிகளின் பொருளாதாரமும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது மனவேதனையை அளிக்கிறது என்றார்.

    • பனிக்கட்டி தொழிற்சாலை அமைக்க மானியம் என்று கலெக்டர் தகவல் தெரிவித்தார்.
    • ரூ.72 லட்சமும் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    மத்திய அரசின் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் 2021-22 மற்றும் 2022-23 திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் மானிய விலையில் பனிக்கட்டி தொழிற்சாலை அமைத்தல் திட்டத்தின் கீழ் 30 டன் (பொது-1, ஆதிதிரா விடர் பழங்குடியினர்-1, மகளிர்-1) மற்றும் 50 டன் (மகளிர்-1) கொள்ளளவில் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது.

    30 டன் கொள்ளளவு கொண்ட ஒரு பனிக்கட்டி தொழிற்சாலை அமைப்ப தற்கான அலகு தொகை ரூ.120.00 லட்சம் என கணக்கீடு செய்யப்பட்டு, பொதுப்பி ரிவினருக்கு செலவினத்தில் 40 சதவீதம் மானியமாக ரூ.48 லட்சமும், மகளிருக்கு 60 சதவீதம் மானியமாக ரூ.72 லட்சமும் வழங்கும் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    50 டன் கொள்ளளவு கொண்ட ஒரு பனிக்கட்டி தொழிற்சாலை அமைப்ப தற்கான அலகு தொகை ரூ.150 லட்சம் என கணக்கீடு செய்யப்பட்டு, பொதுப் பிரிவினருக்கு செல வினத்தில் 40 சதவீதம் மானி யமாக ரூ.60 லட்சமும், மகளிருக்கு 60 சதவீதம் மானியமாக ரூ.90 லட்சமும் வழங்கும் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்ற அடிப்ப டையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ள மீனவ பயனாளிகள் சம்மந்தப்பட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ள கேட் டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும் விவரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் (மண்டலம்) ராமநாதபுரம், மாவட்ட கலெக்டர் அலு வலகம், பட்டிணம்காத்தான் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • தி.மு.க. சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
    • காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

    ராமநாதபுரம்

    முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு மண்டபம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஒன்றிய கழக செயலாளர் கே.ஜே. பிரவீன் ஏற்பாட்டில் சாத்தான் குளத்தில் ரத்ததான முகாம் நடந்தது. மாவட்ட செயலாளாரும், ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான காத ர்பாட்சா முத்துராம லிங்கம் தலைமையில் தாங்கி னார்.

    ரத்ததானம் செய்வதன் அவசியம் குறித்தும், ரத்தத்தை தானம் செய்வதனால் அடையும் பயன்கள் குறித்தும் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பேசினார். தொடர்ந்து ரத்ததானம் செய்தவ ர்களை பாராட்டி னார்.ராமநாதபுரம் மருத்து வக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியின் மருத்துவர் குழுவினர் கலந்துகொண்டு ரத்தம் பெற்று க்கொண்டனர்.

    இந்த முகாமில் மாவட்ட கவுன்சிலர் கவிதா கதிரேசன், இளைஞரணி யூசப், கிளை செயலாளர் புகாரி, பிரதிநிதி வினோத், ஊராட்சி மன்றத்தலைவர் குப்பைக்கனி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ராஜா உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • கூட்டு பாலியல் வழக்கில் கைதான 5 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 8-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கூட்டு பலாத்காரம் செய்த விவகாரத்தில் பரமக்குடி 3-வது வார்டு கவுன்சிலரும், அ.தி.மு.க. நகர் அவைத்தலைவருமான சிகாமணி, மறத்தமிழர் சேனை நிறுவனர் புதுமலர் பிரபாகர், தனியார் ஜவுளி நிறுவன உரிமையாளர் ராஜாமுகமது மற்றும் புரோக்கர்களாக இருந்து செயல்பட்ட உமா மற்றும் கயல்விழி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

    இந்நிலையில் இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து வழக்கின் தன்மை கருதி சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது.

    சிவகங்கை மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    வழக்கில் கைது செய்யப்பட்டள்ள 5 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. முடிவு செய்தது. இதற்கான மனுவை மாவட்ட மகளிர் கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது கூட்டு பாலியல் வழக்கில் கைதான 5 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

    இதையடுத்து போலீசார் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    • கருமொழி என்ற இடத்தில் வந்த போது லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
    • விபத்து தொடர்பாக திருவாடானை போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திருவாடானை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் மீன் ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நேற்று இங்கிருந்து கேரள மாநிலத்திற்கு பதப்படுத்தப்பட்ட இறால், கனவாய் உள்ளிட்ட ஏராளமான மீன்கள் லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது.

    லாரியை அய்யம்பேட்டையைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் ஓட்டினார். அவருடன் ஏற்றுமதி நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரியும் மாரிமுத்து (வயது 51) உடன் சென்றார். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே திருச்சி-ராமேசுவரம் சாலையில் சரக்கு லாரி வந்து கொண்டிருந்தது.

    கருமொழி என்ற இடத்தில் வந்த போது லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சாலையை விட்டு இறங்கிய லாரி 30 அடி தூரத்தில் உள்ள குப்புசாமி என்பவர் வீட்டின் மீது பயங்கரமாக மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    டிரைவர் ஜெயபிரகாஷ் படுகாயம் அடைந்தார். அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். லாரி மோதிய வேகத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. ஆனால் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் இல்லை.

    இந்த விபத்து தொடர்பாக திருவாடானை போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பரிசு அனுப்புவதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.2 லட்சம் நூதன மோசடி செய்யப்பட்டது.
    • வங்கி கணக்கில் இருந்து ரூ. 1 லட்சத்து 30 ஆயிரத்தை அனுப்பினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே உள்ள வேளாங்குளத்தை சேர்ந்தவர் பிரசாத். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கவுசல்யா (வயது30). கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு புதிய எண் மூலம் குறுஞ்செய்தி வந்தது. அதில் வெளிநாட்டில் வேலை பார்க்கும் பிரசாத்தின் நண்பர் என தகவல் அனுப்பப்பட்டி ருந்தது. இதனை நம்பி கவுசல்யாவும் அவ்வப்போதும் அந்த எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி வந்தார்.

    கடந்த 7-ந் தேதி அந்த எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்தது. தனது மகளுக்கு பிறந்தநாள் பரிசை அனுப்பி வைத்துள்ளேன். அதற்கு உங்களது வீட்டு முகவரியை கொடுத்துள்ளேன். பரிசு பொருளின் மதிப்பு ரூ.51 லட்சம் ஆகும். அதனை பெறுவதற்கு பணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பி கவுசல்யா தனது கணவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 1 லட்சத்து 30 ஆயிரத்தை அனுப்பினார்.

    மேலும் அந்த நபர் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த கவுசல்யா தனது கணவரிடம் விசாரித்த போது அந்த செல்போன் எண் குறித்து தெரியவில்லை என கூறிவிட்டார். இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கவுசல்யா இதுகுறித்து ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • ராமநாதபுரத்தில் தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜ.க. சார்பில் நூதன போராட்டம் நடந்தது.
    • பல்வேறு நலத்திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்காமல் தி.மு.க. அரசு துரோகம் செய்கிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பா.ஜ.க. பட்டியல் அணி சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து அம்பேத்கர் வேடமிட்டவரிடம் கோரிக்கை மனுக்களை அளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடந்த பா.ஜ.க. (எஸ்.சி) அணி போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரமேஷ் கண்ணன் தலைமை தாங்கினார்.

    இதில் பா.ஜனதா மாவட்ட தலைவர் இ.எம்.டி.கதிரவன், மாவட்ட துணைத்தலைவர் முத்துசாமி, ஐகோர்ட்டு வக்கீலும், பா.ஜனதா பிரமுகருமான சண்முகநாதன், மாநில எஸ்.சி. அணி செயலாளர் பிரபு, நகர தலைவர் சுப நாகராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் இளங்கண்ணன், மாநில சிறப்பு செயற்குழு உறுப்பினர் சேகர், ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் பாரதிராஜன், மாவட்ட பொது செயலாளர் காளிராஜா மற்றும் நேதாஜி உள்பட பா.ஜனதா மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

    அந்த மனுவில், மத்திய அரசு பட்டியல் என சமுதாய மக்களுக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியை தி.மு.க. அரசு முறையாக செலவு செய்யாமல் திருப்பி அனுப்புகிறது. மேலும் பட்டியலின மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்காமல் தி.மு.க. அரசு துரோகம் செய்கிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த போராட்டத்தில் நகர தலைவர் பிச்சை, மாவட்ட செயலாளர் உமாரமணி, மாநில செயற்குழு உறுப்பினர் இளங்கண்ணன், கடலாடி தெற்கு ஒன்றிய தலைவர் செந்தில்குமார், கடலாடி கிழக்கு ஒன்றிய தலைவர் ஸ்டாலின் ஹீரோ கார்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

    • கீழக்கரை அருகே நிதி நிறுவனத்தில் புகுந்து ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது48). இவர் தனது வீட்டின் எதிர்ப்புறம் உள்ள கட்டிடத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்றுஇரவு வழக்கம்போல் நிதி நிறுவனத்தை பூட்டிவிட்டு செல்வராஜ் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இந்தநிலையில் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்மநபர்கள், நிதி நிறுவனத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கு கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடிக்கொண்டு தப்பினர்.

    இன்று காலை செல்வராஜ் வீட்டிற்கு வெளியே வந்து தனது நிதி நிறுவனத்தை பார்த்தார்.

    அப்போது நிதி நிறுவன த்தின் கதவு உடைக்கப்ப ட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். இதையடுத்து அவர் நிதிநிறுவனத்தின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது நிதி நிறுவனத்தில் வைக்ககப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 92 ஆயிரத்தை பணம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து அவர் கீழக்கரை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.

    அவர்கள் நிதி நிறுவன த்தில் பதிவாகியிருந்த கைரேகைகள் உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

    நிதிநிறுவனத்தில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கீழக்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 7 பயனாளிகளுக்கு ரூ.7.15 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ராமநாதபுரம் கலெக்டர் வழங்கினார்.
    • கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சி நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சி கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர், 358 மனுக்கள் பெற்று மனுதாரர் முன்னிலையில் விசாரணை செய்து மனுக்கள் மீது தொடர்புடைய அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    தொடர்ந்து மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலம் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கு செயற்கை கால் உபகரணங்களும், ஒரு பயனாளிக்கு 3 சக்கர சைக்கிளும், 7 பயனாளி களுக்கு காதொலி கருவி களும் என 17 பயனாளிகளுக்கு ரூ.7 லட்சத்து 15 ஆயிரத்து 650 மதிப்பீட்டில் உபகரணங்கள் வழங்கப் பட்டது.

    மேலும் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அளவில் பணியிடையே மரணம் அடைந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கிடும் வகையில் மீனாட்சிபுரம் கருப்பையா மகள் சத்தீஸ்வரிக்கு இளநிலை வருவாய் ஆய்வாளர் வட்டாட்சியர் அலுவலகம், திருவாடனை மற்றும் ராமேசுவரம் கர்ணன் மனைவி கலையரசிக்கு இளநிலை வருவாய் ஆய்வாளர் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

    அரசு பள்ளியில் படித்து வரும் மாண-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்று மற்றும் ரொக்கப்பரிசு ஆகியவற்றை 9 நபர்களுக்கு கலெக்டர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் கதிர்வேல் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • தலைமன்னார் அருகே உள்ள கடல் பகுதியில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை சுமார் 23 கிலோ மீட்டர் தூர பயணத்தை 10 மணி நேரம் 45 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்துள்ளனர்.
    • ஒரு வீரர் நீந்தி முடிக்கும் இடத்தில் இருந்து மற்றொரு வீரர் மீண்டும் நீந்தும் வகையிலான நீச்சல் பயிற்சியில் நீந்தி இந்த குழுவினர் தனுஷ்கோடி வரை நீந்தி வந்துள்ளனர்.

    ராமேசுவரம்:

    கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 7 பேர் நேற்று முன்தினம் ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகு ஒன்றில் இலங்கை தலைமன்னார் நோக்கி புறப்பட்டு சென்றனர். இவர்களுக்கு உதவியாக அந்த படகில் நீச்சல் பயிற்சியாளர் மற்றும் மீனவர்கள் உள்ளிட்ட 9 பேரும் சென்றனர்.

    இந்த நிலையில் தலைமன்னார் அருகே உள்ள கடல் பகுதியில் இருந்து நேற்று அதிகாலை 5 மணிக்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 4 ஆண்கள் மற்றும் 3 பெண்களும் தனுஷ்கோடி நோக்கி நீந்த தொடங்கினர். கடலில் நீந்த தொடங்கிய இந்த குழுவினர் நேற்று மாலை 3.45 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை வந்தடைந்து தங்கள் நீச்சல் சாதனை பயணத்தை நிறைவு செய்தனர்.

    தலைமன்னார் அருகே உள்ள கடல் பகுதியில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை சுமார் 23 கிலோ மீட்டர் தூர பயணத்தை 10 மணி நேரம் 45 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்துள்ளனர்.

    இதில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் (46), ராஜசேகர்துபர் (56), ஜெயபிரகாஷ் (56), சுமாரா (54) மஞ்சரி (46) சுஜாதா உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் சுமார் 23 கிலோமீட்டர் தூரம் நீந்தி சாதனை படைத்துள்ளனர். இதில் ஒரே நேரத்தில் அனைவரும் நீந்தாமல் முதலில் ஒருவர் நீந்த தொடங்கி அவர் முடிக்கும் இடத்தில் இருந்து அடுத்த வீரர் நீந்த தொடங்குவார்.

    இதேபோன்று ஒரு வீரர் நீந்தி முடிக்கும் இடத்தில் இருந்து மற்றொரு வீரர் மீண்டும் நீந்தும் வகையிலான நீச்சல் பயிற்சியில் நீந்தி இந்த குழுவினர் தனுஷ்கோடி வரை நீந்தி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தொண்டியில் உலக மகளிர் தின பேரணி நடந்தது.
    • இந்த பேரணியானது தொண்டி பழைய பஸ் நிலையத்தில் தொடங்கி முக்கிய சாலைகள் வழியாக சென்று கடற்கரை மரைன் போலீஸ் நிலையம் அருகே முடிவடைந்தது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உலக பெண்கள் தினத்தையொட்டி பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடந்தது. ராமநாதபுர மாவட்ட மக்கள் அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்தப் பேரணிக்கு பொருளாளர் ரூபி தலைமை வகித்தார்.

    தமிழக பெண்கள் கூட்டமைப்பின் முன்னாள் மாநில தலைவி ராமலெட்சுமி முன்னிலை வகித்தார். எஸ்.எம்.எஸ்.எஸ்.எஸ் இயக்குநர் பிரிட்டோ ஜெயபாலன் வாழ்த்திப் பேசினார். தமிழக பெண்கள் கூட்டமைப்பின் துணை தலைவி தங்கச்சிமடம் ராஜேஸ்வரி, மாவட்ட மக்கள் அமைப்பு துணை தலைவி செங்கோல்மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பரமக்குடி ஒன்றிய மக்கள் அமைப்பின் தலைவி ரெஜினா அனைவரையும் வரவேற்றார். மண்டபம் ஒன்றிய மக்கள் அமைப்பு உறுப்பினர் கர்லோபா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முடிவில் முதுகுளத்துார் மக்கள் அமைப்பு உறுப்பினர் இருதயராணி நன்றி கூறினார்.

    டெய்ஸி அருள்ஜோதி உட்பட 8 யூனியனைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பெண்கள் பேரணியில் கலந்துகொண்டனர். இந்த பேரணியானது தொண்டி பழைய பஸ் நிலையத்தில் தொடங்கி முக்கிய சாலைகள் வழியாக சென்று கடற்கரை மரைன் போலீஸ் நிலையம் அருகே முடிவடைந்தது.

    ×