என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    ஆலங்குடி பகுதிகளில் போதிய அளவு பேருந்து இயக்கப்படாததால்படிக்கட்டுகளில் தொங்கியவாறு ஆபத்தான பயணம்

    ஆலங்குடி 

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிக்கு கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு, மாங்கோட்டை, நெடுவாசல், உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பெண்கள் மற்றும் பொதுமக்கள் பேருந்துகளில் பயணம் செய்து பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு சென்று வருகின்றனர்.

    இந்நிலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு போதுமான பேருந்துகளை இயக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது. இதனால் மாணவ மாணவிகள் பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கியவாறு ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து போக்குவரத்து நிர்வாகத்திடம் பலமுறை புகார் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. இதனால் ஒவ்வொரு நாளும் என்ற பதற்றத்துடனே மாணவ மாணவிகள் பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கறம்பக்குடி பகுதியில் விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு

    கறம்பக்குடி,  

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் சென்னை விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறை இயக்குனர் அறிவுறுத்தலின்படி திருச்சி விதை ஆய்வு துணை இயக்குனர் கோவிந்தராஜ் தலைமையில் தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குனர் விநாயக மூர்த்தி மற்றும் விதை ஆய்வாளர்கள் மோகன் தாஸ், பிரகாஷ் , பாலையன், முனி யய்யா, நவீன் சேவியர், உள்ளிட்ட ஆய்வு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    விவசாயிகள் அனைவரும் உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் ரசீது பெற்று விதைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும். விதை விற்பனை உரிமம் தராமல் விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.தனியார் விதை விற்பனையாளர்கள் விதைகளை விற்ற தற்கான ரசீது கட்டாயம் வழங்க வேண்டும். ரசீது இல்லாமல் விற்றாலோ கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ விதைச்சட்டம் 1966 ன் விதை விதிகள் மற்றும் விதை கட்டுப்பாட்டு ஆணை 1983 சட்டம் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். இந்த ஆய்வில் 17 விதை விற்பனை நிலையங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் போது 11 விதை மாதிரிகள் முளைப்புத்திறன் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டு புதுக்கோட்டை விதை பரிசோதனை ஆய்வு நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த ஆய்வில் விதை சட்ட விதிகளை மீறி விற்பனை செய்த ஆறு விதை குவியல்களுக்கு ரூபாய் 4.27 லட்சம் மதிப்புள்ள 7.61 மெட்ரிக் டன் விதைகளுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • புதுக்கோட்டை போஸ் நகரில் பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
    • அவர்களிடம் இருந்து ரூ.4,530-ஐ பறிமுதல் செய்யப்பட்டனர்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுக்கோட்டை போஸ் நகரில் பணம் வைத்து ஒரு கும்பல் சூதாடுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று சோதனையிட்டனர். இதில் ரவிச்சந்திரன் (வயது 54), ராஜேந்திரன் (60), செந்தில் (48), லட்சுமணன் (40), சேகர் (43) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.4,530-ஐ பறிமுதல் செய்தனர்.

    • அறந்தாங்கி அருகே ஐந்துவேம்பு காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது
    • 35 ஜோடி மாடுகளும் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன

    அறந்தாங்கி,

    ஆவுடையார்கோவில் தாலுகா வேள்வரை ஸ்ரீ ஐந்துவேம்பு காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 4-ம் ஆண்டாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் புதுக்கோட்டை, மயிலாடுதுறை,தஞ்சை, நாகை,சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 45 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன. 2 பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் பெரிய மாடு பிரிவில் 10 ஜோடி மாடுகளும், சிறிய மாடு பிரிவில் 35 ஜோடி மாடுகளும் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. சாலையின் இருபுறத்திலும் ரசிகர்கள் திரண்டிருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனர். மீமிசல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • கொத்தகப்பட்டி நடுநிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது
    • டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் பரவும் முறைகள் அதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்து கூறப்பட்டது

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கொத்தகப்பட்டி நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆற்றி வரும் பணிகள் குறித்து பேசினார். ஆங்கில பட்டதாரி ஆசிரியர் கலைமணி அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தரவக்கோட்டை ஒன்றியத் வட்டார தலைவர் ரகமதுல்லா டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் பரவும் முறைகள் அதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறினர்.மாணவர்களுக்கு துளிர் மாத இதழ் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் சிவதீபன்,திலகவதி ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக கணித பட்டதாரி ஆசிரியை சுகன்யா நன்றி கூறினார்.  

    • தலைமை ஆசிரியர் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய சங்கத்தினர் கலெக்டரிடம் முறையிட்டு மனு அளித்தனர்
    • அனைத்து ஆசிரியர்களுக்கும் பணிபாதுகாப்பும் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவர் மாதேஸ்வரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் சிவபிரகாசத்தை பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தினர் சார்பில் மாநில தலைவர் தங்கமணி தலைமையில் சங்கத்தை சேர்ந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் நேற்று இரவு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மெர்சி ரம்யாவை சந்தித்து முறையிட்டு கோரிக்கை மனு அளித்தனர். தலைமை ஆசிரியர் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தினர். எதிர்கால சமுதாயம் நலன் கருதி வளமான சமுதாயம் அமைத்திட தலைமை ஆசிரியர் உள்பட அனைத்து ஆசிரியர்களுக்கும் பணிபாதுகாப்பும் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

    • புதுக்கோட்டை ஆதனகோட்டையில் பெண்ணை தாக்கிய கொத்தனார் கைது செய்யப்பட்டு உள்ளார்
    • காயமடைந்த பெண் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை மேலமுத்துராஜா தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி இளஞ்சியம் (வயது 35). இவர், பழைய ஆதனக்கோட்டையில் நூறுநாள் வேலை பார்த்தபோது, அதே பகுதியை சேர்ந்த கொத்தனார் ராஜசேகர் (31) என்பவருக்கும், இளஞ்சியத்திற்கும் தகராறு ஏற்பட்டது. இதில் இளஞ்சியத்தை கட்டையால் ராஜசேகர் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், ஆதனக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருணிகிரி வழக்குப்பதிவு செய்து ராஜசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வழக்கு தொடர்பாக 210 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை கோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த மே மாதம் தாக்கல் செய்தனர்.
    • வழக்கின் விசாரணைக்காக கடந்த மாதம் 29-ந்தேதி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவியுடன் ஆஜராகியிருந்தார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருப்பவர் டாக்டர் விஜயபாஸ்கர். இவர், அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.35 கோடியே 79 லட்சத்து 90 ஆயிரத்து 81 மதிப்பில் சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீதும் புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந்தேதி வழக்குப்பதிவு செய்தனர். மேலும் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள அவரது வீடு, கல் குவாரிகள், நிறுவனங்கள், சென்னையில் உள்ள அவரது வீடு உள்பட மொத்தம் 56 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

    இதைத்தொடர்ந்து வழக்கு தொடர்பாக 210 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை கோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த மே மாதம் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வழக்கின் விசாரணைக்காக கடந்த மாதம் 29-ந்தேதி முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவியுடன் ஆஜராகியிருந்தார். அப்போது வழக்கின் விசாரணையை செப் 26-ந்தேதிக்கு (இன்று) தள்ளி வைத்தனர்.

    இதனை தெடர்ந்து அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விஜயபாஸ்கர் வரமுடியாத நிலையில் அவரது வழக்கறிஞர் ஆஜராகி, வழங்கப்பட்ட குற்றப்பத்திரிகையின் நகல்களில் சில பக்கங்கள் விடுபட்டுள்ளது அதனை முழுமையாக வழங்க வேண்டும் என்று வாதிட்டனர். இதனை கேட்ட நீதிபதி பூரண ஜெயஆனந்த், இந்த வழக்கு சம்பந்தமான ஆவணங்களை முழுமையாக விஜயபாஸ்கர் தரப்புக்கு லஞ்ச ஒழிப்பு துறை வழங்க உத்தரவிட்டு, வழக்கை வருகிற அக்டோபர் மாதம் 7-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    • கந்தர்வக்கோட்டை அருகேமுந்திரி காட்டில் அழுகிய நிலையில் ஆண் பிணம்
    • கந்த ர்வகோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

     கந்தர்வகோட்டை,  

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த மஞ்ச பேட்டை கிராமத்தில் அற்புதபுரம் பெரியசாமிக்கு சொந்தமான முந்திரி காட்டில் அழுகிய நிலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதனை பார்த்த பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் விரைந்து சென்ற கந்தர்வ கோட்டை போலீ சார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக மஞ்ச ப்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் கருப்பையன் கொடுத்த புகாரின் பேரில் இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்றும் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் கந்த ர்வகோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி படிப்பதற்கு கல்வி கடன்கள் வழங்கப்பட உள்ளது
    • இதில் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டையில் கைக்குறிச்சியில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் கல்வி கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமை தொடங்கி வைத்து சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது ,

    கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பெரிய அளவில் கல்வி கடன் வழங்கும் முகாம் தற்போது நடைபெற்று வருகிறது .இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி படிப்பதற்கு கல்வி கடன்கள் வழங்கப்பட உள்ளது .தற்பொழுது வித்யா லட்சுமி போர்ட்டல் என்ற முறையில் மாணவர்களுக்கு கல்வி கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வங்கிக்கு நேரடியாக அனுப்பி வங்கி மூலம் மாணவ,மாணவிகளை அழைத்து உரிய ஆவணங்களை சரிபார்த்து கல்வி கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவ மாணவிகளுக்கு தேவையான ஆவணங்கள் கிடைக்க இ- சேவை மூலமாக ஆவணங்கள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .இதில் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் கல்வி கடன் வழங்க அனைத்து வங்கி அதிகாரிகளுக்கும் தெரிவித்து உள்ளோம். இது சில வங்கி மேலாளருக்கு புரிதல் இல்லாமல் உள்ளது .எனவே அவர்களுக்கும் விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளோம். எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த முறை மாணவ ,மாணவிகள் முழுமையாக கல்வி கடன் பெறுவது உறுதி என்றார் பேட்டியின் போது நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா மற்றும் பலர் இருந்தனர்.

    • நிழற்குடை அமைத்து தர திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தரிடம் கோரிக்கை வைத்தனர்.
    • சொந்த நிதியில் தன் குடும்பத்தின் சார்பாக ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில்

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சிக்குட்பட்ட ஓலைக்குடிப்பட்டி பகுதியில் உள்ளது. இந்த பகுதியில் முருகன் கோவில் உள்ளது.மழை,வெயில், காலங்களில் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய நிழற்குடை அமைத்து தர திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தரிடம் கோரிக்கை வைத்தனர்.

    பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தனது சொந்த நிதியில் தன் குடும்பத்தின் சார்பாக ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் முருகன் கோவிலின் முன் பகுதியில் மழை வெயில் காலங்களில் எந்த சிரமமுமின்றி இருக்க பக்தர்களின் நலன் கருதி மேற்கூரை அமைத்தார்திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர். இந்நிகழ்வு இந்து, முஸ்லிம் ஒற்றுமையை நிலைநாட்டுவதாக அமைந்துள்ளது. ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தரை அனைத்து தரப்பு மக்களும் வாழ்த்தி பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு ஏற்படுத்தி மக்களின் பாராட்டுகளை பெற்றிருப்பவர் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர். இதற்காக பல விருதுகள் அவரை தேடி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 15-ந்தேதி முதல் காந்தி ஜெயந்தி அக்டோபர் இரண்டாம் தேதி வரை நடைபெற்று வருகிறது
    • வட்டார ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

    கந்தர்வகோட்டை,  

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் குப்பை இல்லா இந்தியா திட்ட முகாம் 15-ந்தேதி முதல் காந்தி ஜெயந்தி அக்டோபர் இரண்டாம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக குப்பை இல்லா இந்தியாவை உருவாக்கும் தூய்மை காவலர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு உடல் பரிசோதனை முகாம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்திபன் முன்னிலையில், கந்தர் கோட்டை ஊராட்சி மன்ற தலைவி தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

    பரிசோதனைக்கு வந்த தூய்மை காவலர்களை கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சாரதா மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவ பரிசோதனை செய்து அவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கினார்கள். வட்டார ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

    ×