என் மலர்
புதுக்கோட்டை
தஞ்சாவூர் மாவட்டம் கொளகுடி கிராமத்தை சேர்ந்தவர் அய்யாவு. இவரது மகன் விநாயகமூர்த்தி (வயது 38). இவருக்கு அய்யம்மாள் என்ற மனைவியும், சாரதி (10), சபரி (8) என்ற 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் விநாயகமூர்த்தி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மங்களநாடு கிராமத்தில் உள்ள ஒரு மாந்தோப்பில் கொட்டகை அமைத்து வசித்து வந்தார். மேலும் அவர் விவசாய வேலைக்கு சென்று வந்ததாக தெரிகிறது.
நேற்று முன்தினம் இரவு கொட்டகையில் விநாயகமூர்த்தி அரிவாளால் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். தனியாக இருந்த அவரை யாரோ மர்மநபர்கள் கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளனர். இதைபார்த்த அந்தபகுதியினர் நாகுடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜிசரவணன், அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயசீலன், இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், நாகுடி சப்-இன்ஸ்பெக்டர் திருஞானம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் விநாயகமூர்த்தியின் உடலை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
புதுக்கோட்டையில் இருந்து வந்த கை விரல்ரேகை நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். இது குறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விநாயகமூர்த்தியை கொலை செய்த மர்மநபர்கள் யார்?, எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள காலாடிப்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ், விவசாயி. இவரது மனைவி அகிலாண்டம் (வயது 30). இவர்களுக்கு கேசவன் (11), மகேந்திரன் (8), ரோஷி (7) ஆகிய 3 குழந்தைகள். இதில், மூத்த மகன் கேசவன் உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி ஆவார்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான செல்வராஜ் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து வீட்டில் பிரச்சினை செய்து வந்ததாக கூறப்படுகிறது. 3 குழந்தைகளை வைத்துக் கொண்டு குடியை விடுமாறு மனைவி பலமுறை கூறியும் செல்வராஜ் திருந்தவில்லை.
இதனால், வாழ்க்கையில் வெறுப்படைந்த அகிலாண்டம் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு தனது குழந்தைகளுக்கும் கொடுக்க முடிவு செய்தார். விஷத்தை 3 பேருக்கும் கொடுக்க முயன்ற போது, 2 குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியே தப்பி ஓடி விட்டனர். இதனால், கேசவனுக்கு மட்டும் கொடுத்துள்ளார்.
இதில், மயங்கி கிடந்த அவர்கள் இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத் துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கேசவன் உயிரிழந்தார். அகிலாண்டத்திற்கு இலுப்பூர் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினை காரணமாக மகனுக்கு விஷத்தை கொடுத்து கொன்று தாய் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பொன்னன்விடுதியை சேர்ந்தவர் ராஜாக்கண்ணு. இவருடைய மகன் சந்துரு என்ற சந்திரசேகரன்(வயது 28). இவர் கடந்த 11 மாதங்களுக்கு முன் சிங்கப்பூர் சென்றார். 5 மாதங்கள் அங்கு வேலை பார்த்த நிலையில் கொரோனா ஊரடங்கால் அவர் வேலை இழந்தார்.
கடன் வாங்கி வெளிநாடு சென்ற நிலையில் வேலை இல்லாததால் அவர் மனமுடைந்தார். இது குறித்து உறவினர்களிடமும், நண்பர்களிடமும் வருத்தத்துடன் போனில் பேசியுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது நண்பர்கள், சந்துருவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர்.
அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஏழ்மை நிலையில் உள்ள சந்துருவின் குடும்பத்தினருக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்றும், அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குடும்ப வறுமையை போக்க வெளிநாடு சென்ற வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிராம மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே உள்ள போரம் வடக்கிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமையா. இவரது மனைவி செல்வமணி. இவர்களின் மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. 2-வது மகள் சத்யா பிளஸ்-2 முடித்து விட்டு மேல் படிப்புக்காக பல்வேறு கல்லூரிகளில் விண்ணப்பித்துள்ளார்.
தந்தை இறந்து விட்ட நிலையில் சத்யா தினக்கூலி வேலைக்கு சென்று மன நோயாளியான தாயை காப்பாற்றி வருகிறார். வீட்டு மனை பட்டா, வீடு இல்லாமல் காட்டில் குடிசையில் தங்கியுள்ள இவர்களின் நிலையை அறிந்த மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார்.
கலெக்டர் உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சத்யா வசிக்கும் குடிசை பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.
பின்னர் காட்டுப்பகுதியில் பட்டா வழங்க இயலாது என்பதால் வேறு ஒரு இடத்தை தேர்வு செய்து பட்டா வழங்குவதற்கான பணியை அலுவலர்கள் மேற்கொண்டனர். அரசு சார்பில் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்குமாறு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
இந்த நிலையில் போரம் வடக்கிப்பட்டி கிராமத்திற்கு சென்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாணவி சத்யாவை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவரது உயர் கல்வி குறித்தும், எதிர் காலத்தில் என்னவாக ஆசைப்படுகிறார் என்றும் கேட்டறிந்ததுடன் அவரது உயர் கல்விக்கான செலவை தான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.
இதற்கிடையே திருச்சி கிராமாலயா தொண்டு நிறுவனத்தினர் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான கழிப்பறையை இலவசமாக கட்டி கொடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். இதே போல பெருங்களூர் அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மாணவிக்கு தேவையான பொருளுதவியை செய்துள்ளனர். மக்கள் பாதை அமைப்பினரும் மாணவியின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்தனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி நகராட்சி பகுதியில் இயங்கி வரும் ஜவுளிக்கடை, ஓட்டல், பஸ் நிலையம், நகை ஷோ கடை, பழக்கடைகள், ஆட்டோ நிறுத்துமிடம், சூப்பர் மார்க் கெட் ஆகிய நிறுவனங்கள் அனைத்திலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அதிகாரிகள் ஆய்வு பணி மேற்கொண்டனர்.
பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமுக இடை வெளி கடைபிடித்தல், தெர்மல் ஸ்கேனர் சோதனை கருவி, கை கழுவும் அமைப்பு, மற்றும் கபசுர குடிநீர் வழங்கல் போன்ற வசதிகளை கடைபிடிக்க கோரி உதவி கலெக்டர் ஆனந்த் மோகன் தலைமையில் வருவாய்த் துறை, காவல் துறை, நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
கொரோனா பரவல் தடுப்பு விதிகளை கடைபிடிக்காத நிறுவனத்திற்கு அபராதம் ரூ.12 ஆயிரத்து 700 விதிக்கப்பட்டது. மேலும் பஸ் நிலையம், காய்கறி மார்க்கெட், மீன் அங்காடி ஆகிய இடங்களில் நகராட்சியால் வழங்கப்பட்டு வரும் கபசுர குடிநீர் வழங்கும் பணிகள், மற்றும் மண்டிக்குளம் பகுதியில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனை முகாம் ஆகியவை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது .
ஆய்வின் போது தாசில்தார் மார்ட்டின் லூதர்கிங், அறந்தாங்கி நகராட்சி பொறுப்பு ஆணையர் பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா, மாத்தூர் அருகே ராசிபுரத்தில் தனியார் மின் கம்பங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. அதில் பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வெளிமாநில தொழிலாளர்கள் 80-க்கும் மேற்பட்டோர் அங்கேயே தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். அவர்களில் உத்தரபிரதேசம் மாநிலம் கவுரா என்ற ஊரை சேர்ந்த ஜமுனாபிரசாத் மகன் ராகேஷ் குமார் (வயது 31) என்பவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தான் தொழிற்சாலையில் புதிதாக வேலைக்கு சேர்ந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த தொழிற்சாலையில் தொழிலாளர்கள் மின்கம்பங்கள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது எதிர்பாராதவிதமாக ராகேஷ் குமார் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து மாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. நேற்று ராகேஷ் குமாரின், உடலை அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். அவர்கள் திருச்சியிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூரு கொண்டு சென்று, அங்கிருந்து விமானம் மூலம் உத்தரபிரதேசத்தில் உள்ள கவுராவிற்கு கொண்டு சென்றனர்.






