என் மலர்
செய்திகள்

கணவரின் குடிப்பழக்கத்தால் மாற்றுத்திறனாளி மகனை கொலை செய்து தாய் தற்கொலை முயற்சி
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள காலாடிப்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ், விவசாயி. இவரது மனைவி அகிலாண்டம் (வயது 30). இவர்களுக்கு கேசவன் (11), மகேந்திரன் (8), ரோஷி (7) ஆகிய 3 குழந்தைகள். இதில், மூத்த மகன் கேசவன் உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி ஆவார்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான செல்வராஜ் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து வீட்டில் பிரச்சினை செய்து வந்ததாக கூறப்படுகிறது. 3 குழந்தைகளை வைத்துக் கொண்டு குடியை விடுமாறு மனைவி பலமுறை கூறியும் செல்வராஜ் திருந்தவில்லை.
இதனால், வாழ்க்கையில் வெறுப்படைந்த அகிலாண்டம் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு தனது குழந்தைகளுக்கும் கொடுக்க முடிவு செய்தார். விஷத்தை 3 பேருக்கும் கொடுக்க முயன்ற போது, 2 குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியே தப்பி ஓடி விட்டனர். இதனால், கேசவனுக்கு மட்டும் கொடுத்துள்ளார்.
இதில், மயங்கி கிடந்த அவர்கள் இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத் துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கேசவன் உயிரிழந்தார். அகிலாண்டத்திற்கு இலுப்பூர் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினை காரணமாக மகனுக்கு விஷத்தை கொடுத்து கொன்று தாய் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.