search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர் கைது"

    • நள்ளிரவில் நகை கடைக்குள் நுழைந்த சூரஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கடையில் இருந்த நகைகளை கொள்ளையடித்தனர்.
    • மும்பையில் பதுங்கி இருந்த சூரஜ்குமார் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருப்பதி:

    மகாராஷ்டிரா மாநிலம், சாங்வி நகரை சேர்ந்தவர் ராம்தேவ். இவர் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், தனுகுவில் தங்கத்தை உருக்கி நகை செய்தல், அடகு கடை மற்றும் பைனான்ஸ் நடத்தி வந்தார்.

    ராம்தேவ் நகை கடையில் மகாராஷ்டிராவை சேர்ந்த சூரஜ் குமார் என்பவர் வேலை செய்து வந்தார்.

    சூரஜ் குமார், ராம்தேவ் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் நட்பாக பழகினார். இதனால் ராம்தேவ் குடும்பத்தினர் சூரஜ் குமாரை தனது குடும்பத்தில் ஒருவராக நினைத்து வீட்டுக்குள் அனுமதித்தனர்.

    இதனால் சூரஜ்குமார் ராம்தேவ் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். வீட்டில் எவ்வளவு நகை, பணம் உள்ளது எந்த அறையில் வைக்கப்பட்டுள்ளது என்ற விவரங்கள் சூரஜ் குமாருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து சூரஜ் குமார் சமீபத்தில் சொந்த ஊரான சாங்லிக்கு சென்றார். தனது நண்பர்களான நிதின் பாண்டுரங்க ஜாதவ், ஓம்கார் ஜாதவ் ஆகியோருடன் சேர்ந்து முதலாளி வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டனர்.

    சூரஜ்குமார் தனது நண்பர்கள் 4 பேருடன் தனுகுவிற்கு வந்தார். நள்ளிரவில் நகை கடைக்குள் நுழைந்த சூரஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கடையில் இருந்த நகைகளை கொள்ளையடித்தனர்.

    பின்னர் முகமூடி அணிந்து முதலாளி வீட்டிற்கு சென்ற சூரஜ் குமார் கும்பல், ராம்தேவ் மற்றும் அவரது மனைவி குழந்தைகளை சரமாரியாக தாக்கினர்.

    பீரோவை உடைத்து அதிலிருந்து நகை, பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி சென்றனர். மொத்தம் 8 கிலோ தங்கம் கொள்ளை போனது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சூரஜ் குமார் தலைமையிலான கும்பல் நகைக்கொள்ளையில் ஈடுபட்டதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    மும்பையில் பதுங்கி இருந்த சூரஜ்குமார் உட்பட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 8 கிலோ தங்க நகைகள், பணத்தை பறிமுதல் செய்தனர்.

    • சிகிச்சைக்கு வந்த சிறுவனை கழிவறைக்கு அழைத்துச்சென்று, அரசு ஆஸ்பத்திரி ஊழியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • கழிவறைக்கு அழைத்துச் சென்று சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக ரமீஸ் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளான். இதையடுத்து அவனை அவனது தாய், தலச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருந்தார்.

    அங்கு புறநோயாளிகள் பிரிவில் சிறுவனை அமர வைத்துவிட்டு, ஆதார் தொடர்பான விவரங்கள் கொடுக்க சென்றிருந்தார். அப்போது சிறுவனை, அந்த மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணிபுரியும் ரமீஸ் என்பவர் கழிவறைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

    அப்போது அவர், சிறுவனுக்கு கழிவறையில் வைத்து பாலியல்தொல்லை கொடுத்துள்ளார். மேலும் அதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டியிருக்கிறார். ஆனால் கழிவறையை விட்டு வெளியே வந்த சிறுவன், ஆஸ்பத்திரி ஊழியர் ரமீஸ், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து அழுதபடியே தனது தாயிடம் தெரிவித்தார்.

    இதனை சிறுவனின் தாய் மற்றும் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தவர்கள் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். சிறுவன் குற்றம் சுமத்திய ஊழியர் ரமீசை மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்பு அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    கழிவறைக்கு அழைத்துச் சென்று சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக ரமீஸ் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், ரமீஸ் மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

    சிகிச்சைக்கு வந்த சிறுவனை கழிவறைக்கு அழைத்துச்சென்று, அரசு ஆஸ்பத்திரி ஊழியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தலச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • என்.எஸ்.சி. போஸ் சாலையில் பழைய தங்க நகைகளை வாங்கி விற்கும் கடை உள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது அப்துல் கலாம் அசாத்தை கைது செய்தனர்.

    ராயபுரம்:

    பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலையில் பழைய தங்க நகைகளை வாங்கி விற்கும் கடை உள்ளது. இங்கு ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முஹம்மத் அப்துல் கலாம் அசாக் (38) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவரை வேலையில் இருந்து நிறுத்திவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 14-ந்தேதி முகமது அப்துல் கலாம் அசாக் நகைக்கடைக்கு வந்து அங்கிருந்த ஊழியர்களிடம் பேசினார். பின்னர் அவர் அங்கிருந்து சென்று விட்டார்.

    சிறிது நரம் கழித்து கடையின் மேலாளர் பார்த்தபோது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ. 9 லட்சம் மாயமாகி இருந்தது. அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது கமது அப்துல் கலாம் அசாக் பணத்தை கொள்ளையடித்து செல்வது பதிவாகி இருந்தது.

    இதுகுறித்து பூக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது அப்துல் கலாம் அசாத்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

    • ஜீவா என்பவர் குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
    • இன்ஸ்பெக்டர் தவமணி, அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி முருகேசன் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி வீ. மேட்டூர் பகுதியில் வசித்து வரும் தனியார் நிதி நிறுவன ஊழியர் ஒருவர் பெண்கள் பலரை புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளங்களில் ஆபாசமாக சித்தரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து அதே பகுதியை சேர்ந்த ஜீவா என்பவர் குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர். மேலும் அவர் பயன்படுத்திய செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதற்கிடையே பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் பெருமாள் தலைமையில் நேற்று இரவு குமாரபாளையம் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு முற்றுகையிட்டு குற்றவாளியை போக்சோ சட்டத்தில் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் தவமணி, அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி முருகேசன் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஏ.டி.எம்.மில் பணம் வைக்கும் ஊழியர் சந்தன மாரியப்பன் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தன மாரியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர், பாம்புகோவில் சந்தை, முள்ளிக்குளம், விருதுநகர் மாவட்டம் முறம்பு, மீனாட்சி புரம் ஆகிய பகுதிகளில் தனியார் வங்கி ஒன்றின் ஏ.டி.எம். மையங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த ஏ.டி.எம்.மில் பணம் வைக்கும் பணியில் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த சந்தன மாரியப்பன்(வயது 30) என்பவர் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் அந்த வங்கியின் மேலாளர் ஜெய பிரகாஷ் கணக்குகளை ஆய்வு செய்தபோது சுமார் ரூ.11 லட்சம் அதில் குறைவாக இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து விசாரித்ததில் ஏ.டி.எம்.மில் பணம் வைக்கும் ஊழியர் சந்தன மாரியப்பன் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது குறித்து ஜெய பிரகாஷ் கரிவலம்வ ந்தநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தன மாரியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தலைமறைவான 2 பேரை பிடிக்க தனிப்படை தீவிரம்
    • சுசீந்திரம் அருகே நல்லூரில் தனியார் மதுபான கூடம் நடத்தி வருகிறார்.

    கன்னியாகுமரி :

    கோட்டார் ஈழவர் சன்னதி தெருவை சேர்ந்த வர் குமரன் என்ற நயினார் குமார் (வயது 53). இவர்சுசீந்திரம் அருகே நல்லூரில் தனியார் மதுபான கூடம் நடத்தி வருகிறார்.

    இங்கு மேஜையில் இருந்த ரூ.94 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதையடுத்து நயினார் குமார், மதுபான கூடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமரா வின் காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் அங்கு வேலை பார்த்த ஊழியர்கள் பணத்தை திருடியது தெரிய வந்தது.

    இது குறித்து சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் நெல்லை மாவட்டம் முக்கூடலைச் சேர்ந்த அந்தோணி சவரி முத்து (45), களக்காட்டைச் சேர்ந்த சந்திரன், ராமநாதபுரம் மாவட்டம் வேம்பன் குளம் பகுதியைச் சேர்ந்த நம்புவேல் (40) ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இது குறித்து சுசீந்திரம் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி விசாரணை நடத்தி வந்தார். போலீசார் தேடுவதை அறிந்த 3 பேரும் தலைமறைவானார்கள். அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் வேம்பன் குளம் பகுதியைச் சேர்ந்த நம்புவேல் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள மற்ற 2 பேரை தேடி வருகிறார்கள். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது.

    • கடந்த 16-ந்தேதி தேவஸ்தான ஊழியர் ஒருவர் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.
    • ரெஜிகுமாரின் அறையை போலீசார் சோதனை செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 15-ந்தேதி திறக்கப்பட்டது. இன்று வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடக்கிறது. நடை திறக்கப்பட்டதையொட்டி ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில், கடந்த 16-ந்தேதி தேவஸ்தான ஊழியர் ஒருவர் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் சன்னதியில் இருந்த காணிக்கை பெட்டியில் 10.95 கிராம் எடையிலான வளையலை காணிக்கையாக செலுத்தினார். ஆனால், இந்த வளையல் காணிக்கை வரவு கணக்கில் காட்டப்படவில்லை.

    காணிக்கை பெட்டியில் போடப்பட்ட தங்க வளையல் மாயமாகி இருப்பது தேவஸ்தான அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இதுபற்றி சபரிமலை செயல் அதிகாரி லஞ்சஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

    அதைத்தொடர்ந்து போலீசார் கடந்த 18-ந்தேதி சன்னிதானத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது, சன்னிதானத்தில் திருநடை காணிக்கை பெட்டியில் போடப்படும் காணிக்கைகள் பெல்ட் மூலமாக காணிக்கை சேகரிக்கப்படும் அறைக்கு செல்வதும், அங்கு வந்த வளையலை பணியில் இருந்த தேவஸ்தான ஊழியரான ரெஜிகுமார் (வயது 45) என்பவர் திருடியதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் மூலம் போலீசார் ரெஜிகுமார் திருடியதை உறுதிபடுத்தினர்.

    பின்னர், ரெஜிகுமாரின் அறையை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவரது தலையணைக்கு அடியில் மாயமான வளையல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து தேவஸ்தான லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ரெஜிகுமாரை கைது செய்து அவரை பம்பை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பம்பை போலீசார் அவரை ரான்னி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பிஜுகுமார் காரைக்கால் என்.ஐ.டியில் உதவி பேராசிரியாராக பணிபுரிந்து வருகிறார்.
    • மகேஷ்குமார் இரவு 12 மணிக்கு மேல்தான் பஸ் வரும் என கூறினார்.

    புதுச்சேரி:

    காரைக்காலில் பஸ் ஏன் தாமதம் என கேட்ட உதவி பேராசிரியரை அடித்து, உதைத்த தனியார் பஸ் புக்கிங் அலுவல ஊழியர். காரைக்கால் நகர போலீசார் கைது செய்தனர். கேரளா மாநிலம், மண்விலா பகுதியைச்சே ர்ந்த பிஜுகுமார் (வயது38). காரைக்கால் என்.ஐ.டியில் உதவி பேராசிரியாராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று கேரளா செல்லவேண்டி, காரைக்கால் திருநள்ளாறு வீதியில் உள்ள தனியார் பஸ் நிறுவனத்தில், ஆன்லைன் மூலம் டிக்கெட் புக்கிங் செய்துள்ளார். இதனையடுத்து இரவு பஸ், 1 மணி நேரம் தாமதமாகும் என அவருடைய மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது.

    இதுகுறித்து பிஜுகுமார் தனியார் பஸ் நிறுவன புக்கிங் அலுவலகத்திற்கு சென்று கேட்டுள்ளார். அப்போது அங்கு பணியிலி ருந்த ஊழியர் மகேஷ்குமார் இரவு 12 மணிக்கு மேல்தான் பஸ் வரும் என கூறினார். இந்த குறுஞ்செய்திக்கு பிஜுகுமார் விளக்கம் கேட்டார்.இதனால் ஆத்திர மடைந்த மகேஷ்குமார் பிஜுகுமாரை ஆபசமாக திட்டி, அருகில் கிடந்த இரும்பு பைப்பால் தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த பிஜுகுமார், காரைக்கால் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் . மேலும் பிஜுகுமார் கொடுத்த புகாரின் பேரில், காரைக்கால் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து மகேஷ்குமாரை கைது செய்தனர்.

    • திருமலை புனித ஸ்தலமாக உள்ளதால் இங்கு இறைச்சி, மது, சிகரெட், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் தடை செய்யப்பட்டு உள்ளது.
    • கஞ்சாவை சிறுசிறு பொட்டலங்களாக மடித்து பிளாஸ்டிக் கவரில் காலில் கயிற்றால் கட்டி மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

    தரிசனத்திற்கு கார், பஸ், பைக் மூலம் வரும் பக்தர்கள் அலிப்பிரியில் உள்ள சோதனை சாவடியில் தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் முழுமையான சோதனைக்கு பிறகு திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

    ஏழுமலையான் கோவில் அமைந்துள்ள திருமலை புனித ஸ்தலமாக உள்ளதால் இங்கு இறைச்சி, மது, சிகரெட், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் தடை செய்யப்பட்டு உள்ளது.

    தடையை மீறி ஒரு சில ஊழியர்கள் மது, சிகரெட், கஞ்சா உள்ளியிட்டவைகளை நூதன முறையில் கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

    இந்த நிலையில் நேற்று மாலை வைகுந்தம், கியூ காம்ப்ளக்ஸ் பொருட்கள் வைக்கும் அறை அருகே கஞ்சா பொட்டலம் ஒன்று காணப்பட்டது. இதனைக்கண்ட விஜிலென்ஸ் அதிகாரிகள் அங்கு பணியில் இருந்த திருப்பதியை சேர்ந்த கங்காதரம் என்ற தேவஸ்தான ஒப்பந்த ஊழியரை பிடித்து சோதனை செய்தனர்.

    அப்போது அவர் கஞ்சாவை சிறுசிறு பொட்டலங்களாக மடித்து பிளாஸ்டிக் கவரில் காலில் கயிற்றால் கட்டி மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 100 கிராமுக்கு மேற்பட்ட கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து கங்காதரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • மனைவியை தாக்கிய ஜெய பிரகாசை போலீசார் கைது செய்தனர்

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் டி.கொட்டாம்பட்டியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 42). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயபிரகாசுக்கு அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. ஜெயபிரகாஷ் அடிக்கடி இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.

    இந்த கள்ளகாதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக ஜெயபிரகாசின் மனைவிக்கு தெரிய வந்தது.

    இது குறித்து அவர் தனது கணவரிடம் கேட்டார். அப்போது கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜெயபிரகாஷ் தனது மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ள க்காதலை தட்டிக் கேட்ட மனைவியை தாக்கிய ஜெய பிரகாசை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தினேஷ் வீட்டை பூட்டி விட்டு சாவியை ஜன்னல் ஓரமாக வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டார்.
    • கர்ணனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து நகை-பணத்தை பறிமுதல் செய்தனர்.

    போரூர்:

    சென்னை சாலிகிராமம், செங்கராஜுலு தெருவை சேர்ந்தவர் தினேஷ். இவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவரது கடையில் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த கர்ணன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். தினேஷ் நேற்று காலை மனைவி இந்திராகாந்தியுடன் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சாவியை ஜன்னல் ஓரமாக வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

    பின்னர் மாலையில் வீடு திரும்பிய தினேஷ் வீட்டை திறந்தபோது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த 10 பவுன் நகை, வைர நெக்லஸ் மற்றும் ரூ.28ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போயிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக அவர் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

    உதவி கமிஷனர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது தினேஷ் வெளியே சென்றதை நோட்டமிட்ட அவரது பேக்கரி கடை ஊழியர் கர்ணன் பூட்டை திறந்து நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து கர்ணனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து நகை-பணத்தை பறிமுதல் செய்தனர்.

    • திருச்சூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • கொடுங்கலூர் அரசு ஆஸ்பத்திரி ஊழியர் தயாலால் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம், திருச்சூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைதொடர்ந்து அந்த பெண்ணை உறவினர்கள் மீட்டு கொடுங்கலூர் தாலுகா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இதற்காக கொடுங்கலூர் தாலுகா ஆஸ்பத்திரியில் இருந்து அவர் ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டார். அவருடன் கொடுங்கலூர் அரசு ஆஸ்பத்திரி ஊழியர் தயாலால் என்பவரும் சென்றார். ஆம்புலன்சில் சென்றபோது தயாலால், இளம்பெண் அருகே அமர்ந்து இருந்தார். அப்போது அவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

    இந்தநிலையில், திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றதும் அந்த பெண் இதுபற்றி டாக்டரிடம் புகார் கூறினார். அவர் திருச்சூர் போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

    அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொடுங்கலூர் அரசு ஆஸ்பத்திரி ஊழியர் தயாலால் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×