search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவி சத்யா
    X
    மாணவி சத்யா

    மனநலம் பாதித்த தாயுடன் குடிசையில் வசிக்கும் மாணவிக்கு வீடு கட்டி கொடுக்க கலெக்டர் நடவடிக்கை

    புதுக்கோட்டை அருகே மனநலம் பாதித்த தாயுடன் குடிசையில் வசிக்கும் மாணவிக்கு வீடு கட்டி கொடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே உள்ள போரம் வடக்கிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமையா. இவரது மனைவி செல்வமணி. இவர்களின் மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. 2-வது மகள் சத்யா பிளஸ்-2 முடித்து விட்டு மேல் படிப்புக்காக பல்வேறு கல்லூரிகளில் விண்ணப்பித்துள்ளார்.

    தந்தை இறந்து விட்ட நிலையில் சத்யா தினக்கூலி வேலைக்கு சென்று மன நோயாளியான தாயை காப்பாற்றி வருகிறார். வீட்டு மனை பட்டா, வீடு இல்லாமல் காட்டில் குடிசையில் தங்கியுள்ள இவர்களின் நிலையை அறிந்த மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார்.

    கலெக்டர் உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சத்யா வசிக்கும் குடிசை பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.

    பின்னர் காட்டுப்பகுதியில் பட்டா வழங்க இயலாது என்பதால் வேறு ஒரு இடத்தை தேர்வு செய்து பட்டா வழங்குவதற்கான பணியை அலுவலர்கள் மேற்கொண்டனர். அரசு சார்பில் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்குமாறு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்த நிலையில் போரம் வடக்கிப்பட்டி கிராமத்திற்கு சென்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாணவி சத்யாவை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவரது உயர் கல்வி குறித்தும், எதிர் காலத்தில் என்னவாக ஆசைப்படுகிறார் என்றும் கேட்டறிந்ததுடன் அவரது உயர் கல்விக்கான செலவை தான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

    இதற்கிடையே திருச்சி கிராமாலயா தொண்டு நிறுவனத்தினர் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான கழிப்பறையை இலவசமாக கட்டி கொடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். இதே போல பெருங்களூர் அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மாணவிக்கு தேவையான பொருளுதவியை செய்துள்ளனர். மக்கள் பாதை அமைப்பினரும் மாணவியின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்தனர்.
    Next Story
    ×