என் மலர்
நீலகிரி
இந்தியாவிலேயே குஜராத் மாநிலத்தில் தான் உருளைக்கிழங்கு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக சந்தைப்படுத்துவது குறித்த சர்வதேச உருளைக்கிழங்கு மாநாடு குஜராத் காந்தி நகரில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டை புதுடெல்லி இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம், சிம்லா மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையம், சர்வதேச உருளைக்கிழங்கு நிலையம் இணைந்து 3 நாட்கள் நடத்துகிறது.
மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பேசும்போது, நாட்டில் 2 முறை உருளைக்கிழங்கு கிடைக்காமல் பஞ்சம் ஏற்பட்டது. உருளைக்கிழங்கு மகசூல் திறனை அதிகரிக்கும் ஆராய்ச்சி திட்டங்களை விஞ்ஞானிகள் மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். மாநாட்டில் சர்வதேச வேளாண்மை விஞ்ஞானிகள், பல்வேறு மாநில விவசாயிகள் கலந்துகொண்டனர்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் பிரதமர் பேசுவதை நீலகிரி மாவட்ட விவசாயிகள் பார்க்கும் வகையில் ஊட்டியில் உள்ள தோட்டக்கலைத்துறை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. விவசாயிகள் இருக்கைகளில் அமர்ந்து பிரதமர் மோடி பேசுவதை கேட்டனர்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் திலக், கார்த்திகேயன் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர். இதுகுறித்து உதவி பேராசிரியர் திலக் கூறும்போது, குஜராத் மாநிலத்தில் உருளைக்கிழங்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் உருளைக்கிழங்கு ரகங்கள், காலநிலைக்கு ஏற்ப எவ்வாறு விளைவிக்கப்படுகிறது, உருளைக்கிழங்கு உற்பத்தியை அதிகரிக்க வேளாண்மை தொழில்நுட்பங்கள், பூச்சி நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள் போன்றவை குறித்து மாநாட்டில் விளக்கம் அளிக்கப்படுகிறது என்றார்.
ஊட்டி அருகே முத்தோரையில் மத்திய அரசின் உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு உருளைக்கிழங்குகள் ஆராய்ச்சி செய்து சோதனை அடிப்படையில் பயிரிடப்பட்டு, விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மலை மாவட்டமான நீலகிரியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 3 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் உருளைக்கிழங்கு சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தற்போது ஆயிரத்து 500 ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. கேரட் பயிரிடும் பரப்பளவு அதிகரித்து உள்ளது என்று தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரதமர் மோடி பேசுவதை பார்க்க வாய்ப்பு கிடைத்தது என்றும், உருளைக்கிழங்கு உற்பத்தியை அதிகரிப்பது குறித்த விவரங்கள் பயன் உள்ளதாக இருந்தது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கட்டப்பட்டு பாரதி நகர் பகுதியில் சோறுட்டும் மலை உள்ளது. இது அடர்ந்த வன பகுதியாகும். இங்கு ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருக்காது.
இந்த பகுதியில் 60 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் கால் வெட்டி துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்தார். மேலும் உடல் நிர்வாண நிலையிலும் கிடந்தது. இதனை அந்த வழியாக சென்றவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கோத்தகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கொலை செய்யப்பட்டு நிர்வாண நிலையில் கிடந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊர்? என்பது தெரியவில்லை. அவரை வெளியில் இருந்து யாராவது வன பகுதிக்கு கடத்தி வந்து கற்பழித்து விட்டு கொலை செய்தார்களா? அல்லது வேறு எங்காவது கொலை செய்து விட்டு பிணத்தை வன பகுதிக்குள் வீசி சென்றார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேத பரிசோதனையில் தான் பெண் கற்பழிக்கப்பட்டாரா? என்பது தெரியவரும்.
சுற்றுலா தலமான நீலகிரியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐகோர்ட்டு உத்தரவின்படி செப்டம்பர் 1-ந்தேதி முதல் குளிர்பானம், மற்றும் குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில் உள்ளிட்ட 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
அதற்கு பதிலாக நகரின் முக்கிய இடங்களில் தண்ணீர் ஏ.டி.எம். அமைத்துள்ளது. சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வந்தால் அவற்றை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு கட்டுக்குள் வந்தது.

இதனையடுத்து நகராட்சி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 130 ஊழியர்களுக்கு பால் பாயின்ட் பேனாக்களுக்கு பதிலாக ‘பவுண்டன்’ பேனாக்கள் வழங்கப்பட்டன. ‘இங்க் பாட்டில்களும் நகராட்சி அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டன.
இது குறித்து நகராட்சி கமிஷனர் பாபு கூறியதாவது,
பிளாஸ்டிக் பால் பாயின்ட் மற்றும் ஜெல் பேனாக்கள் பயன்படுத்தி வீசப்படுகிறது. குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், நாள்தோறும் 500 கிலோ வரை பேனாக்கள் வீசப்படுகிறது. இதை தடுக்க முதற்கட்டமாக நகராட்சி அலுவலகத்தில் பால் பாய்ன்ட் பேனாக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு குடியரசு தினத்தில் உறுதி மொழி ஏற்கப்பட்டது. அதன்படி ஊழியர்கள் இங்க் பேனாக்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
இதனையடுத்து பள்ளி மற்றும் அலுவலகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பால் பாயின்ட் பேனாக்கள் பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இந்த நடைமுறை தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக குன்னூர் நகராட்சியில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா நாளை காலை 10 மணிக்கு ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. விழாவில் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். அதன் பின்னர் அவர் வாகனத்தில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிடுகிறார்.
அதனை தொடர்ந்து காவல்துறை, என்.சி.சி., பள்ளி மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். விழாவையொட்டி பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், பழங்குடியினர்களின் பாரம்பரிய நடனம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. விழாவில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் பலர் கலந்துகொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா செய்து வருகிறார்.
குடியரசு தின விழா நடக்க உள்ளதை அடுத்து, கடந்த 2 நாட்களாக காலை மற்றும் மாலையில் ஆயுதப்படை போலீசார், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். விழா நடைபெறும் மைதானம் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, போலீசார் கண்காணித்து வருகின்றனர். விழாவையொட்டி மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் பார்வையாளர்கள் விழாவை பார்க்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.
குடியரசு தின விழாவை முன்னிட்டு சுற்றுலா நகரமான ஊட்டியில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் போலீசார் சோதனை நடத்தி, அங்கு தங்கி இருப்பவர்களின் விவரங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர். சந்தேகப்படும்படியாக யாரேனும் தங்கினால் தகவல் கொடுக்கும்படி போலீசார் தெரிவித்து உள்ளனர். லவ்டேல் சந்திப்பு, ஹில்பங்க், பிங்கர்போஸ்ட் உள்ளிட்ட இடங்களில் வாகன சோதனை நடத்தப்படுகிறது.
நீலகிரி மாவட்ட எல்லையில் அமைந்து உள்ள கக்கனல்லா, பாட்டவயல், நாடுகாணி, எருமாடு, பர்லியார், குஞ்சப்பனை, கெத்தை போன்ற சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.
வெளிமாநில வாகனங்கள் சோதனைக்கு பின்னரே நீலகிரிக்குள் அனுமதிக்கப்படுகிறது. விழாவையொட்டி போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின்படி, நீலகிரி முழுவதும் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊட்டி:
கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் முர்ஷிது(வயது22). இவர் அடிக்கடி நீலகிரி மாவட்டம் பந்தலூரில் வசித்து வரும் தனது பெரியப்பா வீட்டிற்கு வந்து செல்வார்.
அப்போது அவரது பெரியப்பா மகளான பிளஸ்-2 படிக்கும் மாணவி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். இதனை பயன்படுத்தி அந்த மாணவியை மிரட்டி முர்ஷிது பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும் இதனை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மாணவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் மாணவியை கேரளாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு நடந்த பரிசோதனையில் மாணவி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து மாணவியிடம் விசாரித்தனர்.
அப்போது மாணவி தனக்கு நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் சம்பவம் குறித்து தேவாலா போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் முர்ஷிது மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தமிழக அரசின் போக்குவரத்துத்துறை சார்பில், 31-வது சாலை பாதுகாப்பு வாரம் நேற்று முதல் வருகிற 27-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நீலகிரி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் ஊட்டியில் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆகியோர் கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.
இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-
சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து அனைவரும் தெரிந்துகொள்ளும் பொருட்டு ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகள் விபத்து இல்லாமல் வாகனத்தை இயக்குவதே இதன் நோக்கமாகும். இருசக்கர வாகன ஓட்டிகள், பின்னால் அமர்ந்து இருப்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இரவில் எதிரில் வாகனம் வரும் போது ஒளியை குறைத்து, முன்னால் செல்லும் வாகனங்களுக்கு போதிய இடைவெளி விட்டும், வளைவு, பாலங்கள் உள்ள இடங்களில் கவனமாக செல்ல வேண்டும்.
போக்குவரத்து விதிமுறைகளை மதிப்பதுடன், வாகனம் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்தக்கூடாது. பேரணியின் நோக்கம் அனைத்து முக்கிய சந்திப்புகள், பஸ் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அனைத்து ஓட்டுநர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதே ஆகும். இவ்வாறு அவர் கூறினார். இதில், வட்டார போக்குவரத்து அலுவலர் கதிரவன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நல்லதம்பி, குலோத்துங்கன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஊர்வலம் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி ராஜீவ்காந்தி ரவுண்டானா, லோயர் பஜார், மாரியம்மன் கோவில் சந்திப்பு, கமர்சியல் சாலை, கேஷினோ சந்திப்பு வழியாக சேரிங்கிராஸ் வரை சென்றது. இதில், போலீசார், மகளிர் சுய உதவிகுழுவினர் ஹெல்மெட் அணிந்து சென்றனர். மேலும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
நீலகிரி மாவட்டம் கூடலூர்-கோழிக்கோடு சாலையில் மரப்பாலம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்தவர்கள் தினமும் அதிகாலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம்.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் வழக்கம் போல் நடைபயிற்சிக்கு சென்றனர். அப்போது அவர்கள் மரப்பாலம் புதிய டிரான்ஸ்பார்மர் அருகே சென்றபோது அங்குள்ள ஒரு தோட்டத்திற்குள் இருந்து 2 புலிகள் வெளியில் வந்தன. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தோட்டத்தில் இருந்து வெளியில் வந்த புலிகள் அந்த பகுதியில் உள்ள கூடலூர்- கோழிக்கோடு சாலையை கடந்து மறு பகுதிக்கு சென்றது. இதுகுறித்து அந்த நபர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் புலி நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘கடந்த சில நாட்களாகவே இந்த பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி புலிகள் சாலையை கடக்கும் சம்பவம் நடந்துள்ளது. இதனை ஏற்கனவே சிலர் பார்த்துள்ளனர்.
இதேபோல் 10-வது மைல் பகுதியிலும் இதே புலிகள் அதிகாலையில் சாலையை கடந்து செல்வதையும் அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இந்த புலிகள் குண்டம்புழா வனப்பகுதியிலிருந்து வெளியேறி இங்கு வந்து இருக்க வாய்ப்புள்ளது.
எனவே, வனத்துறையினர் தொடர்ந்து புலி நடமாட்டத்தை கண்காணித்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றனர்.
ஊட்டி நகர காவல்துறை மற்றும் தனியார் ஓட்டல் சார்பில், சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் ஊட்டியில் நேற்று நடைபெற்றது. ஊர்வலத்தை ஊட்டி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஊர்வலம் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி லோயர் பஜார், மணிக்கூண்டு, ஏ.டி.சி. வழியாக குதிரை பந்தய மைதான நுழைவுவாயில் வரை சென்றது.
இதில் போலீசார் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களில் சென்றனர். இருசக்கர வாகனத்தை ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்து இருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், வளைவில் திரும்பும் முன் சிக்னல் செய்ய வேண்டும், மிதமான வேகத்தில் வாகனங்களில் செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதில் போக்குவரத்து போலீசார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நீலகிரி மாவட்டம் சேரம்பாடி அருகே உள்ள கோரஞ்சாலை சேர்ந்தவர் சதானந்தன். கனரா வங்கி ஊழியர். இவரது மனைவி ராகினி(வயது 50). இவர்களுக்கு சரிதா என்ற மகள் உள்ளார்.
இவர்கள் தங்கள் மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி அடுத்த மாதம் 5-ந் தேதி சதானந்தன், ராகினி தம்பதியரின் மகளான சரிதாவுக்கு திருமணம் நடக்க உள்ளது. இதற்காக சதானந்தனும், ராகினியும் பத்திரிகை அடித்து உறவினர்கள் அனைவருக்கும் கொடுத்து வருகின்றனர். சம்பவத்தன்று வடுவஞ்சால் பகுதியில் உள்ள உறவினர் ஒருவருக்கு திருமண பத்திரிகை கொடுப்பதற்காக கணவன், மனைவி 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
அப்போது வடுவாஞ்சல் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த ராகினி திடீரென எதிர்பாராத விதமாக கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்.
இதை பார்த்த அவரது கணவர் வண்டியை நிறுத்தி விட்டு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மனைவியை மீட்டு கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராகினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மேப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொடநாடு ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் 5 வார்டு உறுப்பினர்களாக அ.ம.மு.க.வை சேர்ந்தவர்களும், 4 வார்டு உறுப்பினர்களாக தி.மு.க.வினரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஊராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை தலைவர் தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் மகேந்திர பிரசாத்தும், தி.மு.க. சார்பில் வாசுகியும் போட்டியிட்டனர். இதில் தலைவரும் வாக்களித்ததால் இருவருக்கும் தலா 5 ஓட்டு கிடைத்தது.
இதனால் குலுக்கல் முறை பின்பற்றப்பட்டது. அப்போது துணை தலைவராக மகேந்திர பிரசாத் வெற்றி பெற்றார். இதனால் இரு தரப்பினர் இடையே விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் மகேந்திர பிரசாத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேற்று ஊராட்சி அலுவலகத்தில் பேசி கொண்டு இருந்தனர்.
அப்போது தி.மு.க.வை சேர்ந்த சிலர் அங்கு வந்து விடுமுறை நாளில் எதற்காக அலுவலகத்தை திறந்தீர்கள்? என கேட்டு சத்தம் போட்டனர்.
இதனால் மகேந்திர பிரசாத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அலுவலகத்தை பூட்டி விட்டு வெளியே நின்று பேசி கொண்டு இருந்தனர். அப்போது துணை தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த வாசுகியின் கணவர் புஷ்ப குமார் (48) மற்றும் அவரது நண்பர் தர்மலிங்கம் (48) உள்ளிட்டோர் துணைத் தலைவர் மகேந்திர பிரசாத்துடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றியதில் அனைவரும் சேர்ந்து மகேந்திர பிரசாத்தை திடீரென தாக்கினார்கள். அவர்களை தடுக்க வந்த அ.ம.மு.க. பிரமுகர் கேரடா மட்டத்தை சேர்ந்த சக்திவேலை (41) புஷ்ப குமார், தர்மலிங்கம் மற்றும் சிலர் உருட்டுக்கட்டையால் தாக்கினார்கள். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனை பார்த்ததும் அவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
தலையில் பலத்த காயம் அடைந்த சக்திவேலை அங்கிருந்தவர்கள் மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தலையில் தையல் போடப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது குறித்து கோத்தகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அ.ம.மு.க. பிரமுகரை தாக்கிய தி.மு.க.வை சேர்ந்த புஷ்பகுமார், தர்மலிங்கம் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த தகராறில் துணை தலைவர் மகேந்திர பிரசாத் மற்றும் சக்திவேல் ஆகியோர் தன்னை தாக்கியதாக மோகன் என்பவரும் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தல் முன் விரோத தகராறில் அ.ம.மு.க. பிரமுகர், ஊராட்சி துணை தலைவர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நெல்லியாளம் காட்டிக்குன்னு பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் விஜிதா(22). கர்ப்பிணியான இவர், எருமாடு அருகே கொத்தலக்குண்டு கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்றுள்ளார்.
காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், இவரை கூடலூரில் உள்ள அக்கார்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
காய்ச்சல் தீவிரமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக கேரள மாநிலம் கோழிக்கோடு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கடந்த 13-ந்தேதி ஆபரேசன் மூலம் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
பிரசவமான சில மணி நேரங்களில் விஜிதா பரிதாபமாக உயிரிழந்தார். ‘அவர், பன்றி காய்ச்சல் ஏற்பட்டதால் உயிரிழந்தார்,’ என, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், மக்கள் அச்சம் அடைந்தனர். இதனையடுத்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நெல்லியாளம் கோட்டைக்குன்னு கிராமத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டார். அத்துடன் சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் பாலுசாமி தலைமையிலான சுகாதார துறையினரும் ஆய்வு செய்தனர்.
அப்போது அதில் ‘எருமாடு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பலரும் கேரளா மாநிலத்திற்கு தினசரி வேலைக்கு சென்று வருவதால், அங்கிருந்து பன்றிக்காய்ச்சல் யாருக்கேனும் பரவி, அதன் மூலம் விஜிதாவும் பாதித்திருக்க கூடும்,’ என, சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து கொத்தலகுண்டு கிராமத்தில், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கதிரவன், நடமாடும் மருத்துவ குழு டாக்டர் புரூஸ், சுகாதார ஆய்வாளர் நாகராஜ் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் உறைபனி தீவிரமாகி வருகிறது.நேற்று ஊட்டி புகர் பகுதியில் குறைந்தபட்ச வெப்ப நிலை மைனல் 5 டிகிரி செல்சியசாகவும் குறைந்துள்ளது.இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
பாசன குழாய்களில் தண்ணீர் உறைந்து பனிக்கட்டியாகி விட்டது. இதனால் தண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. தேயிலை, மலர்ச்செடி மற்றும் காய்கறிச்செடிகளை அடர்ந்த பனி படர்ந்துள்ளதால் நோய் தாக்கி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் 16 கூட்டுறவு தொழிற்சாலைகளும், 100-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. பருவமழையால் பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் பனிப்பொழிவால் தேயிலை செடிகளை கொப்புள நோய் தாக்கி வருகிறது. இதனால் கொழுந்துகள், இலைகள் சுருண்டு நிறம் மாறி வருகின்றன. இதனால் பச்சை தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை கட்டுப்படுத்த மானிய விலையில் அரசு மருந்து வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த 2 நாட்களாக புகர் பகுதியில் 5 டிகிரி செல்சியசாகவும், குன்னூர் பகுதியில் 0 டிகிரி செல்சியசாகவும் வெப்ப நிலை பதிவானது. இன்று அதிக பட்ச வெப்ப நிலை 12 டிகிரி செல்சியசாகவும், குறைந்த பட்ச வெப்ப நிலை 2 டிகிரி செல்சியசாகவும் பதிவானது.






