search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பால் பாயின்ட் பேனா
    X
    பால் பாயின்ட் பேனா

    குன்னூர் நகராட்சி அலுவலகத்தில் ‘பால் பாயின்ட் பேனா’ பயன்படுத்த தடை

    குன்னூர் நகராட்சி அலுவலகத்தில் பால் பாய்ன்ட் பேனாக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு குடியரசு தினத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதன்படி ஊழியர்கள் இங்க் பேனாக்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
    குன்னூர்:

    சுற்றுலா தலமான நீலகிரியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஐகோர்ட்டு உத்தரவின்படி செப்டம்பர் 1-ந்தேதி முதல் குளிர்பானம், மற்றும் குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில் உள்ளிட்ட 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

    அதற்கு பதிலாக நகரின் முக்கிய இடங்களில் தண்ணீர் ஏ.டி.எம். அமைத்துள்ளது. சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வந்தால் அவற்றை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு கட்டுக்குள் வந்தது.

    இந்நிலையில் குன்னூர் நகராட்சியில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பால் பாயின்ட் பேனாக்கள் நாள் ஒன்றுக்கு 500 கிலோ சேகரமாகிறது. இதனை தவிர்க்க குன்னூர் நகராட்சி அலுவலகத்தில் பால் பாயின்ட் பேனாக்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இங்க் பேனா

    இதனையடுத்து நகராட்சி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 130 ஊழியர்களுக்கு பால் பாயின்ட் பேனாக்களுக்கு பதிலாக ‘பவுண்டன்’ பேனாக்கள் வழங்கப்பட்டன. ‘இங்க் பாட்டில்களும் நகராட்சி அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டன.

    இது குறித்து நகராட்சி கமிஷனர் பாபு கூறியதாவது,

    பிளாஸ்டிக் பால் பாயின்ட் மற்றும் ஜெல் பேனாக்கள் பயன்படுத்தி வீசப்படுகிறது. குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், நாள்தோறும் 500 கிலோ வரை பேனாக்கள் வீசப்படுகிறது. இதை தடுக்க முதற்கட்டமாக நகராட்சி அலுவலகத்தில் பால் பாய்ன்ட் பேனாக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு குடியரசு தினத்தில் உறுதி மொழி ஏற்கப்பட்டது. அதன்படி ஊழியர்கள் இங்க் பேனாக்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

    இதனையடுத்து பள்ளி மற்றும் அலுவலகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பால் பாயின்ட் பேனாக்கள் பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இந்த நடைமுறை தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக குன்னூர் நகராட்சியில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×