search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாக்குதலில் படுகாயம் அடைந்த சக்திவேல்
    X
    தாக்குதலில் படுகாயம் அடைந்த சக்திவேல்

    அமமுக பிரமுகர் மீது தாக்குதல்- திமுக பெண் பிரமுகர் கணவர் உள்பட 2 பேர் கைது

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அ.ம.மு.க. பிரமுகர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக தி.மு.க. பெண் பிரமுகர் கணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொடநாடு ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளது.

    சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் 5 வார்டு உறுப்பினர்களாக அ.ம.மு.க.வை சேர்ந்தவர்களும், 4 வார்டு உறுப்பினர்களாக தி.மு.க.வினரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    ஊராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை தலைவர் தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் மகேந்திர பிரசாத்தும், தி.மு.க. சார்பில் வாசுகியும் போட்டியிட்டனர். இதில் தலைவரும் வாக்களித்ததால் இருவருக்கும் தலா 5 ஓட்டு கிடைத்தது.

    இதனால் குலுக்கல் முறை பின்பற்றப்பட்டது. அப்போது துணை தலைவராக மகேந்திர பிரசாத் வெற்றி பெற்றார். இதனால் இரு தரப்பினர் இடையே விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் மகேந்திர பிரசாத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேற்று ஊராட்சி அலுவலகத்தில் பேசி கொண்டு இருந்தனர்.

    அப்போது தி.மு.க.வை சேர்ந்த சிலர் அங்கு வந்து விடுமுறை நாளில் எதற்காக அலுவலகத்தை திறந்தீர்கள்? என கேட்டு சத்தம் போட்டனர்.

    இதனால் மகேந்திர பிரசாத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அலுவலகத்தை பூட்டி விட்டு வெளியே நின்று பேசி கொண்டு இருந்தனர். அப்போது துணை தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த வாசுகியின் கணவர் புஷ்ப குமார் (48) மற்றும் அவரது நண்பர் தர்மலிங்கம் (48) உள்ளிட்டோர் துணைத் தலைவர் மகேந்திர பிரசாத்துடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    வாக்குவாதம் முற்றியதில் அனைவரும் சேர்ந்து மகேந்திர பிரசாத்தை திடீரென தாக்கினார்கள். அவர்களை தடுக்க வந்த அ.ம.மு.க. பிரமுகர் கேரடா மட்டத்தை சேர்ந்த சக்திவேலை (41) புஷ்ப குமார், தர்மலிங்கம் மற்றும் சிலர் உருட்டுக்கட்டையால் தாக்கினார்கள். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனை பார்த்ததும் அவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    தலையில் பலத்த காயம் அடைந்த சக்திவேலை அங்கிருந்தவர்கள் மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தலையில் தையல் போடப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இது குறித்து கோத்தகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அ.ம.மு.க. பிரமுகரை தாக்கிய தி.மு.க.வை சேர்ந்த புஷ்பகுமார், தர்மலிங்கம் ஆகியோரை கைது செய்தனர்.

    இந்த தகராறில் துணை தலைவர் மகேந்திர பிரசாத் மற்றும் சக்திவேல் ஆகியோர் தன்னை தாக்கியதாக மோகன் என்பவரும் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேர்தல் முன் விரோத தகராறில் அ.ம.மு.க. பிரமுகர், ஊராட்சி துணை தலைவர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×