என் மலர்
நீலகிரி
கூடலூரில் இருந்து கேரள மாநிலம் திருச்சூர், கோட்டயம் மற்றும் பாலக்காடு உள்பட பல மாவட்டங்களுக்கு சாலை செல்கிறது. இதில் கூடலூரில் இருந்து வழிக்கடவு வரை மலைப்பாதையாக உள்ளது. இதுதவிர கேரள மாநில மக்களின் அத்தியாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கான பொருட்கள் அனைத்தும் கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக சரக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் வாகன போக்குவரத்து அதிகளவு உள்ளது. இந்த நிலையில் எர்ணாகுளம் பகுதியில் இருந்து சரக்கு லாரி ஒன்று கூடலூர் வழியாக கர்நாடகாவுக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது கீழ் நாடுகாணி பகுதியில் நேற்று காலை வந்து கொண்டிருந்தது. திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. தொடர்ந்து லாரிக்குள் இருந்த டிரைவர்கள் சிஜோ, வினில் ஆகியோர் பயத்தில் கூச்சலிட்டனர்.
இதனைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் லாரிக்குள் சிக்கியிருந்த சிஜோ, வினில் ஆகியோரை மீட்டனர். இதனிடையே தேவாலா போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது தூக்கக் கலக்கத்தில் இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததாக டிரைவர் சிஜோ தெரிவித்தார்.
இதனிடையே பள்ளத்தில் லாரி விழுந்த லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் லேசான காயங்களுடன் டிரைவர்கள் உயிர் தப்பியதால் தேவாலா போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, மலைப் பாதையில் வாகனங்களை இயக்கும்போது டிரைவர்கள் கவனமுடன் வரவேண்டும். மேலும் தூக்க கலக்கத்தில் வாகனங்களை இயக்க கூடாது. அவ்வாறு ஓய்வெடுக்க விரும்பினால் மலைப்பாதை தொடங்குவதற்கு முன்பாக உள்ள பகுதியில் சாலையோரம் லாரியை நிறுத்தி ஓய்வு எடுத்த பிறகு இயக்க வேண்டும். இதன் மூலம் விபத்துகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பலவகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவோ விற்பனை செய்யவோ அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவின் உத்தரவுப்படி நீலகிரி மாவட்டம் முழுவதும் பல்வேறு துறை அதிகாரிகள் கடைகள், வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனையில் ஈடுபட்டு, விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன்படி கோத்தகிரி பேரூராட்சி சார்பில் செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக கோத்தகிரி நகரின் முக்கிய பகுதிகளில் பிளாஸ்டிக் சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சோதனையில் உணவு பொருட்களை பேக்கிங் செய்வதற்காக கடைகளில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்ததுடன், பிளாஸ்டிக் பொருட்களை விற்ற வியாபாரிகளுக்கு மொத்தம் ரூ.10 ஆயிரத்து 500 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லியில் வேளாண் விற்பனை துறைக்குச் சொந்தமான விளை பொருட்கள் பதப்படுத்தும் நிலையம் உள்ளது. இங்கு விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களை கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு போதிய வருவாய் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வேளாண் பொருட்கள் பதப்படுத்தும் நிலையத்தின் இரும்பு கதவுகளின் பூட்டுகள் உடைத்து கதவு திறந்து கிடந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதைதொடர்ந்து சேரம்பாடி போலீஸ் நிலையத்தில் வேளாண் விற்பனை அலுவலர்கள் புகார் செய்தனர். தகவலறிந்த தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு அமீர் அகமது, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு, சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது பதப்படுத்தும் நிலையத்துக்குள் இருந்த 15 கணினிகள் மற்றும் பிரிண்டர், வாழைத் தார்களை வெட்டும் எந்திரம் உள்பட சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போனது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து ஊட்டியிலிருந்து போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. பதப்படுத்தும் நிலையத்தில் இருந்து சிறிது தூரம் போலீஸ் மோப்ப நாய் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்க வில்லை.
மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சேரம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் 2020-ம் ஆண்டில் ஜூலை மாதம் 8-ம் வகுப்பில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்காக ஏழாம் வகுப்பு படிக்கின்ற அல்லது தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேரலாம். 11 முதல் 13 வயது வரை அதாவது 2.7.2008-க்கு முன்னதாகவும் 1.7.2009-க்கு பிறகு பிறந்து இருக்கக்கூடாது. இதற்கான விண்ணப்பத்தினை கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி என்ற பெயரில் பொதுப்பிரிவினர் ரூ.600-ம், எஸ்.சி., எஸ்.டி. இனத்தவர் ரூ.555-க்கும் காசோலை எடுத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பத்துடன் மாதிரி வினாத்தாள்களும் அனுப்பி வைக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் விரைவு தபாலில் சென்னை டி. என்.பி.எஸ்.சி. அலுவலகத்துக்கு வருகிற 30-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
பின்னர் விண்ணப்பதாரர்களுக்கு வருகிற டிசம்பர் மாதம் 1, 2-ந் தேதி நுழைவுத் தேர்வுகள் நடைபெறும். பின்னர் 6.4.2021 அன்று வாய்மொழித் தேர்வு நடைபெறும். மேலும் விபரங்களுக்கு www.rimc.org என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களின் 7-ம் வகுப்பு பயிலும் மற்றும் முடித்த சிறார்கள் எச்சரிக்கைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் சத்துணவு பயனாளிகளுக்கு அரிசி பருப்பு மற்றும் முட்டை அடங்கிய உணவு பொருட்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி ஊட்டி சி.எஸ்.ஐ. சி.எம்.எம்.மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு தொகுப்புகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கு உணவு பொருட்களின் தொகுப்பு வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தொடக்கப் பள்ளியில் பயிலும் 13 ஆயிரத்து 604 மாணவ-மாணவிகளுக்கு தலா 100 கிராம் அரிசி மற்றும் 40 கிராம் பருப்பு வீதம் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை வழங்கப்படுகிறது.
இதற்காக 1 லட்சத்து 65 ஆயிரத்து 648 கிலோ அரிசி, பருப்பு வழங்கப்படுகிறது. மேலும் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 11 ஆயிரத்து 448 மாணவ-மாணவிகளுக்கு தலா 150 கிராம் அரிசி மற்றும் 56 கிராம் பருப்பு வீதம் மொத்தம் 2 லட்சத்து 5 ஆயிரத்து 59 கிலோ வழங்கப்பட்டுள்ளது. மேலும் 24 ஆயிரத்து 244 மாணவர்களுக்கு 2 லட்சத்து 42 ஆயிரத்து 440 முட்டைகள் வழங்கப்படுகிறது.
மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு அதிக முக்கியத்துவம் அளித்து அவர்களின் கல்வி அறிவை வளர்த்து வருகிறது. இதேபோல் அவர்கள் ஆரோக்கியமாக வாழ அரசு வழிவகை செய்துள்ளது. எனவே பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு பொருட்களை அவர்களுக்கு வழங்கி ஆரோக்கியமாக வளர உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சாலமன், ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதர், ஜெய்சங்கர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குமார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் எஸ்தர், வசந்தி, இவான் கிரேசி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நீலகிரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்தது. தொற்று அறிகுறி நபர்களை சுகாதார துறையினர் கண்டறிந்து பரிசோதனை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், பொது போக்குவரத்து தொடங்கியதை அடுத்து பொது இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் அரசு அறிவுறுத்தியுள்ள விதிமுறைகளான சமூக இடைவெளி கடைப்பிடிப்பது, பொது இடங்களில் கட்டாயம் மாஸ்க் அணிவது, ஒரு நாளைக்கு குறைந்தது 10 முறையாவது சோப்பு போட்டு கை கழுவும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
குறிப்பாக பொது இடங்களில் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிவதை உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் உறுதிப்படுத்தும் வகையில் நகரின் முக்கிய இடங்களில் ஊழியர்கள் நின்று, மாஸ்க் அணியாமல் வருபவர்களை கண்டறிந்து அபராதம் விதித்து வருகின்றனர்.
நேற்று ஊட்டி நகரில் பஸ் ஸ்டாண்ட், சேரிங்கிராஸ், மெயின் பஜார், ஏ.டி.சி., பகுதிகளில் முகக் கவசம் அணியாமல் வெளியில் சுற்றியவர்களை கண்டறிந்து 200 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர்.
அதன்படி நேற்று நகரில் மாஸ்க் அணியாமல் வந்த 100 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டனர். தொடர்ந்து கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்று திருப்பூர் மாவட்டம் மூலனூரில் மண்டல துணை தாசிதார் செந்தில் பிரபு, மூலனூர் பேரூராட்சி செயல்அலுவலர் முருகேசன், நாகராஜ் மண்டல துணைவட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட மூலனூர் தலைமை காவலர் தங்கதுரை ஆகியோர் கொண்ட பறக்கும் படையினர் நேற்று பொது இடங்கள் மற்றும் மளிகை கடை, ஜவுளிகடைகள், நகைகடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனை செய்தனர். இதில் மாஸ்க் அணியாமல் வந்த 52-பேர்களுக்கு தலா ரூ.200- அபராதம் விதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை, மலை காய்கறிகளையே விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டு வந்தனர். கடந்த சில காலங்களாகவே நீலகிரி மாவட்ட விவசாயிகள் பூண்டு விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வருடத்தில் 2 போகங்களாக பூண்டு பயிரிட்டு வருகிறார்கள்.
அதன்படி முதல் போகமான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கால கட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பிலும், 2-வது போகமான அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை 1000 ஏக்கரிலும் பூண்டு பயிரிடப்படுகிறது. ஒரு ஆண்டுக்கு சராசரியாக மாவட்டத்தில் 20 ஆயிரம் டன் பூண்டு உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த பூண்டுகளை வாங்குவதற்காக அண்டை மாவட்டமான கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர், வெளி மாநிலங்களான மும்பை, குஜராத், கர்நாடகா, கேரளாவில் இருந்து அதிகளவில் வியாபாரிகள் வந்து வாங்கி செல்கிறார்கள். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக நீலகிரி பூண்டுக்கான மவுசு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் பூண்டில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியே. இதன் காரணமாக ஓட்டல்கள், வீடுகளில் மக்கள் அதிகளில் பூண்டு பயன்பாட்டிற்கு மாறியுள்ளனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கொரோனா பாதிப்பால் சர்வதேச விமான போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து உள்ளிட்டவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வெளி நாடுகளில் இருந்து பொருட்கள் வருவது தடை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக சீனாவில் இருந்து தான் அதிகளவில் இந்தியாவிற்கு பூண்டு வரும். ஆனால் லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதல் காரணமாக மக்கள் சீன பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக சீன பூண்டு வருகை வெகுவாக குறைந்துள்ளது.
இதையடுத்து நீலகிரி பூண்டுக்கு தற்போது மவுசு அதிகரித்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டது என்பதால் மக்கள் அனைவரும் தங்கள் அன்றாட உணவுகளில் பூண்டை சேர்த்து கொண்டுள்ளனர். குறிப்பாக வடமாநிலங்களில் பூண்டு பயன்பாடு அதிகரித்துள்ளதால் அங்குள்ள வியாபாரிகள் இங்கு வந்து பூண்டுகளை அதிகளவில் வாங்கி செல்கிறார்கள்.
கடந்த 2 மாதத்திற்கும் மேலாக ஒரு கிலோ பூண்டு ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனையாகிறது. விலை உயர்ந்து காணப்பட்டாலும் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர் என்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரிக்கு மலைப்பாதை செல்கிறது. இந்த மலைப்பாதையில் தினமும் பஸ்கள், கார்கள், சரக்கு வாகனங்கள் உள்பட 200-க்கும் அதிகமான வாகனங்கள் சென்று வருகிறது.
இந்த சாலையை ஒட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இங்கு யானை, சிறுத்தை, மான்கள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன.
இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையை கடந்து வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று காலை கோத்தகிரி- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வாகனங்கள் வழக்கம் போல் சென்று கொண்டிருந்தன.
அப்போது 1-வது கொண்டை ஊசி வளைவு அருகே 3 காட்டு யானைகள் அங்கும் இங்கும் சாலையில் சுற்றி திரிந்தன. மேலும் சாலையோரம் நின்றிருந்த மரக்கிளைகளை ஒடித்து தின்று அட்டகாசத்தில் ஈடுபட்டன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து வாகனத்தை நிறுத்தி விட்டனர்.
யானைகள் சாலையை வழி மறித்து நின்றதால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால் கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து வாகனங்களில் இருந்தவர்கள் யானைகளை தங்களது செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளங்களிலும் பரப்பினர்.
பின்னர் ஒரு வழியாக 2 மணி நேரத்திற்கு பிறகு 3 யானைகளும் சாலையில் இருந்து அடர்ந்த வனப்பகுதிக்கு சென்று விட்டன.
அதன்பின்னரே வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு விட்டு தங்களது வாகனங்களை இயக்கி சென்றனர். யானைகள் சாலையை வழிமறித்து நின்றதால் அங்கு 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் எடக்காடு பகுதியில் மஞ்சூர் சப்-இன்ஸ்பெக்டர் தனபால் தலைமையிலான போலீசார் சம்பவத்தன்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக கார் ஒன்று வந்தது. அந்த காரில் 2 பேர் இருந்தனர். இதையடுத்து சந்தேகத்தின் பேரில் போலீசார் அந்த காரை மறித்து அதில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை திறந்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அதில் கட்டுக்கட்டாக கள்ளநோட்டுகள் இருந்தன. அவை அனைத்தும் ரூ.100, ரூ.200 நோட்டுகள் ஆகும். இதையடுத்து போலீசார் அதில் இருந்த 12 ஆயிரத்து 750 ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து காரில் இருந்த 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் எடக்காடு பாதகண்டி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி(53), அவரது மகன் மகேந்திரன் என்பதும் தெரியவந்தது.
இவர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து கள்ள நோட்டுகளை வாங்கி வந்து மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் புழக்கத்தில் விட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அவர்கள் 2 பேரும் தாங்கள் வேலை பார்த்தற்கு சம்பளமாக இந்த பணத்தை தந்ததாக போலீசாரிடம் தொடர்ந்து கூறி வருகிறார்கள். இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
இருப்பினும் போலீசார் இவர்கள் அருகே உள்ள கர்நாடகா, கேரள மாநிலங்களில் இருந்து கள்ள நோட்டுகளை வாங்கி வந்து இங்கு புழக்கத்தில் விட்டிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகித்து அந்த கோணத்திலும் விசாரிக்கின்றனர்.
மேலும் இவர்கள் மஞ்சூர் பகுதியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது போல் மாவட்டத்தின் வேறு எந்த பகுதிகளிலும் புழக்கத்தில் விட்டுள்ளனரா? என்பது குறித்தும், இவர்களுக்கு வேறு யாராவது உதவி உள்ளனரா? என்ற கோணத்திலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து தந்தை, மகனிடம் நடத்தப்படும் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமாக நீலகிரி உள்ளது. இங்கு அரிய வகை தாவரங்கள், மரங்கள், மூலிகை செடிகள் வளருகிறது. குறிப்பாக நீலகிரி, கொடைக்கானல் மலைப்பிரதேசங்களில் குறிஞ்சி செடிகள் உள்ளது. ஆசிய நாடுகளில் 200 வகையான குறிஞ்சி செடிகள் இருக்கிறது. இதில் 150 வகையான செடிகள் இந்தியாவில் மட்டுமே உள்ளது. அதுவும் குறிப்பாக நீலகிரி, கொடைக்கானல் மலைகளில் 30-க்கும் மேற்பட்ட குறிஞ்சி செடிகள் உள்ளது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர், நடுவட்டம், டி.ஆர். பஜார் மலைப்பாதையில் நீலநிற குறிஞ்சி மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. ‘ஸ்ட்ரோபைலைன்தீஸ் குந்தியானா’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட இந்த குறிஞ்சி மலர்களின் இதழ்கள் ஊதா நிறத்திலும், உள்பகுதி வெள்ளை நிறத்திலும் காணப்படுகின்றன.
பொதுவாக இது நீலக்குறிஞ்சி என அழைக்கப்படுகிறது. மலைப்பாங்கான பள்ளத்தாக்குகள் மற்றும் பாறை இடுக்குகளில் நீல நிற குறிஞ்சி மலர்கள் பூத்துக்குலுங்குவதை பொதுமக்கள் கண்டு ரசித்து செல்கின்றனர். இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:- கடல் மட்டத்தில் இருந்து 1,300 முதல் 2,400 மீட்டர் உயரத்தில் குறிஞ்சி செடிகள் வளருகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் தன்மை உடையவை. குறிஞ்சி மலரில் ஏராளமான வகைகள் உள்ளது. 3, 7, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் செடிகளும் உள்ளது. குறிஞ்சி மலர்கள் பூக்கும் காலத்தை கொண்டு நீலகிரி மலைப்பிரதேசத்தில் வசிக்கும் ஆதிவாசி மக்கள் தங்களது வயதை கணித்து உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் முதுமலை சீகூர் வனப்பகுதியில் சிறுத்தை, புலி, மான், காட்டெருமை, யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் மசினகுடியை சேர்ந்த சஜின் (வயது 26) என்பவர் சம்பவத்தன்று இரவு ஜீப்பில் தனது நண்பருடன் சென்றார்.
வனப்பகுதியில் வந்தபோது சுஜின் அங்கு வந்து யானை மற்றும் வனவிலங்குகளின் கண்களில் ஜிப்பின் முகப்பு விளக்கில் ஒளியை பாய்ச்சினார். இதில் யானை மற்றும் வனவிலங்குகள் மிரண்டு அங்குமிங்கும் ஓடின. இதனை உடன் சென்ற நண்பர் வீடியோ எடுத்தார். வனவிலங்குகள் பதறி ஓட்டம் பிடித்த காட்சிகளை வாட்ஸ் அப் மூலம் தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டார். பின்னர் இது சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்ததும் சுஜின் மற்றும் அவரது நண்பரை கைது செய்தனர். ஹெட்லைட்டை பயன்படுத்தி யானை உள்ளிட்ட வனவிலங்குகளை மிரட்டிய சுஜினுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அவரது நண்பர் கடுமையான எச்சரிக்கைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார்.






