search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    பந்தலூர் அருகே வேளாண் பொருட்கள் பதப்படுத்தும் மையத்தில் 15 கணினிகள் திருட்டு

    பந்தலூர் அருகே அய்யன்கொல்லியில் உள்ள வேளாண் பதப்படுத்தும் மையத்தில் 15 கணினிகள் திருட்டு போனது.
    பந்தலூர்:

    பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லியில் வேளாண் விற்பனை துறைக்குச் சொந்தமான விளை பொருட்கள் பதப்படுத்தும் நிலையம் உள்ளது. இங்கு விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களை கொள்முதல் செய்து வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு போதிய வருவாய் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வேளாண் பொருட்கள் பதப்படுத்தும் நிலையத்தின் இரும்பு கதவுகளின் பூட்டுகள் உடைத்து கதவு திறந்து கிடந்தது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதைதொடர்ந்து சேரம்பாடி போலீஸ் நிலையத்தில் வேளாண் விற்பனை அலுவலர்கள் புகார் செய்தனர். தகவலறிந்த தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு அமீர் அகமது, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு, சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது பதப்படுத்தும் நிலையத்துக்குள் இருந்த 15 கணினிகள் மற்றும் பிரிண்டர், வாழைத் தார்களை வெட்டும் எந்திரம் உள்பட சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போனது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து ஊட்டியிலிருந்து போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. பதப்படுத்தும் நிலையத்தில் இருந்து சிறிது தூரம் போலீஸ் மோப்ப நாய் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்க வில்லை.

    மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சேரம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    Next Story
    ×