என் மலர்
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. தொடர்ந்து வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. தற்போது ஊட்டி, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர் மழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. குறிப்பாக எமரால்டு, அப்பர்பவானி, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிவு அதிகமாக காணப்பட்டது. கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் போதிய அளவு மழை பெய்யாததால் அணைகளில் நீர்மட்டம் குறைந்து இருந்தது. ஆகஸ்டு மற்றும் நடப்பு மாதத்தில் தீவிரமாக கனமழை பெய்ததால் அணைகளில் நீர்மட்டம் கிடு கிடு என உயர்ந்து வருகிறது.
தொடர் மழையால் வனப்பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து கால்வாய்களில் ஓடுகிறது. மலைச் சரிவுகளில் புதியதாக நீர்வீழ்ச்சிகள் தோன்றி உள்ளன. விவசாய விளை நிலங்களை ஒட்டியுள்ள கால்வாய்களில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. குந்தா, கெத்தை, எமரால்டு, அவலாஞ்சி, அப்பர்பவானி, பைக்காரா, காமராஜ் சாகர் உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் போல் காட்சி அளிக்கிறது.
காமராஜ் சாகர் அணையின் மொத்த கொள்ளளவான 49 அடியில் 42 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. 100 அடி கொள்ளளவு கொண்ட பைக்காரா அணையில் 95 அடியாக நீர்மட்டம் உயர்ந்து இருக்கிறது. எமரால்டு அணையின் மொத்த கொள்ளளவான 184 அடியில் 170 அடிக்கு தண்ணீர் உள்ளது. 89 அடி கொள்ளளவு கொண்ட குந்தா அணையில் 86 அடியாக நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. அதே போல் மற்ற அணைகளிலும் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து காணப்படுகிறது. இதனால் பச்சை பசேலென காணப்படும் மலைகளுக்கு நடுவே அணைகள் ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
இந்த நிலையில் ஊட்டியில் நேற்று மழை பெய்யவில்லை. காலையில் இருந்தே வெயில் அடித்தது. இதற்கிடையே ஊட்டி மஞ்சனக்கொரை பகுதியில் சாலையோரத்தில் உள்ள மண் ஈரப்பதமாக இருந்ததால் பலத்த காற்று வீசியபோது, மரம் ஒன்று வேருடன் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.
இதனால் பணி நிமித்தமாக சென்றவர்கள் தோட்டத்தின் வழியாக நடந்து சென்றனர். இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் விழுந்த மரத்தின் அடியில் இருந்த குறுகிய இடைவெளியில் வாகனத்தை கொண்டு சென்று கடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தை மின் வாள் மூலம் துண்டு, துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினர். நீலகிரி மாவட்டத்தில் மழை குறைந்து உள்ளது. நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம் வருமாறு:- ஊட்டி-1, நடுவட்டம்-3, குந்தா-1, அவலாஞ்சி-12, எமரால்டு-3, அப்பர்பவானி-11, பந்தலூர்-8 உள்பட மொத்தம் 76 மழை பதிவாகியது. இதன் சராசரி 2.62 ஆகும்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் சாரல் மழை பெய்தது. மேலும் சூறாவளி காற்று வீசியதால் இரவு 10 மணியளவில் பிங்கர்போஸ்ட் வி.சி. காலனி பகுதியில் ராட்சத மரம் வேரோடு சாய்ந்து அருகில் இருந்த வீடுகள் மீது விழுந்தது. அப்போது வீடுகளில் இருந்த மதியழகன்(வயது 48), அவரது மகன் சஞ்சய்(18) மற்றும் பிரசாந்த்(23) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராட்சத மரம் விழுந்ததில் 3 வீடுகளும் முழுமையாக சேதமடைந்தன. மேலும் தைலம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட வந்த தற்காலிக ஷெட் சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் தலைகுந்தா மற்றும் சூட்டிங்மட்டம் பகுதியில் மரங்கள் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மின் வாள் மூலம் மரத்தை துண்டு, துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது. சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சூட்டிங்மட்டம் முன்பு சாலையோரத்தில் போடப்பட்டு இருந்த பெட்டி கடை தூக்கி வீசப்பட்டு கிடந்தது.
ஊட்டி-மஞ்சூர் சாலையில் லவ்டேல் பகுதியில் மரக்கிளை முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்தது. ஊட்டி அருகே தலைகுந்தா பகுதியில் உயர் மின் அழுத்த கோபுரம் மீது மரம் சாய்ந்து விழுந்தது. பின்னர் தீயணைப்பு வீரர்கள் மின் இணைப்பை துண்டித்து, மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். ஊட்டியில் நேற்று சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் கடுங்குளிர் நிலவியது. மழையில் நனையாமல் இருக்க பொதுமக்கள் குடைகளை பிடித்தபடி வீதிகளில் சென்றதையும், குளிரை போக்க கம்பிளி ஆடைகளை அணிந்து இருந்ததையும் காண முடிந்தது.
கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் சூறாவளி காற்றும் வீசுகிறது. இதனால் ஏராளமான இடங்களில் மின்கம்பிகள் மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. இதன் காரணமாக நேற்று முன்தினம் கூடலூர், பந்தலூர், ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு 9 மணி வரை மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் கூடலூரில் விடிய, விடிய சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. நேற்று கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தெய்வமலை, 27-வது மைல், நடுவட்டம், பைக்காரா உள்பட பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தது. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதேபோன்று கூடலூரில் இருந்து பெரியசோலைக்கு செல்லும் சாலையில் பார்வுட் என்ற இடத்தில் மரங்கள் சாய்ந்து விழுந்தது. இதனால் கூடலூர்-ஓவேலி இடையே காலை 8.30 முதல் 9.30 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மரங்களை வெட்டி அகற்றினர்.
மேலும் கூடலூரில் இருந்து கேரளா செல்லும் சாலையில் உள்ள கீழ்நாடுகாணி என்ற இடத்தில் மரம் சாய்ந்து விழுந்தது. உடனே தேவாலா போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் நேரில் சென்று மரத்தை அகற்றி, பாதிக்கப்பட்டு இருந்த போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். தொடர்ந்து கூடலுர் அருகே புளியாம்பாரா மற்றும் பந்தலூர் அருகே அய்யன்கொல்லி அருகே காரக்கொல்லி, கோட்டப்பாடி, கரியசோலை உள்ளிட்ட இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தது. மேலும் அந்த வழியாக செல்லும் மின்கம்பிகளும் அறுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு மின்வாரிய மற்றும் உள்ளாட்சி துறை அலுவலர்கள் மரங்களை வெட்டி அகற்றி சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சூறாவளி காற்றும், பலத்த மழையும் காணப்படுவதால் மின்வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கடுங்குளிர் நிலவுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். மேலும் அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குந்தா, கெத்தை, எமரால்டு, அப்பர் பவானி, காமராஜ் சாகர் உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் அணைகள் ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுகிறது. அடுத்து செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசன் நடைபெறுகிறது. இந்த சீசன் காலங்களில் நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது. மேலும் சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. இதன் காரணமாக கோடை சீசன் களையிழந்தது.
இந்த நிலையில் தற்போது 2-வது சீசன் நடைபெற்று வருகிறது. மேலும் இ-பாஸ் பெற்று சுற்றுலா பயணிகள் வர அனுமதிக்கப்படுகின்றனர். இது தவிர தோட்டக்கலை பூங்காக்கள் திறக்கப்பட்டு உள்ளன. எனினும் கோத்தகிரியில் உள்ள நேரு பூங்கா மட்டும் திறக்கப்படவில்லை. கோத்தகிரியில் கேத்தரின் நீர்வீழ்ச்சி, கோடநாடு காட்சி முனை, ஜான் சல்லீவன் நினைவகம் மற்றும் பூங்கா, லாங்வுட் சோலை, ரங்கசாமி மலைச்சிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் அமைந்து உள்ளன. எனினும் முக்கியமான சுற்றுலா தலமாக கோத்தகிரி நேரு பூங்கா விளங்கி வருகிறது. இந்த பூங்கா கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் காமராஜர் சதுக்கம் பகுதியில் அமைந்துள்ளது.
கோத்தகிரி பேரூராட்சிக்கு சொந்தமான சுமார் 65 சென்ட் நிலப்பரப்பில் பல்வேறு வண்ண மலர் செடிகள், புல் தரைகள், சிறுவர் விளையாட்டு பூங்கா, ரோஜா தோட்டம் மற்றும் கோத்தர் இன மக்களின் குல தெய்வமான அய்யனோர், அம்மனோர் கோவிலுடன் இந்த பூங்கா அனைவரும் ரசிக்கும் வகையில் அமைந்து உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனையொட்டி கோடை விழா தொடங்கும்போது விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் 2 நாட்கள் தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்த கண்காட்சியை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் பூங்காவுக்கு வருவார்கள்.
உள்ளூர் மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானதாக விளங்கும் நேரு பூங்காவானது ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் வருகை இருப்பதை கருத்தில் கொண்டு கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகத்தால் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாத இறுதியில் நீலகிரியில் சுற்றுலா தலங்கள் அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து கோத்தகிரி நேரு பூங்காவும் மூடப்பட்டது. எனினும் பூங்கா ஊழியர்கள் தொடர்ந்து பூங்காவில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர். கடந்த 1-ந் தேதி முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதால், ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிகளில் உள்ள தோட்டக்கலை பூங்காக்களை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. ஆனால் கோத்தகிரி நேரு பூங்காவை திறப்பதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. எனினும் ஊழியர்கள் தொடர்ந்து பராமரிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் எப்போது வேண்டுமானாலும் திறப்பதற்கு ஏதுவாக தயார் நிலையில் பூங்கா இருக்கிறது.
அங்குள்ள மலர் செடிகளில் பல்வேறு வண்ண மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. மேலும் புல்தரைகள் பச்சை பசேல் என காட்சியளிக்கின்றன. தொடர்ந்து மழையும் பெய்து வருவதால், இயற்கை எழிலில் பூங்கா காட்சியளிக்கிறது. பூங்காவில் மலர்கள் பூத்துக்குலுங்கியும் அதனை ரசிக்க ஆள் இல்லை. சமவெளி பகுதியில் இருந்து கோத்தகிரி வழியாக ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் நேரு பூங்கா திறந்து உள்ளதா? என்று பார்த்துவிட்டு, அது பூட்டி கிடப்பதை கண்டு ஏமாற்றம் அடைந்து திரும்பி செல்கின்றனர். நீலகிரிக்கு இ-பாஸ் பெற்று சுற்றுலா பயணிகள் வர அனுமதித்தும், சுற்றுலா தலங்களை மூடி வைத்து உள்ளனர். எனவே அனைத்து சுற்றுலா தலங்களையும் திறப்பதோடு, கோத்தகிரி நேரு பூங்காவையும் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. எனினும் கடந்த 1-ந் தேதி முதல் பொது போக்குவரத்து நடைபெற்று வருகிறது. மேலும் இ-பாஸ் நடைமுறையும் விலக்கப்பட்டுள்ளது. ஆனால் நீலகிரியில் சுற்றுலா தலங்கள் திறக்கப்படாமல் இருந்தது. பின்னர் பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு 9-ந் தேதி முதல் தோட்டக்கலை பூங்காக்களை திறக்க நீலகிரி மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று வர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்று நீலகிரிக்கு வந்து செல்கின்றனர்.
இருப்பினும் சுற்றுலா பயணிகள் வரத்து மிக குறைவாகவே உள்ளது. இதனால் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்டவை வெறிச்சோடி காணப்படுகிறது. இதற்கிடையில் கடந்த 1 வாரமாக கூடலூர், பந்தலூர், ஊட்டி உள்பட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் கடுங்குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் நடைமுறை, தொடர் மழை உள்ளிட்ட காரணங்களால் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வர போதிய ஆர்வம் காட்டவில்லை. இதனால் தோட்டக்கலை பூங்காக்கள் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதன் காரணமாக பெரிய நிறுவனங்கள் தொடங்கி சிறிய கடைகள் வரை எதிர்பார்த்த வியாபாரம் வியாபாரிகள் இல்லாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஊட்டி என்றாலே பழமை வாய்ந்த தாவரவியல் பூங்கா, படகு குழாம், தொட்டபெட்டா, ரோஜா பூங்கா ஆகியவை சுற்றுலா பயணிகளின் நினைவில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. ஆனால் கடந்த 9-ந் தேதி முதல் நேற்று வரை தாவரவியல் பூங்காவுக்கு சுமார் 1,800 சுற்றுலா பயணிகள் மட்டுமே வந்து சென்றுள்ளனர். இது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற வேண்டும். மேலும் விண்ணப்பிக்கும் பயணிகளுக்கு உடனடியாக இ-பாஸ் வழங்கப்படுகிறது. இருப்பினும் பல்வேறு காரணங்களால் சுற்றுலா பயணிகள் வரத்து மிக குறைவாகவே உள்ளது. தற்போது வரை 1,800 பேர் மட்டுமே பூங்காவை ரசித்துள்ளனர். கடந்த காலங்களை ஒப்பிடும்போது சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது என்றனர்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் கூடலூரில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. நேற்று காலையும் கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தொடர்ந்து இரவு முழுவதும் சாரல் தூறி கொண்டே இருந்ததால் இன்று காலை கடும் குளிர் நிலவியது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியவில்லை.
குறிப்பாக தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுதவிர கூடலூரை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பந்தலூர், தேவாலா மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.
மஞ்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு நேரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. குறிப்பாக காற்று பலமாக வீசியது. தொடர்ந்து இரவு முழுவதும் சூறாவளி காற்று வீசி கொண்டே இருந்தது.
இதனால் பொதுமக்கள் ஏதாவது ஆபத்து ஏற்பட்டு விடுமோ என அச்சம் அடைந்தனர். ஆனாலும் எந்தவித பாதிப்பும் ஏற்படாதது மக்களுக்கு நிம்மதியை கொடுத்தது. இதேபோல் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் இரவு முழுவதும் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. தொடர் மழையால் விவசாயிகள், தேயிலை தோட்ட விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால், மார்க்கெட் பகுதி சேறும், சகதியுமாக உள்ளது. மழை காரணமாக சோலையார் அணை, வாழைத்தோட்டம் ஆறு, கூழாங்கல் ஆறுகளுக்கு தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. இதேபோல் கோவை மாநகர், புறநகர் பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது.
கோவை சிறுவாணி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது. 50 அடி கொண்ட சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 43.2 அடியாக உள்ளது.
நீலகிரி மற்றும் கேரள நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. 100 அடி கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிரம்பியது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 97 அடியாக உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து மின்சார உற்பத்திக்காக 3 ஆயிரம் கன அடி தண்ணீர், 4 மதகுகள் வழியாக 4 ஆயிரத்து 120 கனஅடி தண்ணீர் என மொத்தம் 7 ஆயிரத்து 120 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக பவானி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. ஏற்கனவே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பில்லூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. தற்போது 2-வது முறையாக பில்லூர் அணை மீண்டும் நிரம்பியுள்ளது.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் பி.ஏ.பி.திட்டத்தில் அதிக கொள்ளளவு கொண்ட அணையான பரம்பிக்குளம் அணை தனது முழு கொள்ளளவான 72 கன அடியை எட்டியது. தற்போது அணைக்கு 3 ஆயிரத்து 420 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி தூணக்கடவு அணைக்கு 1050 கன அடி, 3 மதகுகள் வழியாக 2 ஆயிரத்து 370 கன அடி தண்ணீர் அரபி கடலுக்கு வெளியேற்றப்படுகிறது.
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் 2020-ம் ஆண்டில் ஜூலை மாதம் 8-ம் வகுப்பில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்காக ஏழாம் வகுப்பு படிக்கின்ற அல்லது தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேரலாம். 11 முதல் 13 வயது வரை அதாவது 2.7.2008-க்கு முன்னதாகவும் 1.7.2009-க்கு பிறகு பிறந்து இருக்கக்கூடாது. இதற்கான விண்ணப்பத்தினை கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி என்ற பெயரில் பொதுப்பிரிவினர் ரூ.600-ம், எஸ்.சி., எஸ்.டி. இனத்தவர் ரூ.555-க்கும் காசோலை எடுத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பத்துடன் மாதிரி வினாத்தாள்களும் அனுப்பி வைக்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் விரைவு தபாலில் சென்னை டி. என்.பி.எஸ்.சி. அலுவலகத்துக்கு வருகிற 30-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். பின்னர் விண்ணப்பதாரர்களுக்கு வருகிற டிசம்பர் மாதம் 1, 2-ந் தேதி நுழைவுத் தேர்வுகள் நடைபெறும். பின்னர் 6.4.2021 அன்று வாய்மொழித் தேர்வு நடைபெறும். மேலும் விபரங்களுக்கு www.rimc.org என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்களின் 7-ம் வகுப்பு பயிலும் மற்றும் முடித்த சிறார்கள் எச்சரிக்கைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு வனச்சரக பகுதியில் இம்ப்ரல்லா ஆற்றின் கரையோரம் காட்டு யானை இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி முதுமலை உதவி வனப்பாதுகாவலர்கள் கர்வித் கங்குவார், ஸ்ரீனிவாசன், வனச்சரகர் ராஜேந்திரன் (பொறுப்பு) உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது சுமார் 15 வயதான பெண் காட்டு யானை தண்ணீர் குடிப்பதற்காக ஆற்றுக்கு வந்தபோது வழுக்கி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் இந்த யானை இறந்து 3 நாட்கள் இருக்கும் என்றும், யானையின் உடலை புலி கடித்து சாப்பிட்ட காயங்கள் இருந்ததாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கால்நடை டாக்டர்கள் ராஜமுரளி, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் யானையின் உடல் பாகங்களை மற்ற வன விலங்குகள் சாப்பிடும் வகையில் வனத்துறையினர் அப்பகுதியில் வீசினர்.
இதேபோல் பந்தலூர் தாலுகா சேரம்பாடி அரசு தேயிலைத் தோட்டம் ரேஞ்ச் எண்-1 பகுதியில் சுமார் 4 வயதான பெண் சிறுத்தைப்புலி இறந்து கிடப்பதாக சேரம்பாடி வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி கூடலூர் கோட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன், உதவி வனப்பாதுகாவலர் விஜயன், வனச்சரகர் சின்னத்தம்பி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இதில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்த சிறுத்தைப்புலி அழுகிய நிலையில் கிடந்தது. ஆனால் என்ன காரணத்திற்காக சிறுத்தைப்புலி இறந்தது என தெரியவில்லை.
இதைத்தொடர்ந்து கால்நடை டாக்டர்கள் பாரத் ஜோதி, பாலாஜி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு சிறுத்தைப்புலியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதன் அறிக்கை கிடைத்த பின்னரே சிறுத்தைப்புலி இறப்புக்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இந்த இருசம்பவங்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.






