என் மலர்tooltip icon

    நீலகிரி

    முதுமலை எல்லையோர வனப்பகுதியில் மான் இறைச்சி வைத்திருந்த 3 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    கூடலூர்:

    கூடலூர்-முதுமலை எல்லையோர வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது போஸ்பாரா என்ற இடத்தில் சந்தேகப்படும்படியாக 3 பேர் நடந்து வந்தனர். அவர்களை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அதில் 2 கிலோ இறைச்சி இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து விசாரித்தபோது, இறந்து கிடந்த கடமானின் உடலில் இருந்து இறைச்சியை வெட்டி எடுத்து வந்தது தெரியவந்தது. பின்னர் அந்த இறைச்சியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போஸ்பாராவை சேர்ந்த ரவி(வயது 40), மது(30), சங்கரன்(63) ஆகிய 3 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.
    நீலகிரியில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பூங்காக்களுக்கு சுற்றுலா பயணிகள் 7 ஆயிரத்து 800 பேர் வருகை தந்துள்ளனர்.
    ஊட்டி, 

    கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி முதல் மூடப்பட்டன. 5 மாதங்களுக்கு மேலாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் அரசுக்கு ரூ.20 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டது. பின்னர் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அரசு அனுமதியின் பேரில் நீலகிரியில் தோட்டக்கலை பூங்காக்கள் மட்டும் கடந்த 9-ந் தேதி முதல் திறக்கப்பட்டது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, மரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, கல்லார் தோட்டக்கலை பூங்கா ஆகிய பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன.

    வெளி மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு சுற்றுலா வருவதற்காக தினமும் 100 இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இ-பாஸ் விண்ணப்பிக்கும்போது எத்தனை நாள் தங்குகின்றனர் என்ற விவரத்தை உள்ளீடு செய்து விண்ணப்பிக்க வேண்டும். இ-பாசை காண்பித்து தங்கும் விடுதிகள், காட்டேஜ்களில் தங்கி கொள்ளலாம். இந்த நிலையில் நீலகிரியில் உள்ள பூங்காக்களில் சுற்றுலா பயணிகள் ஒரு மணிநேரம் மட்டும் சுற்றி பார்க்க அனுமதிக்கப்படுகிறது. இதை மீறினால் நுழைவு கட்டணம் அபராதமாக விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும்அறிவுறுத்தப்படுகிறது.

    இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் பூங்காக்கள் திறக்கப்பட்டாலும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்த அளவே காணப்படுகிறது. இதற்கு காரணம் தொடர்ந்து இ-பாஸ் நடைமுறை இருப்பதே ஆகும். தற்போது வெளி மாவட்டங்களில் இருந்து பொதுமக்களும், அரசு அலுவலர்களும் விடுமுறை நாட்களில் தங்களது குடும்பத்தினருடன் ஊட்டிக்கு வந்து செல்கின்றனர். ஊரடங்கு தளர்வுக்கு பிறகு அதிகபட்சமாக ஒரே நாளில் சுற்றுலா பயணிகள் 803 பேர் பூங்காக்களை கண்டு ரசித்து உள்ளனர். கடந்த 18 நாட்களில் பூங்காக்களுக்கு 7,800 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். ஊரடங்கால் வீடுகளில் முடங்கி இருந்தவர்கள், தளர்வுக்கு பிறகு மன அழுத்தத்தை போக்கவும், இயற்கை அழகை கண்டு ரசிக்கவும் ஊட்டிக்கு வருவதாக சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர். ஊட்டி தாவரவியல் பூங்காவில் 7 ஆயிரம் பூந்தொட்டிகள் மலர் மாடத்தில் காட்சிக்காக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதோடு, புகைப்படம் எடுத்தும், குடும்பத்தினருடன் செல்பி எடுத்தும் மகிழ்கிறார்கள். பூங்காவில் தொடர் மழையால் சில மலர்கள் அழுகி வருகின்றன. அழுகிய மலர்களை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக வேறு பூந்தொட்டிகளை பணியாளர்கள் அடுக்கி வைக்கின்றனர். பூங்கா நுழைவு வாயிலில் மேரிகோல்டு மலர்கள் பூத்து குலுங்கி வரவேற்கிறது. அந்த அலங்காரம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து உள்ளது.
    பயோமெட்ரிக் எந்திரம் செயல்படாததால் மண்வயல் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டத்தில் தொலைத்தொடர்பு சேவைகள் சரிவர நடைபெறுவதில்லை. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் எந்திரங்கள் மூலம் கை விரல் ரேகை பதிவு செய்யப்பட்டு பொருட்கள் வழங்கும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்காமல் உள்ளனர். இதனிடையே நடப்பு மாதம் முடிவடைய இன்னும் 3 நாட்களே உள்ளது. இதனால் இம்மாதம் பொருட்கள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற கவலையில் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.குறிப்பாக கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் தொலைத்தொடர்பு அலைவரிசை சேவை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாத தொடக்கத்தில் இருந்து இதுவரை பொது மக்கள் தினமும் ரேஷன் கடைகளுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

    கூடலூர் அருகே மண் வயல் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் நேற்று அதிக அளவு வந்து இருந்தனர். அப்போது அலைவரிசை சேவை சரிவர கிடைக்காததால் பயோமெட்ரிக் எந்திரம் செயல்பட வில்லை. காலை 8.30 மணிக்கு ரேஷன் கடை திறக்கப்பட்ட நிலையில் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் பயோமெட்ரிக் எந்திரத்தில் தங்களது விரல் ரேகையை பதிவு செய்ய முயன்றனர். ஆனால் அலைவரிசை சிக்னல் சரியாக கிடைக்காததால் பதிவு செய்ய முடியவில்லை. இதனால் பல மணி நேரம் ரேஷன் கடை முன்பு காத்து கிடந்தனர். பொருட்கள் வாங்க முடியாமல் தவித்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், அன்றாடப் பணிகளை விட்டு ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வருகிறோம். இந்த நிலையில் தற்போது பயோ மெட்ரிக் முறை உள்ளதால், அலைவரிசை சேவை கிடைக்க வில்லை என்று அலைக்கலைக்கின்றனர். இதனால் பொருட்கள் வாங்க முடியவில்லை. இதனால் பழைய நடைமுறையில் பொருட்கள் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் இம்மாதம் வழங்க வேண்டிய பொருட்களை அடுத்த மாதமும் பெற்றுக்கொள்ள கால அவகாசம் வழங்க வேண்டும் என்றனர். இதேபோல் கூடலூர் பகுதியில் உள்ள ஆதிவாசி மக்களும் பொருட்கள் வாங்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.
    நீலகிரியில் வடகிழக்கு பருவமழையின் போது இயற்கை இடர்பாடுகள் குறித்து தகவல் தெரிவிக்க 2,529 முதல்நிலை பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்று கண்காணிப்பு அதிகாரி தெரிவித்தார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் இன்கோசர்வ் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தார். கூட்டத்துக்கு இன்கோசர்வ் முதன்மை செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அதிகாரியுமான சுப்ரியா சாஹூ தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காரணமாக பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை அலுவலர்கள் முன்கூட்டியே கண்டறிந்து, அதற்கேற்றவாறு அப்பகுதிகளில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் திட்டமிட்டு முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகம் மூலம் துறை சார்ந்த அலுவலர்கள் அடங்கிய 42 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுக்கள் மழைநீர் செல்லக்கூடிய தாழ்வான பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு 456 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. நிவாரண முகாம்களில் கழிப்பறை, குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை அலுவலர்கள் முன்கூட்டியே ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும்.

    நீலகிரியில் இயற்கை இடர்பாடுகள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க முதல்நிலை பொறுப்பாளர்கள் 2, 529 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அபாயகரமான இடங்களாக 283 பகுதிகள் கண்டறியப்பட்டு உள்ளது. அப்பகுதிகளை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அபாயகரமான மரங்கள் இருந்தாலோ அல்லது இடியும் நிலையில் உள்ள கட்டிடங்கள் ஏதேனும் இருந்தாலோ மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இயற்கை பேரிடர் ஏற்படும்போது பொதுமக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒத்திகை நடத்த வேண்டும்.

    வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் அவசர தேவை ஏற்படும் பட்சத்தில் கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து கொரோனா தொற்று நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கண்காணிப்பு அதிகாரி பேசும்போது, கொரோனா தொற்று கிராமப் பகுதிகளில் அதிகரித்து வருகிறது. அரசு தெரிவித்த வழிமுறைகளை அலுவலர்கள் தொடர்ந்து பின்பற்றி தடுப்பு பணியில் ஈடுபட வேண்டும். வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களின் விவரங்களை முழுமையாக சேகரித்து, அவர்களுடன் தொடர்புடைய முதல் நிலை தொடர்பாளர்களை கண்டறிந்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் என்றார். இதில் சப்-கலெக்டர்கள் ரஞ்சித்சிங், மோனிகா, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பழனிச்சாமி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து குன்னூர், பந்தலூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 45 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ஊட்டி:

    நாடு முழுவதும் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாக்களை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக குன்னூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், சாலை மறியல் போராட்டம் நடந்தது. குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், விவ சாயிகள் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விவசாயிகளின் எதிர்காலத்தை சீரழிக்கும் வகையில் 3 மசோதாக்கள் நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது என்று கோஷங்களை எழுப்பினார்கள். இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட மாநில குழு உறுப்பினர் பத்ரி உள்பட 24 பேரை போலீசார் கைது செய்தனர். இதுபோன்று கோத்தகிரி, கூடலூரில் போராட்டம் நடந்தது.

    இதுபோல் பந்தலூர் அருகே அய்யன்கொல்லியில் வேளாண் மசோதாவின் நகல்களை எரித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் யோகண்ணன் தலைமையில் ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி மணிகண்டன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ராஜன் உள்பட 21 பேரை சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு மற்றும் போலீசார் கைது செய்தனர். இதேபோல் கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் விவசாயிகள் சங்க நிர்வாகி வாசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    கோத்தகிரியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்ட நிர்வாகத்தில் சார்பில் பல்வேறு துறை அதிகாரிகள், கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் கோத்தகிரி போலீஸ் நிலையத்தை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ஜான் நேற்று காலை கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளுக்கு சென்றார். அங்கு உரிய சமூக இடைவெளி கோடுகள் அமைக்கப்பட்டுள்ளதா எனவும், கடைகளுக்கு முன் கிருமிநாசினி மருந்து மற்றும் கைகழுவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா, வியாபாரிகள் உரிய வகையில் முகக் கவசங்கள் அணிந்து உள்ளார்களா என ஆய்வு செய்தார்.

    மேலும் ஒவ்வொரு கடைகளாக சென்று கொரோனா நோய் தொற்று குறித்தும், நோய்த்தொற்று பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதுமட்டுமின்றி முகக்கவசங்களை அணியாமல் இருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தார்.
    நீலகிரி மாவட்டம் குன்னூர் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு நீலகிரி கூட்டுறவு நிறுவனம் சார்பில் அம்மா நகரும் ரேசன் கடையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி அம்மா நகரும் ரேசன் கடையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு நீலகிரி கூட்டுறவு நிறுவனம் சார்பில் அம்மா நகரும் ரேசன் கடையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி அம்மா நகரும் ரேசன் கடையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் ரேசன் அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மாநிலம் முழுவதும் 3501 அம்மா நகரும் ரேஷன் கடைகள் ரூ.9, 66 கோடி மதிப்பீட்டில் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் 11 அம்மா நகரும் ரேசன் கடைகள் செயல்படுத்தப்பட உள்ளது.குன்னூர் தாலுகாவில் செயல்பட்டு வரும் பாரத் நகர் ரேசன் கடையை தாய் கடையாக கொண்டு பாரஸ்ட்டேல் அம்மா நகரும் ரேசன் கடை தொடங்கி வைக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் பாரஸ்ட்டேல், சண்முகாநகர் பகுதிகளை சேர்ந்த 99 ரேசன் அட்டைதாரர்கள் பயனடைவார்கள். இந்த ரேசன் கடையில் மாதத்தில் முதல் சனிக்கிழமை மற்றும் 3-வது சனிக்கிழமைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது.இதர பகுதிகளில் மேலும் 10 அம்மா நகரும் ரேசன் கடைகள் தொடங்கப்பட்டு, ரேசன் அட்டை வைத்திருக்கும் ரேசன் அட்டைதாரர்கள் வசிக்கும் இடங்களுக்கு சென்று அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும். குறிப்பிட்ட நாட்களில் அத்தியாவசிய பொருட்கள் பெற இயலாத அட்டைதாரர்கள் அம்மா நகரும் ரேசன் கடை உடன் இணைக்கப்பட்ட தாய் கடையில் அத்தியாவசிய பொருட்களை பெற்று பயனடையலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் சப்-கலெக்டர்கள் ரஞ்சித்சிங், மோனிகா, சாந்தி ராமு எம்.எல்.ஏ., பொது வினியோக திட்ட துணை பதிவாளர் கணபதி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வினோத் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    ஆனைக்கட்டி அருகே காட்டுயானை தாக்கி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    துடியலூர்:

    கோவையில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஆனைக்கட்டி வனப்பகுதி உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் வாழ்ந்து வருகின்றன. இவை உணவு மற்றும் தண்ணீர் தேடி மலையடிவார பகுதியில் உள்ள ஊர்களுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    இந்த நிலையில் கேரள மாநிலம் மன்னார்காடு பகுதியை சேர்ந்தவர் மனோஜ் என்ற ஞானப்பிரகாசம்(வயது 31). டிராக்டர் டிரைவர். இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் அருண்குமார்(32) என்பவருடன் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் ஆனைக்கட்டி அருகே போப்னாரி பகுதியில் விவசாய பணிகளை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு திரும்பினார். மோட்டார் சைக்கிளை அருண்குமார் ஓட்டினார். மூணுகுட்டை கருப்பராயன் கோவில் அருகே புதர்மறைவில் நின்ற காட்டுயானை திடீரென மோட்டார் சைக்கிளை வழிமறித்தது.

    இதை சற்றும் எதிர்பாராத அருண்குமார், மோட்டார் சைக் கிளை நிறுத்தாமல் தொடர் ந்து ஓட்டினார். எனினும் பின்னால் அமர்ந்து இருந்த ஞானப்பிரகாசத்தை காட்டுயானை துதிக்கையால் தாக்கியது. இதனால் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் மட்டும் கீழே விழுந்தார். பின்னர் அவரை காட்டுயானை தந்தத்தால் குத்தி காலால் மிதித்தது. இதில் உடல் நசுங்கி படுகாயம் அடைந்த ஞானப்பிரகாசம் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து, காட்டுயானையை விரட்டினர். பின்னர் ஞானப்பிரகாசத்தை மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதை அறிந்த பெரியநாயக்கன்பாளையம் வன அதிகாரி சுரேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் அருண்குமார் நூலிழையில் உயிர் தப்பினார்.
    தேயிலைத்தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் தொழில் வரி பிடித்தம் செய்வதை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளன.
    கூடலூர்:

    ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப்., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளதாவது:-

    தொழிலாளர்களின் தின ஊதியத்தில் தொழில் வரி பிடித்தம் செய்ய வேண்டும் என நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம் தோட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு தொழில் வரி பிடித்தம் செய்து நகராட்சி நிர்வாகத்திடம் செலுத்தாத தேயிலைத் தோட்டங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. இதனால் ஒரு சில தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களின் எதிர்ப்பையும் மீறி நகராட்சிக்கு தொழில் வரி பிடித்தம் செய்து அனுப்பியுள்ளது. தின மற்றும் குறைந்த பட்ச ஊதியம் சட்டத்தின் கீழ் ஊதியம் பெறும் தொழிலாளர்களிடம் தொழில் வரி பிடித்தம் செய்து சம்பளம் வழங்குவது தண்டனைக்குரிய குற்றம் என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறி உள்ளது. இச்செயல் தொழிலாளர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகும்.

    எனவே தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த தொகையை திருப்பி செலுத்தவும், எதிர்காலத்தில் தொழில் வரியை குறைந்த பட்ச சட்டப்படி தின ஊதியம் பெரும் தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்ய நிர்ப்பந்திக்க கூடாது என்றும் வலியுறுத்தி விரைவில் போராட்டம் நடத்தப்படும். இதனை சட்டப்படி தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    கோத்தகிரி அருகே ரூ.10 லட்சத்தில் நடைபாதை அமைக்கும் பணியை சாந்தி ராமு எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட கன்னிகா தேவி காலனியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லும் நடைபாதை கடந்த சில மாதங்களாக பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த சாலையை புதுப்பித்து தர வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் பேரூராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று தமிழக சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தடுப்புச்சுவருடன் கூடிய நடைபாதை அமைக்க ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகளுக்கான பூமிபூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சாந்தி ராமு எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    இதில் கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், மேற்பார்வையாளர் சுரேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    வெளி மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு அரசு பஸ்களில் வரும் உள்ளூர் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
    ஊட்டி:

    ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வருவதை தடுக்க இ-பாஸ் நடைமுறை தொடர்கிறது. அதன்படி பிற மாவட்டங்களில் இருந்து தொழில், வியாபாரம், பணி நிமித்தமாக இ-பாஸ் எடுத்து வரலாம். நீலகிரியை சேர்ந்த உள்ளூர் மக்கள் ஆதார் அடையாள அட்டையை காண்பித்து அரசு பஸ்களில் பயணம் மேற்கொள்ளலாம். தினமும் சுற்றுலாவுக்காக 100 இ-பாஸ் வழங்கப்படுகிறது. மாவட்ட எல்லையான பர்லியார் சோதனைச்சாவடியில் நீலகிரிக்கு வருகிறவர்கள் இ-பாஸ் பெற்று வருகிறார்களா, உள்ளூர் மக்கள் ஆதார் அடையாள அட்டையை வைத்து உள்ளார்களா என்று சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே மாவட்டங்களுக்கு இடையே அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருவதால், நீலகிரியில் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் டிரைவர்கள், கண்டக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் என 40-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகி உள்ளது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    இதன் காரணமாக பணிக்கு செல்லும் டிரைவர்கள், கண்டக்டர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். அதனை தொடர்ந்து தொற்று பரவலை தடுக்க நேற்று முன்தினம் முதல் பிற மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு அரசு பஸ்களில் வருகை தரும் உள்ளூர் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இதன்படி காட்டேரி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டு, பயணம் மேற்கொள்ளும் உள்ளூர் பயணிகள் அனைவரிடம் இருந்தும் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்காக சுகாதாரத்துறையினர் அங்கு முகாமிட்டு உள்ளனர். இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் குஞ்சப்பனை சோதனைச்சாவடியிலும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் அரசு பஸ்களில் பயணம் செய்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வில்லை. ஆனால் நீலகிரிக்கு அரசு பஸ்களில் வரும் உள்ளூர் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக மாவட்ட எல்லையில் நீண்ட நேரம் காத்திருப்பதால், பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்என்று கூறினார்.
    வீடுகட்ட இடம் வழங்கக்கோரி கோத்தகிரி தாசில்தாரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி அருகே உள்ள சன்சைன்நகர் ஊர் தலைவர் கோவிந்தராஜ் மற்றும் அம்மன்நகர் ஊர் தலைவர் சுதாகர் ஆகியோர் தலைமையில் அந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று கோத்தகிரி தாசில்தார் கிருஷ்ணமூர்த்தியிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கோத்தகிரி டானிங்டன், கரும்பாலம் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து வந்த சுமார் 160 குடும்பங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், வருவாய்த்துறை சார்பில் அவர்களுக்கு எஸ்.கைகாட்டி கிராமத்திற்கு அருகே உள்ள சன்சைன் நகர் பகுதியில் வீடு கட்டுவதற்காக தலா 1½ சென்ட் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளிகள் அந்த இடத்தில் வீடு கட்டி வாழ்ந்து வருகிறோம்.

    தற்போது குடும்ப நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், போதிய இடவசதி இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறோம். எனவே வீடுகள் இல்லாதவர்களுக்கு சன்சைன் நகர் அருகே உள்ள வருவாய் துறைக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில், வீடு கட்டுவதற்காக நிலத்தை ஒதுக்கி, மாவட்ட நிர்வாகமும் வருவாய் துறையினரும் அனுமதி அளிக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துறை அலுவலருக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் உறுதியளித்தார். ஆனால் அதை ஏற்காத கிராம மக்கள் தாசில்தாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    ×