search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்கள் கொரோனா பரிசோதனைக்காக நீண்ட வரிசையில் காத்திருந்ததை படத்தில் காணலாம்.
    X
    மக்கள் கொரோனா பரிசோதனைக்காக நீண்ட வரிசையில் காத்திருந்ததை படத்தில் காணலாம்.

    நீலகிரிக்கு அரசு பஸ்களில் வரும் உள்ளூர் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை

    வெளி மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு அரசு பஸ்களில் வரும் உள்ளூர் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
    ஊட்டி:

    ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வருவதை தடுக்க இ-பாஸ் நடைமுறை தொடர்கிறது. அதன்படி பிற மாவட்டங்களில் இருந்து தொழில், வியாபாரம், பணி நிமித்தமாக இ-பாஸ் எடுத்து வரலாம். நீலகிரியை சேர்ந்த உள்ளூர் மக்கள் ஆதார் அடையாள அட்டையை காண்பித்து அரசு பஸ்களில் பயணம் மேற்கொள்ளலாம். தினமும் சுற்றுலாவுக்காக 100 இ-பாஸ் வழங்கப்படுகிறது. மாவட்ட எல்லையான பர்லியார் சோதனைச்சாவடியில் நீலகிரிக்கு வருகிறவர்கள் இ-பாஸ் பெற்று வருகிறார்களா, உள்ளூர் மக்கள் ஆதார் அடையாள அட்டையை வைத்து உள்ளார்களா என்று சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே மாவட்டங்களுக்கு இடையே அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருவதால், நீலகிரியில் போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் டிரைவர்கள், கண்டக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் என 40-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகி உள்ளது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    இதன் காரணமாக பணிக்கு செல்லும் டிரைவர்கள், கண்டக்டர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். அதனை தொடர்ந்து தொற்று பரவலை தடுக்க நேற்று முன்தினம் முதல் பிற மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு அரசு பஸ்களில் வருகை தரும் உள்ளூர் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இதன்படி காட்டேரி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டு, பயணம் மேற்கொள்ளும் உள்ளூர் பயணிகள் அனைவரிடம் இருந்தும் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்காக சுகாதாரத்துறையினர் அங்கு முகாமிட்டு உள்ளனர். இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் குஞ்சப்பனை சோதனைச்சாவடியிலும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் அரசு பஸ்களில் பயணம் செய்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வில்லை. ஆனால் நீலகிரிக்கு அரசு பஸ்களில் வரும் உள்ளூர் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக மாவட்ட எல்லையில் நீண்ட நேரம் காத்திருப்பதால், பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்என்று கூறினார்.
    Next Story
    ×