search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கி கணக்குகள் முடக்கம்
    X
    வங்கி கணக்குகள் முடக்கம்

    நீலகிரியில் 458 பேரின் வங்கி கணக்கு முடக்கம்

    பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட நீலகிரியில் 458 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. ரூ.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஊட்டி:

    பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. மூன்று தவணைகளாக ரூ.2, 000 நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படுகிறது. இதற்கிடையே பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் விவசாயிகள் அல்லாத பலர் போலி ஆவணங்கள் மூலம் நிதி உதவி பெற்று மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு மாவட்டங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் பயன் பெற்று வருபவர்கள் சிறு, குறு விவசாயிகளா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில் வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நீலகிரியில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் 48 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள். அவர்களுக்கு நிதி உதவி அவர்கள் அளித்த வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டது. முதல் கட்ட விசாரணையில் பிரதமர் நிதி உதவி திட்டத்தில் 44 பேர் விவசாயிகள் அல்லாதவர்கள் பயன் பெறுவது கண்டறியப்பட்டு, அவர்களது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடத்தியதில் மேலும் 414 பேர் விவசாயிகள் அல்லாதோர் போலி ஆவணங்கள் மூலம் நிதி உதவி பெற்றது தெரியவந்தது. இதையடுத்து 414 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 458 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்த விவரங்கள் தமிழக அரசின் வேளாண்மை துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.

    இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முறைகேடு செய்ததாக 44 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் மேலும் 414 பேர் விவசாயிகள் அல்லாதோர் பயன் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது.

    இதுவரை விவசாயிகள் அல்லாதோர் ரூ.17.68 லட்சம் பயன் பெற்று உள்ளனர். இதில் ரூ.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. சிலர் வங்கி கணக்குகளில் இருந்து பணம் எடுத்து உள்ளனர். விரைவில் மீதமுள்ள ரூ.10 லட்சத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
    Next Story
    ×