search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nilgiris Dams"

    நீலகிரி மாவட்டத்தில் நீர் மின் உற்பத்திக்கு நீராதாரமாக உள்ள அனைத்து அணைகளிலும் பெரிய அளவில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
    மஞ்சூர்:

    நீலகிரியில் குந்தா மற்றும் பைக்காரா நீர் மின் திட்டங்களின் கீழ் 12 நீர் மின் நிலையங்கள் இயங்கி வருகிறது. மாவட்டத்தில் பெரியதும், சிறியதுமாக சுமார் 30க்கும் மேற்பட்ட அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் மூலம் இந்த மின் நிலையங்கள் இயக்கப்படுகிறது.

    இதில் குந்தா மின் நிலையத்தில் 60 மெகாவாட், கெத்தையில் 175 மெகாவாட், பரளியில் 180 மெகாவாட், பில்லூரில் 100 மெகாவாட், அவலாஞ்சியில் 40 மெகாவாட், காட்டுகுப்பையில் 30 மெகாவாட், சிங்காராவில்150 மெகாவாட், பைக்காராவில்59.2 மெகாவாட், பைக்காரா மைக்ரோ மின் நிலையத்தில் 2 மெகாவாட், முக்குருத்தி மைக்ரோ மின் நிலையத்தில் 0.70 மெகாவாட், மாயாரில் 36 மெகாவாட், மரவகண்டியில் 0.75 மெகாவாட் என மொத்தம் 833.65 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

    தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தியில் 10 சதவீதம் மின்சார உற்பத்தி நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர் மின் நிலையங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ‘பீக் அவர்ஸ்’ எனப்படும் மின் தேவை அதிகமாக உள்ள நேரங்களிலும் மற்றும் தமிழகத்தில் அனல் மற்றும் காற்றாலை மின் உற்பத்தியில் பாதிப்புகள் ஏற்படும் போதும் இந்த மின் நிலையங்களில் அதிகளவு மின்சார உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.

    மற்ற நேரங்களில் 12 மின் நிலையங்களிலும் மொத்த உற்பத்தியில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின்சார நிலையங்களில் மின் உற்பத்தி குறித்த அனைத்து நடவடிக்கைகளும் ஈரோட்டில் உள்ள கிரீட் எனப்படும் கட்டுப்பாட்டு அறையின் மூலமாகவே உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகிறது. மின்நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு பின் வெளியேறும் நீரானது அணைகளில் மீண்டும் தேக்கி வைக்கப்படுவதுடன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் குடிநீர் தேவைக்கு பயன்படுகிறது.

    தொடர்ந்து கோவை, ஈரோடு, மாவட்டங்களை உள்ளடக்கிய பவானி பாசனப்படுகை விவசாய, விளைநிலங்களின் நீராதாரமாகவும் உள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகளும் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். பழமையான இந்த அணைகளில் பெரிய அளவிலான பராமரிப்பு பணிகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. பெரும்பாலான அணைகளும் தூர்வாரப்படாமல் உள்ளதால் சேறு, சகதிகள் நிரம்பி காணப்படுகிறது. ஒவ்வொரு அணைகளிலும் அதன் கொள்ளளவில் 50 சதவீதத்திற்கும் மேலாக சேறு, சகதிகள் நிரம்பியுள்ளதால் போதிய அளவு தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது.

    இதுமட்டுமின்றி பழமை காரணமாக பல்வேறு அணைகளும் பழுதடைந்துள்ளது. இதையடுத்து பழமையான அணைகளை பராமரிக்கவும், தூர்வாரும் நடவடிக்கைக்காக உலக வங்கியிடம் நிதியுதவி கோரப்பட்டது. இதை தொடர்ந்து அணைகள் பராமரிப்பு பணிகளுக்காக உலக வங்கி தமிழக மின்வாரியத்திற்கு ரூ.260 கோடி நிதி வழங்கியது. இதில் குறிப்பிட்ட பகுதி நிதியானது நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளின் பராமரிப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீர் மின் உற்பத்திக்கு முக்கிய நீராதாரமாக உள்ள அணைகள் ஆய்வு செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது, உலக வங்கி நிதியுதவியுடன் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 23 அணைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் குந்தா, கெத்தை, முக்குருத்தி, எமரால்டு, போர்த்திமந்து அவலாஞ்சி, கிளன்மார்கன் மற்றும் முக்குருத்தி அணைகளில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் பெரிய அணையாக உள்ள அப்பர்பவானி அணையில் பராமரிப்பு பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. தொடர்ச்சியாக மற்ற அணைகளிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றனர். நீலகிரி மாவட்டத்தில் நீர் மின் உற்பத்திக்கு நீராதாரமாக உள்ள அனைத்து அணைகளிலும் பெரிய அளவில் பராமரிப்பு பணிகள் நடப்பது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.



    ×