என் மலர்tooltip icon

    நீலகிரி

    குன்னூரில் இன்று அதிகாலை காட்டெருமை தாக்கி வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது மேல் அட்டடி. அடர்ந்த வனப்பகுதியான இங்கு சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் வசிக்கின்றன. இதனையொட்டி குடியிருப்புகளும் அதிகம் உள்ளன.

    உணவு மற்றும் குடிநீர் தேடி வனவிலங்குகள் வனத்தைவிட்டு குடியிருப்புக்குள் அவ்வப்போது நுழைந்து விடுகின்றன. குடியிருப்புக்குள் வனவிலங்குகள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில் கீழ் அட்டடிப்பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 26). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இன்று அதிகாலை மேல் அட்டடி பகுதியில் உள்ள ஒரு ஒற்றையடி பாதையில் நடந்து சென்றார். அப்போது புதர்மறையில் இருந்த காட்டெருமை ஆவேசமாக ஓடிவந்து ரஞ்சித்தின் வயிறு மற்றும் தொடை பகுதியில் தாக்கியது. பின்னர் கொம்பில் ரஞ்சித்தை சூழற்றி 20 அடி பள்ளத்தில் வீசியது. இதில் குடல் சரிந்து ரஞ்சித் படுகாயம் அடைந்தார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டு அருகில் சென்று பார்த்தனர். சம்பவ இடத்திலேயே ரஞ்சித் ரத்தவெள்ளத்தில் உயிர் இழந்து கிடந்தார்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் நடந்து வெகுநேரமாகியும் உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ்சோ, வனத்துறையோ சம்பவ இடத்துக்கு வரவில்லை என்று அந்த பகுதிமக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

    முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சாலையோரம் ஓவியங்கள் வரைந்து வனவிலங்குகள் குறித்து சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகிறது. முதுமலை, தெப்பக்காடு, கார்குடி, மசினகுடி, சிங்காரா உள்பட பல வனச்சரகங்கள் உள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் வழியாக ஊட்டிக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதேபோல் கேரள மாநிலத்துக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லும் சாலையாக திகழ்கிறது.

    இதேபோல் கூடலூரில் இருந்து முதுமலை தெப்பக்காடு வழியாக மசினகுடிக்கு சாலை செல்கிறது. இதனால் ஏராளமான சரக்கு லாரிகள், தனியார் மற்றும் சுற்றுலா வாகனங்கள் புலிகள் காப்பகம் வழியாக இயக்கப்படுகிறது.

    மேலும் வனவிலங்குகளும் காப்பகங்கள் வழியாகச் செல்லும் சாலைகளை அடிக்கடி கடந்து செல்வது வழக்கம். இந்த சமயத்தில் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி வனவிலங்குகளுக்கு இடையூறு செய்து வருகின்றனர்.

    இதை தடுக்க வன விலங்குகள் சாலையை கடக்கும் இடங்களில் வனத்துறை சார்பில் எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு பலகைகள் வெயில் மற்றும் மழையில் நனைந்து தெளிவு இல்லாமல் காணப்பட்டது.

    இதேபோல் கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் முதுமலைக்கு சுற்றுலாப்பயணிகள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் தடைகள் விலக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முதுமலை புலிகள் காப்பக சாலைகளில் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    இதையொட்டி பராமரிப்பு இன்றி காணப்பட்ட விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பலகைகளை புதுப்பித்தல் பணியில் வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இது குறித்து முதுமலை புலிகள் காப்பக (வரவேற்பு) வனச்சரகர் விஜயன் கூறும்போது, புலிகள் காப்பகம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலையோரம் அறிவிப்பு, விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பலகைகள் ஏராளமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தொடர்மழை உள்பட பல கால நிலைகளில் ஏற்பட்ட மாற்றத்தினால் விழிப்புணர்வு பலகைகள் தெளிவு இன்றி காணப்பட்டது.

    இதனால் பொதுமக்கள் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வன விலங்குகள் குறித்து ஓவியங்கள் வரையும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
    ஆயுத பூஜையை முன்னிட்டு ஊட்டியில் விற்பனைக்கு கரும்புகள் குவிந்தன. ஒரு கட்டு ரூ.800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    ஊட்டி:

    தமிழகம் முழுவதும் நாளை(ஞாயிற்றுக்கிழமை) ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் அன்றாடம் பயன்படுத்தி வரும் பொருட்கள், வாகனங்கள் போன்றவற்றை கழுவி சுத்தம் செய்வது வழக்கம். அதன் பின்பு சிறப்பு பூஜை செய்து வாகனங்களுக்கு மாலை அணிவிக்கின்றனர். இதில் வாழைக்கன்று, பூக்கள், கரும்பு, மா இலை முக்கியமாக இடம்பெறும். நீலகிரி மாவட்டத்துக்கு ஆயுத பூஜை கொண்டாடுவதற்கு தேவையான கரும்பு, வாழைக்கன்றுகள் போன்றவை சமவெளி பகுதியில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    அதேபோல் நடப்பாண்டிலும் ஆயுத பூஜையை முன்னிட்டு ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு கரும்புகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளது. சேலம் மாவட்டம் சங்ககிரியில் இருந்து 3 லாரிகளில் கரும்புகள் ஏற்றப்பட்டு நேற்று காலை ஊட்டிக்கு வந்தது. அதனை மொத்த வியாபாரிகள் மார்க்கெட்டில் வரிசையாக இறக்கி அடுக்கி வைத்தனர். பின்னர் ஊட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து சில்லரை வியாபாரிகள் மொத்த வியாபாரிகளிடம் இருந்து கரும்புகளை வாங்கி சென்றனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதால் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்கள் சரக்கு வாகனங்களில் வந்து கரும்புகளை கட்டு, கட்டாக வாங்கி சென்றதை காண முடிந்தது.

    ஆயுத பூஜையை முன்னிட்டு கரும்புகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி உள்ளனர். மலைப்பிரதேசம் என்பதால் சமவெளி பகுதியில் இருந்து லாரிகளில் கரும்புகளை கொண்டு வர அதிக செலவாகிறது. இதனால் அவ்வப்போது கரும்பு விலை உயர்ந்து வருகிறது. எனினும் ஊட்டியில் விலை உயரவில்லை. ஒரு கரும்பு ரூ.40 முதல் ரூ.50 வரைக்கும், ஒரு கட்டு (20 கரும்புகள்) ரூ.800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    இதற்கிடையில் நகராட்சி மார்க்கெட்டில் வைத்து கரும்பு விற்பனை செய்ய அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். இதனால் ஏ.டி.சி.யில் உள்ள காந்தி மைதானத்தில் வைத்து கரும்பு விற்பனை செய்யப்படுகிறது.
    ஊட்டியில் வரத்து குறைவால் விலை உயர்ந்து, சின்ன வெங்காயம் கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    ஊட்டி:

    நீலகிரியில் கேரட், பீட்ரூட், பீன்ஸ் போன்ற காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது. தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் போன்ற காய்கறிகள் தமிழகத்தின் சமவெளி பகுதிகள் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் இருந்து ஊட்டிக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    கர்நாடகா மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. வெள்ளத்தின் இடையே அறுவடை செய்தாலும் பெரும்பாலான வெங்காயங்கள் அழுகிய நிலையில் உள்ளன. இதனால் நீலகிரி மாவட்டம் உள்பட தமிழகத்துக்கு பெரிய வெங்காயம் வரத்து மிகவும் குறைந்து உள்ளது. வரத்து குறைவால் பெரிய வெங்காயத்தின் விலை கிடு கிடு என உயர்ந்து வருகிறது.

    ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் கடந்த வாரம் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது வரத்து குறைந்ததால் விலை உயர்ந்து ரூ.110-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமவெளி பகுதியில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படும் சின்ன வெங்காயம் வரத்தும் குறைந்து உள்ளது. இதனால் அதன் விலை கிலோ ரூ.120 ஆக உயர்ந்தது. ஊட்டி உழவர் சந்தைக்கு தினமும் 1,500 கிலோ பெரிய வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படும். வரத்து குறைவால் 500 கிலோ முதல் 700 கிலோ வரை மட்டுமே கொண்டு வரப்படுகிறது.

    உழவர் சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.94-க்கும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.95-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்ந்து வருவதால் பெரிய வெங்காயம் கிடைக்காத நிலை ஏற்படுமோ என்ற எண்ணத்தில் பொதுமக்கள் வாங்கி வருகின்றனர். இதனால் கடைகளில் பெரிய வெங்காயம் உடனுக்குடன் விற்று காலியாகி வருகின்றது.

    சமையலுக்கு அத்தியாவசிய தேவையான பெரிய வெங்காயத்தின் விலை ஆண்டுதோறும் ஏற்றம் காணுவதும், பின்னர் இறக்கம் காண்பதும் தொடர்கிறது. இதுகுறித்து பெண்கள் கூறும்போது, ஊட்டியில் வெளியிடங்களில் இருந்து கொண்டு வரப்படும் காய்கறிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் பெரிய வெங்காயத்தின் விலை உச்சம் தொட்டதால் வாங்கும் அளவை குறைத்து உள்ளோம். பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் பதுக்குவதை தடுத்து பொதுமக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். ஊட்டியில் பீன்ஸ் விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.120 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஊட்டியில் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் இல்லாததால் பெரிய வெங்காயத்தை குறைந்த விலைக்கு வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர்.
    பந்தலூரில் போக்சோ சட்டத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    பந்தலூர்:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு, உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடனே அவளை உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவள் 5 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிறுமியிடம் கேட்டபோது, அவளது அக்காள் கணவரான மணிகண்டன்(வயது 38) என்பவர் ஆசை வார்த்தைக்கூறி பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் தேவாலா அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

    மற்றொரு சம்பவம்...

    இதேபோன்று பந்தலூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, கூடலூரில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்று வந்தாள். அப்போது அவளை அதே பகுதியை சேர்ந்த ரமேஷ்(19) என்பவர் ஆசை வார்த்தைக்கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதற்கிடையில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சிறுமி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். அப்போது பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கூடலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, ரமேஷை கைது செய்தனர்.
    முதுமலையில் தாயை பிரிந்த குட்டியானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இது ஊழியர்கள், பாகன்களின் செல்லப் பிள்ளையாக வலம் வருகிறது.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு காட்டுயானைகள், புலிகள், மான்கள், கரடிகள், செந்நாய்கள், சிறுத்தைகள், காட்டெருமைகள் என பல வகையான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வனப்பகுதியில் தாயை பிரிந்து தவிக்கும் குட்டியானைகளை வனத்துறையினர் மீட்டு, பின்னர் தாயுடன் சேர்த்து வைக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் சில சமயங்களில் தாய் யானை கிடைக்காத பட்சத்தில் குட்டியானையை முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு முகாமில் வைத்து பராமரித்து வருகின்றனர். இதேபோன்று ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டுயானைகளை பிடித்து வந்து, அதற்கு முறையாக பயிற்சி அளித்து கும்கியாக மாற்றுகின்றனர். கடந்த ஆண்டு வரை 26 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் தாயை பிரிந்த 2 மாத பெண் குட்டியானையை வனத்துறையினர் மீட்டனர். பின்னர் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதனால் வளர்ப்பு யானைகளின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்தது. பிறந்து இரண்டு மாதங்கள் மட்டுமே ஆனதால் பெண் குட்டியானையை வனத்துறை ஊழியர்கள் மற்றும் பாகன்கள் சிறப்பு கவனம் செலுத்தி பராமரித்து வருகின்றனர். இதனால் செல்லப்பிள்ளையாக தெப்பக்காடு முகாமில் பெண் குட்டியானை வளர்ந்து வருகிறது. மேலும் அதன் சேட்டைகளை கண்டு வனத்துறையினர், பாகன்கள் தினமும் ரசித்து வருகின்றனர்.

    இதுகுறித்து பாகன் பொம்மன் கூறும்போது, சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து வரும்போது மிகவும் மெலிந்த நிலையில் சிறிய குட்டியாக இருந்தது. பின்னர் ஊட்டச்சத்து மாவு, ராகி, கொள்ளு உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டு ஆரோக்கியமாக உள்ளது. செல்லமாக அம்மு என்று பெயரிட்டு அழைத்து வருகிறோம் என்றார்.
    ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் சம்பளம் கேட்டு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஊட்டி:

    ஊட்டி நகராட்சியில் பணியாளர்கள், அலுவலர்கள் என 375 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் குடிநீர் வினியோகம், சுகாதாரம், பாதாள சாக்கடை திட்டம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே கடந்த செப்டம்பர் மாத சம்பளம் பணியாளர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் தங்களது குடும்பத்தை நடத்த முடியாமல் சிரமப்பட்டனர். மேலும் உடனே சம்பளம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று ஊட்டி நகராட்சி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் சம்பளம் வழங்கக்கோரி நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்க தலைவர் தினகரன் தலைமை தாங்கினார்.

    உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நேற்று காலையில் பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து நின்றனர். மதியத்துக்கு மேல் நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி பணியாளர்களை செல்போனில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், நகராட்சி நிர்வாகத்திடம் போதிய நிதி இல்லை. ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் வாடகை பாக்கி அதிகமாக உள்ளது. இதை வசூலிக்க பணியாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதற்காக தனி குழு அமைக்கப்பட உள்ளது. அதன்பின்னர் ஓரிரு நாட்களில் சம்பளம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். இதை ஏற்று போராட்டத்தை கைவிட்டு பணியாளர்கள் அன்றாட பணிகளை செய்தனர். குடிநீர் பிரிவில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் அவர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கூடலூரில் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் எதிரொலியாக 2 வங்கிகள் மூடப்பட்டது.
    கூடலூர்:

    கூடலூர் பகுதியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் கூடலூர் பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று சிண்டிகேட் வங்கியில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதனால் நகராட்சி சுகாதார ஆய்வாளர் சரவணன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் மேற்கண்ட 2 வங்கிகளுக்கும் கிருமி நாசினி தெளித்தனர். பின்னர் வங்கிகள் மூடப்பட்டது. மேலும் கொரோனா தொற்று எதிரொலியாக மூடப்பட்டு உள்ளதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதேபோன்று ஏ.டி.எம். மையங்கள் உடனடியாக அடைக்கப்பட்டது. பின்னர் வாடிக்கையாளர்கள் செல்வதை தடுக்க தடுப்புகள் கொண்டு மூடப்பட்டது.

    இதனிடையே அந்த வங்கிகளுக்கு வாடிக்கையாளர்கள் பல்வேறு இடங்களில் இருந்து வந்தனர். ஆனால் வங்கிகளும், அதன் ஏ.டி.எம். மையங்களும் மூடப்பட்டு இருப்பதை கண்டு ஏமாற்றம் அடைந்தனர். இதனால் பண பரிவர்த்தனை செய்ய முடியாமல் அவர்கள் திரும்பி சென்றனர். இதேபோன்று கூடலூர் அருகே மேபீல்டு கிராமத்தில் சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கதிரவன் தலைமையிலான சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்தினர். பின்னர் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்தனர். மேலும் பிற பொதுமக்களிடம் இருந்து சளி மாதிரி சேகரித்து, கொரோனா பரிசோதனைக்கு அனுப்பினர். இதன் முடிவு தெரியும் வரை வீடுகளை விட்டு அவர்கள் வெளியே வர தடை விதித்தனர்.
    குன்னூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்து நாயை கவ்வி சென்ற சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஊட்டி:

    குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சமீபகாலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. காட்டெருமை, கரடி, சிறுத்தைப்புலி உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வருகின்றன. இந்த நிலையில் குன்னூர் பாய்ஸ் கம்பெனி அருகே நல்லப்பன் தெருவில் கடந்த 2 நாட்களாக இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து சிறுத்தைப்புலி ஒன்று வந்து செல்கிறது.

    நேற்று முன்தினம் இரவு அந்த சிறுத்தைப்புலி குடியிருப்புக்குள் புகுந்து ஒரு வீட்டின் முன்பு கட்டி வைக்கப்பட்டு இருந்த நாயை கவ்வி வனப்பகுதிக்குள் இழுத்து சென்றது. இரவு நேரங்களில் சிறுத்தைப்புலி வந்து செல்வதாலும், நாயை கவ்வி சென்றதாலும் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர். வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தைப்புலி நாயை பிடித்து சென்றது அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

    இதுகுறித்து தகவலறிந்த குன்னூர் வனச்சரகர் சசிகுமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சிறுத்தைப்புலி நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இரவில் வருவதால் வனத்துறையினர் கைகளில் தீப்பந்தம் ஏந்தி கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். குடியிருப்புக்குள் நடமாடி வரும் சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து இருக்கின்றனர்.
    நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது என்று கண்காணிப்பு அதிகாரி கூறினார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவாமல் தடுக்கும் பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் பரிசோதனை முடிவுகளை அறிந்து கொள்ள புதிய இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதனை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி, குன்னூர் இன்கோசர்வ் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தார். கண்காணிப்பு அதிகாரியும், இன்கோசர்வ் முதன்மை செயலாளருமான சுப்ரியா சாஹு, இணையதளத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொரோனா குறித்த தகவல்கள் அடங்கிய www.nilgiriscovidcare.com என்ற இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது. கொரோனா என்றால் என்ன?, அதன் அறிகுறிகள்?, எப்படி பரவுகிறது?, அதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள்? போன்ற அனைத்து விவரங்களும் உள்ளன. மேலும் கொரோனாவில் இருந்து தப்பிப்பது எப்படி?, பரிசோதனை முடிவுகளை அறிந்து கொள்வது எப்படி? என்பன போன்ற விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

    குறிப்பாக வெளிமாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வருவதற்கான இ-பாஸ் பெறும் லிங்க் கொடுக்கப்பட்டு உள்ளது. நீலகிரியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பிற துறைகளின் கூட்டு முயற்சியால் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் பழனிசாமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி டீன் ரவீந்திரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    உதகை அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த யானையை யாருக்கும் தெரியாமல் தனியார் தோட்டத்தில் புதைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    உதகை:

    நீலகிரி மாவட்டம் உதகை அருகே சின்ன குன்னூர் பகுதியில் மலை காய்கறி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. சின்ன குன்னூரை பகுதியை சேர்ந்த விக்னேஷ்வரன் என்பவர் தனது தோட்டத்தில் வனவிலங்கு நுழைவதை தடுக்க சட்ட விரோதமாக மின்வேலி அமைத்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு தோட்டத்திற்குள் நுழைந்த ஆண் காட்டு யானை மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளது.

    இதனை அறிந்த தோட்ட உரிமையாளர் இறந்த ஆண் யானையின் உடலை அங்கேயே  யாருக்கும் தெரியாமல் இரவேடு இரவாக புதைத்துள்ளார். இந்நிலையில் அப்பகுதி மக்கள் அளித்த புகார் அடிப்படையில் விக்னேஷ்வரன்,  கோபாலகிருஷ்ணன், அஜீத்குமார் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நீலகிரி மாவட்ட வன அலுவலர் குருசாமி தப்பேலா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில்  சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் புதைக்கபட்ட யானையின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற சிறுபான்மையின மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்ட இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சார்ந்தவர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெறலாம். அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் 2020-21-ம் கல்வி ஆண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயில்பவர்கள் பள்ளி படிப்பு உதவித்தொகை, 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயில்பவர்கள் மேற்படிப்பு கல்வி உதவித்தொகை, தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி பயில்பவர்கள் தகுதி, வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெறலாம். இதற்கு www.scholarships.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு வருகிற 31-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

    2020-21-ம் கல்வி ஆண்டில் தமிழ்நாட்டில் மேற்கண்ட கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் 1 லட்சத்து 35 ஆயிரத்து 127 மாணவ-மாணவிகள் பயன் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கல்வி உதவித்தொகை மாணவ-மாணவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

    புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ-மாணவிகள் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய குறியீட்டு எண்ணை மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இத்திட்டங்கள் தொடர்பான மத்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் http://www.minorityaffairs.gov.in/schemes என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    ×