search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் சம்பளம் கேட்டு பணியாளர்கள் போராட்டம்

    ஊட்டி நகராட்சி அலுவலகத்தில் சம்பளம் கேட்டு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஊட்டி:

    ஊட்டி நகராட்சியில் பணியாளர்கள், அலுவலர்கள் என 375 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் குடிநீர் வினியோகம், சுகாதாரம், பாதாள சாக்கடை திட்டம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே கடந்த செப்டம்பர் மாத சம்பளம் பணியாளர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் தங்களது குடும்பத்தை நடத்த முடியாமல் சிரமப்பட்டனர். மேலும் உடனே சம்பளம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று ஊட்டி நகராட்சி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் சம்பளம் வழங்கக்கோரி நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்க தலைவர் தினகரன் தலைமை தாங்கினார்.

    உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நேற்று காலையில் பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து நின்றனர். மதியத்துக்கு மேல் நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி பணியாளர்களை செல்போனில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், நகராட்சி நிர்வாகத்திடம் போதிய நிதி இல்லை. ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் வாடகை பாக்கி அதிகமாக உள்ளது. இதை வசூலிக்க பணியாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதற்காக தனி குழு அமைக்கப்பட உள்ளது. அதன்பின்னர் ஓரிரு நாட்களில் சம்பளம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தார். இதை ஏற்று போராட்டத்தை கைவிட்டு பணியாளர்கள் அன்றாட பணிகளை செய்தனர். குடிநீர் பிரிவில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் அவர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×