என் மலர்tooltip icon

    நீலகிரி

    நீலகிரி மாவட்த்தில் எஸ்டேட்டுகளில் கொட்டும் மழையிலும் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

    ஊட்டி,:

    ஊட்டி, குன்னூர், கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

    இந்த தாலுகா பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். அவர்கள் தேயிலை தோட்டங்களையொட்டிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருகின்றனர்.

    ஆனாலும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உயிருக்கு பாதுகாப்பு இன்றி மழையால் விடுமுறை எடுக்காமல் பணியாற்றி வருகின்றனர்.

    பலத்த மழை இருந்தும் பச்சை தேயிலை பறித்து தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வருகிறோம். வேலைக்கு வந்தால் மட்டுமே சம்பளம் உண்டு. வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேறு வழியின்றி கொட்டும் மழையிலும் பணியாற்றுகிறோம். மழை பெய்வதால் பல நாட்கள் வேலைக்கு செல்லாமல் சம்பளம் இன்றி வீட்டில் இருக்க முடியாது. வேலைக்கு வந்து தான் ஆக வேண்டும். எனவே அதிகாரிகள் எங்களது நிலைமையை கருத்தில் கொண்டு பலத்த மழையின்போது சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    கோவை வனப்பகுதியில் இறந்த யானையின் தந்தங்களை திருடிய 3 பேரையும் சிறையில் அடைத்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் போலுவாம்பட்டி வன சரகத்துக்குட்பட்ட கரியன் படுகை வனப்பகுதியில் கடந்த 23-ந் தேதி ஆண் யானை மர்மமான முறையில் இறந்து கிடந்ததை வன ஊழியர்கள் பார்த்தனர்.

    அந்த யானையின் இரண்டு தந்தங்களும் திருட்டு போயிருந்தது. யாரோ யானையின் தந்தங்களை எடுத்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

    இந்தநிலையில் 2 நாட்களுக்கு பின்னர் தந்தங்களை திருடிய மர்மநபர்கள் யானை இறந்து கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் வைத்து விட்டு சென்றனர். இதனை வனத்துறையினர் மீட்டனர்.

    தொடர்ந்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில் யானையின் தந்தங்களை தாணி கண்டியை சேர்ந்த மருதுபாண்டி (வயது 27), ராமன்(50), சின்னான் (50) ஆகியோர் விற்பனை செய்வதற்காக திருடியது தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் கீரை மற்றும் மூங்கில் குருத்து எடுக்க காட்டிற்குள் சென்ற போது இறந்து கிடந்த யானையின் தந்தங்களை திருடி விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்து இருந்ததாகவும், சிக்கி விடுவோம் என்ற பயத்தில் மீண்டும் யானையின் தந்தங்களை வைத்து விட்டு சென்றதாக தெரிவித்தனர்.

    பின்னர் வனத்துறையினர் 3 பேரையும் 5-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி 3 பேரையும் பவானிசாகர் சப்-ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து வனத்துறையினர் 3 பேரையும் ஜெயிலில் அடைத்தனர்.

    கோத்தகிரியில் பெய்த பலத்த மழையால் சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஊட்டி உள்பட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக அவலாஞ்சி, கோடநாடு, கிண்ணக்கொரை, குந்தா உள்ளிட்ட இடங்களில் அதிக மழை பதிவானது.

    நேற்று ஊட்டி நகரில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. கடும் பனி மூட்டம் நிலவியதால் சில சாலைகளில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகனங்களை இயக்கினர். கூடலூரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வபோது சாரல் மழை தூறியது.

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஒரு சில இடங்களில் லேசான மண்சரிவுகள் மற்றும் சாலைகளில் மரங்கள் சாய்ந்து விழுந்தது. இந்த நிலையில் நேற்று பலத்த மழை பெய்தது. காலை 7 மணி அளவில் கோத்தகிரியில் இருந்து அளக்கரைக்கு செல்லும் சாலையின் குறுக்கே மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் கணேசன், உதவி செயற்பொறியாளர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த மரத்தை மின் வாளால் வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    இதேபோல கோத்தகிரியில் இருந்து கூடநாட்டிற்கு செல்லும் சாலையின் குறுக்கே காட்டு மரம் ஒன்று விழுந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை அகற்றி, போக்குவரத்தை சீர் செய்தனர்.

    பந்தலூர் தாலுகாவில் மேங்கோரேஞ்ச், சேரம்பாடி, எருமாடு, அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, பொன்னானி உள்ளிட்ட பல இடங்களில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதனால் கால்வாய்கள் மற்றும் பொன்னானி, சோலாடி ஆறுகளிலும், நீரோடைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் பந்தலூர், கொளப்பள்ளி, அய்யன்கொல்லி பகுதிகளில் மின்கம்பிகள் மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்து மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். மரக்கிளைகளை அகற்றி மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

    ஊட்டி-20.2, கல்லட்டி-20, கிளன்மார்கன்-33, மசினகுடி-16, குந்தா-39, அவலாஞ்சி-66, எமரால்டு-30, கெத்தை-42, கிண்ணக்கொரை-65, அப்பர்பவானி-35, பாலகொலா-40, குன்னூர்-37.5, பர்லியார்-16, கேத்தி-18, எடப்பள்ளி-37, கோத்தகிரி -28, கீழ் கோத்தகிரி-31, கோடநாடு-40, கூடலூர்-28, பாடாந்தொரை-23, பந்தலூர்-38 மழை பதிவாகி உள்ளது.

    மொரப்பூர் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மொரப்பூர்:

    தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொண்டையம்பட்டியை சேர்ந்த சண்முகம் (வயது 43), தொங்கனூர் கிராமத்தை சேர்ந்த தேவராஜ் (60), மோட்டூரை சேர்ந்த சங்கர் (48), ,எம்.வேட்ரப்பட்டியை சேர்ந்த தங்கராஜ் (22) ஆகியோர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 50 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    செல்போனில் நடந்த தகவல் பரிமாற்றங்களை அழித்தது தொடர்பாக தனபாலை, கோவை, சேலத்திற்கு அழைத்து வந்து தனிப்படையினர் விசாரணை நடத்த உள்ளனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக தனிப்படையினர் மறு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான விபத்தில் இறந்த கனகராஜ் வழக்கும் மறுவிசாரணை செய்யப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே இந்த வழக்கில் ஆதாரங்கள், சாட்சியங்களை அழித்ததாக கனகராஜ் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    2 பேரையும் தனிப்படையினர் காவலில் எடுத்து பல்வேறு கேள்விகளை கேட்டு முக்கிய தகவல்களை பதிவு செய்தனர். இந்த நிலையில் தனபாலின் காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் போலீசார் அவரை ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கூடுதல் அவகாசம் கேட்டனர்.

    நீதிபதி தனபாலுக்கு மேலும் 5 நாள் போலீஸ் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

    இதையடுத்து தனிப்படையினர் அவரை ரகசிய இடத்தில் வைத்து தொடர்ந்து பல்வேறு கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.

    மேலும் செல்போனில் நடந்த தகவல் பரிமாற்றங்களை அழித்தது தொடர்பாக தனபாலை, கோவை, சேலத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளனர். அப்போது பல்வேறு முக்கிய தகவல்கள் இந்த வழக்கில் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த வழக்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருமுருகன்பூண்டி பேரூராட்சி ராக்கியாபாளையத்தில் 12 ஏக்கர் பரப்பளவில் ராசாத்தாள் குளம் உள்ளது.
    அவிநாசி:

    திருப்பூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் குளம், குட்டைகள் நிரம்பி வருகின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகேயுள்ள நடுவச்சேரியில் 15 ஆண்டுக்கும் மேலாக பராமரிப்பின்றி புதர்மண்டிக் கிடந்த வடுகனூர் குட்டை கடந்த 3 ஆண்டுக்கு முன் ரூ.1.20 லட்சம்  செலவில் குடிமராமத்து திட்டத்தில் தூர்வாரி சுத்தம் செய்யப்பட்டது.

    கடந்த சில நாட்களாக அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்யும் மழையால் இக்குளம் நிரம்பி வருகிறது. நிரம்பும் தண்ணீர் வேலம்பாளையம் செல்லும். அதிகளவு விவசாயம் மேற்கொள்ளப்படும் பகுதியாக இருப்பினும் நீர்வளம் குறைந்த பகுதியாக நடுவச்சேரி உள்ளது. 

    வானம் பார்த்த பூமியில் மழை கருணை காட்டியதால் குளம், குட்டைகள் நிரம்புகின்றன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழிக்கும் என ஊராட்சி நிர்வாகத்தினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். திருமுருகன்பூண்டி பேரூராட்சி ராக்கியாபாளையத்தில் 12 ஏக்கர் பரப்பளவில் ராசாத்தாள் குளம் உள்ளது.

    நொய்யல் கிளை வாய்க்கால் நீர் மூலம் குளம் நிரம்பும். பல ஆண்டுகளாக பராமரிப்பில்லாமல் இருந்த இக்குளத்தில், மழைக் காலங்களிலும் தண்ணீர் நிரம்பாமல் இருந்தது. கடந்தாண்டு திருமுருகன்பூண்டி ரோட்டரி நிர்வாகம் மூலம், குளம் தூர்வாரப்பட்டது.

    சில நாட்களாக அவிநாசியில் பெய்து வரும் மழையால் இக்குளம் நிரம்பி ததும்புகிறது. இதன் மூலம், திருமுருகன்பூண்டி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு உருவாகும்.

    உடுமலை சுற்றுப்பகுதியில், விவசாயத்துக்கு முக்கிய ஆதாரமாக வடகிழக்கு பருவமழை உள்ளது. இப்பருவமழை சீசனில் மழை நீர் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்நிலைகள் நிரம்புவதால் நிலத்தடி நீர் மட்டம் சரிவது தவிர்க்கப்படுகிறது.

    நடப்பாண்டு குறித்த நேரத்தில் பருவமழை துவங்கி பெய்து வருகிறது. பருவமழை சீசன் துவங்கும் முன்பே உடுமலை அருகிலுள்ள சில கிராமங்களில் மேக வெடிப்பு உள்ளிட்ட காரணங்களால் பலத்த மழை பெய்தது.

    மேலும் பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனம் மற்றும் அமராவதி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்பட்டதால் வறட்சி நீங்கியிருந்தது. இத்தருணத்தில் பருவமழையும் தொடர்ச்சியாக பெய்து வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

    பருவமழை மற்றும் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு உள்ளிட்ட காரணங்களால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. மானாவாரி சாகுபடிக்கான விதைப்பு பணிகளும் துவங்கியுள்ளது. பாசனப்பகுதிகளில் உபரி பாசன நீரை குளம், குட்டைகளில் நிரப்ப பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இவ்வாறு நிரப்பினால் வரும் கோடை காலத்திலும் நிலத்தடி நீர் மட்டம் சரியாது. மழை இடைவெளி விட்டதும் கிணற்று பாசனத்துக்கு வழக்கத்தை விட கூடுதல் பரப்பில் தக்காளி, கத்தரி உட்பட காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தற்போதைய மழையை பயன்படுத்தி நிலைப்பயிர்களுக்கு உரமிடும் பணியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு தெரிவித்தனர்.

    பெதப்பம்பட்டி பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் ஓடையில் உள்ள தடுப்பணைகள் நீண்ட இடைவெளிக்குப்பின் நிரம்பியுள்ளது. அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டத்திற்கு ஆதாரமாக சிறிய மழை நீரோடைகளே உள்ளன.

    இருப்பினும் போதிய மழை இல்லாததால் ஓடையின் குறுக்கே பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கட்டப்பட்ட தடுப்பணைகள் நீரின்றி வறண்டு இருந்தன. 

    கடந்த வாரத்திலிருந்து ஆங்காங்கே பரவலாக பெய்து வரும் மழையால் ரோடுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்பணைகளுக்கு நீர்வரத்து கிடைத்துள்ளது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடைபெற்று வரும் சோதனை பழிவாங்கும் நடவடிக்கை இல்லை என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
    ஊட்டி:

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடக்கிறது. தமிழக அரசு தற்போது கொண்டு வந்துள்ள இல்லம் தேடி கல்வி திட்டம் திராவிட கல்வி திட்டம் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் தலையீடு இருக்கக்கூடாது.

    தமிழக அரசுக்கு மட்டுமே துணை வேந்தர்கள் நியமிக்க அதிகாரம் இருக்கிறது. கடந்த 5 ஆண்டு காலங்களில் துணைவேந்தர் நியமனத்தில் தமிழ்நாட்டின் தன்மானத்தை அப்போதைய அரசு அதிகாரத்தை பறிகொடுத்து விட்டது. தற்போதைய தமிழக அரசு துணைவேந்தர்கள் நியமனத்தில் கவர்னரின் அணுகுமுறையை மாற்ற வேண்டும். பறிகொடுத்த அதிகாரத்தை மீட்க வேண்டும்.

    முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடைபெற்று வரும் சோதனை பழிவாங்கும் நடவடிக்கை இல்லை. சட்டம் தன் கடமையை செய்கிறது. கொடநாடு வழக்கில் பல உண்மைகள் விரைவில் வெளிவரும்.

    தமிழ்நாடு தினம் நவ 18-ந்தேதி கொண்டாடுவதே சிறப்பானது. நவ.1-ல் கொண்டாடுவது ஏற்புடையதல்ல. ஓய்வுபெறும் நாளில் அரசு அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யக்கூடாது என கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் சிறந்த சட்டமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    நீலகிரியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி மொத்தம் 5 லட்சத்து 81 ஆயிரத்து 807 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண்கள் அதிகம்.
    ஊட்டி:

    ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர்(பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி தலைமை தாங்கி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு அதன் நகல்களை வழங்கினார். இதுகுறித்து கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி கூறியதாவது:-

    வாக்காளர் பட்டியலில் 2098 பேர் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர். நீக்குதலுக்கான படிவங்கள் பெறப்பட்டு 7,241 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அதிக தொலைவில் இருந்து வாக்காளர்கள் வர வேண்டி உள்ளதால் ஊட்டி சட்டமன்ற தொகுதியில் கவர்னர்சோலை, குன்னூர் தொகுதியில் ஜெ.கொலக்கம்பை, அரக்காடு ஆகிய 3 வாக்குச்சாவடிகள் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது.

    வரைவு வாக்காளர் பட்டியலின்படி ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 97 ஆயிரத்து 583 ஆண்கள், 1 லட்சத்து 6 ஆயிரத்து 503 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 6 பேர் என மொத்தம் 2 லட்சத்து 4 ஆயிரத்து 92 வாக்காளர்கள் உள்ளனர். கூடலூர்(தனி) சட்டமன்ற தொகுதியில் 91 ஆயிரத்து 640 ஆண் வாக்காளர்கள், 96 ஆயிரத்து 240 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 1 லட்சத்து 87 ஆயிரத்து 880 பேர் உள்ளனர். குன்னூர் தொகுதியில் 90 ஆயிரத்து 383 ஆண்கள், 99 ஆயிரத்து 450 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் என மொத்தம் 1 லட்சத்து 89 ஆயிரத்து 835 வாக்காளர்கள் இருக்கின்றனர். மொத்தம் 2 லட்சத்து 79 ஆயிரத்து 606 ஆண்கள், 3 லட்சத்து 2 ஆயிரத்து 193 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 8 பேர் என மொத்தம் 5 லட்சத்து 81 ஆயிரத்து 807 வாக்காளர்கள் உள்ளனர்.

    கடந்த சட்டமன்ற தேர்தலின்போது வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 5 லட்சத்து 86 ஆயிரத்து 950 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது 5,143 வாக்காளர்கள் குறைந்து உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி, கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணக்கண்ணன், தேர்தல் பிரிவு தாசில்தார் புஷ்பா தேவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும் போது பெண் வீட்டார் அந்த பெண்ணிற்கு தங்க நகைகள் அணிவிக்க வேண்டும் என்பது நம் நாட்டில் கட்டாய சம்பிரதாயம் ஆகி விட்டது.
    தங்கத்தின் பயன்பாடு நம் நாட்டில் மிக அதிகம். குறிப்பாக பெண்கள் தங்க நகைகளை விரும்பி அணிவது என்பது காலம் காலமாக நடந்து வரும் தவிர்க்க முடியாத வழக்கம்.

    ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும் போது பெண் வீட்டார் அந்த பெண்ணிற்கு தங்க நகைகள் அணிவிக்க வேண்டும் என்பது நம் நாட்டில் கட்டாய சம்பிரதாயம் ஆகி விட்டது. மேலும் திருமணம் உள்ளிட்ட குடும்பத்தாரின் சுப நிகழ்ச்சிகளுக்கு செல்கிற போது பெண்கள் தங்க நகைகளை கழுத்திலும், கைகளிலும் அணிந்து செல்வது என்பது மாற்ற முடியாத நடைமுறை. இதனால் என்னவோ.. இப்போது தங்கத்தின் விலை நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு ஏறிக்கொண்டே இருக்கிறது.

    முதலீடு செய்ய வேண்டும் நிலத்தில் காசை போட வேண்டும். அல்லது தங்கத்தில் போட வேண்டும் என்று சொல்வார்கள். இதனால் தங்கம் இன்று சிறந்த முதலீடாகவும் ஆகிவிட்டது.

    தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போவதால் குறுகிய கால முதலீடாக தங்கத்தை பலரும் வாங்கி குவிக்க தொடங்கி விட்டனர். எனவே தங்க நகைகள், தங்கத்தில் முதலீடு செய்யக் கூடிய பரஸ்பர நிதி நிறுவனங்களின் கோல்டு ஈ.டி.எப் பிளான் போன்றவற்றில் முதலீடு செய்வது நல்லது.

    ஈ.டி.எப் திட்டத்தின்படி தங்கத்தை தொழில் நிறுவனங்களின் பங்குகளை பங்கு சந்தை வர்த்தகத்தின் மூலம் எப்படி வாங்கவோ விற்கவோ இயலுமோ அதே போல் தங்கத்தை வாங்கவோ விற்கவோ முடியும்.

    இம்முறையில் பரிவர்த்தனையாகும் தங்கம் நேரடியாக தரப்படமாட்டாது. மாறாக அதுவாங்குகிறவரின் டிமேட் கணக்கில் வரவு வைக்கப்படும். தேவை ஏற்படும்போது பங்குகளை விற்பதைப்போல் இந்த தங்கத்தையும் விற்பனை செய்து பணத்தை வாங்கி கொள்ளலாம்.

    இந்த திட்டத்தினால் தங்கத்தின் தரத்தைப்பற்றியோ பாதுகாப்பு பற்றியோ எந்த பயமும் உங்களுக்கு இருக்காது. கடந்த 3 ஆண்டுகளில் கோல்டு ஈ.டி.எப் திட்டத்தில் செய்த முதலீடு சுமார் 30 சதவீத வருவாயை எட்டியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    தனி நபருக்கான வட்டி விகிதம் 15 சதவீதம் முதல் 16 சதவீதம் வரை இருக்கிறது. இந்த நிலையில் கோல்டு ஈ.டி.எப் திட்டம் நிச்சயம் லாபகரமானதாகவே விளங்குகிறது.

    தங்கம் நகையாக முதலீடு செய்கிறபோது செய்கூலி சேதாரம் போன்றவை கழிக்கப்பட்டு விடுகிறது. எனவே இப்போது வங்கிகளில் கட்டிகளாக விற்கப்படும் தங்கத்தை வாங்கி அப்படியே வங்கி லாக்கர்களிலேயே அதனை வைத்தும் பாதுகாக்க தொடங்கி விட்டனர்.

    பின்னர் தங்கத்தின் விலை பன்மடங்காக அதிகரித்து பணத்தேவையும் ஏற்படுகிற போது இந்த தங்க கட்டிகளை விற்பனை செய்து அதிக லாபத்தை அடையமுடிகிறது.

    தற்போது இந்த பரஸ்பர நிதி நிறுவனங்கள் இந்த கோல்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன. அதாவது தங்கத்திற்கான பணத்தை நீங்கள் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யலாம். அவர்களும் உங்கள் பெயரில் தங்கம் வாங்கி உள்ளதாக கூறி உங்களுக்கு டாக்கு மெண் டும் அனுப்பி வைப்பார்கள்.

    ஆனால் இந்த முதலீட் டை நீங்கள் திரும்பப் பெற நினைத்தால் அடுத்த இரண்டு தினங்களில் அப்போதைய தங்கத்தின் மதிப்பிற்கான பணத்தை பரஸ்பர நிதி நிறுவனம் உங்களுக்கு அளித்து விடுகிறது. இதில் அவர் களுக்கு ஒரு சிறிய லாபம் மட்டும் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

    இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இதர முதலீடுகளைப்போல தங்கத்தில் முதலீடு செய்வதில் எந்த சட்ட சிக்கல்கள் எதுவுமே கிடையாது. தரம் மட்டுமே முக்கியம். சுத்தமான தங்கம் என்று உங்களை நம்பவைக்கிற மாதிரி பேசி குறைந்த தங்கத்தை தலையில் கட்டிவிடுவார்கள். 24 காரட் தங்கம் என்று சொல்லி 18 காரட் தங்கத்தை தந்து ஏமாற்றி விடுவார்கள். அதனை விற்கும்போதும் அல்லது அடகு வைக்கும் போதுதான் இந்த உண்மை நிலவரம் உங்களுக்கு தெரிய வரும். அதற்கு நம்பிக் கையான இடத்தில் தங்கத்தை வாங்கு வது அவசியம். எப்போது வேண்டும் என்றாலும் வங்கிகளிலோ, நிதி நிறுவனங்களிலோ தங்கத்தை அடகு வைத்து பணம் பெறலாம்.

    ஆக.. தங்கத்தில் செய்யப்படும் முதலீடும் ஒரு வகையில் இன்று லாபம் தரும் வணிகமாகவே கருதப்படுகிறது.
    தனியார் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் பெறுவதற்காக பரிசோதனை செய்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    கோத்தகிரி:

    கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை வருகிற 1-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி கோத்தகிரி பகுதியில் மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு முன்பு 72 மணி நேரத்தில் எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கொண்டு வர வேண்டும் என்று தனியார் பள்ளிகள் தெரிவித்து உள்ளன. காலை 8.30 மணி முதல் மாலை 3.45 மணி வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற உள்ளது.

    இதன் காரணமாக தனியார் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் பெறுவதற்காக பரிசோதனை செய்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களிடம் இருந்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
    மசினகுடியில் பிடிக்கப்பட்ட டி23 புலிக்கு காயங்கள் இருந்ததால் மைசூரு பூங்காவில் உள்ள மறுவாழ்வு மையத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர், மசினகுடி சுற்று வட்டார பகுதிகளில் சுற்றி திரிந்த டி.23 என்ற ஒற்றை புலி 3 பேரையும், 30-க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் அடித்து கொன்றது. இந்த புலியை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விட்டதை அடுத்து வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    21 நாட்களுக்கு பிறகு கடந்த 15-ந் தேதி ஆட்கொல்லி மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். புலிக்கு உடலில் காயங்கள் இருந்ததை அடுத்து சிகிச்சைக்காக மைசூருவில் உள்ள மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு புலிக்கு கால்நடை டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    தொடர் சிகிச்சை காரணமாக புலி நாளுக்கு நாள் தீவிர குணமடைந்து வருகிறது. மேலும் உணவும் சீராக உட்கொள்கிறது. இதையடுத்து இந்த புலியை மைசூர் பூங்காவில் வைத்து பராமரிக்கலாமா? அல்லது சென்னை வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு செல்லமா? என வனத்துறையினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

    மசினகுடியில் பிடிக்கப்பட்ட டி23 புலிக்கு காயங்கள் இருந்ததால் மைசூரு பூங்காவில் உள்ள மறுவாழ்வு மையத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர்கள் அளித்து வரும் தொடர் சிகிச்சையின் காரணமாக புலியின் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. புலி நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது. மேலும் இறைச்சியையும் சாப்பிடுகிறது. இருப்பினும் தொடர்ந்து புலியை கண்காணித்து வருகிறோம்.

    தற்போது வரை புலியை வேறு இடத்திற்கு மாற்றும் எந்தவித முயற்சியோ, ஆலோசனைகளோ நடைபெறவில்லை.

    புலி முழுவதுமாக குணம் அடைந்த பிறகு உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து புலியை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்று பராமரிக்கலாமா? அல்லது இங்கு வைத்தே பராமரிக்கலாமா? என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    திருமணத்தை மறைத்து கல்லூரி மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி பகுதியை சேர்ந்தவர் 18 வயது மாணவி. இவர் அங்குள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் சதீஷ்குமார்(28). தொழிலாளி.

    2 பேரும் அருகருகே வசித்து வருவதாலும், அடிக்கடி சந்தித்து கொண்டதாலும் இருவருக்கும் இடையே நட்பாக பழக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து செல்போன் எண்களையும் பரிமாறி கொண்டு பேசி வந்தனர். நட்பாக தொடங்கிய பழக்கம் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.

    மேலும் சதீஷ்குமார் மாணவியை பல இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி மாணவியுடன் தனிமையில் நெருக்கமாக இருந்துள்ளார். பலமுறை இதனை சொல்லி, சொல்லி அவர் மாணவியுடன் உறவு வைத்துள்ளார்.

    இந்த நிலையில் மாணவி கர்ப்பமானார். இதுகுறித்து தனது காதலனிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டதும் அதிர்ச்சியான அவர் அதன் பின்னர் மாணவியுடன் பேசுவதை தவிர்த்து விட்டார்.

    மாணவி செல்போனில் தொடர்பு கொண்டாலும் சதீஷ்குமார் போனை எடுக்காமலும், மாணவியை சந்திப்பதையும் தவிர்த்து வந்தார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவி சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சதீஷ்குமார் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், அவரது மனைவி பிரசவத்திற்காக ஊருக்கு சென்றிருந்ததும் தெரியவந்தது. ஆனால் அவர் திருமணமானதையே மறைத்து மாணவியுடன் நெருங்கி பழகி கர்ப்பமாக்கியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சதீஷ்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    ×