என் மலர்
செய்திகள்

உடுமலை எலையமுத்தூர் பகுதியில் நெற்பயிர்கள் செழித்து வளர்ந்து இருப்பதை படத்தில் காணலாம்.
திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழை - நிரம்பி வழியும் தடுப்பணைகள், குளங்களால் விவசாயிகள் மகிழ்ச்சி
திருமுருகன்பூண்டி பேரூராட்சி ராக்கியாபாளையத்தில் 12 ஏக்கர் பரப்பளவில் ராசாத்தாள் குளம் உள்ளது.
அவிநாசி:
திருப்பூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் குளம், குட்டைகள் நிரம்பி வருகின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகேயுள்ள நடுவச்சேரியில் 15 ஆண்டுக்கும் மேலாக பராமரிப்பின்றி புதர்மண்டிக் கிடந்த வடுகனூர் குட்டை கடந்த 3 ஆண்டுக்கு முன் ரூ.1.20 லட்சம் செலவில் குடிமராமத்து திட்டத்தில் தூர்வாரி சுத்தம் செய்யப்பட்டது.
கடந்த சில நாட்களாக அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்யும் மழையால் இக்குளம் நிரம்பி வருகிறது. நிரம்பும் தண்ணீர் வேலம்பாளையம் செல்லும். அதிகளவு விவசாயம் மேற்கொள்ளப்படும் பகுதியாக இருப்பினும் நீர்வளம் குறைந்த பகுதியாக நடுவச்சேரி உள்ளது.
வானம் பார்த்த பூமியில் மழை கருணை காட்டியதால் குளம், குட்டைகள் நிரம்புகின்றன. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் செழிக்கும் என ஊராட்சி நிர்வாகத்தினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். திருமுருகன்பூண்டி பேரூராட்சி ராக்கியாபாளையத்தில் 12 ஏக்கர் பரப்பளவில் ராசாத்தாள் குளம் உள்ளது.
நொய்யல் கிளை வாய்க்கால் நீர் மூலம் குளம் நிரம்பும். பல ஆண்டுகளாக பராமரிப்பில்லாமல் இருந்த இக்குளத்தில், மழைக் காலங்களிலும் தண்ணீர் நிரம்பாமல் இருந்தது. கடந்தாண்டு திருமுருகன்பூண்டி ரோட்டரி நிர்வாகம் மூலம், குளம் தூர்வாரப்பட்டது.
சில நாட்களாக அவிநாசியில் பெய்து வரும் மழையால் இக்குளம் நிரம்பி ததும்புகிறது. இதன் மூலம், திருமுருகன்பூண்டி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு உருவாகும்.
உடுமலை சுற்றுப்பகுதியில், விவசாயத்துக்கு முக்கிய ஆதாரமாக வடகிழக்கு பருவமழை உள்ளது. இப்பருவமழை சீசனில் மழை நீர் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர்நிலைகள் நிரம்புவதால் நிலத்தடி நீர் மட்டம் சரிவது தவிர்க்கப்படுகிறது.
நடப்பாண்டு குறித்த நேரத்தில் பருவமழை துவங்கி பெய்து வருகிறது. பருவமழை சீசன் துவங்கும் முன்பே உடுமலை அருகிலுள்ள சில கிராமங்களில் மேக வெடிப்பு உள்ளிட்ட காரணங்களால் பலத்த மழை பெய்தது.
மேலும் பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனம் மற்றும் அமராவதி அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்பட்டதால் வறட்சி நீங்கியிருந்தது. இத்தருணத்தில் பருவமழையும் தொடர்ச்சியாக பெய்து வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
பருவமழை மற்றும் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு உள்ளிட்ட காரணங்களால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. மானாவாரி சாகுபடிக்கான விதைப்பு பணிகளும் துவங்கியுள்ளது. பாசனப்பகுதிகளில் உபரி பாசன நீரை குளம், குட்டைகளில் நிரப்ப பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நிரப்பினால் வரும் கோடை காலத்திலும் நிலத்தடி நீர் மட்டம் சரியாது. மழை இடைவெளி விட்டதும் கிணற்று பாசனத்துக்கு வழக்கத்தை விட கூடுதல் பரப்பில் தக்காளி, கத்தரி உட்பட காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தற்போதைய மழையை பயன்படுத்தி நிலைப்பயிர்களுக்கு உரமிடும் பணியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு தெரிவித்தனர்.
பெதப்பம்பட்டி பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் ஓடையில் உள்ள தடுப்பணைகள் நீண்ட இடைவெளிக்குப்பின் நிரம்பியுள்ளது. அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டத்திற்கு ஆதாரமாக சிறிய மழை நீரோடைகளே உள்ளன.
இருப்பினும் போதிய மழை இல்லாததால் ஓடையின் குறுக்கே பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கட்டப்பட்ட தடுப்பணைகள் நீரின்றி வறண்டு இருந்தன.
கடந்த வாரத்திலிருந்து ஆங்காங்கே பரவலாக பெய்து வரும் மழையால் ரோடுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்பணைகளுக்கு நீர்வரத்து கிடைத்துள்ளது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story






