என் மலர்tooltip icon

    நீலகிரி

    ஊட்டி அருகே கல்லட்டியில் கஞ்சா செடிகள் பயிரிட்டு வளர்த்த விவசாயி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை தலைகுந்தா பகுதியில் போலீஸ் சோதனை சாவடி உள்ளது. இந்தநிலையில் கல்லட்டியில் இருந்து ஊட்டியை நோக்கி இருசக்கர வாகனத்தில் 2 வாலிபர்கள் சந்தேகத்திற்கிடமாக வந்து கொண்டு இருந்தனர். இதை பார்த்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.

    அவர்களிடம் விசாரித்தபோது கல்லட்டியில் பயிரிட்ட கஞ்சா செடிகளை பறித்து வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அவர்களை கையும், களவுமாக பிடித்து கல்லட்டி 6-வது கொண்டை ஊசி வளைவு பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு கல்லட்டியை சேர்ந்த விவசாயியான குணசேகரன் (வயது 56) தனது நிலத்தில் கேரட், பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களுக்கு இடையே கஞ்சா செடிகளை பயிரிட்டது தெரியவந்தது. 10 செடிகள் 3 அடி உயரம் வளர்ந்து இருந்தன. போலீசார் கஞ்சா செடிகளை பிடுங்கி பறிமுதல் செய்து அழித்தனர்.

    தொடர்ந்து போலீசார் கஞ்சா பயிாிட்ட குணசேகரன் மற்றும் அதை பறித்து வந்த ஊட்டி அருகே தாவணெ கிராமத்தை சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க சிறுவன், கூடலூரை சேர்ந்த விஷ்ணு (19) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் குணசேகரனுக்கு கஞ்சா புகைக் கும் பழக்கம் உள்ளதால் தான் மட்டும் பயன்படுத்துவதற்காக தனது தோட்டத்தில் கஞ்சா செடிகளை சட்ட விரோதமாக பயிரிட்டு உள்ளார். இதனை அறிந்த விஷ்ணு உள்பட 2 பேர் அவ்வப்போது கஞ்சா செடிகளை பறித்து காயவைத்து பயன்படுத்தினர். அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டத்தில் தறி வேலை செய்து வருகின்றனர்.

    கஞ்சா செடிகளை பறித்து மற்றவர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து குணசேகரன், விஷ்ணு ஆகிய 2 பேர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுவன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டான்.
    மின்னழுத்த குறைபாடு காரணமாக கோத்தகிரி சக்திமலை சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
    கோத்தகிரி:

    கோத்தகிரி நகர மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அளக்கரை கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் சுமார் ரூ.10.60 கோடியில் கொண்டுவரப்பட்டது. இதற்காக அளக்கரை பகுதியில் செல்லும் ஓடையை மறித்து, அந்த தண்ணீரை சேமித்து வைப்பதற்காக பிரமாண்டமான தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. அங்கிருந்து கோத்தகிரி பகுதி வரை பெரிய குழாய்கள் பதித்து 7 பகுதிகளில் நீர் உந்து மோட்டார் அறைகளும் கட்டப்பட்டன. மேலும் கோத்தகிரியில் உள்ள உயரமான பகுதியான சக்திமலைப் பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு, தலா 8 லட்சம் லிட்டர் என மொத்தம் 16 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை விநியோகத்திற்கு தேக்கி வைக்க 2 நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டன.

    இதுமட்டுமின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்கு வசதியாக கோத்தகிரி நேரு பூங்கா வளாகத்தில் வறட்சி நிவாரண நிதியின் கீழ் ரூ.50 லட்சம் செலவில், நீர்த்தேக்க தொட்டி ஒன்று கட்டப்பட்டு, குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் தொடங்கியது.

    ஒவ்வொரு நீர் உந்து அறையிலும் 60 குதிரைதிறன் கொண்ட மின் மோட்டார்களும் பொருத்தப்பட்டன. இந்த 7 மின் மோட்டார்களும் ஒரே நேரத்தில் இயங்கினால் மட்டுமே, சக்திமலை சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் வந்து சேரும்.

    இந்தநிலையில் நீர் உந்து அறைகள் அமைந்துள்ள ஒரு சில பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டார்கள் அங்கு நிலவும் மின்னழுத்த குறைபாடு காரணமாக அடிக்கடி பழுதடைந்து வந்தன. இதனால் அளக்கரையிலிருந்து கோத்தகிரிக்கு தண்ணீரைக் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

    தற்போது கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக கோடநாடு அருகே உள்ள ஈளாடா தடுப்பணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதனால் கோத்தகிரி பகுதி மக்களுக்கு அந்த தடுப்பணை நீரை பேரூராட்சி நிர்வாகம் தடையின்றி விநியோகித்து வருகிறது. ஆனால் கோடை காலங்களில் ஈளாடா தடுப்பணை நீர் கோத்தகிரி பகுதி குடியிருப்புகளுக்கு வினியோகம் செய்வதற்கு போதுமானதாக இருக்காது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வரும் கோடை காலம் தொடங்குவதற்கு முன், மின்னழுத்த குறைபாடு உள்ள பகுதிகளில் புதிய மின்மாற்றி அமைத்து, தடையின்றி குடிநீரை விநியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
    பாலக்கோட்டில் கார் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாலக்கோடு:

    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மூங்கப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் மாதேஷ் (வயது 35). இவர் பாலக்கோட்டில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார்.

    இவர் நேற்று முன்தினம் இரவு டீ குடிப்பதற்காக பாலக்கோட்டில் பாப்பாரப்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பாப்பாரப்பட்டியில் இருந்து பாலக்கோடு நோக்கி வந்து கொண்டிருந்த கார் ஒன்று நடந்து சென்ற மாதேசின் பின்னால் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை சேலம் அரசு ஆஸ்பததிரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை மாதேஷ் உயிரிழந்தார். விபத்து குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    பள்ளிபாளையம், குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளில் நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் காவிரி கரையோர மக்களிடம் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினார்.
    நாமக்கல்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியில், 119 அடியை எட்டியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி வீதம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இது நேற்று வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. இருந்தபோதும், காவிரி ஆற்றில்தண்ணீர் பெருக்கெடுத்தசெல்கிறது.

    இந்தநிலையில் பள்ளிபாளையம், குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளில் நேற்று நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான மகேஸ்வரன் நேரில் ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் வெள்ள பாதிப்பின் போது பொதுமக்கள் தங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்2தார். மேலும் கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்ததுடன், பாதுகாப்பாக இருக்கும்படி அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இதையடுத்து அவர்நிருபர்களிடம் கூறியதாவது:-

    மேட்டூர் அணை நிரம்பும் சமயத்தில் காவிரி ஆற்றில் திறக்கப்படும் அதிகப்படியான தண்ணீரால் குமாரபாளையம், பள்ளிபாளையம், மோகனூர் ஆகிய பகுதிகளில் கரையோரம் வசிக்கும் மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். தற்போது உள்ள சூழ்நிலையை எதிர்கொள்ள ரேஷன் கடைகளில் போதிய உணவு பொருட்கள் மற்றும் ஆஸ்பத்திரிகளில் மருந்து, மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. காவிரி கரையோரத்தில் தாழ்வான இடங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பான பகுதிகளில் வீடுகள் வழங்குவது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது, திருச்செங்கோடு உதவி கலெக்டர் இளவரசி, குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் ஸ்டேன்லிபாபு, தாசில்தார் சிவக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, பள்ளிபாளையம் வருவாய் அலுவலர் கார்த்திகா உள்பட பலர் உடன் இருந்தனர்.

    தமிழகம் முழுவதும் 4 ஆயிரம் மின்பொறியாளர்கள், 36 ஆயிரம் பணியாளர்கள் என மொத்தம் 40 ஆயிரம் ஊழியர்கள் மழைக்கால பாதிப்புகளை சரிசெய்யும் களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொன்னேரி:

    பலத்த மழை காரணமாக மீஞ்சூரை அடுத்த வடசென்னை அனல் மின் நிலையத்தில் உள்ள நிலக்கரி சேமிப்பு கிடங்கில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.

    இதற்கிடையே வட சென்னை அனல் மின் நிலையத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். அவர், அனல் மின் நிலையத்தில் உள்ள கிடங்கில் நிலக்கரி இருப்பு குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் நிலக்கரி இருப்பு, மின் உற்பத்தி குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

    வடகிழக்கு பருவமழையால் மின் உற்பத்தி பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தற்போது அனல் மின் நிலைய நிலக்கரி கிடங்கில் மழைநீர் தேங்கியுள்ளதால் 400 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அனல் மின் நிலைய நிலக்கரி கிடங்கில் தேங்கியுள்ள மழைநீரை போர்க்கால அடிப்படையில் வெளியேற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வடசென்னை அனல் மின் நிலையத்தில் பாதிக்கும் மின் உற்பத்தி அளவை தூத்துக்குடி, மேட்டூர் அனல் மின் நிலையங்களில் உற்பத்தி செய்து தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 4 ஆயிரம் மின்பொறியாளர்கள், 36 ஆயிரம் பணியாளர்கள் என மொத்தம் 40 ஆயிரம் ஊழியர்கள் மழைக்கால பாதிப்புகளை சரிசெய்யும் களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மழைக்காலங்களில் மின் கம்பங்கள் சேதம் அடைந்தால் அவற்றை உடனடியாக மாற்றும் வகையில் 1 லட்சத்து 32 ஆயிரம் மின்கம்பங்கள் தயார் நிலையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பருவமழைக்கு முன்னரே பழுதடைந்த 25 ஆயிரத்து 500 மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    மின்கம்பம்

    அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேவையான வகையில் சூரிய மின்சக்தி, நீர், கேஸ் மின்உற்பத்தி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    கடந்த ஆட்சியில் மழை காலத்தில் மின் விநியோகம் பல நாட்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மழையால் ஏற்படும் பாதிப்பை ஒரே நாளில் சீரமைத்து மீண்டும் மின் விநியோகம் செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்...மழை சேதம்: மத்திய அரசிடம் நிவாரண நிதி கேட்க விபர அறிக்கை- அதிகாரிகளுக்கு ரங்கசாமி உத்தரவு

    நீலகிரியில் உள்ள அனைத்து பகுதிகளிலுமே இரவு நேரங்களில் மழையும், பகல் நேரத்தில் லேசான வெயிலும், அதிகாலையில் கடும் குளிர் மற்றும் பனிமூட்டமும் நிலவுகிறது.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள ஆறுகள், அணைகள், குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவுகளும், மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.

    குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அருவங்காடு, உபதலை, ஓட்டுப்பட்டரை, காட்டேரி, சேலாஸ் உள்ளிட்ட பல இடங்களில் நேற்று இரவில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. மழையால் ஆறு மற்றும் ஓடைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    தொடர்ந்து பெய்து வரக்கூடிய மழை காரணமாக குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் சில இடங்களில் புதிதாக நீர்வீழ்ச்சிகளும் உருவாகி அதில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    நீலகிரியில் உள்ள அனைத்து பகுதிகளிலுமே இரவு நேரங்களில் மழையும், பகல் நேரத்தில் லேசான வெயிலும், அதிகாலையில் கடும் குளிர் மற்றும் பனிமூட்டமும் நிலவுகிறது. குறிப்பாக கடும் குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

    இந்த குளிர் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வருவதற்கே தயங்கி உள்ளேயே முடங்கி கொள்கின்றனர். அத்தியாவசியத்திற்கு மட்டுமே வெளியில் வருகின்றனர்.

    வீட்டில் இருந்தாலும் கடும் குளிர் வாட்டுவதால் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் குளிரை தாங்கி கொள்வதற்காக தொப்பி, மப்புலர், பனியன் உள்ளிட்ட உலர் ஆடைகளை அணிந்து கொள்கின்றனர். பள்ளி செல்லும் மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் என அனைவருமே குளிரால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

    ஒரு சில இடங்களில் ஆட்டோ, வேன் டிரைவர்கள் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள்.

    பகல் நேரங்களில் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை, கூடலூர்- ஊட்டி சாலை, கோத்தகிரி- ஊட்டி சாலை, மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலை என நீலகிரி மாவட்டத்திற்கு செல்லக்கூடிய அனைத்து சாலைகளிலும் பனி மூட்டம் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதன் காரணமாக பகல் நேரங்களிலேயே முகப்பு விளக்குகளை எரிய விட்ட படியே செல்கின்றனர்.

    கோவை மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் கனமழையும், பகலில் மிதமான கால நிலையும் காணப்படுகிறது. இதுதவிர கடுமையான குளிரும் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருப்பதால் தினந்தோறும் குளிரும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் அதிகாலையில் வேலைக்கு செல்வோர், நடைபயிற்சி மேற்கொள்பவர்கள், பால்காரர்கள், பொதுமக்கள் என அனைவருமே குளிரால் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

    கடும் குளிரால் கோவை, நீலகிரி மாவட்டத்தில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது.
    விண்வெளி நிலையத்தில் இருந்து 4 விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பியதை தொடர்ந்து, புதிதாக 4 விண்வெளி வீரர்களை விண்வெளி நிலையத்துக்கு அனுப்ப ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயராகி வருகிறது.
    வாஷிங்டன் :

    அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து கூட்டு திட்டமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் பணியை 1998-ல் நிறைவு செய்தனர்.

    தொடக்கத்தில் இந்த நிலையம், 15 ஆண்டுகளுக்கு இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகும் அந்த நிலையம் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பூமியிலிருந்து 410 கிலோ மீட்டர் உயரத்தில் இயங்கி வரும் இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்கா, ரஷியா மற்றும் பிற உறுப்பு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் சுழற்சி முறையில் அங்கு தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அந்த வகையில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவை சேர்ந்த ஷேன் கிம்ப்ரோ மற்றும் மேகன் மெக்ஆர்தர், ஜப்பானின் அகிஹிகோ ஹோஷைட் மற்றும் பிரான்சை சேர்ந்த தாமஸ் பெஸ்கெட் ஆகிய 4 விண்வெளி வீரர்கள் கடந்த ஏப்ரல் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலத்தில் இவர்கள் 4 பேரும் விண்வெளி நிலையம் சென்றிருந்தனர். அங்கு இவர்கள் தங்களின் பணியை முடித்த பிறகு அதே ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது.

    அதன்படி அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பிரான்சை சேர்ந்த விண்வெளி வீரர்கள் 4 பேரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு புறப்பட இருந்த நிலையில் மோசமான வானிலையால் அவர்களின் பயணம் தள்ளிவைக்கப்படுவதாக நாசா அறிவித்தது.

    இதற்கிடையில் விண்வெளி வீரர்கள் பயணிக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் கழிவறை உடைந்ததால் வீரர்கள் 4 பேரும் ‘டயப்பர்’ அணிந்து கொண்டு இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவானது.

    விண்வெளியில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டது போல இந்த சவாலையும் எதிர்கொள்வோம் என விண்வெளி வீரர்கள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் 200 நாட்களை விண்வெளியில் கழித்த பிறகு வீண்வெளி வீரர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் பூமிக்கு புறப்பட்டனர்.

    8 மணி நேர பயணத்துக்கு பிறகு நேற்று முன்தினம் நள்ளிரவில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பென்சகோலா கடற்கரையில் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் பத்திரமாக தரையிறங்கியது.

    இதை தொடர்ந்து அங்கு தயார் நிலையில் இருந்த நாசா குழுவினர் விண்கலத்தில் இருந்து விண்வெளி வீரர்கள் 4 பேரையும் பத்திரமாக வெளியேற்றினர்.

    அவர்கள் 4 பேரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதனிடையே விண்வெளி நிலையத்தில் இருந்து 4 விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பியதை தொடர்ந்து, புதிதாக 4 விண்வெளி வீரர்களை விண்வெளி நிலையத்துக்கு அனுப்ப ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயராகி வருகிறது. வீரர்கள் 4 பேரும் இன்று (புதன்கிழமை) இரவு ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தில் விண்வெளி நிலையத்துக்கு புறப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 14 பேருக்கு கொரோனா உறுதியானது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 14 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 33 ஆயிரத்து 700 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று 14 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் இதுவரை 33 ஆயிரத்து 269 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 218 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 574 ஆக்சிஜன் படுக்கைகளில் 34 படுக்கைகள் நிரம்பி உள்ளது. 540 படுக்கைகள் காலியாக இருக்கிறது.
    சங்கராபுரம் அருகே ஏரியில் மூழ்கி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மூங்கில்துறைப்பட்டு:

    சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை(வயது 40). விவசாயியான இவர் சம்பவத்தன்று இயற்கை உபாதை கழிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் அப்பகுதியில் உள்ள ஏரிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் ஏழுமலை திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் ஏரிக்கு சென்று பார்த்தனர். அப்போது ஏரி கரையோரம் தண்ணீரில் மூழ்கிய நிலையில் கிடந்த ஏழுமலையை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஏழுமலை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சங்கராபுரம் போலீசார் அனுப்பி வைத்தனர். இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்ற ஏழுமலை ஏரியில் தவறி விழுந்து மூழ்கி பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா உள்ளிட்ட பகுதிகளில், நேற்று மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் திரளாக வந்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த சுற்றுலா தலங்கள் கடந்த ஆகஸ்டு மாதம் 23-ந்தேதி திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் படிப்படியாக வரத் தொடங்கினர். தேனிலவு தம்பதியினரின் வருகையும் அதிகரித்துள்ளது.

    இந்தநிலையில் தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக நீலகிரியில் சுற்றுலாபயணிகள் குவிந்துள்ளனர். அங்குள்ள லாட்ஜ்கள், ஓட்டல்கள், காட்டேஜ்கள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு நிரம்பி காணப்படுகிறது.

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா உள்ளிட்ட பகுதிகளில், நேற்று மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் திரளாக வந்தனர். தாவரவியல் பூங்காவுக்கு, கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டனர்.

    இதேபோல குன்னூர் சீம்ஸ் பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. குன்னூரில் தோட்டக்கலைத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள சீம்ஸ் பூங்கா இயற்கை சூழலில் அமைந்துள்ளது.

    இந்த பூங்காவை சுற்றி உள்ள படகு இல்லம் பசுமையான மலைகள், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. சீம்ஸ் பூங்காவில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள் புல்வெளியில் விளையாடியும், படகுகளில் பயணம் செய்தும் பூக்களுக்கு இடையே செல்பி எடுத்தும் உற்சாகம் அடைந்து வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டத்தில் தற்போது இதமான இதோஷ்ண நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

    கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாதலங்களின் முக்கிய இடமாக வால்பாறை உள்ளது. தீபாவளி விடுமுறையை ஒட்டி சுற்றுலாபயணிகள் வருகை நேற்று அதிகம் காணப்பட்டது. வால்பாறையில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வழியில் அரசு மற்றும் தனியார் தேயிலை தோட்டங்கள் உள்ளன.

    இடையிடையே குறுக்கிடும் மித, அடர் வனப்பகுதிகள் பசுமையுடன் கண்ணை கவரும் வகையில் உள்ளன. தற்போது அங்கு நிலவி வரும் காலநிலையால் பனியும், பசுமையும் காண்போர் மனதை கொள்ளை கொள்ள செய்துள்ளது. சோலை வனங்களில் காணப்படும் சிங்கவால் குரங்குகள், காட்டெருமைகள், யானைகளை கண்டு சுற்றுலாபயணிகள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.
    குடிபோதையில் அடுத்தவர் வீட்டுக்குள் ஆடையின்றி புகுந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. தாக்கப்பட்டதால் குன்னூரில் பரபரப்பு ஏற்பட்டது.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(வயது 56). கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சியில் நீலகிரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்தார். மேலும் குன்னூர் நகர்மன்ற தலைவராக பதவி வகித்து உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தீபாவளி நாளில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் குடிபோதையில் இரவு 10 மணியளவில் ஓட்டுப்பட்டறை அருகே முத்தாளம்மன் பேட்டை குடியிருப்பு பகுதியில் உள்ள கோபி(47) என்பவரது வீட்டுக்குள் ஆடையின்றி நிர்வாண கோலத்தில் திடீரென புகுந்தார்.

    அப்போது வீட்டில் பெண்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரிடம், கோபி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அவரை கோபி தாக்கியதாக தெரிகிறது. இதனால் காயமடைந்ததாக கூறி குன்னூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கோபாலகிருஷ்ணன் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

    இதையடுத்து முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் தனது வீட்டிற்குள் நிர்வாணமாக நுழைந்தது குறித்து குன்னூர் நகர போலீஸ் நிலையத்தில் கோபி புகார் அளித்தார். மேலும் தன்னை தாக்கியதாக கோபி மீது கோபாலகிருஷ்ணன் புகார் கொடுத்தார். இதனால் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் நிர்வாணமாக அடுத்தவர் வீட்டுக்குள் புகுந்த காட்சி செல்போனில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குன்னூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


    அரகண்டநல்லூர் போலீஸ் நிலையம் எதிரே சப்-இன்ஸ்பெக்டர் மீது பட்டாசு கொளுத்திப்போட்டு கொலை செய்ய முயன்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    திருக்கோவிலூர்:

    விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் போலீஸ் நிலையம் எதிரே நேற்று முன்தினம் திருக்கோவிலூர்-விழுப்புரம் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக 5 பேர் கொண்ட கும்பல் நின்று கொண்டு பட்டாசு வெடித்தனர்.

    இதை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் டார்ஜான்(வயது 55) அவர்களிடம் சென்று போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தாமல் பட்டாசு வெடிக்குமாறும், அங்கிருந்து கலைந்து செல்லுமாறும் எச்சரித்தார்.

    இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் திடீரென பட்டாசை கொளுத்தி சப்-இன்ஸ்பெக்டர் டார்ஜான் மீது வீசினார். இதில் சுதாரித்துக்கொண்ட டார்ஜான் சற்று விலகி கொண்டதோடு, பட்டாசை வீசிய நபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றார்.

    கைதான ஆகாஷ், ஷானவாஸ், விக்னேஷ், சோமு ஆகியோரை காணலாம்

    இதனால் ஆத்திரமடைந்த மற்ற 4 பேரும் டார்ஜானை சரமாரியாக தாக்கினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸ் பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம், சப்-இன்ஸ்பெக்டர் புனிதவல்லி மற்றும் போலீசார் விரைந்து வந்து 4 பேரையும் மடக்கி பிடித்தனர். ஒருவர் மட்டும் தப்பியோடி விட்டாா்.

    பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், அரகண்டநல்லூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அர்ச்சுனன் மகன் ஆகாஷ்(19), சரவணன் மகன் விக்னேஷ்(27), கலியன் மகன் சோமு (35), வள்ளலார் கோவில் தெருவைச் சேர்ந்த சம்சுதீன் மகன் ஷானவாஸ் ஆகியோர் என்பதும், தப்பி ஓடியது அரகண்டநல்லூர் மகாத்மா காந்தி ரோட்டை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ஹரிதரன்(25) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 5 பேர் மீதும் கொலை முயற்சி உள்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் விக்னேஷ், ஆகாஷ், சோமு, ஷாநவாஸ் ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய ஹரிதரனை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×