என் மலர்tooltip icon

    நீலகிரி

    ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள், குடோன்கள் அடைக்கப்பட்டு இருந்தன. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
    ஈரோடு:

    நூல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஜவுளி உற்பத்தி தொழிலில் ஈடுபடும் வியாபாரிகள் ஜவுளி உற்பத்தி செய்த விலைக்கு விற்பனை செய்ய முடியாமல் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

    நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அல்லது மாதம் ஒருமுறை நூல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சார்பில் 2 நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி நேற்று முதல் நாள் நூல் விலை உயர்வை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள், குடோன்கள் அடைக்கப்பட்டு இருந்தன. இதன் காரணமாக நேற்று ஒரே நாளில் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இந்த கடைக்கு போராட்டத்திற்கு 18 அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

    இதைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக ஜவுளி கடைகள், குடோன்கள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும் திருவெங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, அகில்மேடு வீதி போன்ற பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. 2 நாட்கள் கடையடைப்பு போராட்டம் காரணமாக ரூ.100 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
    குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் விரிவாக்க பணியின்போது காட்டுயானைகள் வழித்தடம் அழிக்கப்பட்டதா? என்பது குறித்து கலெக்டர் கீர்த்தி பிரியதர்ஷினி நேரில் ஆய்வு செய்தார்.
    ஊட்டி:

    குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் காட்டுயானைகள் நடமாட்டம் உள்ளது. இதனால் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும் என்று வனத்துறை மூலம் ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே அந்த சாலையில் ஒருசில வளைவுகள் குறுகலாக இருப்பதால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்ல வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். மேலும் வாகனங்களை திருப்ப முடியாத நிலை இருந்தது. அந்த வளைவுகளை கண்டறிந்து விரிவுபடுத்தி தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே ராதாகிருஷ்ணன் பாலம் அருகே பழைய தடுப்புச்சுவர் அகற்றப்பட்டு, சாலையை விரிவுபடுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. அந்த இடம் வழியாக காட்டுயானைகள் சென்று வருவதால், அவை இடம் மாறி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகும் அபாயம் உள்ளதாக புகார் எழுந்தது.

    இந்த நிலையில் நேற்று நீலகிரி மாவட்ட கலெக்டர்(பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு யானை வழித்தடம் அழிக்கப்பட்டு உள்ளதா? என்று ஆய்வு செய்தார். காட்டுயானைகள் கடந்து செல்வதற்கு இடையூறு இல்லாமல் சாலை அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வலதுபுறம் பாறை இருப்பதால், வாகனஙகள் இடதுபுறம் ஒதுங்கி செல்லும்போது விபத்தில் சிக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அப்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செல்வன், குன்னூர் வனச்சரகர் சசிகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    இதுகுறித்து கோட்ட பொறியாளர் செல்வன் கூறியதாவது:-

    குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் குறிப்பிட்ட இடம் குறுகலாக இருந்ததால் அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. காட்டுயானைகள் கடந்து செல்வதற்கு வசதியாக சிறிது இடம் விடப்பட்டு, நிலையான இடத்தை ஏற்படுத்தி அகலப்படுத்துவது குறித்து நீலகிரி வன கோட்ட அலுவலரிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அனுமதி கிடைத்த பிறகு யானைகள் கடக்க வழிவிட்டு சாலை அகலப்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தற்போது அங்கு சாலையை அகலப்படுத்தும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
    நான்கு பேர் சேகரிடம் காரை வாங்கிக்கொண்டு அவர் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்துக் கொண்டு காரில் தப்பிச் சென்றனர்.
    திருப்பூர்:

    கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த மாமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 45). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். மேலும் கார் வாங்கி விற்பனை செய்யும் தொழிலும் செய்து வருகிறார். 

    இந்நிலையில் சேகரை வாலிபர் ஒருவர் தொடர்புகொண்டு தனக்கு கார் வேண்டும் குறைந்த விலையில் கார் இருக்கிறதா? என கேட்டுள்ளார். இதனையடுத்து சேகர் தன்னிடம் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான கார் ஒன்று இருப்பதாக கூறியுள்ளார். 

    உடனடியாக அந்த வாலிபர்  காரை எடுத்துக்கொண்டு திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த தளி பகுதிக்கு வரும்படி கூறியுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய சேகர் காரை எடுத்துக்கண்டு அவர் கூறிய இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு தயாராக நின்ற நான்கு பேர் சேகரிடம் காரை வாங்கிக்கொண்டு அவர் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்துக் கொண்டு காரில் தப்பிச் சென்றனர். 

    இதனால் அதிர்ச்சி அடைந்த சேகர் உடனடியாக திருப்பூர் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். மேலும் பக்கத்து மாவட்டமான கோவை மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

    இதனையடுத்து போலீசார் கடத்தல் கார் குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த கார் பொள்ளாச்சி அருகே சென்று கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அந்த காரை மடக்கி பிடித்து காரில் இருந்த 4 பேரையும் பிடித்தனர். பின்னர் தளி போலீசார் 4 பேரையும் திருப்பூர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 

    விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராபின்ராஜ் (24), அருள்ராஜ் (28), சேவாக் (20), மரியாஅபின் (29) என்பது தெரியவந்தது. பின்னர் அவர்களிடமிருந்த கார் மற்றும் 4 பவுன் நகையை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

    கார் மற்றும் நகையை வழிப்பறி செய்த இரண்டு மணி நேரத்தில் மீட்ட தனிப்படை போலீசாரை திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார். 
    நீலகிரி மாவட்டத்தில் 8-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் 318 மையங்களில் நடந்தது. மேலும் 20 வாகனங்கள் மூலம் தொலை தூர இடங்களில் வசிக்கும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தகுதி வாய்ந்த அனைவருக்கும் 2-வது டோஸ் தடுப்பூசி 100 சதவீதம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் 8-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் 318 மையங்களில் நடந்தது. மேலும் 20 வாகனங்கள் மூலம் தொலை தூர இடங்களில் வசிக்கும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பிற மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து வருகை தந்த சுற்றுலா பயணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    8-ம் கட்ட முகாமில் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக போதுமான அளவு டோஸ்கள் இருப்பில் வைக்கப்பட்டது. முடிவில் 17,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    கேரட் தரத்துக்கு ஏற்ப விலை கிடைப்பதால் 2 மடங்காக விலை உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து இருக்கின்றனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பீன்ஸ் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்காக சரக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கப்படுகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ கேரட் விவசாயிகளிடம் இருந்து ரூ.20-க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்த விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகள் நஷ்டம் அடைந்து வந்தனர். மேலும் தோட்ட பராமரிப்பு செலவை கூட ஈடுகட்ட முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் தற்போது ஒரு கிலோ கேரட் ரூ.45 முதல் ரூ.50 வரை கொள்முதல் விலை கிடைக்கிறது. தரத்துக்கு ஏற்ப விலை கிடைப்பதால் 2 மடங்காக விலை உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

    ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அறுவடை செய்யப்படும் கேரட்டுகள் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு கழுவி சுத்திகரிக்கப்படுகிறது. பின்னர் மூட்டைகளில் வாகனங்கள் மூலம் வெளியிடங்களுக்கு விற்பனைக்காக எடுத்துச்செல்லப்படுகிறது.

    ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் ஏலம் மண்டிகளில் ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ.6 முதல் ரூ.10, பீட்ரூட் ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.30, பீன்ஸ் ரூ.60, டர்னீப் ரூ.50, நூல்கோல் ரூ.50, முள்ளங்கி ரூ.15 முதல் ரூ.20, மேரக்காய் ரூ.10 வரை விலை கிடைக்கிறது. மற்ற காய்கறிகளின் விலையும் சற்று உயர்ந்து உள்ளது.

    இருப்பினும் சமவெளி பகுதிகளில் தொடர் மழை பெய்வதால், அங்கிருந்து ஊட்டிக்கு கொண்டு வரப்படும் காய்கறிகள் வரத்து குறைந்து உள்ளது. இதனால் அந்த காய்கறிகள் விலை அதிகரித்து வருகிறது.

    ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.70 ஆக உயர்ந்து உள்ளது. பெரிய வெங்காயம் ரூ.60, சின்ன வெங்காயம் ரூ.60, வெண்டைக்காய் ரூ.120, கத்தரிக்காய் ரூ.120, பூண்டு ரூ.160 என விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    சீனாவின் டலியான் நகரில் உள்ள ஷுவாங்கே பல்கலைக்கழக நகரில் ஏராளமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
    பீஜிங்:

    கொரோனா தொற்று முதன் முதலில் சீனாவில் தான் ஏற்பட்டது. பின்னர் உலகின் மற்ற நாடுகளுக்கும் பரவத் தொடங்கியது.

    அதன்பிறகு பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் உச்ச நிலையில் இருந்தாலும் சீனாவில் கட்டுக்குள்ளேயே இருந்தது. இந்தநிலையில் சீனாவின் டலியான் நகரில் உள்ள ஷுவாங்கே பல்கலைக்கழக நகரில் ஏராளமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்த கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து சுமார் 1500 மாணவர்கள் அவர்கள் தங்கியிருந்த விடுதிகளிலும், ஓட்டல்களிலும் அடைத்து வைக்கப்பட்டனர்.

    அவர்களுக்கு காணொலி காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அவர்களுக்கான உணவுகள் அவர்களின் இருப்பிடத்திற்கே அனுப்பப்பட்டு வருகின்றன.
    சரவணா வீதியில் மழைநீர் வடிகால், தரைப்பாலம் கட்டும் பணி நடந்ததால் அங்கு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
    திருப்பூர்:

    எப்போதும் நெரிசல் நிறைந்து காணப்படும் திருப்பூர் அவிநாசி ரோட்டில் இருந்து பி.என்., ரோட்டுக்கு வரும் வழியாக 60 அடி ரோடு (ராம்நகர் சந்திப்பு) உள்ளது.

    இப்பாதையில் அதிகளவில் போக்குவரத்து இருப்பதால் மோட்டார் சைக்கிள், கார், ஆட்டோ உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் அதற்கு முன்பாக உள்ள சரவணா வீதியை பயன்படுத்தி வந்தன.

    அந்த வீதியில் மழைநீர் வடிகால், தரைப்பாலம் கட்டும் பணி நடந்ததால் அங்கு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது பணிகள் நடந்து முடிந்து விட்டது. 

    ஆனால் பாதை திறக்கவில்லை. இதனால் அனைத்து வாகனங்களும் 60 அடி ரோடு சென்று சுற்றி வருவதால் நெரிசல் அதிகமாகிறது. எனவே சரவணா வீதியை திறக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கும்கி யானைகள் மூலம் பாடந்தொரை பகுதியில் உள்ள கல்லீங்கரை, செளுக்காடி உள்ளிட்ட குடியிருப்பையொட்டி வனப்பகுதிகளிலும், அடர்ந்த வனப்பகுதிகளிலும் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதா? என வனத்துறையினர் கண்காணித்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா பாடந்தொரை பகுதியில் 2 காட்டு யானைகள் தினமும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

    விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, பாக்கு உள்ளிட்ட பயிர்களையும் சேதப்படுத்தி வருகிறது. இதுதவிர பெண் ஒருவரையும் யானை தாக்கியதில் அவர் காயம் அடைந்தார்.

    ஊருக்குள் யானைகள் புகுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். யானையை விரட்ட நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் உறுதியளித்தனர்.

    இதையடுத்து வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டுவதற்காக முதுமலையில் இருந்து கும்கி யானைகளான விஜய், சுஜய் வரவழைக்கப்பட்டன.

    உடனடியாக கும்கி யானைகள் மூலம் பாடந்தொரை பகுதியில் உள்ள கல்லீங்கரை, செளுக்காடி உள்ளிட்ட குடியிருப்பை யொட்டி வனப்பகுதிகளிலும், அடர்ந்த வனப்பகுதிகளிலும் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதா? என கண்காணித்தனர்.

    மேலும் கிராம எல்லைகளில் யானைகளை நிறுத்தி வைத்து காட்டு யானைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், கும்கி யானைகள் உதவியுடன் காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் வனப்பகுதிக்குள் விரட்டும் பணி நடந்து வருகிறது. மேலும் இப்பகுதியில் வசிக்க கூடிய மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்றும், தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    காதலனிடம் பேச முடியாத விரக்தியில் இளம்பெண் தனது பிறந்த நாள் அன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை:

    கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள இருகூர்ராம் நகர் 5வது வீதியை சேர்ந்தவர் சோமுராஜ். காய்கறி வியாபாரி. இவரது மகள் சுவாதி(18). இவர் 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தார்.

    இதனையடுத்து அவரை சோமுராஜ் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நாயக்கன்பட்டியில் உள்ள தனது தாய் சின்னபிள்ளை வீட்டில் தங்க வைத்தார். அங்கு இருந்தபோது மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் சோமுராஜூக்கு தெரியவரவே அவர் தனது மகளை கண்டித்தார். பின்னர் அவரை கடந்த செப்டம்பர் மாதம் கோவைக்கு அழைத்து வந்தார். சுவாதியிடம் செல்போன் இல்லாததால் தனது காதலனை தொடர்பு கொண்டு பேச முடியவில்லை. இதனால் கடந்த சில நாட்களாகவே அவர் மிகுந்த மன வேதனையில் இருந்து உள்ளார். இன்று சுவாதிக்கு பிறந்தநாள் என்பதால் அவரது பெற்றோர் புத்தாடைகள் எடுத்து வைத்து இருந்தனர். குளித்து விட்டு அந்த துணியை அணிந்து கொண்டு வந்தவுடன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்திருந்தனர்.

    அதன்படி இன்று காலை 7 மணியளவில் சுவாதி குளிப்பதற்காக தனது அறைக்கு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் அறையை விட்டு வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அறைக்கு சென்று கதவை தட்டினர். ஆனால் கதவு திறக்கப்படவே இல்லை.

    இதையடுத்து அறையின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது அறையில் உள்ள மின்விசிறியில் சுவாதி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். சுவாதி குளித்து முடித்து விட்டு பெற்றோர் எடுத்து தந்த புத்தாடையை அணிந்து கொண்டு அதன்பின்னரே தூக்கில் தொங்கியது தெரியவந்தது.

    இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வீட்டின் அறையை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கிய சுவாதியின் உடலை மீட்டனர். அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

    பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சுவாதி தூக்கில் தொங்கிய அறையில் கடிதம் ஒன்று இருந்தது.

    அதனை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், அம்மா, அப்பா நீங்கள் என்னை நன்றாக தான் வளர்த்தீர்கள். ஆனால் நான் தான் உங்களது பேச்சை கேட்கவில்லை. அடுத்த ஜென்மத்தில் நான் உங்கள் மகளாக பிறந்து உங்களது சொல் பேச்சை கேட்டு நடப்பேன் என எழுதியிருந்தார்.கடிதத்தை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மசினகுடியில் பிடிபட்ட ஆட்கொல்லி புலிக்கு மைசூரு மறுவாழ்வு மையத்தில் 27 நாட்களாக தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில் பூரண குணமடைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    கூடலூர்:

    முதுமலை புலிகள் காப்பகத்தில் வெளிமண்டல பகுதியான மசினகுடி மற்றும் கூடலூர் வனச்சரகத்தில் தேவன்- 1 பகுதியில் 1 ஆண்டுக்குள் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த பெண் உள்பட 4 பேரை புலி தாக்கி கொன்றது. இதைத்தொடர்ந்து ஆட்கொல்லி புலியை பிடிக்க வேண்டும் என கூடலூர், மசினகுடி பகுதியில் பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் 3 வாரங்களுக்கும் மேலாக ஆட்கொல்லி புலியை அடையாளம் கண்டு பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் உடனடியாக பிடிக்க முடியவில்லை. பின்னர் பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு கடந்த மாதம் 15-ந் தேதி மசினகுடி வனப்பகுதியில் பதுங்கி இருந்த ஆட்கொல்லி புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

    பின்னர் இரும்புக் கூண்டில் அடைத்தனர். அப்போது புலியின் உடலில் காயங்கள் இருப்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். ஆண் புலிகளுக்கு இடையே நடைபெற்ற சண்டையில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்து இருந்தனர். இதைத் தொடர்ந்து உடனடியாக ஆட்கொல்லி புலி கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள வனவிலங்கு மறுவாழ்வு சிகிச்சை மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு நேற்று 27- வது நாளாக ஆட்கொல்லி புலிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சிகிச்சை காலத்தில் உயிருடன் கோழிகள் மற்றும் மாட்டு இறைச்சிகள் புலிக்கு உணவாக வழங்கப்பட்டன. தனி அறையில் அடைக்கப்பட்டுள்ள புலி இரையை நன்கு சாப்பிட்டு வருகிறது. மேலும் அதன் உடலிலுள்ள காயங்களுக்கு கர்நாடக வன கால்நடை டாக்டர்கள் கொண்ட குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். இதில் புலியின் உடல்நிலை நன்கு முன்னேற்றம் அடைந்தது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, மசினகுடி வனத்தில் பிடிபட்ட புலி தொடர் சிகிச்சையால் பூரண குணம் அடைந்து உள்ளது. இதனால் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்வது குறித்து அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என்றனர்.

    கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
    உடுமலை:
     
    உடுமலையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள திருமூர்த்திமலையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள மக்கள் தங்களுக்கு பாதுகாப்பான வீடுகளும், வீட்டுமனைப்பட்டாவும் வழங்க வேண்டும் என அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதுவரை வழங்கப்படாததால் பெரும்பாலான மக்கள் கூரை அல்லது தகரத்தால் மேற்கூரைகள் வேய்ந்து, மண் சுவர்களால் ஆன வீடுகளில் வசித்து வருகின்றனர். 

    கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. மண் அரிப்பால்  சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டு சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. எஞ்சியிருக்கும் சுவர்களும் எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளன. 

    எனவே அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பான வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலம் முடியும் வரை பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    இதுகுறித்து மலைவாழ் பெண்கள் சிலர் கூறியதாவது:- 

    கனமழையால் எங்கள் பகுதியில் உள்ள பலரது வீடுகள் சேதமடைந்துள்ளன, தங்குவதற்கு பாதுகாப்பான இடமின்றி அண்டை வீட்டாரின் வீடுகளில் சிலர் தங்கியுள்ளனர். சமையல் செய்ய முடியாத நிலையில் வீடுகள் உள்ளதால், கோயிலில் ஒரு வேளை வழங்கப்படும் மதிய உணவைத்தான் உண்டு வருகிறோம். 

    இங்குள்ளவர்களில் ஒரு சிலருக்கு மட்டும் வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது.தகுதியுள்ள அனைவருக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    மேலும் எங்கள் பகுதியில் கழிவறை வசதி, தெருவிளக்கு ஏற்படுத்தித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 
    கனமழை, நிலச்சரிவு அபாயம் இருப்பதால் நீலகிரிக்கு செல்வதை தவிர்க்க பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில், வரும் 13,14,15,16 -ஆகிய தேதிகளில்  நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. 

    இந்நிலையில் நீலகிரிக்கு செல்வதை தவிர்க்க பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் கனமழை, நிலச்சரிவு அபாயம் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.
    ×