search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டி கேரட் சுத்திகரிப்பு நிலையத்தில் கேரட்டுகளை கழுவும் பணி நடந்ததை காணலாம்
    X
    ஊட்டி கேரட் சுத்திகரிப்பு நிலையத்தில் கேரட்டுகளை கழுவும் பணி நடந்ததை காணலாம்

    ஊட்டியில் கேரட் கொள்முதல் விலை உயர்வு- விவசாயிகள் மகிழ்ச்சி

    கேரட் தரத்துக்கு ஏற்ப விலை கிடைப்பதால் 2 மடங்காக விலை உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து இருக்கின்றனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பீன்ஸ் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்காக சரக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கப்படுகிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ கேரட் விவசாயிகளிடம் இருந்து ரூ.20-க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்த விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகள் நஷ்டம் அடைந்து வந்தனர். மேலும் தோட்ட பராமரிப்பு செலவை கூட ஈடுகட்ட முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் தற்போது ஒரு கிலோ கேரட் ரூ.45 முதல் ரூ.50 வரை கொள்முதல் விலை கிடைக்கிறது. தரத்துக்கு ஏற்ப விலை கிடைப்பதால் 2 மடங்காக விலை உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

    ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அறுவடை செய்யப்படும் கேரட்டுகள் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு கழுவி சுத்திகரிக்கப்படுகிறது. பின்னர் மூட்டைகளில் வாகனங்கள் மூலம் வெளியிடங்களுக்கு விற்பனைக்காக எடுத்துச்செல்லப்படுகிறது.

    ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் ஏலம் மண்டிகளில் ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ.6 முதல் ரூ.10, பீட்ரூட் ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.30, பீன்ஸ் ரூ.60, டர்னீப் ரூ.50, நூல்கோல் ரூ.50, முள்ளங்கி ரூ.15 முதல் ரூ.20, மேரக்காய் ரூ.10 வரை விலை கிடைக்கிறது. மற்ற காய்கறிகளின் விலையும் சற்று உயர்ந்து உள்ளது.

    இருப்பினும் சமவெளி பகுதிகளில் தொடர் மழை பெய்வதால், அங்கிருந்து ஊட்டிக்கு கொண்டு வரப்படும் காய்கறிகள் வரத்து குறைந்து உள்ளது. இதனால் அந்த காய்கறிகள் விலை அதிகரித்து வருகிறது.

    ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.70 ஆக உயர்ந்து உள்ளது. பெரிய வெங்காயம் ரூ.60, சின்ன வெங்காயம் ரூ.60, வெண்டைக்காய் ரூ.120, கத்தரிக்காய் ரூ.120, பூண்டு ரூ.160 என விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    Next Story
    ×