என் மலர்tooltip icon

    நீலகிரி

    • நீலகிரி மாவட்டத்தின் சாலைகளில் மயில் கொன்றை மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
    • மயில் கொன்றை மரத்தின் பூ, இலை, காய்கள் அனைத்தும் மருத்துவம் நிறைந்ததாகும்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தின் சாலைகளில் மயில் கொன்றை மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

    குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகத்தின் சாலை ஓரங்களிலும், கோத்தகிரி சாலையிலும் காண முடியும். இந்த பூக்கள் கடும் வறட்சிக் காலங்களில் பூத்துக்குலுங்கும் தன்மை கொண்டவை.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த செடிகளில் மலர்கள் பூக்க தொடங்கின. தற்போது செடிகளில் கொன்றை மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

    கோடை சீசனை முன்னிட்டு முதுமலை புலிகள் காப்பகத்தை காண வருகை தரும் சுற்றுலாப்பயணிகளையும் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையிலும் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளது.

    சாலையின் இருபுறங்களிலும் பூத்துக்குலுங்கும் இந்த மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. அவர்கள் தங்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு, பூக்களை பார்த்து ரசித்து, புகைப்படமும் எடுத்து மகிழ்கின்றனர்.

    மயில் கொன்றை ஒரு பூக்கும் தாவரமாகும். இதை மயிற்கொன்றை எனவும் அழைக்கின்றனர். இதன் பூ பார்படோசு நாட்டின் தேசியப் பூவாகும். இது அலங்காரத்திற்காக வளர்க்கப்படுகிறது.

    கொன்றை மரங்கள் எல்லா இடங்களிலும் சாதாரணமாக காணக் கிடைக்கக் கூடிய தாவரமாகும். இந்த பூக்கள் மஞ்சள் நிறம் கலந்து சிவப்பு நிறத்திலும் நீல நிறத்திலும் காணப்படும். இந்த பூக்கள் முதிர்ந்து அவரை காய்களை போன்ற காய்களை உருவாக்குகிறது.

    இதே மயில் கொன்றை பூக்கள் மஞ்சள் நிறத்திலும் பூக்கின்றன. இதனால் சிவப்பு மயில் கொன்றை என்றும், மஞ்சள் மயில் கொன்றை என்றும் 2 வகையான பூக்களும் காணப்படுகின்றன. மயிலின் உருவத்தை ஒத்திருப்பதால் இதற்கு மயில் கொன்றை என்ற பெயர் ஏற்பட்டுள்ளது.

    இதுதவிர மே மலர்கள் எனவும், குல்மோஹர் எனவும் அழைக்கப்பட்டு வருகிறது.

    இந்த மயில் கொன்றை மரத்தின் பூ, இலை, காய்கள் அனைத்தும் மருத்துவம் நிறைந்ததாகும்.


    • நாகராஜ் தனியார் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
    • மணிகண்டன் தற்காலிக வேட்டை தடுப்பு காவலராக பணிபுரிந்து வருகிறார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அணிக்கொரை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 22). இவர் தனியார் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் ஊட்டியில் இருந்து அணிக்கொரை செல்வதற்காக மார்லிமந்து செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த ஸ்கூட்டி இருசக்கர வாகனம் மீது மோதியது.

    இதில் நாகராஜ் காயமடைந்தார். பின்னர் இருதரப்பிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது ஸ்கூட்டியில் வந்த பெண் உள்பட 3 பேர், நாகராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இதுகுறித்து நாகராஜ் புதுமந்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அல்லிராணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் நாகராஜை தாக்கியது கடநாட்டை சேர்ந்த மணிகண்டன் (29), ஊட்டி பசுவையா நகரை சேர்ந்த சத்தியவாணி, விஷ்ணு என்பது தெரியவந்தது. இதில் மணிகண்டன் தற்காலிக வேட்டை தடுப்பு காவலராக பணிபுரிவதும், மதுபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது
    • காருக்குள் சிக்கி இருந்த 4 வாலிபர்களை மீட்டனர்.

    கூடலூர்,

    கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சமவெளி பகுதியில் இருந்து நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் கேரள பதிவு எண் கொண்ட கார் முதுமலை தெப்பக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த வழியாக சென்ற வாகன டிரைவர்கள் காருக்குள் சிக்கி இருந்த 4 வாலிபர்களை மீட்டனர். அவர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்த மசினகுடி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு கார் மீட்கப்பட்டது.

    • பழங்குடியின கிராமங்களில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளது.
    • சாலையின் குறுக்கே யானைகளை கண்டால் ஒலிப்பான் ஒலிப்பதை தவிர்க்க வேண்டும்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி அருகே குஞ்சப்பனை, மாமரம், கீழ்கூப்பு, மேல்கூப்பு, தட்டப்பள்ளம், கோழிக்கரை, முள்ளூர், அறையூர், கரிக்கையூர், செம்மனாரை உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் பலா மரங்கள் உள்ளன.

    தற்போது சீசன் காரணமாக மரங்களில் பலா பிஞ்சுகள் காய்த்து குலுங்கி வருகின்றன. இந்த பழங்களை உண்பதற்காக சமவெளி பகுதியில் இருந்து காட்டு யானைகள் வந்து முள்ளூர் பகுதியில் தேயிலை தோட்டத்தில் முகாமிட்டு உள்ளன.

    அவை அவ்வப்போது சாலைகளில் நடமாடி வருவதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    குஞ்சப்பனை சுற்றுவட்டார பழங்குடியின கிராமங்களில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளது. இந்த பழங்களை உண்பதற்காக காட்டு யானைகள் சமவெளி பகுதியில் இருந்து வந்து முகாமிட்டு உள்ளன.

    எனவே கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் தங்களது வாகனங்களை இயக்க வேண்டும். சாலையின் குறுக்கே யானைகளை கண்டால் ஒலிப்பான் ஒலிப்பதை தவிர்ப்பதுடன், யானைகளுக்கு தொல்லை கொடுக்கவோ அல்லது செல்போனில் படம் பிடிக்கவோ முயற்சி செய்யக்கூடாது. இதேபோல பழங்குடியின மக்கள் அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் வீட்டை விட்டு தனியாக வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.

    பணிக்கு செல்லும்போது தொழிலாளர்கள் ஒன்றாக செல்ல வேண்டும். தனியாகச் செல்லக்கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர். கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையோர கிராமங்கள் மட்டுமின்றி காட்டு யானைகள் கடந்த சில வாரங்களாக பலா மரங்கள் இல்லாத கொணவக்கரை, பர்ன்சைடு, கூக்கல்தொரை உள்ளிட்ட பகுதிகளிலும் உலா வந்த வண்ணம் உள்ளது.

    ஓவேலி, தா்மகிரி ஆகிய பகுதிகளுக்கும் சென்ற பொது மக்களை சந்தித்து மனுக்களை பெற்றாா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கூடலூரில் ஆ.ராசா எம்.பி. மக்களை சந்தித்து அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.

    தொடர்ந்து அள்ளூா்வயல் பகுதிக்குச் சென்ற அவா், யானைக் தாக்கி உயிரிழந்த பழங்குடியின முதியவா் கருமனின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் சொந்த நிதியை வழங்கினாா்.

    செம்பாலா, நந்தட்டி, சளிவயல் மற்றும் ஓவேலி, தா்மகிரி ஆகிய பகுதிகளுக்கும் சென்ற பொது மக்களை சந்தித்து மனுக்களை பெற்றாா்.

    அவருடன் மாவட்டச் செயலாளா் முபாரக், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், மாநில பொறியாளா் அணி துணை செயலாளா் பரமேஸ்குமாா், நகரச் செயலாளா் இளஞ்செழியன், தொ.மு.ச மண்டல பொதுச் செயலாளா் நெடுஞ்செழியன் ஆகியோரும் உடன் சென்றனர்.

    • கட்டிலில் உடல் கருகிய நிலையில் சிதம்பரம் பிணமாக கிடந்தார்.
    • போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோத்தகிரி,

    கோத்தகிரியை அடுத்த முல்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 73). இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி விட்டது. சிதம்பரம் மட்டும் தனியாக வசித்து வந்தார்.

    இன்று காலை சிதம்பரத்தை பார்க்க அவரது மகள் வந்தார். அப்போது கட்டிலில் படுத்த நிலையில் உடல் கருகிய நிலையில் சிதம்பரம் பிணமாக கிடந்தார். இதுபற்றி அறிந்த கோத்தகிரி போலீசார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    சிதம்பரம் கட்டில் அருகே தீப்பற்ற வைத்து குளிர்காய்வது வழக்கம். அதேபோல் குளிர் காய தீ மூட்டியபோது விபத்து ஏற்பட்டு அவர் பலியாகி இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது.

    • கோரிக்கைகளை வலியுறுத்தி தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இதில் பலர் கலந்துகொண்டனர்.

    ஊட்டி,

    புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களில் 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 10 சதவீதம் ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் நல சங்கம் சார்பில் கூடலூர் தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்ட தலைவர் சாமுலேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் சிவராஜ் தொடங்கி வைத்தார். வட்ட செயலாளர் அமீது கோரிக்கை குறித்து விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்துகொண்டனர்.

    • பாத்திரம் கொடுக்க சென்ற சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றார்.
    • போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    ஊட்டி,

    ஊட்டி அருகே உள்ள பிங்கர் போஸ்ட் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் லெஸ்லி ரிச்சர்ட் (வயது 78). இவரது வீட்டு அருகே 5-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று ஜான் லெஸ்லி ரிச்சர்டிடம், அந்த சிறுமியின் பாட்டி சில பாத்திரங்களை வாங்கி இருந்தார். அந்த பாத்திரங்களை ஜான் லெஸ்லி ரிச்சர்ட் வீட்டில் கொடுத்து விட்டு வரும்படி கூறி சிறுமியை பாட்டி அனுப்பி வைத்தார்.

    வீட்டில் ஜான்லெஸ்லி ரிச்சர்ட் மட்டும் தனியாக இருந்தார். பாத்திரம் கொடுக்க சென்ற சிறுமியிடம் தவறாக நடக்க முயன்று அவர் பாலியல் தொல்லை கொடுத்தார்.

    அவரிடம் இருந்து சிறுமி தப்பி வெளியே ஓடி வந்தார். பின்னர் தனது பாட்டியிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுதார்.

    இதுதொடர்பாக பாட்டி, பிங்கர் போஸ்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜான் லெஸ்லி ரிச்சர்ட்டை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் புவனேஸ்வரிக்கு ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.
    • மேலும் மாணவிக்கு புத்தகம் மற்றும் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு குழுமம் அறிவியலில் புதுமை கண்டு பிடிப்புகளுக்கான ரூ.50 ஆயிரம் பரிசு தொகை பெற்றமைக்காக பாக்யா நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் 8 -ம் வகுப்பு மாணவி புவனேஸ்வரி மாவட்ட கலெக்டர் அம்ரித்திடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில், கடந்த 2022 செப்டம்பர் மாதம் 6 முதல் 12 -ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அறிவியலில் புதுமை கண்டுபிடிப்புகளுக்கான விருதிற்காக அறிவிக்கப்பட்டு, ஆய்வு கட்டுரை மற்றும் ஆய்வின் புகைப்படங்கள் இணையவழி வாயிலாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் 3 கட்ட அறிவியல் அறிஞர்கள் வாயிலாக தேர்வு நடைபெற்றது.

    இதில் கண்டுபிடிப்புகள் 14 தேர்ந்தெடுக்கப்பட்டதில் தேசிய அளவில் நீலகிரி மாவட்டம் பாக்யா நகர் ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளியில் பயிலும் 8 -ம் வகுப்பு மாணவி புவனேஸ்வரி குறைந்த விலையில் புதுமையான மறு சுழற்சி காகித தீப்பெட்டி உற்பத்தி எந்திரம் என்ற தலைப்பில் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

    அந்த காசோலையை கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றதை தொடர்ந்து கலெக்டர் அம்ரித், மாணவிக்கு புத்தகம் மற்றும் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், பாக்யா நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் சுந்தரம், பெற்றோர் பாக்யம் ஆகியோர் உடனிருந்தனர்.

    • தொடர் விடுமுறையால் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
    • ஓட்டல்களில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    ஊட்டி,

    தமிழகத்தில் சமவெளி பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    சமவெளியில் வெயில் நிலவி வரும் அதே வேளை யில், நீலகிரி மாவட்டத்தில் குளுமையான சீதோஷ்ண நிலை காணப்படுகிறது.இதையடுத்து நீலகிரியில் நிலவி வரும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.கடந்த 2 நாட்களில் மட்டும் 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    ஊட்டியில் 500-க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவருமே அறை எடுத்து இங்கு தங்குவது வழக்கம்.

    இதற்காக அவர்கள் சுற்றுலாவுக்கு ஊரில் இருந்து புறப்படும் முன்பே இணையதளத்தில் சென்று விடுதியை புக் செய்வது வழக்கம்.

    தற்போது கோடை சீசன் தொடங்கி நடந்து வருகிறது. சமவெளி பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரிப்பதால் பலர் தங்களது குடும்பத்தி னருடன் ஊட்டிக்கு சுற்றுலா வருகின்றனர்.

    இந்த நிலையில் தங்கும் விடுதிகளில் வாடகை கட்டணம் வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்து உள்ளது. கடந்த வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை களில் விடுதி கட்டணம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    இது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட மிக அதிகமாகும். இதனால் ஊட்டிக்கு வரக்கூடிய நடுத்தர மற்றும் ஏழை சுற்றுலா பயணிகள் மி கவும் பாதிப்படைந்து ள்ளனர். விடுதி கட்டணம் மட்டு மின்றி, லாட்ஜ் அறைகள், உணவு பொருட்களின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது.

    இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். காசு அதிகம் கொடுத்து உணவு வாங்கி சாப்பிட்டாலும், அந்த உணவு தரமாக இருக்க வேண்டும் என அனை வரும் எதிர்பார்ப்பது தான். ஆனால் அங்குள்ள பல ஓட்டல்களில் காசை அதிகமாக வாங்கி கொண்டு தரமற்ற உணவுகளை விற்பதாக சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    சமீபத்தில் கூட ஊட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் கெட்டுபோன உணவு பரிமாறப்பட்டதாக பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணி வீடியோவை பகிர்ந்திருந்தது நினைவுகூரத்தக்கது.

    2 நாள்கள் ஊட்டிக்கு வந்து சுற்றுலா தலங்களை பார்வையிட்டு, நிம்மதியாக தங்கி செல்லலாம் என வரும் சுற்றுலா பயணிகளுக்கு விடுதி கட்டணம் உயர்வு, தரமற்ற உணவு போன்றவை அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளன.

    எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

    • ஆ.ராசா எம்.பி பழங்குடியின மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
    • திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது

    அரவேனு,

    கோத்தகிரி அருகே பழங்குடியின குறைதீர்ப்பு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    விழாவில் ஆ.ராசா எம்.பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பழங்குடியின மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    முகாமில் பழங்குடியின மக்கள் தங்கள் கிராம பகுதிகளில் சாலைகள் விரிவாக்கம், பஸ் வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என மனு அளித்தனர்.

    மனுவை பெற்று கொண்ட ஆ.ராசா எம்.பி., மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    மேலும் பழங்குடியின கிராம மக்களுக்கு தற்போது நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் அவர்களின் வாழ்க்கை தரம் மேம்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.இதில் கலெக்டர் அம்ரித், நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு. முபாரக், குன்னூர் கோட்டாட்சியர் பூஷனகுமார், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஷ், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராம்குமார், தாசில்தார் காயத்திரி, கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தந்தி மாரியம்மன் கோவிலில் நடந்த குண்டம் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர்.
    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த தந்தி மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து ஒன்றரை மாதம் திருவிழா நடக்கிறது.

    இந்த கோவில் திருவிழாவின் போது நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகையில் இந்து, கிறிஸ்தவர்கள், முஸ்லிம் மதத்தினர் இணைந்து குண்டம் திருவிழாவினை நடத்துவது சிறப்பம்சமாகும்.

    இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா நேற்று நடந்தது. இதனையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்து.

    இதனைத் தொடர்ந்து மாலை தந்தி மாரியம்மன் கோவிலில் இருந்து அம்மன் ஊர்வலத்துடன் குண்டம் இறங்க காப்பு கட்டிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் குழந்தைகளுடன் ஊர்வலமாக வி.பி. தெரு காய்கறி மார்க்கெட் அருகே குண்டம் அமைக்கப்பட்ட பகுதிக்கு வந்தனர்.

    பின்னர் தந்தி மாரியம்மன் குண்டத்தை 3 முறை வலம் வந்ததை தொடர்ந்து, காப்பு கட்டிய பெண்கள், ஆண்கள், குழந்தைகள் குண்டம் இறங்கினர்.

    குண்டம் திருவிழாவை காண உள்ளூர் மட்டுமின்றி, வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் குண்டம் நிகழ்ச்சியை பார்த்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை ஹிந்து முஸ்லிம் கிறிஸ்தவ நற்பணி மன்றம் மற்றும் அறநிலையத்துறை செய்திருந்தது.

    ×