என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதுமலை, கோத்தகிரி சாலைகளில் பூத்து குலுங்கும் மயில் கொன்றை மலர்கள்- சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து மகிழ்ச்சி
    X

    முதுமலை, கோத்தகிரி சாலைகளில் பூத்து குலுங்கும் மயில் கொன்றை மலர்கள்- சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து மகிழ்ச்சி

    • நீலகிரி மாவட்டத்தின் சாலைகளில் மயில் கொன்றை மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
    • மயில் கொன்றை மரத்தின் பூ, இலை, காய்கள் அனைத்தும் மருத்துவம் நிறைந்ததாகும்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தின் சாலைகளில் மயில் கொன்றை மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

    குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகத்தின் சாலை ஓரங்களிலும், கோத்தகிரி சாலையிலும் காண முடியும். இந்த பூக்கள் கடும் வறட்சிக் காலங்களில் பூத்துக்குலுங்கும் தன்மை கொண்டவை.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த செடிகளில் மலர்கள் பூக்க தொடங்கின. தற்போது செடிகளில் கொன்றை மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

    கோடை சீசனை முன்னிட்டு முதுமலை புலிகள் காப்பகத்தை காண வருகை தரும் சுற்றுலாப்பயணிகளையும் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையிலும் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளது.

    சாலையின் இருபுறங்களிலும் பூத்துக்குலுங்கும் இந்த மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. அவர்கள் தங்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு, பூக்களை பார்த்து ரசித்து, புகைப்படமும் எடுத்து மகிழ்கின்றனர்.

    மயில் கொன்றை ஒரு பூக்கும் தாவரமாகும். இதை மயிற்கொன்றை எனவும் அழைக்கின்றனர். இதன் பூ பார்படோசு நாட்டின் தேசியப் பூவாகும். இது அலங்காரத்திற்காக வளர்க்கப்படுகிறது.

    கொன்றை மரங்கள் எல்லா இடங்களிலும் சாதாரணமாக காணக் கிடைக்கக் கூடிய தாவரமாகும். இந்த பூக்கள் மஞ்சள் நிறம் கலந்து சிவப்பு நிறத்திலும் நீல நிறத்திலும் காணப்படும். இந்த பூக்கள் முதிர்ந்து அவரை காய்களை போன்ற காய்களை உருவாக்குகிறது.

    இதே மயில் கொன்றை பூக்கள் மஞ்சள் நிறத்திலும் பூக்கின்றன. இதனால் சிவப்பு மயில் கொன்றை என்றும், மஞ்சள் மயில் கொன்றை என்றும் 2 வகையான பூக்களும் காணப்படுகின்றன. மயிலின் உருவத்தை ஒத்திருப்பதால் இதற்கு மயில் கொன்றை என்ற பெயர் ஏற்பட்டுள்ளது.

    இதுதவிர மே மலர்கள் எனவும், குல்மோஹர் எனவும் அழைக்கப்பட்டு வருகிறது.

    இந்த மயில் கொன்றை மரத்தின் பூ, இலை, காய்கள் அனைத்தும் மருத்துவம் நிறைந்ததாகும்.


    Next Story
    ×