search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூரில் 3 மதத்தினர் இணைந்து நடத்திய குண்டம் திருவிழா
    X

    குன்னூரில் 3 மதத்தினர் இணைந்து நடத்திய குண்டம் திருவிழா

    • தந்தி மாரியம்மன் கோவிலில் நடந்த குண்டம் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர்.
    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த தந்தி மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து ஒன்றரை மாதம் திருவிழா நடக்கிறது.

    இந்த கோவில் திருவிழாவின் போது நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகையில் இந்து, கிறிஸ்தவர்கள், முஸ்லிம் மதத்தினர் இணைந்து குண்டம் திருவிழாவினை நடத்துவது சிறப்பம்சமாகும்.

    இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா நேற்று நடந்தது. இதனையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்து.

    இதனைத் தொடர்ந்து மாலை தந்தி மாரியம்மன் கோவிலில் இருந்து அம்மன் ஊர்வலத்துடன் குண்டம் இறங்க காப்பு கட்டிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் குழந்தைகளுடன் ஊர்வலமாக வி.பி. தெரு காய்கறி மார்க்கெட் அருகே குண்டம் அமைக்கப்பட்ட பகுதிக்கு வந்தனர்.

    பின்னர் தந்தி மாரியம்மன் குண்டத்தை 3 முறை வலம் வந்ததை தொடர்ந்து, காப்பு கட்டிய பெண்கள், ஆண்கள், குழந்தைகள் குண்டம் இறங்கினர்.

    குண்டம் திருவிழாவை காண உள்ளூர் மட்டுமின்றி, வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் குண்டம் நிகழ்ச்சியை பார்த்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை ஹிந்து முஸ்லிம் கிறிஸ்தவ நற்பணி மன்றம் மற்றும் அறநிலையத்துறை செய்திருந்தது.

    Next Story
    ×