என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • 6 பேரிடம் இருந்து ரூ.17 லட்சத்தை ‘கியூ’ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • கியூ’ பிரிவு போலீசார் வேளாங்கண்ணியில் இருந்த வரதராஜன், ரவிச்சந்திரன், அன்பரசன் ஆகியோரை கைது செய்தனர்

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து படகு மூலம் வெளிநாட்டுக்கு இலங்கை அகதிகள் திருட்டுத்தனமாக செல்ல இருப்பதாக நாகை மாவட்ட 'கியூ' பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் வேளாங்கண்ணியில் உள்ள விடுதிகளில் தீவிர சோதனை நடத்தினர்.

    அப்போது அங்குள்ள விடுதியில் தங்கியிருந்த தூத்துக்குடி மாவட்டம் குளத்துவாய்ப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த கேனுஜன்(வயது 34), கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி முகாமை சேர்ந்த ஜெனிபர்ராஜ்(23), தினேஷ்(18), புவனேஸ்வரி(40), செய்யாறு கீழ்புதுப்பாக்கம் முகாமை சேர்ந்த துஷ்யந்தன்(36), வேலூர் வாலாஜாப்பேட்டை குடிமல்லூர் அகதிகள் முகாமை சேர்ந்த சதீஸ்வரன்(32) ஆகிய 6 பேரை பிடித்து வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அவர்கள் 6 பேரும் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான பதிவு செய்யப்படாத விசைப்படகில் திருட்டுத்தனமாக வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல திட்டமிட்டதும், இதற்காக தங்களது முகாம்களில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு புறப்பட்டு வேளாங்கண்ணிக்கு வந்து விடுதியில் தங்கி இருந்ததும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    இதனையடுத்து இவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்கள் 6 பேரிடம் இருந்து ரூ.17 லட்சத்தை 'கியூ' பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து நடந்த விசாரணையில் இவர்கள் 6 பேரும் நியூசிலாந்து நாட்டிற்கு திருட்டுத்தனமாக படகில் செல்ல முயன்றது தெரிய வந்தது. இவர்கள் நியூசிலாந்து செல்வதற்கு சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அகதிகள் முகாமை சேர்ந்த வரதராஜன்(38), விழுப்புரம் மாவட்டம் கீழ்புத்துப்பட்டு முகாமை சேர்ந்த ரவிச்சந்திரன்(41), திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு முகாமை சேர்ந்த அன்பரசன்(29) ஆகிய 3 பேரும் சேர்ந்து உதவியதும், அவர்கள் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து 'கியூ' பிரிவு போலீசார் வேளாங்கண்ணியில் இருந்த வரதராஜன், ரவிச்சந்திரன், அன்பரசன் ஆகியோரை கைது செய்தனர். இதில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகள் 9 பேரிடமும் 'கியூ' பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
    • தலா ரூ. 10 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்டப்பட்டன.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட டாடா நகர், சேவாபாரதி காமராஜ் நகர், நாகூர் அமிர்தா நகர் ஆகிய பகுதிகளில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தலா ரூ. 10 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்டப்பட்டன.

    அங்கன்வாடி மையத்தின் புதிய கட்டிடங்களை, கலெக்டர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர்கெளதமன் ஆகியோர் முன்னிலையில், முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

    தொடர்ந்து அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    இந்நிகழ்வில், நாகை நகர்மன்றத் தலைவர் மாரிமுத்து, துணைத் தலைவர்செந்தில் குமார், நகராட்சி ஆணையர்ஸ்ரீதேவி, நகர்மன்ற உறுப்பினர்கள் ஞானமணி, கமலநாதன், தியாகராஜன் மற்றும் நகராட்சி செயற்பொறியாளர் ஆகியோர் பங்கேற்றனர்.

    • காய்கறி, மளிகை கடைகள் நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் இருந்தன.
    • பேரூராட்சி மூலம் வாடகை செலுத்தக்கோரி தொடர்ந்து பல அறிவிப்புகள் அனுப்பப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்ப்ட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம், கடைகள் மற்றும் மீன் மற்றும் பல்பொருள் அங்காடியில் உள்ள காய்கறி, மளிகை கடைகளுக்கு நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் இருந்த குத்தகைதாரர்களுக்கு பேரூராட்சி மூலம் வாடகை செலுத்த கோரி தொடர்ந்து பல அறிவிப்புகள் அனுப்பப்பட்டது.

    ஆனால் இது நாள் வரை வாடகை செலுத்தாத 15 கடைகளை காவல் துறை, வருவாய் துறையின் முன்னிலையில் செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி ஊழியர்களால் கடைகளை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    • போட்டியில் 510 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டி வேதாரண்யம் தூய அந்தோணியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    போட்டியை வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி தொடங்கி வைத்தார்.

    இதில் 510 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர், போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

    விழாவிற்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் தலைமை தாங்கி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.

    இதில் பள்ளி தாளாளர் நித்திய சகாயராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சதாசிவம், உதயம் முருகையன், வேதாரண்யம் வர்த்தக சங்க தலைவர் தென்னரசு, வக்கீல் அன்பரசு, புயல் ஆசிரியர் தட்சிணாமூர்த்தி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
    • ஆண்டுதோறும் நடைபெறும் நெல் மகோற்சவ விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருக்குவளை தியாகராஜ சுவாமி கோவிலில் நெல் மகோற்சவ விழா நடைபெற்றது.

    தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஸ்ரீ கல்யாணசுந்தரா் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளி, கிழாா் தம்பால் நெல் கிடைத்ததை சுந்தரமூா்த்தி சுவாமிகளிடம் தெரிவிக்கும் நிகழ்வும், சுந்தரா் நெல் மலையை பாா்க்க குண்டையூா் செல்லும் நிகழ்வும் நடைபெற்றது.

    வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்தும் சுவாமியை வழிபட்டனர்.

    மேளதாளங்கள், அதிர்வேட்டு மற்றும் சங்கு முழங்க முக்கிய வீதிகள் வழியாக பூதகணங்கள் நடனமாடியது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

    தொடர்ந்து கல்யாண சுந்தரா் பூதகணங்களோடு குண்டையூரில் எழுந்தருளி, நெல் மலையை ஆரூரில் சோ்ப்பிக்க உத்தரவிட்ட நிலையில், நெல் மலையோடு பூதங்கள் ஆருருக்கு புறப்பட்டது.

    ஆண்டுதோறும் நடைபெறும் நெல் மகோற்சவ திருவிழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டுமென தமிழக அரசுக்கு, தருமை ஆதீனம் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • சிறப்பு பூஜைகள் நடந்து அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி விழா நடைபெற்றது.
    • சிறப்பு பூஜைகளும், பட்டு சார்த்தும் நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதார ண்யேஸ்வரர் கோவிலில் மாசிமக விழாவையொட்டி நேற்று சந்திரசேகரரர்- மனோன்மணி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.

    பின்னர், இரவு வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் சிறப்பு பூஜைகள் நடந்து அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி விழா நடைபெற்றது.

    விழாவின் காலையில் நடந்த பந்தல் காட்சி மற்றும் பூஜைகளில் வரணி ஆதீன செவ்வந்திநாத பண்டார சன்னதி, ஸ்தலத்தார்கள் கயிலை மணி வேதரத்னம், கேடிலியப்பன், உபயதா ரர்கள் பி.வி.ஆர். விவேக், கள்ளிமேடு மதியழகன் குடும்பத்தினர்கள், ஆறுகாட்டுத்துறை கிராம பஞ்சாயத்தார்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.

    பின்னர், சாமி கடற்கரை அருகே உள்ள நாலுகால் மண்டபத்தில் இறக்கப்பட்டு ஆறுகாட்டுத்துறை கிராமமக்கள் சார்பில் சிறப்பு பூஜைகளும், பட்டு சார்த்தும் நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடந்தது. 

    • உலக சிவனடியார் கூட்டத்தினர் திருவாசக முற்றோதல் நடத்தினர்.
    • தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

    நாகப்பட்டினம்:

    நாகூர் காங்கேய சித்தர் ஜீவபீடத்தில் திருவாசக முற்றோதல் நாகூர் கொச தெரு என்னும் குயவர் மேட்டு தெருவில் அருள்பாளித்து வரும் காங்கேய சித்தர் ஜீவ பீடத்தில் உலக அமைதி வேண்டி திருநாகை காயாரோகனத்தார் அர்தசாம அடியார் திருக்கூட்டத்தினர், உலக சிவனடியார் திருக்கூட்டம் மற்றும் மலேசியாவின் பினாங் நகர உலக சிவனடியார் திருகூட்டத்தினர் திருவாசக முற்றோதல் நடத்தினர்.

    இந்நிகழ்வில் உலக சிவனடியார் கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜம்புலிங்கம் மற்றும் மலேசிய பினாங் நகர சிவனடியார் கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நாகூர் பிடாரி அம்மன் கோவில் நிர்வாகி கணபதி மற்றும் நாகை சத்ரு சம்ஹார மூர்த்தி ஆலய நிர்வாகி சிங்காரவேலு ஆகியோர் முற்றோதல் செய்த சிவனடியார்களுக்கும் பக்தர்களுக்கும் அன்ன தானம் வழங்கினர்.

    இந்த நிகழ்வை ஸ்ரீ காங்கேய சித்தர் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் இராஜசரவணன், கோகுல கிருஷ்ணன், குமார், டாக்டர் அனிதா பழனிவேல் மற்றும் சேலம் வெங்கடேசன், நாகை ஐடிசி நடராஜ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

    • கிலோ ஒன்றுக்கு ரூ.50 முதல் 80 வரை விற்பனை செய்யப்படுவதால் அதிகம் லாபம்.
    • விற்பனை செய்வதும் எளிமையாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொத்தமங்கலம், அகர கொந்தகை, ஆலத்தூர், ஏர்வாடி, கீழபூதலூர், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் முதல் முறையாக தோட்டக்கலைத்துறை மூலமாக 100 சதவீதம் மானியத்துடன் சாமந்திப்பூ சாகுபடி செய்து வருகின்றனர்.

    இதுவரை நெல் உளுந்து பயிறு பருத்தி உள்ளிட்ட சாகுபடிகளில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு சோதனை முறையில் மாற்று பயிராக சாமந்திப்பூ சாகுபடி நடைபெற்று வருகிறது.

    இதற்காக நாற்றுகள் இடுபொருள்கள் உரம் உள்ளிட்ட அனைத்தும் ஏக்கருக்கு ரூ.16 ஆயிரம் வரை முழு மானியத்துடன் வழங்கப்படுகிறது.

    இதனை பயன்படுத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள பூந்தோட்டத்தில் திருமருகல் தோட்டக்கலைத்துறை அலுவலர் வித்யா மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் செல்ல பாண்டியன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது கிலோ ஒன்றுக்கு ரூ.50 முதல் 80 வரை விற்பனை செய்யப்படுவதால் அதிகம் லாபம் கிடைப்பதாகவும் பறிக்கப்படும் பூக்களை காரைக்கால் நாகப்பட்டினம் திருமருகல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பூ வணிகர்கள் தோட்டத்திற்கு வந்து கொள்முதல் செய்வதால் விற்பனை செய்வதும் எளிமையாக இருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    இது குறித்து தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறுகையில், முதல் முறையாக சோதனை அடிப்படையில் பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது நல்ல விளைச்சல் இருப்பதாலும் விற்பனை செய்வதில் எளிமையை ஆக இருப்பதாலும் இதனை மாவட்ட முழுவதும் அனைத்து கிராமங்களிலும் விரிவுபடுத்த இருப்பதாக தெரிவித்தனர்.

    • மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு மீன்பிடிக்க செல்ல வேண்டும்.
    • மறு உத்தரவு வரும் வரை கச்சா எண்ணை கொண்டு செல்லும் பணியில் நிர்வாகம் ஈடுபடக்கூடாது.

    நாகபட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூர் பட்டினச்சேரியில் கடலுக்கு அடியில் போடப்பட்ட கச்சா எண்ணெய் குழாயில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது.

    அதில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் கடலில் மிதந்து சுற்றுச்சூழல் மாசடைந்து, கண் எரிச்சல் போன்ற உடல் உபாதைகளுக்கு ஆளாகினர்.

    உடைந்த குழாயை சரி செய்யும் பணியில் கடந்த 4 நாட்களாக சிபிசிஎல் ஆலை தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே குழாயின் ஓட்டையை சிபிசிஎல் நிர்வாகம் நேற்று இரவு மீண்டும் சீரமைத்தது.

    இதனிடையே கச்சா எண்ணெய் குழாயை அகற்றக்கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் 4-வது நாளாக ஈடுபட்டு வரும் நாகூர் பட்டினச்சேரி மீனவர்களை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் இன்று நேரில் சந்தித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு மீன்பிடிக்க செல்ல வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

    பின்னர் நிருபர்களிடம் கலெ க்டர் அருண் தம்புராஜ் கூறியதாவது, கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் பைப் லைன் உடை ப்பை சீரமைத்து விட்டதாகவும், மீனவ ர்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என கூறியதுடன், மாவட்ட நிர்வாகம் சார்பில் மறு உத்தரவு வரும் வரை பைப் லைன்னில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் பணியில் சிபிசிஎல் நிர்வாகம் ஈடுபட கூடாது என பொது மேலாளரிடம் கூறி இருப்பதாக தெரிவித்தார்.

    மேலும் கச்சா எண்ணெய் கடலில் கலந்து இருப்பதால், கடல் வாழ் உயிரினங்களின் பாதிப்பு குறித்தும்,கடல் நீர் தன்மை குறித்தும் சென்னையில் இருந்து வரும் தொழில்நுட்ப அதிகாரிகள் அதனை ஆய்வு செய்ய இருப்பதாகவும் கலெக்டர் தெரிவித்தார்.

    • சாலக்கடை பகுதிக்கு சென்று விட்டு வருவதாக வீட்டில் கூறி சென்றார்.
    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா கரியாபட்டிணம் காவல்சரகம் தலைக்காடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடாஜலம் (வயது 50) விவசாய கூலி தொழிலாளி.

    இவர் நேற்று அருகில் உள்ள சாலக்கடை பகுதிக்கு சென்று விட்டு வருவதாக வீட்டில் கூறி சென்றார்.

    பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை. இதைத் தொடர்ந்து உறவினர்கள் வெங்கடாசலத்தை தேடி வந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை சாலக்கடை பகுதியில் தலையில் பலத்த காயங்களுடன் வெங்கடாஜலம் இறந்து கிடந்தார்.

    இது குறித்து பொது மக்கள் கரியாபட்டினம் போலீசில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகவேல் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கன்னிகா, ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெங்கடாஜலத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கரியாபட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையா? கொலை நடந்தது எப்படி என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

    • பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்தனர்.
    • தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலத்தில் உள்ள கலிதீர்த்த அய்யனார் கோவிலில் 21-ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா நடைபெற்றது.

    3 நாட்கள் நடைபெறும் லட்சார்ச்சனை விழாவின் முதல் நாளில் அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பின்பு சிவாச்சாரியார்கள் லட்சார்ச்சனை நடத்தினர்.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்தனர்.

    பின்பு, பக்தர்களுக்கு இலவச பிரசாதப்பை வழங்கப்பட்டது.

    தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • நேற்று மாலை 5 மணி அளவில் குழாய் சீரமைக்ககப்பட்டது.
    • மீண்டும் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூரை அடுத்த நரிமணத்தில், பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சுத்திகரிப்பு நிலையம் (சி.பி.சி.எல்.) உள்ளது. காவிரி படுகையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் இங்கு சுத்திகரிக்கப்பட்டு லாரிகள், கப்பல்கள் மூலம் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    கப்பல்களுக்கு கச்சா எண்ணெய்யை கொண்டு செல்ல நரிமணத்தில் உள்ள சி.பி.சி.எல். நிறுவனத்தில் இருந்து சாமந்தான்பேட்டை வழியாக நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமம் வரை கடற்கரையில் எண்ணெய் குழாய் புதைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி நள்ளிரவு பட்டினச்சேரி கடற்கரையில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறி கடலில் கலந்தது. இதனால் கடல் நீர் முற்றிலுமாக கருப்பு நிறமாக மாறியது. இதனால் பொது மக்களும், கடல் வாழ் உயிரினங்களும் பாதிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சி.பி.சி.எல். மற்றும் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தை ஆய்வு செய்து குழாய் உடைப்பை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் நேற்று மாலை 5 மணி அளவில் குழாய் சீரமைக்ககப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை சிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாய் நேற்று அடைக்கப்பட்டதாக கூறிய அதே இடத்தில் மீண்டும் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    மீண்டும் அதே இடத்தில் பழுது நீக்க பணியில் இயந்திரங்கள் மற்றும் ஊழியர்களைக் கொண்டு பணி நடைபெற்று வருகிறது.குழாயில் கசிவு ஏற்படுமா என சோதனை செய்ய சிபிசிஎல் நிர்வாகம் கச்சா எண்ணெயை குழாயில் அழுத்தத்துடன் செலுத்திய போது கசிவு ஏற்பட்டது.

    அதனால் உயர் அழுத்தத்தில் குழாயில் ஆயில் செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.மேலும்

    தொழில்நுட்ப குழுவினர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீண்டும் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இதனால் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ×