என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேதாரண்யத்தில் கடையில் வேலை பார்த்த சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வேட்டை காரனிருப்பு அருகே உள்ள கோவில்பத்து கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார்.

    அப்போது வேட்டைக்காரனிருப்பு பகுதியை சேர்ந்த சிரஞ்சீவி (வயது 27) என்ற வாலிபர் சிறுமி வேலைபார்த்த அந்த கடைக்கு அடிக்கடி வந்து சென்ற போது இருவருக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. இதில் சிறுமி 5 மாதம் கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து சிறுமி சிரஞ்சீவி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள கேட்டபோது அதற்கு சிரஞ்சீவியும் அவரது தாய் தமிழ்செல்வியும் மறுத்து விட்டதாக தெரிகிறது.

    இதனால் சிறுமி வேதாரண்யம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வேதாரண்யம் டி.எஸ்.பி. ஸ்ரீகாந்த், இன்ஸ்பெக்டர்கள் வேம்பரசி, வர்ஜினியா ஆகியோர் வழக்குபதிவு செய்து சிறுமியை கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுத்த சிரஞ்சீவி மற்றும் அவரது தாய் தமிழ்ச்செல்வி ஆகியோரை கைது செய்தனர்.

    சீர்காழி அருகே மொபட்டில் சென்ற ஆசிரியையிடம் 3 பவுன் நகையை வாலிபர்கள் பறித்து சென்றனர். இந்த சம்பவத்தில் ஆசிரியை கை முறிந்தது.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த பட்டவர்த்தி தலைஞாயிறு பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார். இவரது மனைவி பாரதி (வயது 32). ஆசிரியை. அதே பகுதியை சேர்ந்தவர் கலைமதி (வயது 50). தலைமை ஆசிரியை. இருவரும் கீழபெரும்பள்ளம். அரசு உதவிபெறும் பள்ளியில் வேலைபார்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை இருவரும் பணி முடிந்து மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். மொபட்டை பாரதி ஓட்டினார்.

    அப்போது சீர்காழியை அடுத்த காரைமேடு அருகே சென்றபோது, பின்னால் முகமுடி அணிந்தப்படி மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் வழிமறித்தனர். பின்னர் திடீரென பாரதி கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். அப்போது மொபட் கீழே சாய்ந்ததால் கலைமதியின் கையில் அடிபட்டு கை முறிந்தது.

    பிறகு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமிராவின் காட்சிகளை வைத்து, நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    2½ அடி உயர மகள் கல்விக்காக தாய் கடந்த 18 ஆண்டுகளாக அவரை பள்ளிக்கு அழைத்து செல்வதிலும், கல்லூரிக்கு அழைத்து செல்வதிலும் மிகுந்த அக்கறை காட்டி வருகிறார்.
    குத்தாலம்:

    உருகண்டு எள்ளாமை வேண்டும் என்பது முன்னோர் வாக்கு. சிறிய விதையில் இருந்துதான் பெரிய விருச்சம் தோன்றுகிறது. 2½ அடி உயரம் கொண்ட மாணவி ஒருவர் கல்லூரியில் படித்து வருகிறார். அவரை தினமும் கல்லூரிக்கு தாய் சுமந்து செல்கிறார். அம்மாணவி படித்து வக்கீலாக விரும்புகிறார். மனதை தொடும் இவர்கள் பற்றிய தகவல்கள் வருமாறு:-

    நாகை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த மேக்கிரி மங்கலத்தை சேர்ந்த பழனிசாமி-தேவகி தம்பதியின் மகள் பாரதி (வயது 18). இவர் போதிய உயரம் வளராமல் 2½ அடியில் குள்ளமாக உள்ளார். இருந்தபோதிலும் இவருக்கு படித்து பெயர் புகழுடன் வாழ வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. அந்த எண்ணத்தை வெறும் கனவாக்கி விடாமல் நனவாக்கும் புதுமை பெண்ணாக பாரதி திகழ்கிறார். தற்போது இவர் மயிலாடுதுறை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் படித்து வருகிறார்.

    மகள் பாதுகாப்பாக கல்லூரிக்கு சென்று வரவேண்டும் என்பதற்காக தேவகி தினமும் காலையிலேயே வீட்டு வேலைகளை முடித்து விட்டு மகளுடன் காலை 7.30 மணிக்கு கல்லூரிக்கு புறப்பட்டு செல்கிறார். அவருடன் 18.கி.மீ. பயணம் செய்து கல்லூரி வகுப்பறையில் விடுகிறார். பின்னர் மாலை வரை அங்கேயே காத்திருந்து கல்லூரி நேரம் முடிந்ததும் மகளை தூக்கி கொண்டு பஸ்சில் ஏறி வீட்டை வந்தடைகிறார்.

    மகள் கல்விக்காக தேவகி கடந்த 18 ஆண்டுகளாக அவரை பள்ளிக்கு அழைத்து செல்வதிலும், கல்லூரிக்கு அழைத்து செல்வதிலும் மிகுந்த அக்கறை காட்டி வருகிறார். மேக்கிரிமங்கலம், குத்தாலம் ஆகிய இடங்களில் உள்ள பள்ளியில் பாரதி தனது பள்ளி படிப்பை படித்து முடித்துள்ளார். பாரதி கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பல பரிசுகளை வென்றுள்ளார். 12ம் வகுப்பு படிக்கும் போது அவர் போபாலில் நடந்த ஆர்.எம்.எஸ்.ஏ. கலா உத்சவ் 2017 என்ற தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவில் இண்டாமிடமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

    தாயின் விருப்பப்படி படித்து வேலைக்கு செல்வதே தனது லட்சியம் என்று கூறும் பாரதி தனக்கு படித்து வக்கீலாக வேண்டும் என்பதே லட்சியம் என்கிறார்.

    18 ஆண்டுகளாக மகளை தூக்கி சுமக்கும் தேவகி தனக்கு ஒரு இருசக்கரவாகனம் இருந்தால் உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நலச்சங்கத்திடம் இருசக்கரவாகனம் கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளார்.

    தேவகிக்கு மேலும் 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். பாரதியின் கனவும், தேவகியின் ஆசையும் நிறைவேற அனைவரும் வாழ்த்துவோம்.
    நாகையில் உள்ள இ-சேவை மையங்களில் இணையதள சேவை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சான்றிதழ்கள் பெற முடியாமல் அவதிக்குள்ளாகினர்.
    நாகப்பட்டினம்:

    நாகை பகுதிகளில் தாலுகா அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன. தமிழக அரசால் பொதுமக்கள் எளிதில் பல்வேறு சான்றிதழ்கள் பெறுவதற்கு வசதியாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இ-சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இ-சேவை மையங்களால் பொதுமக்கள் பல்வேறு சான்றிதழ்கள் பெற்று பயன் அடைந்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று நாகையில் இணையதள சேவை இயங்கவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்போது செல்போன் மற்றும் இணையதள சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டது. பின்னர் போராட்டம் கைவிடப்பட்டதால் பி.எஸ்.என்.எல். சேவை மக்களுக்கு ஏதுவாக கிடைத்து வந்தது.

    இந்தநிலையில் நேற்றுமுன்தினம் முதல் இணையதள சேவை சரிவர வேலை செய்யாததால் பொதுமக்கள் வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், திருமணம், பட்டா மாறுதல் உள்ளிட்ட 21 வகையான சான்றிதழ்கள் பெற முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் அனைத்து சேவை மையங்களிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகம் காணப்பட்டது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இ-சேவை மையத்திற்கு இணையதள வசதியை உடனே ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    வேளாங்கண்ணி அருகே புயல் நிவாரணம் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    வேளாங்கண்ணி:

    கஜா புயலினால் தன்னிலப்பாடி மற்றும் நீடுர் பகுதியில் உள்ள வீடுகள் பாதிக்கப்பட்டன. ஆதலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி நீடுரில் நேற்று கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளை செயலாளர் அமுல்ராஜ், தி.மு.க. ஊராட்சி செயலாளரும், மாவட்ட நெசவாளர் அவை துணைத்தலைவருமான குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். விவசாய தொழிற்சங்க மாவட்ட தலைவர் சித்தார்தன், விவசாய சங்க மாவட்ட குழு உறுப்பினரும், ஒன்றிய செயலாளருமான கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் பாரபட்சமின்றி நிவாரண தொகை வழங்க வேண்டும். அரசு அறிவித்துள்ள ரூ.2 ஆயிரம் வழங்குவதற்காக பயனாளிகள் பட்டியலை முறையாக கணக்கெடுக்க வேண்டும்.

    மரைக்காயர் கட்டளை கிராமத்திற்கு 4 ஆண்டு காலமாக குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அதனை உடனடியாக சரி செய்து குடிநீர் வழங்க வேண்டும். 2017-2018-ம் ஆண்டிற்கான பயிர்க்காப்பீட்டு தொகையும், வெள்ள நிவாரண தொகையும் உடனே வழங்க வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் கொள்முதல் செய்யும் நெல்லுக்குரிய பணத்தை உடனடியாக அவரது வங்கி கணக்கில் ஏற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மறியலில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் சமூக பாதுகாப்பு திட்ட துணை தாசில்தார் அமுதவிஜயரங்கன், வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன், செல்வி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இன்னும் ஒரு வாரத்திற்குள் கோரிக்கைகள் நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் கிராம மக்கள், மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக செம்பியன்மகாதேவி-களத்திடல்கரை மெயின் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் பாஸ்கரன், தி.மு.க. அவைத்தலைவர் பழனிவேல், விவசாய தொழிற்சங்க ஒன்றிய துணை தலைவர் வீராச்சாமி உள்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
    இனிமேல் சந்திக்க வரவேண்டாம் என கூறியதால் கள்ளக்காதலனை உயிருடன் எரித்து கொல்ல முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே அண்ணன் பெருமாள் கோவில் மெயின் ரோட்டை சேர்ந்தவர் செந்தில் என்ற சந்திரசேகர் (வயது 43). கொத்தனார். இவருடைய மனைவி பரிமளம். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்தநிலையில் சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தை சேர்ந்த கருணாநிதி மனைவி செல்வி (45). சித்தாள் வேலை செய்து வரும் இவருக்கும், சந்திரசேகருக்கும் கட்டிட வேலை செய்யும் இடத்தில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக் காதலாக மாறி உள்ளது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு செல்வி, சந்திரசேகர் வீட்டிற்கு வந்து இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.அப்போது சந்திரசேகர் என்னை பார்க்க பெண் வீட்டார் வருகிறார்கள். எனவே நீ இனிமேல் என்னை சந்திக்க வரவேண்டாம் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வி, வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து சந்திரசேகர் மீது ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த சந்திரசேகர் அலறினார். இந்த சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து படுகாயமடைந்த சந்திரசேகரை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் வைத்தீஸ்வரன்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வியை கைது செய்தனர்.
    வேதாரண்யம் அருகே முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா கரியாப்பட்டினம் போலீஸ் சரகம் தென்னம்புலம் மேலக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வராசு (வயது56). விவசாயி. இவருடைய மனைவி சித்ரா(53). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

    வேதாரண்யம் அருகே மறைஞாயநல்லூர் பொன்னங்காடு பகுதியை சேர்ந்த மாரியப்பன் மனைவி சாந்தி. இவருக்கு ஒரு மகன் உள்ளார். சாந்திக்கும், மாரியப்பனுக்கும் விவகாரத்து ஆகி விட்டதாக தெரிகிறது.

    இந்த நிலையில் முதல் மனைவிக்கு தெரியாமல் சாந்தியை செல்வராசு 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த முதல் மனைவி சித்ரா, கணவர் செல்வராசுவிடம் கேட்டுள்ளார். அதற்கு சித்ராவை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுபற்றி சித்ரா வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேம்பரசி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம் அருகே கடலில் கப்பலுக்கு திசை காட்டும் கருவி ஒனேறு மிதந்து வந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தல் மற்றும் இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு தங்கம் கடத்தல் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க கடலோர காவல் படை மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் வேதாரண்யம் அருகே கடலில் கப்பலுக்கு திசை காட்டும் கருவி மிதந்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-

    வேதாரண்யத்தை அடுத்த வேட்டைகாரனிருப்பு அருகே வடிகால் ஆறு சங்கமிக்கும் இடத்தில் சுமார் 25 மீட்டர் தூரத்தில் கப்பலுக்கு திசைகாட்டும் போயா எனும் கருவி இன்று மிதந்து வந்தது.

    இந்த கருவி எந்த கப்பலுக்கு திசை காட்டுவதற்காக கடலில் போடப்பட்டது? என்பது தெரியவில்லை அது கடத்தல் காரர்களுக்கு சொந்தமானதா? என்பது குறித்து கடலோர காவல்படை மற்றும் வேட்டைக்காரனிருப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    பாராளுமன்ற தேர்தலில் பாமக 7 தொகுதிகளிலும் தோற்பது உறுதி என்று வன்னியர் சங்க தலைவர் விஜிகே மணிகண்டன் கூறியுள்ளார். #pmk #parliamentelection #vanniyarsangamleader

    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூரில், காடுவெட்டி ஜெ.குருவின் உறவினரும், மாவீரன் ஜெ.குரு வன்னியர் சங்க தலைவருமான வி.ஜி.கே.மணிகண்டன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஓட்டுமொத்த வன்னியர்களின் பிரதிநிதியாக தங்களை கூறிக்கொண்டு, வன்னியர் சமூகத்தை ராமதாசும், அன்புமணியும் அடிமைப்படுத்த நினைக்கின்றனர். காடுவெட்டி குரு மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுத்த அ.தி.மு.க.வுடன் தற்போது கூட்டணி அமைத்துள்ளதன் மூலம், ஒட்டுமொத்த வன்னியர் சமூகத்தினரையும் ராமதாஸ் இழிவுபடுத்தியுள்ளார்.


    கடல் இருக்கும் வரை, உலகம் இருக்கும் வரை அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்று கூறிய பாமக, தற்போது எதற்காக கூட்டணி அமைத்துள்ளது?. அ.தி.மு.க ஆட்சியில் 22 துறைகளில், ரூ.70ஆயிரம் கோடி ஊழல் என்று புத்தகம் வெளியிட்ட ராமதாஸ், இப்போது எப்படி ஊழலை ஏற்றுக் கொண்டார்?

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் வாடும் 7 பேரையும் விடுவித்தால் மட்டுமே கூட்டணி என்று பா.ஜனதாவிடம் தற்போது ஏன் நிபந்தனை விதிக்கவில்லை? மது ஒழிப்பு போராட்டம் செய்த அன்புமணி, தற்போது படிப்படியாக குறைக்க வேண்டும் என்று கோருவது ஏன்?

    இனியும் ராமதாசையும், அன்புமணியையும் வன்னிய மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், அவர்கள் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள். போட்டியிடும் அனைத்து தொகுதியிலும் பா.ம.க தோற்கும்.

    அன்புமணி எந்த தொகுதியில் நின்றாலும், அவரை எதிர்த்து, காடுவெட்டி குருவின் தாயார் கல்யாணி அம்மாள் போட்டியிடுவார். இனி வன்னியர்கள் பெயரைச்சொல்லி ராமதாசும், அன்புமணியும் வாக்கு சேகரிக்கக்கூடாது .

    இவ்வாறு அவர் கூறினார். #pmk #parliamentelection #vanniyarsangamleader 

    மீனவ மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவோம் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல் ஹாசன் கூறியுள்ளார். #Kamalhassan

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளப்பள்ளம் மீனவர் கிராமத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    இதில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு 159 மீனவர்களுக்கு மீன் பிடி வலைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாகை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து மீனவர்களும் உறவினர்கள் தான். குறிப்பாக வெள்ளப்பள்ளம் மீனவர்கள் வலுவான உறவினர்கள். எனக்கு மீனவர்களின் மீன்பிடி தொழிலில் உள்ள அனைத்து கஷ்டங்களும் தெரியும்.

    கடந்த காலத்தில் நான் நடித்த கடல் மீன்கள் படத்திற்காக வலை விரித்து மீன் பிடிப்பது எப்படி என்பதை நன்கு அறிந்தவன். எனவே நான் மீனவர்களின் சீடன். சினிமாவிற்காக மட்டுமல்ல. தங்கியிருந்த அனைத்து நாட்களிலும் நானே வலை விரித்து மீன் பிடித்து அவர்களது கஷ்டங்களை நன்கு அறிந்தவன்.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரங்கள் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்னும் அகற்றப்படாமல் அப்படியே உள்ளன. அரசு கட்டங்கள் சேதமடைந்த நிலையில் பிரிக்கப்பட்ட காக்கா கூடு போல் உள்ளன. மேலும் பல இடங்களில் மரங்களும் அகற்றப்படாமல் உள்ளன.

    புயல் நிவாரண பொருட்கள் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கேள்விப்பட்டேன். இந்த செயல் வேதனை அளிக்கிறது. புயலால் பாதித்த மக்களுக்குஅரசு என்ன செய்தது என்று தெரியவில்லை.

    வெள்ளப்பள்ளம் மீனவர்களுக்கு கட்சி சார்பில் நாங்கள் கொடுப்பது கொடையோ, தர்மமோ அல்ல. நாங்கள் பட்ட கடன் ஆகும்.

    மக்கள் நீதி மய்யம் சார்பில் கொடுக்கப்படும் பொருட்களும், நிவாரண உதவிகளும், நலத்திட்ட உதவிகளும் நேர்மையான முறையில் சம்பாதித்து வரிசெலுத்தி வெள்ளை பணத்தில் நான் (கறுப்பு பணம் அல்ல) உதவிகள் செய்கிறோம். பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வதாராத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும். இது தேர்தலுக்காக கூறப்படும் செய்தி அல்ல. மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற பாடுபடுவோம் .

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் நடிகை ஸ்ரீபிரியா, மாவட்ட பொறுப்பாளர் ஆனாஸ், வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், வானவன்மாதேவி மீனர கிராம பஞ்சாயத்தார்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர். #Kamalhassan

    சீர்காழி அருகே கெயில் நிறுவனம் சார்பில் லாரிகளில் வந்த இரும்பு குழாய்களை இறக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே பழையபாளையம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் 20க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு எடுக்கப்படும் திரவ நிலையிலான எரிவாயு வர்த்தக நிறுவனங்களுக்கு கொண்டு செல்ல வேட்டங்குடி, எடமணல், திருநகரி ஊராட்சிகள் வழியாக தரங்கம்பாடி தாலுக்கா மேமாத்தூருக்கு 27 கிலோ மீட்டர் தொலைவுக்கு விளைநிலங்கள் வழியாக குழாய் அமைக்கும் பணி கெயில் நிறுவனத்தால் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. 

    வேம்படி கிராமத்தில் விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடந்தபோது விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் வேம்படி கிராமத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேட்டங்குடி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கெயில் நிறுவனம் சார்பில் லாரிகளில் கொண்டு வந்த 26 இரும்பு குழாய்களை 50-க்கும் மேற்பட்ட போலீசார் உதவியுடன் லாரியிலிருந்து இறக்கும் பணியில் அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது வேட்டங்குடியைச் சேர்ந்த நஞ்சை, புஞ்சை விவசாயிகள் சங்கத்தலைவர் வில்வநாதன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி அங்குதன் மற்றும் விவசாயிகள் சம்பவ இடத்திற்கு வந்து இரும்பு குழாய்களை இறக்க எதிர்ப்பு தெரிவித்தனர். 

    இதையடுத்து பேச்சு வார்த்தை நடத்தி பின்னர் இது குறித்து முடிவு செய்வதாக கூறி இரும்பு குழாய்கள் இறக்கப்படாமல் லாரிகளிலேயே வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    நாகை அருகே செக்ஸ் டார்ச்சரால் பெண் பூ வியாபாரியை ரவுடி வெட்டி கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்த வேளாங்கண்ணி அருகே தெற்கு பொய்கை நல்லூரை சேர்ந்தவர் ஆனந்தவேலன் (வயது 30). லோடு ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சரண்யா (28). இவர்களுக்கு 3 வயதில் மகன் உள்ளார்.

    சரண்யா அந்த பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்தார்.

    அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் திருட்டு குமார் என்கிற கணேஷ்குமார் (வயது29). பிரபல ரவுடியான இவர் மீது வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் 4 கொலை வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் சரண்யாவுக்கு அடிக்கடி ரவுடி கணேஷ்குமார், செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அவ்வப்போது பார்க்கும் போதெல்லாம் செக்ஸ் தொல்லை கொடுத்து வந்ததால் சரண்யா ஆத்திரம் அடைந்தார்.

    இதனால் இந்த பிரச்சினை பற்றி அவர் , தனது கணவர் ஆனந்தவேலனிடம் கூறினார். இதை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆனந்த வேலன், தனது நண்பர்கள் சிலருடன் சென்று ரவுடி கணேஷ்குமாரை கண்டித்தார். மேலும் இதுபற்றி வேளாங்கண்ணி போலீசில் புகாரும் செய்தார்.

    இதையடுத்து போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

    போலீசில் புகார் கொடுத்ததால் கணேஷ்குமார், ஆனந்தவேலன் மீது ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று ஆனந்தவேலன் மனைவி சரண்யா வீட்டில் இருந்தார். அப்போது அங்கு கணேஷ் குமார் கோபத்துடன் வந்தார். வீட்டு முன்பு நிறுத்தியிருந்த ஆனந்தவேலனின் லோடு ஆட்டோவை அடித்து நொறுங்கினார்.

    பின்னர் ஆத்திரம் தீராமல், திடீரென குழந்தை கண்முன்னே சரண்யாவை கணேஷ் குமார் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்தவெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே சரண்யா பரிதாபமாக இறந்தார்.

    சரண்யா இறந்ததும் அங்கிருந்து கணேஷ்குமார் தப்பி ஓடி விட்டார்.

    இதற்கிடையே மனைவி இறந்த தகவல் அறிந்து ஆனந்தவேலன், மற்றும் அவரது தாய் விரைந்து வந்து இறந்துகிடந்த சரண்யாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த வேளாங்கண்ணி போலீசார் சரண்யாவின் உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரும் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

    இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரண்யாவை வெட்டிக் கொலைசெய்த கணேஷ்குமாரை வலைவீசி தேடி வந்தனர்.

    இநத நிலையில் கணேஷ்குமார் போலீசாருக்கு பயந்து தனது வீட்டுக்குள்ளேயே பதுங்கியிருந்தார். இதையறிந்த போலீசார் நேற்று இரவு வீட்டில் இருந்த கணேஷ்குமாரை கைது செய்தனர்.

    செக்ஸ் டார்ச்சரால் பெண் பூ வியாபாரியை ரவுடி வெட்டி கொன்ற சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×