என் மலர்
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி நடுக்கடையில் உள்ள கூட்டுறவு கிராம அங்காடியில் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் கால தாமதம் ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழக அரசு பயோமெட்ரிக் முறையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்குவதாக அறிவித்தது ஆனால் பயோமெட்ரிக் முறையில் ரேஷன் அட்டைதாரர்களின் கைவிரல் ரேகை பதிவதில் காலதாமதம் ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் கடந்த 10 தினங்களாக ரேஷன் கடைக்கு சென்று திரும்பி வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென நாகை நன்னிலம் சாலையில் கூட்டுறவு அங்காடியை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த நாகை வட்ட வழங்கல் அலுவலர் பசுபதி கிராம நிர்வாக அலுவலர்கள் சதீஷ், சத்யதாஸ் ஆகியோர் சென்று பொதுமக்களிடம் பழைய முறையில் ரேஷன் பொருட்கள் வழங்குவதாக கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜெயபால், கட்டுமாவடி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் விவசாய சங்க ஒன்றிய தலைவர் ஸ்டாலின் பாபு, செயலாளர் பொன்மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலம் கடைவீதியில் டிப்பர் லாரி மோதியதில் வாலிபர் ஒருவர் சாலையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக குத்தாலம் போலீசார் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சாலை விபத்தில் பலியானவர் குத்தாலம் தாலுகா கொழையூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குமார் மகன் விக்னேஷ் (வயது 25) என்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார், டிப்பர் லாரி டிரைவர் கரூர் மாவட்டம் பாப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி மகன் சரவணகுமார் (25) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி அருகே எருக்கூரில் நவீன அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு அலுவலர்கள், ஊழியர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் ஊழியர்கள் 6 பேருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தற்காலிகமாக இந்த நவீன அரிசி ஆலை மூடப்பட்டுள்ளது. இதனால் நெல் அரவை பாதிப்படைந்துள்ளது.
நாகப்பட்டினம்:
நாகையை அடுத்த திருமலைராயன்பட்டினம் போலோகம் காலனி தெருவை சேர்ந்தவர் பிளிப்தாஸ் (வயது 60). நேற்று முன்தினம் இவர் செல்லூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கலைவாணன் என்பவர் வீட்டில் உள்ள தென்னை மரத்தில் ஏறி கிளைகளை வெட்டினார்.
அப்போது மரத்தின் அருகில் சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் பிளிப்தாஸ் வைத்திருந்த அரிவாள் உரசியதாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உடல் கருகி தென்னை மரத்தில் தொங்கினார். உடனே அருகில் உள்ளவர்கள் தீயணைப்பு துறைக்கும், மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த பகுதியில் மின்சாரம் தடை செய்யப்பட்டது. பின்னர் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி வரை நடக்கிறது. 7-ந் தேதி(திங்கட்கிழமை) அன்னையின் பெரிய தேர் பவனி நடக்கிறது. 8-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) அன்னையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக தேவாலயத்தில் பக்தர்கள் கூட்டம் கூடி பிரார்த்தனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று மாலை பக்தர்கள் இல்லாமல் கொடியேற்றம் நடைபெறுகிறது.
இதை நடைமுறைப்படுத்தும் விதமாக மாவட்டத்தில் வேளாங்கண்ணி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் 21 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, 21 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 63 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 1,100 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வேளாங் கண்ணி பகுதிக்கு வரக்கூடிய 8 வழிகளில் 6 வழிகள் அடைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு பக்தர்கள் இல்லாமல் அன்னையின் கொடியை தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து வைக்கிறார். பின்னர் ஆலய வளாகத்தில் கொடி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கொடியேற்றம் நடைபெறுகிறது. இந்த நிகழ்வுகள் பேராலய இணையதளம் வழியாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். விழா நாட்களில் தினமும் மாலை தேர்பவனி ஆலயத்தை சுற்றி நடக்கிறது. 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்னையின் பிறந்த நாளை முன்னிட்டு காலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் ஆண்டு பெருவிழா சிறப்பு கூட்டுத்திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. இரவு 7 மணிக்கு கொடி இறக்கப்படுகிறது.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சேமங்கலம் ஊராட்சி கூத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், இவருடைய மகன் சீதாராமன் (வயது 22).
பாலிடெக்னிக் படித்து முடித்துள்ள இவர், நேற்று காலை தங்கள் வீட்டில் வளர்த்து வந்த 2 பசு மாடுகளை மேய்ச்சலுக்கு வீட்டின் அருகில் உள்ள வயலுக்கு ஓட்டிச் சென்றார். நேற்று முன்தினம் அந்த பகுதியில் பெய்த மழையால் மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன.
இது தெரியாமல் மின் கம்பிகளின் மீது அங்கு மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் மிதித்து விட்டன. இதனால் மின்சாரம் தாக்கி 2 மாடுகளும் துடி, துடித்தன. இதனைக் கண்ட சீதாராமன் ஓடிச்சென்று மாடுகளை காப்பாற்ற முயன்றார். அப்போது மின்சாரம் அவரையும் தாக்கியது. இதில் 2 மாடுகளும் பரிதாபமாக இறந்தன. காப்பாற்ற சென்ற சீதாராமன் மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்தார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று சீதாராமனை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பாகசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கீழை நாடுகளின் ‘லூர்து’ நகர் என்று பெருமையுடன் அழைக்கப்படும் இந்த பேராலயம் அன்னை மரியின் புகழ் பரப்பும் புண்ணிய தலமாக விளங்குகிறது. கிறிஸ்தவ ஆலய கட்டிட கலைக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய ‘பசிலிக்கா’ என்ற பெருமைமிகு பிரமாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ ஆலயங்களில் இந்த பேராலயமும் ஒன்று.
பல்வேறு சிறப்புகளை பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் தொடர்ந்து திருவிழா நடைபெறும். செப்டம்பர் மாதம் 8-ந் தேதி அன்னையின் பிறந்த நாள் விழாவும் கொண்டாடப்படுவது வழக்கம்.
கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதியில் இருந்து கொரோனா நோய் தொற்று நாடு முழுவதும் பரவுவதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகின்றது. அதன் அடிப்படையில் மத்திய-மாநில அரசுகள் அறிவுறுத்தலின்படி தேவாலயத்தில் கூட்டம் கூடி பிரார்த்தனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே வேளாங்கண்ணி பேராலயத்தில் கொடியேற்றம் பக்தர்கள் இல்லாமல் நடைபெறுகிறது.
இதுகுறித்து பேராலய அதிபர் பிரபாகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாளை 29-ந் தேதி(சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு பக்தர்கள் இல்லாமல் அன்னையின் கொடியினை தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து வைக்கிறார். பின்னர் ஆலய வளாகத்தில் கொடி, ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கொடியேற்றம் நடைபெறுகிறது.
நவ நாட்களில் ஒவ்வொரு நாளும் தேர்பவனி ஆலயத்தை சுற்றியும் நடைபெறும். செப்டம்பர் 8-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) அன்னையின் பிறந்த நாளை முன்னிட்டு காலை 6 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் ஆண்டு பெருவிழா, சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படும். பின்னர் மாலை 7 மணிக்கு அன்னையின் கொடி இறக்கப்படும். தொடர்ந்து தமிழில் திருப்பலியுடன் அன்னையின் ஆண்டு விழா நிறைவடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சீர்காழி பழைய பஸ் நிலையம் பகுதியில் பாரத வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கி முதுநிலை மேலாளர் கொரோனா பரிசோதனை எடுத்துக்கொண்டதில் புதன்கிழமை காலை தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து மேலாளர் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்டார். தொடர்ந்து வங்கியிலிருந்து வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வங்கி மூடப்பட்டது. வங்கியில் பணியாற்றும் அனைத்து அலுவலர்கள், ஊழியர்கள், பணியாளர்களும் கொரோனா பரிசோதனை செய்துகொள்கின்றனர்.
தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகளும், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், தீயணைப்புத்துறையினர் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் மயிலாடுதுறை சீர்காழி அதிமுக எம்.எல்.ஏ. பி.வி.பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் வருகையொட்டி பரிசோதனை மேற்கொண்ட நிலையில் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக திருவிழாவுக்கு பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவை மீறும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரெத்தினம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் நாகூரை அடுத்த மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் நேற்று முன்தினம் இரவு நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 3 பேர் பாத யாத்திரையாக வேளாங்கண்ணிக்கு செல்வது தெரியவந்தது. அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் 3 பேரும் சென்னை பலவந்தங்கல் நேரு நகரை சேர்ந்த நவீன்குமார் (வயது37), சந்தானம் (50), ஆரோக்கியசாமி (46) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடம் போலீசார் வேளாங்கண்ணிக்கு வெளியூர் பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது பற்றி எடுத்துக்கூறி எச்சரிக்கை விடுத்து, திருப்பி அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நாகூர் போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
வேதாரண்யத்தில் தனியார் பால் விநியோகம் செய்யும் பால் வேன் வேதாரண்யத்திலிருந்து கோடியக்கரைக்கு பால் பாக்கெட்டுக்களை ஏற்றிக் கொண்டு சென்றது.
அப்போது வேன் கட்டுப்பாட்டை இழந்து அகஸ்தியன்பள்ளி பகுதியில் இரண்டு மின் கம்பங்களில் மோதி சாய்ந்தது. இதில் 2 கம்பங்கள் சேதமடைந்து மின்கம்பிகளும் அறுந்து விழுந்ததில் அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரும் சேதமடைந்தது.
வேன் ஓட்டி வந்த ரஹ்மத்துல்லா(வயது26) மற்றும் மணிவண்ணன்(30) ஆகிய இருவரும் வேனின் முன்பக்க கண்ணாடியை உடைத்து வெளியேறினர்.
இந்த விபத்து குறித்து வேதாரண்யம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 9 பெண்கள் உள்பட 29 அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை கருத்தில் கொள்ளாமல் ஊரக வளர்ச்சி துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பசுமை வீடுகள் திட்டங்களை விரைந்து முடிக்க நிர்ப்பந்திப்பதை கைவிட வேண்டும்.
முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் மீது பிறப்பிக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பெறப்பட்ட ஆணையை உடனே அமல்படுத்த வேண்டும்.
உதவி இயக்குனர் நிலை, பதவி உயர்வு ஆணை வழங்க வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கு பெற்றவர்கள் மீது எழுபப்பட்ட 17 குற்ற குறிப்பாணைகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தை விளக்கி வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றிச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜூ, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன், ஊராட்சி செயலாளர்கள் நாகராஜன், தங்கராசு உள்பட பலர் பேசினர். போராட்டம் இன்று வரை தொடரும் என்று தெரிவித்தனர்.
இதேபோல் மயிலாடுதுறை ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 600-க்கும் மேற்பட்டோர் பணியை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை முன்னிட்டு காலையில் அலுவலகத்துக்கு வந்த ஊழியர்கள் பணியில் ஈடுபடாமல் இருக்கையில் அமர்ந்திருந்தனர். இந்த போராட்டத்தால் ஒன்றிய அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டது.






