என் மலர்
நாகப்பட்டினம்
இந்த நிலையில் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டு இருந்த நாகூர் தர்கா பக்தர்கள் பிரார்த்தனை செய்ய நேற்று அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டது. முககவசம் அணிந்து வருபவர்கள் மட்டுமே தர்காவுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
தர்காவுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டும் அல்லாது வெளியூர்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் கார், வேன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து பிரார்த்தனை செய்தனர். தர்காவுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் தெர்மல் கருவி கொண்டு பரிசோதனை செய்யப்பட்டனர்.
ஷாகுல் அமீது காதிர் ஒலி, செய்யது முகமது யூசுப் சாஹிப், அவருடைய மனைவி செய்யது சுல்தான் பீவி அம்மா சாஹிபா ஆகிய மூன்று சமாதிகள் திறக்கப்பட்டன. தர்காவுக்கு வந்த பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பிரார்த்தனை செய்தனர். மேலும் மயில் ரேகை ஆசீர்வாதம், பெரிய ஆண்டவர் பாதப்பெட்டி தரிசனம் உள்ளிட்ட வழிபாடுகளுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தர்காவுக்கு வந்த பக்தர்கள், 10 நிமிடங்களில் பிரார்த்தனை செய்துவிட்டு வெளியேறினர்.
5 மாதங்களுக்கு பிறகு நாகூர் தர்கா திறக்கப்பட்டதால் காலையில் பிரார்த்தனை செய்தது மகிழ்ச்சியாக உள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர். இதில் ஜாதி, மத பேதமின்றி அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்து உள்ளது. உலக பிரசித்தி பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாளையொட்டி 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படும். இந்த திருவிழா ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் 8-ந் தேதி வரை நடைபெறும்.
இதில் பல்வேறு நாடுகள், வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணி திருவிழாவுக்கு வருவர். திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வேளாங்கண்ணியில் பக்தர்களின் கூட்டம் அலை மோதும்.
இந்த நிலையில் கொரோனா தொற்று பரவுதலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இதனால் வேளாங்கண்ணி பேராலயம் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டது.
இந்த நிலையில் செப்டம்பர் 1-ந் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் அனைத்தும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனையொட்டி பக்தர்கள் வழிபடுவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் வேளாங் கண்ணி பேராலயத்தில் மேற்கொள்ளப்பட்டது. சமூக இடைவெளி, முககவசம், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட கொரோனா பரவல் தடுப்பு வழி முறைகளை பின்பற்றுவதற்கு ஏற்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. கோவில் முன் பகுதியில் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கு வசதியாக தடுப்புகளும் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த பணிகள் அனைத்தும் வேளாங் கண்ணி பேராலய நிர்வாகம் சார்பில் நடந்தது.
ஆனால் வேளாங்கண்ணி பேராலயம் நேற்று முன்தினம் திறக்கப்படவில்லை. பேராலய ஆண்டு திருவிழாவில் வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பக்தர்கள் மட்டுமே கலந்து கொள்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என்றும், வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் மாவட்ட கலெக்டர் அறிவித்தார். இதனால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில் 5 மாதங்களுக்கு பிறகு வேளாங்கண்ணி பேராலயம் நேற்று திறக்கப்பட்டது. அன்னையை தரிசனம் செய்வதற்கு வேளாங்கண்ணி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த உள்ளூர் பக்தர்கள் மட்டும் காலை 8 மணியில் இருந்து மாலை 5.30 மணி வரையில் பேராலயத்தின் உள்ளே சென்று தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நேற்று காலை 8 மணிக்கு முக கவசம் அணிந்தும், கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும், உடல் வெப்பநிலையை பரிசோதித்த பின்னரே பேராலயத்திற்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நீண்ட நாட்களுக்கு பிறகு வேளாங்கண்ணி பேராலயம் மீண்டும் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சமூக இடைவெளியை பின்பற்றி ஆரோக்கிய மாதாவை வழிபட்டனர்.
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.
நாகை மாவட்டத்தில் பவுன்ராஜ், பாரதி, மதிவாணன், தஞ்சை மாவட்டத்தில் கோவிந்தராசு, ராமச்சந்திரன், டி.கே.ஜி. நீலமேகம் ஆகிய எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்கள் செல்வராசு, ராமலிங்கம் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் ஒ.எஸ்.மணியன் மனைவி கலைச்செல்வி உடல் நலக்குறைவால் சென்னையில் மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் நாகை மாவட்டம் ஓரடியம்பலத்துக்கு எடுத்து வரப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெற்றன.
இதில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு உள்ளார். ஓரடியம்பலத்தில் உள்ள தனது வீட்டில் உள்ள அவர் தன்னை ஒரு வாரத்துக்கு யாரும் சந்திக்க வரவேண்டாம் என கூறி உள்ளார்.
மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தவறாமல் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் ஒரு வாட்ஸ்- அப் பதிவையும் வெளியிட்டுள்ளார்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கியமாதா கோவில் திருவிழாவில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் 8-ந் தேதி திருவிழா முடியும் வரை அனுமதிக்கப்பட மாட்டார்கள். வேளாங்கண்ணி பேரூராட்சிக்குட்பட்ட உள்ளூர் பக்தர்கள் மட்டும் காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியுடன் ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.
வருகிற 7-ந் தேதி(திங்கட்கிழமை) அன்று நடைபெறும் தேர் பவனி மற்றும் மறுநாள் 8-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) அன்று நடைபெறும் கொடி இறக்கம்் ஆகிய நிகழ்ச்சிகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. ஆலய நிர்வாகத்தினர் மற்றும் போதகர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதியளிக்கப்படும். திருவிழா முடியும் வரை தங்கும் விடுதிகளை திறக்கவும் அனுமதி இல்லை. மேலும் கடற்கரைக்கு செல்லவும் அனுமதி கிடையாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வு காரணமாக நேற்று முதல் வழிபாட்டு தலங்களை திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் திருவிழாவாக கொண்டாடப்படும் வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் பங்கேற்கலாம் என எதிர்பார்த்து காத்திருந்த வெளியூர், வெளி மாவட்ட, வெளி மாநில மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வலிவலம் காவல்நிலைய எஸ்.ஐ. சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இளம்பெண் அளித்த புகாரில் எஸ்.ஐ. ரவிராஜை 18 மாதங்களுக்கு பின் சஸ்பெண்ட் செய்து ஐஜி ரூபேஷ்குமார்மீனா உத்தரவிட்டுள்ளார்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ் மணியனின் மனைவி கலைச்செல்வி உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த 28ந்தேதி உயிரிழந்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம் ஓரடியம்புலத்தில் அமைச்சரின் மனைவி கலைச்செல்வி இறுதிச்சடங்கு நடந்தது. இறுதிச்சடங்கில் உறவினர்கள், அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இறுதிச்சடங்கில் பங்கேற்ற அமைச்சரின் உறவினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து ஒருவாரத்துக்கு தனிமைப்படுத்திக் கொள்வதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவித்துள்ளார்.
பல்வேறு நாடுகள், வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொள்வார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணி திருவிழாவுக்கு வருவார்கள். திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வேளாங்கண்ணியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
கொரோனா பரவல் காரணமாக வேளாங்கண்ணி பேராலயத்துக்குள் பக்தர்கள் செல்வதற்கு கடந்த மார்ச் மாதம் தடை விதிக்கப்பட்டது. வேளாங்கண்ணி பேராலய திருவிழாவிலும் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தது. திருவிழாவை காண பக்தர்கள் வருவதை தடுப்பதற்காக வேளாங்கண்ணிக்கு செல்லக்கூடிய 8 வழிகளும் அடைக்கப்பட்டது. கடந்த 29-ந் தேதி வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடியேற்றம் பக்தர்களின்றி நடந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் புதிய ஊரடங்கு தளர்வுகளை நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இதன் எதிரொலியாக வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்கள் வழிபடுவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான பணிகள் வேளாங்கண்ணி பேராலய நிர்வாகம் சார்பில் தீவிரமாக நடந்து வருகிறது. சமூக இடைவெளி, முக கவசம், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட கொரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளை பக்தர்கள் பின்பற்றுவதற்கேற்ப ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
கோவில் முன் பகுதியில் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி வருகிற 7-ந் தேதி(திங்கட்கிழமை) நடக்கிறது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் வேளாங்கண்ணியில் பக்தர்களை எவ்வாறு பாதுகாப்புடன் பேராலயத்துக்குள் அனுமதிப்பது? என்பது குறித்து நேற்று மாலை மாவட்ட வருவாய் அதிகாரி இந்துமதி ஆய்வு செய்தார். அப்போது நாகை உதவி கலெக்டர் பழனிகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், பேராலய அதிபர் பிரபாகர், பங்குத்தந்தை சூசை மாணிக்கம், வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அதிகாரி குணசேகரன், கீழ்வேளூர் தாசில்தார் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். கடற்கரை சாலை, பேராலய வளாகம், கலையரங்கம், சிலுவை பாதை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பேராலயத்தில் தரிசனம் செய்வதற்காக பக்தர்களை எவ்வாறு ஒழுங்குபடுத்தி அனுப்புவது என்பது குறித்து பேராலய நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து இன்று(செவ்வாய்க்கிழமை) முறையாக அறிவிப்பு வெளியிடப்படும் என மாவட்ட வருவாய் அதிகாரி, உதவி கலெக்டர் ஆகியோர் தெரிவித்தனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே குடவாசல் கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது 60) விவசாயி. இவருடைய மனைவி ராசையாள் (55). இவர்களுக்கு 3 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் 4 பேருக்கும் திருமணமாகி விட்டது. இதனையடுத்து தனது சொத்தை 2 மகன்களுக்கும், ஒரு மகளுக்கும் பிரித்து கொடுத்து விட்டார்.
வெளிநாட்டில் உள்ள மகன் பாலமுருகனின் சொத்தை மட்டும் பிரித்து கொடுக்காமல் தனது பொறுப்பில் வைத்துள்ளார்.
இதனால் பாலமுருகனின் மனைவி கீதா (32), நேற்று தனது தந்தை ஜெயராமன் மற்றும் உறவினர்களை அழைத்து சென்று மாமனார் சவுந்தரராஜனிடம், தனது கணவரின் சொத்தை பிரித்து கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதில் 2 பேருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த கீதா மற்றும் அவரது உறவினர்கள் சவுந்தரராஜனையும், அவருடைய மனைவி ராசையாளையும் தாக்கினர்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் புதுப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த ஆயக்காரம்புலம் 2-ம் சேத்தி கிராமத்தை சேர்ந்தவர் வீரையன் (வயது 50).
சம்பவத்தன்று இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றபோது வழிமறுத்தி நிறுத்தி பழனிவேல் (35), அரவிந்தன் (27), பிரவீன் (23), மூர்த்தி (20), வின்னேஷ் (26) ஆகிய 5 பேர் சரமாரியாக தாக்கினர். இதில் காயமடைந்த வீரையன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இது குறித்த புகாரின்பேரில் வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்தன், பழனிவேல் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளது. இதனால் அவர்களின் குற்றசெயல்களை கட்டப்படுத்தும் நோக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் பிரவீன் பி நாயரிடம், போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் பரிந்துரை செய்தார். அதனை ஏற்று கலெக்டர் உத்தரவுப்படி, பழனிவேல் உள்ளிட்ட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே அருகே மேலமாப்படுகை கன்னித்தோப்புத் தெருவைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் விஜய் (23). பாலிடெக்னிக் படிப்பை முடித்து விட்டு, சென்னையில் வேலை பார்த்து வந்தவர் தற்போது உள்ளுரில் வசித்து வந்தார். நேற்று இரவு விஜய் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்குச் சென்றபோது மனோகர் (55) என்பவரின் மீது பைக் உரசியுள்ளது. இதில், விஜய்க்கும், மனோகருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் வீட்டுக்கு சென்ற விஜய் ஆட்களுடன் திரும்பி மனோகர் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த தகராறில் மனோகர் தரப்பைச் சேர்ந்த ஒருவர் விஜயை கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விஜய்யின் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோகர், அவரது சகோதரர் சுந்தர்ராஜ் மற்றும் 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் மாப்படுகை கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






