என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா: எருக்கூர் நவீன அரிசி ஆலை மூடல்
ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் எருக்கூர் நவீன அரிசி ஆலை மூடப்பட்டது.
கொள்ளிடம்:
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே எருக்கூரில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான நவீன அரிசி ஆலை உள்ளது. இந்த ஆலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இதில் 2 ஊழியர்களுக்கு நேற்று கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நவீன அரிசி ஆலை மூடப்பட்டது. இதேபோல் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட திருவாவடுதுறை மடத்து தெருவை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரும் சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி சார்பில் திருவாவடுதுறை மடத்து தெரு முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதேபோல் சீர்காழி ஊர்க்காவல் படையை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேபோல் கீழ்வேளூர் சன்னதி தெருவில் வசித்து வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 பேர், அதே தெருவில் மற்றொரு வீட்டில் 3 பேர், இதர பகுதிகளை சேர்ந்த 3 பேர் ஆக மொத்தம் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் கீழ்வேளூர் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் தேவூர் ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தெருக்கள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டது. மேலும் அந்த பகுதிக்குள் பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு, தெருவுக்குள் யாரும் செல்ல முடியாதபடி இரும்பு தட்டிகள் கொண்டு அடைக்கப்பட்டது.
Next Story






