என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    பொறையாறில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் அவரது கணவரை கைது செய்தனர்.
    பொறையாறு:

    நாகை மாவட்டம் பொறையாறு நல்ல தண்ணீர் சந்து தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 39). இவர், தரங்கம்பாடியில் மருந்து கடை நடத்தி வருகிறார். அவருடைய மனைவி காயத்ரி (28). இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு சரண் (5), கமலேஷ்வரன் (3) என்ற 2 மகன்கள் உள்ளனர். வேல்முருகனுக்கு, வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், அதன் காரணமாக தன்னை வேல்முருகன் அடிக்கடி கொடுமைப்படுத்துவதாகவும் காயத்ரி தனது பெற்றோரிடம் கூறி வந்தார். இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் காயத்ரி கோபித்துக்கொண்டு, திருவாரூர் மாவட்டம் குடவாசலில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு குடவாசலில் உள்ள மாமனார் செல்வராஜின் வீட்டுக்கு சென்ற வேல்முருகன், காயத்ரியை சமாதானம் செய்து பொறையாறில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காயத்ரி தனது வீட்டின் அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயத்ரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    காயத்ரியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை செல்வராஜ் பொறையாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். காயத்ரிக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் மயிலாடுதுறை உதவி கலெக்டர் மகாராணி, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார். இதனிடையே பொறையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, காயத்ரியை தற்கொலைக்கு தூண்டியதாக வேல்முருகனை கைது செய்தனர்.
    வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி இன்று (திங்கட்கிழமை) பக்தர்கள் இன்றி ஆலய வளாகத்தை சுற்றி நடக்கிறது.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. உலக பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாளையொட்டி 10 நாட்கள் திரு விழா கொண்டாடப்படும். இந்த திருவிழா ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் மாதம் 8-ந் தேதி வரை விமர்சையாக நடைபெறும்.

    இதில் பல்வேறு நாடுகள், வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணி திருவிழாவுக்கு வருவார்கள். திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வேளாங்கண்ணியில் பக்தர்களின் கூட்டம் அலை மோதும்.

    கொரோனா பரவல் காரணமாகவும், ஊரடங்கு உத்தரவின் காரணமாகவும் வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்கள் செல்வதற்கு கடந்த மார்ச் மாதம் தடை விதிக்கப்பட்டது. வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. திருவிழாவை காண பக்தர்கள் வருவதை தடுப்பதற்காக வேளாங்கண்ணிக்கு செல்லக்கூடிய 8 வழிகளும் அடைக்கப்பட்டது. இந்தநிலையில் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி வேளாங்கண்ணி பேராலய திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றி நடந்தது. தமிழகத்தில் புதிய ஊரடங்கு தளர்வுகளை சில நாட்களுக்கு முன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி கடந்த 2-ந்தேதி முதல் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதனை தொடர்ந்து வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்கள் வழிபடுவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்கான பணிகள் வேளாங்கண்ணி பேராலய நிர்வாகம் சார்பில் தீவிரமாக நடந்தது. சமூக இடைவெளி, முக கவசம், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட கொரோனா பரவல் தடுப்பு வழி முறைகளை பின்பற்றுவதற்கு ஏற்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    கோவில் முன் பகுதியில் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கு வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி கடந்த 2-ந் தேதி முதல் உள்ளூர் மக்களுக்கு மட்டும் காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை வழிபாடு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி இன்று (திங்கட்கிழமை) பக்தர்கள் இன்றி ஆலய வளாகத்தை சுற்றி நடக்கிறது.
    செம்பனார்கோவில் அருகே மின் ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய உறவினரை போலீசார் கைது செய்தனர்.
    பொறையாறு:

    நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே உள்ள நாச்சிகட்டளை கிராமத்தை சேர்ந்தவர் ராஜகண்ணு(வயது 57). இவர், ஆக்கூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் கணக்கீட்டு ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும், அவருடைய அண்ணன் மகன் சண்முகம்(37 ) என்பவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு நடந்து வந்தது. 

    இந்த நிலையில் நேற்று மாலை இருவருக்கும் இடையே வழக்கம்போல் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சண்முகம் அருகில் கிடந்த மூங்கில் கம்பால் ராஜகண்ணுவின் தலையின் பின் பகுதியில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தார்.

    அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிச்சென்று ராஜகண்ணுவை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இரவு ராஜகண்ணு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாபன் மற்றும் போலீசார் விரைந்து சென்று ராஜகண்ணு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகத்தை கைது செய்தனர். இறந்த ராஜகண்ணுக்கு வேம்பு என்ற மனைவியும், ஒரு மகனும் மகளும் உள்ளனர்.
    குத்தாலம் அருகே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    குத்தாலம்:

    நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோவில் போலீஸ் சரகம் ஆத்துக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 45). இவர், நாகை மதுவிலக்கு பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களாக சிவக்குமார் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் பணியை முடித்து விட்டு மயிலாடுதுறை அருகே அகரக்கீரங்குடி கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சிவகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்த பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிவக்குமார் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதுகுறித்து பெரம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட சிவக்குமாருக்கு துர்கா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
    மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கீழையூர் உப்ப நகர் மாரியம்மன் கோவில் அருகே சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியே ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களை வழிமறுத்து நிறுத்தி சோதனையிட்டபோது ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ கஞ்சா மோட்டார் சைக்கிளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து கஞ்சா கடத்தி வந்த மயிலாடுதுறை கிட்டப்பா பாலம் அருகே உள்ள ஹாஜியார் நகரை சேர்ந்த காமராஜர் (வயது 50), தீப்பாய்ந்த அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செந்தில்நாதன் (30) ஆகிய 2 பேரையும் கைது செய்து செம்பனார்கோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வேதாரண்யம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை மீனவர்கள் கொடூர தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுத்துறை சுனாமி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55) இவருக்கு சொந்தமான படகில் பனங்காட்டுதெருவை சேர்ந்த கோபி (45), வேலவன் (44), சுகுமார் (42), காளிதாஸ் (20) ஆகிய 4 மீனவர்களும், ஆறுகாட்டுத்துறைக்கு தென்கிழக்கே 18 மைல் தொலைவில் மீன்பிடித்தனர். பின்னர் வலைகளை படகில் எடுத்து கொண்டிருந்தனர்.

    அப்போது இலங்கை நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள் இரண்டு படகுகளில் அங்கு வந்தனர்.

    திடீரென அவர்களில் 4 பேர் வாள், இரும்பு ராடுகளுடன் தமிழக மீனவர்கள் படகில் ஏறி அவர்களை தாக்கினர். இந்த கொடூர தாக்குதலில் கோபி, சுகுமாறன், வேலவன், காளிதாஸ் ஆகிய 4 பேரும் பலத்த காயமடைந்தனர்.

    மேலும் படகில் இருந்த வலைகளையும் வெட்டி வீசி, செல்போன், டார்ச் லைட், டீசல் கேன் ஆகியவற்றை எடுத்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

    தகவல் அறிந்த தமிழக மீனவர்கள் விரைந்து சென்று காயமடைந்த 4 பேரையும் மீட்டு கரைக்கு திரும்பினர். பின்னர் அவர்கள் 4 பேரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இலங்கை மீனவர்கள் தமிழக எல்லைக்குள் புகுந்து கண்மூடித்தனமாக மீனவர்களை தாக்கி வரும் சம்பவம் தொடர்வதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

    இலங்கை மீனவர்களை தமிழக கடல்பகுதிக்கு வர விடாமல் தடுத்து சம்பந்தப்பட்ட இலங்கை மீனவர்களை கைது செய்ய அரசு நடவடிக்கை வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மயிலாடுதுறை அருகே 10ம் வகுப்பு மாணவியை வாலிபர் கடத்தி சென்றது குறித்து பெண்ணின் தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் இருவரையும் தேடி வருகிறார்கள்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலம் ராஜகோபாலபுரம் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி தனது வீட்டில் இருந்து வந்தார். அப்போது இந்த மாணவியை அவரது உறவினரான தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம் மகன் சுந்தர்(வயது 20) கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. 

    இது குறித்து சிறுமியின் தந்தை மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் சுந்தர் மீது வழக்குப்பதிவு செய்து அவரையும், சிறுமியையும் தேடி வருகிறார்கள்.

    மயிலாடுதுறை அருகே இடப்பிரச்சினையில் வாலிபர் மீது தாக்குதல் நடத்திய கணவன் மனைவியை போலீசார் கைது செய்தனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூர் மகாதானபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் சதீஷ்குமார் (வயது33). அதே பகுதியை சேர்ந்தவர் மருதப்பன் மகன் குமார்(வயது52). இவர்கள் இருவருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு சதீஷ்குமார் கடைத்தெருவுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். 

    அப்போது குமார், அவரது மனைவி மாலா(40), மகன் வசீகரன்(22) ஆகிய 3 பேரும் சேர்ந்து சதீஷ்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சதீஷ்குமார் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

    இது குறித்து குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமார் மற்றும் அவரது மனைவி மாலா ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய வசீகரனை தேடி வருகின்றனர்.
    மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை திட்ட ஆள்நுழைவு தொட்டி உடைந்து சாலையில் கழிவுநீர் வெளியேறி வருகிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள காமராஜர் சாலை பிரதான சாலை ஆகும். இந்த சாலையில் தான் அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைந்துள்ளது. இந்த சாலை கும்பகோணம் சாலையில் இருந்து தரங்கம்பாடி மற்றும் திருவாரூருக்கு செல்லும் முக்கிய சாலையாகும். இந்த சாலை வழியாக இலகுரக வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அதிக அளவில் செல்கின்றன.

    இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காமராஜர் சாலையில் புனுகீஸ்வரர் கீழவீதி பிரிவு சாலையின் அருகே உள்ள பாதாள சாக்கடை ஆள்நுழைவு தொட்டி உடைந்து, அதிலிருந்து கடந்த ஒரு வாரமாக கழிவுநீர் வெளியேறி வருகிறது.

    இதனால் அந்த சாலையில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. நேற்றுமுன்தினம் இரவு பெய்த மழையினால் சாலை முழுவதும் மழைநீருடன் கழிவு நீர் கலந்து குளம் போல் காட்சியளித்தது. மேலும் உடைந்த ஆள்நுழைவு தொட்டி இருக்கும் இடம் தெரியாததால் அதில் தடுமாறி விழுந்து விட கூடாது என்ற நோக்கத்தில் அருகில் உள்ள கடைக்காரர் தனது விளம்பர பலகையை அபாய எச்சரிக்கை பலகையாக அமைத்துள்ளார்.

    இதனால் அங்கு விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. வெளியேறும் கழிவுநீரால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் உடைந்து போன ஆள்நுழைவு தொட்டியை சீரமைத்து கழிவு நீர் வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அதற்கு முன்பாக அபாய எச்சரிக்கை பலகை ஒன்று வைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மயிலாடுதுறையில்மாடுகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் மாடுகளை திருட பயன்படுத்திய சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி சிவன் நகரை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மனைவி மீனாட்சி (வயது32). கடந்த 25-ந் தேதி இவர் வீட்டில் கட்டி வைக்கப்பட்டு இருந்த பசுமாடு திருட்டுப்போனது. இதைப்போல நல்லத்துக்குடியை சேர்ந்த அர்ஜுனன் (65) என்பவருக்கு சொந்தமான பசுமாடும் திருட்டுப்போனது. இது குறித்த புகார்களின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடுகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே கம்பிபாளையம், கடம்பூர் கிராமத்தை சேர்ந்த ஜெயசீலன் மகன் வசந்தகுமார் வீட்டில் மீனாட்சி, அர்ஜுனன் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் இருப்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று வசந்தகுமாரின் வீட்டில் கட்டப்பட்டிருந்த 2 பசு மாடுகளையும், மாடுகளை திருடி செல்ல பயன்படுத்தப்பட்ட சரக்கு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் வசந்தகுமாரும், நல்லத்துக்குடி சிவன் நகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சண்முகம் என்ற மணிகண்டன் ஆகிய இருவரும் சேர்ந்து மாடுகளை திருடி சரக்கு ஆட்டோவில் கடத்தி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சண்முகம் என்ற மணிகண்டன்(38), வசந்தகுமார்(29) ஆகிய இருவரையும் கைது செய்து மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    வேளாங்கண்ணி அருகே மதுக்கடையை அகற்றக்கோரி பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    வேளாங்கண்ணி:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள விழுந்தமாவடியில் வேதாரண்யம் செல்லும் சாலை ஓரத்தில் அரசு மதுக்கடை உள்ளது இந்த மதுக்கடை பஸ் நிறுத்தம் அருகே உள்ளதால் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லும் பெண்கள் அச்ச உணர்வுடன் சென்று வந்தனர். இந்த கடையை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் காரணமாக கடை மூடப்பட்டது.

    இந்தநிலையில் கடந்த மாதம் 18-ந் தேதி மீண்டும் அதே இடத்தில் மதுக்கடை திறக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று விழுந்தமாவடியை சேர்ந்த பெண்கள் அங்கு உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி மீண்டும் முற்றுகை போராட்டம் நடத்த முயற்சி செய்தனர். இதனால் அப்பகுதியில் ஏராளமான பெண்கள் திரண்டனர். எனவே சம்பவ இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வர கால தாமதம் ஆனது. இதனால் பெண்கள் நீண்ட நேரம் அங்கு காத்திருந்ததால் சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த டாஸ்மாக் கிடங்கு மேலாளர் சேதுராமலிங்கம், கீழ்வேளூர் தாசில்தார் கார்த்திகேயன், நாகை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேலு, இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கியராஜ், ஆனந்தகுமார், தியாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டம் நடத்திய பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அதிகாரிகள் தற்போது மதுக்கடையை மூடி வைப்பது என்றும் விரைவில் இந்த மதுக்கடை வேறு இடத்தில் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

    வேதாரண்யம் பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா கரியாப்பட்டினம் காவல் சரக தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் போலீசார் தென்னம்புலம் கடைத்தெருவில் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஆயக்காரன்புலத்தை சேர்ந்த தமிழ்செல்வன்(வயது40), வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த அருள்செல்வம்(22), பஞ்சநதிக்குளம் கிழக்கை சேர்ந்த முத்துக்குமார்(56) ஆகியோர் என்பதும், ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ.16 ஆயிரம் மற்றும் செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.
    ×