என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
    நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் வழிகாட்டுதலின் பேரில், கொரோனா நோய் தொற்று 3-ம் அலை பரவுவதை தடுக்கும் பொருட்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாகை மாவட்டத்தில் சில வழிபாட்டு தலங்களுக்கும் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கும் பொதுமக்கள் செல்வதற்கு ஏற்கனவே அனுமதி இல்லை என்று ஆணை வெளியிடப்பட்டது.

    தற்போது நிலவிவரும் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் தொடர்ச்சியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிற 31-ந் தேதி வரை பொதுமக்களுக்கான தரிசனம் மற்றும் அனைத்து மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் முற்றிலுமாக ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய திருவிழாவையொட்டி வருகிற 29-ந் தேதி முதல் அடுத்த மாதம்(செப்டம்பர்) 8-ந் தேதி வரை நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை.

    பேராலயத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளையும் காணொலிக்காட்சி வாயிலாக ஒளிபரப்பலாம். மேலும்
    வேளாங்கண்ணி பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து தங்கும் விடுதிகளும் இந்த நாட்களில் திறக்கப்படாது. திருவிழாவை முன்னிட்டு தற்காலிக கடைகள் அமைப்பதற்கும், பிற கடைகள் மற்றும் உணவகங்கள் திறப்பதற்கும் அனுமதியில்லை.

    எனவே நாகை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும், ஆவணி மூலத் திருவிழாவில் நேற்று நாரைக்கு முக்தி கொடுத்த லீலை அலங்காரத்தில் சுந்தரேசுவரர்-மீனாட்சி அம்மன் அருள்பாலித்தனர்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஆவணி மூலத்திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, பக்தர்களுக்கு அனுமதி இன்றி நடந்து வருகிறது.

    ஆவணி மூல திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளான சிவபெருமானின் திருவிளையாடல் லீலைகள் நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகின்றன.

    நேற்று காலையில் ‘நாரைக்கு முக்தி கொடுத்த லீலை’ நடந்தது. அப்போது சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் நாரைக்கு முக்தி அளித்த சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர். இரவு 7 மணிக்கு சுவாமி பூதவாகனத்திலும், அம்மன் அன்னவாகனத்திலும் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வந்தனர்.

    நாரைக்கு முக்தி கொடுத்தல் லீலை குறித்த புராண வரலாறு வருமாறு:-

    மதுரைக்கு தெற்கே ஒரு குளத்தில் நாரை ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த குளத்தில் நீர் வற்றியதால் மற்றொரு குளத்திற்கு சென்றது. அப்போது அந்த குளத்தில் முனிவர்கள் நீராடிக்கொண்டிருந்தனர். மேலும் அந்த குளத்தில் இருந்த மீன்கள் முனிவர்கள் மீது புரண்டு விளயாடியது. அதை கண்ட நாரை அந்த மீன்களை உண்ணக்கூடாது என்று நினைத்து சாப்பிடாமல் இருந்தது.

    அப்போது அங்கிருந்த முனிவர்கள் பேசும் போது, மதுரையை பற்றியும் அங்கிருந்த பொற்றாமரை குளத்தின் சிறப்பை பற்றியும் தெரிவித்தனர். உடனே நாரை மதுரைக்கு வந்து பொற்றாமரைக்குளத்தில் நீராடி இறைவனை வணங்கி முக்தி பேறு பெற்றது.

    அப்போது நாரை இறைவனிடம், “பொற்றாமரைக்குளத்திலே நீர்வாழ் உயிர்கள் எதுவும் இருக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால் மற்ற பறவைகள் அதனை உண்ணக்கூடும். அதனால் பாவம் வந்து சேரும். எனவே நீர்வாழ் உயிரினங்கள் எதுவும் பொற்றாமரைக்குளத்தில் இருக்கக்கூடாது” என்று கேட்டு இறைவனிடம் வரம் வாங்கியது.

    நாரைக்கு இறைவன் அருளிய வரத்தின்படி இன்று வரை பொற்றாமரைக்குளத்தில் நீர்வாழ் உயிரினங்கள் எதுவும் இல்லை என்று புராணம் கூறுகிறது. இந்த திருவிளையாடலை குறிக்கும் வகையில்தான், நாரைக்கு முக்தி கொடுத்த லீலை அலங்காரத்தில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் எழுந்தருளியது குறிப்பிடத்தக்கது.
    நாகப்பட்டினம் அருகே பிளஸ்-2 மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய கூலித்தொழிலாளி ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள குருவாடி வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லதுரை(வயது 25). கூலித்தொழிலாளி. இவர் 17 வயதான பிளஸ்-2 மாணவி ஒருவரை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தார்.

    அவரிடம் ஆசை வார்த்தைகளை கூறி செல்லதுரை மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மாணவியின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது. இதை கவனித்த மாணவியின் பெற்றோர், இதுகுறித்து மாணவியிடம் கேட்டனர்.

    அப்போது செல்லதுரை, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததும், இதனால் மாணவி 7 மாதங்கள் கர்ப்பமாக இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் நாகை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீசார் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செல்லதுரையை கைது செய்தனர்.
    திருவாரூர், நாகையில் இருந்து திருக்குவளையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிக்கு நேரடி பஸ் போக்குவரத்து தொடங்கி உள்ளது.
    வேளாங்கண்ணி:

    நாகை மாவட்டம் திருக்குவளையில் அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரி அமைந்து உள்ளது. இந்த கல்லூரியில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மேலும் வெளியூர்களை சேர்ந்த ஆசிரியர்களும் இங்கு பணியாற்றி வருகின்றனர்.

    இந்த கல்லூரி திருக்குவளை பஸ் நிறுத்தத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்து உள்ளது. அங்கிருந்து கல்லூரி வளாகத்துக்கு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் செல்ல வேண்டும் என்றால் நடந்து தான் செல்ல வேண்டும் என்ற நிலை இருந்தது. இதனால் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

    கல்லூரிக்கு நேரடியாக அரசு பஸ் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இதுதொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு இருந்தது. அதன்பேரில் திருவாரூர், நாகை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருக்குவளைக்கு இயக்கப்படும் பஸ்கள் பொறியியல் கல்லூரி வளாகத்துக்கு வந்து செல்லும் வகையில் நேரடி பஸ் போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதையடுத்து நேற்று கல்லூரி வளாகத்துக்கு நேரடி பஸ் போக்குவரத்து தொடங்கியது. அதன்படி கல்லூரியில் இருந்து திருவாரூருக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்சை, கல்லூரி புலமுதல்வர் துரைராசன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியதற்காக தமிழக அரசுக்கு கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
    திருமருகல் அருகே நூலகத்தில் கிராம நிர்வாக அலுவலகம் செயல்படுவதால் புத்தகங்கள் படிக்க முடியாமல் மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    திட்டச்சேரி:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் நூலகம் உள்ளது.இந்த நூலகம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.இந்த நூலகத்தில் திருக்கண்ணபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் திருக்கண்ணபுரம் ஊராட்சி சேர்ந்த 500-க்கும் மேற்பட்டவர்கள் புத்தகங்களை வாசித்து வந்தனர்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நூலகம் அருகே உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் சேதமடைந்ததால் தற்காலிகமாக நூலகத்தில் கிராம நிர்வாக அலுவலகம் செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது வரை கிராம நிர்வாக அலுவலகம் மாற்றப்படாமல் அங்கேயே செயல்பட்டு வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நூலகம் இல்லாமல் வெளியூருக்கு சென்று புத்தகங்கள் எடுத்து வந்து படித்து வந்தனர்.

    தற்போது கொரோனா காலம் என்பதால் பொதுமக்கள் வெளியில் சென்று புத்தகங்கள் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலகத்தை வேறு இடத்திற்கு மாற்றி நூலகம் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்திற்குள் திரளானோர் சென்று பிரார்த்தனை செய்தனர். வருகிற 12-ந்தேதி(வியாழக்கிழமை)வரை பக்தர்கள் பிரார்த்தனை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
    கொரோனா 3-வது அலை பரவலை தடுக்க வாரத்தின் கடைசி 3 நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டது.

    அதன்படி நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி மாதா பேராலயம் மற்றும் நாகூர் தர்கா, சிக்கல் சிங்காரவேலர் கோவில், நாகை நீலாயதாட்சி அம்மன் கோவில், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் வாரத்தின் கடைசி நாட்களான கடந்த 6,7 மற்றும் 8-ந்தேதி ஆகிய 3 நாட்கள் மூடப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் வாசலில் நின்று தரிசனம் செய்தனர்.

    இந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு நேற்று நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

    அதன்படி வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயம் திறக்கப்பட்டது. இதனால் திரளானோர் பேராலயத்திற்குள் சென்று பிரார்த்தனை செய்தனர். வருகிற 12-ந்தேதி(வியாழக்கிழமை)வரை பக்தர்கள் பிரார்த்தனை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
    திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் ஊராட்சியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார்.
    திட்டச்சேரி:

    திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் ஊராட்சியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி முகாமை தொடங்கி வைத்தார். மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அதிகாரி லியாகத்அலி முகாமை பார்வையிட்டார்.இதில் 312 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. மேலும் 200 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முகாமில் மருத்துவர்கள் விஜய், பாஸ்கரன், விநாயகவேலவன், ஊராட்சி செயலாளர் மகேஸ்வரி, துணைத் தலைவர் அமுதா முத்துக்குமார், சுகாதார ஆய்வாளர் சுப்ரமணி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
    தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி படித்துறைகளில் தர்ப்பணம் கொடுக்க வந்த பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
    வேதாரண்யம்:

    ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேதாரண்யம், கோடியக்கரை மற்றும் வேதாரண்யம் கடலில் இறந்த முதியோருக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடி, பின்பு வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமியை வழிபடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மாவட்ட நிர்வாகம் ஆடி அமாவாசைக்கு கடலில் குளிப்பதற்கு தடை விதித்துள்ளது.

    இதை முன்னிட்டு காவல்துறையினர் சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி சோதனைச்சாவடி அமைத்தும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு சில பக்தர்கள் இன்று காரில் வந்து ஏமாற்றத்துடன் குளிக்க முடியாமல் திரும்பி சென்றனர். வேதாரண்யம் ஒன்றிய எல்லையான தாணி கொட்டகம், தாமரைபுலம், சங்கத்தலை பாலம் ஆகிய இடங்களில் தடைகள் வைக்கப்பட்டு பக்தர்கள் குளிக்க வரவேண்டாம் என விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

    வேதாரண்யம் கடற்கரை

    வழக்கமாக ஆடி அமாவாசை அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேதாரண்யத்திற்கு முதல் நாளே வந்து தங்கி கடலில் புனித நீராடிவிட்டு செல்வார்கள். ஆனால் இந்த ஆண்டு வெளியூர் பக்தர்கள் வராததால் கடற்கரை மற்றும் நகர வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதேபோல் தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி படித்துறைகளிலும் தர்ப்பணம் கொடுக்க வந்த பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதையொட்டி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை புதுஆறு படித்துறைகளும் வெறிச்சோடி காணப்பட்டது.

    இதனால் பலர் தங்களது வீட்டின் மாடியிலேயே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.


    இதையும் படியுங்கள்...பள்ளத்தாக்கில் பாய்ந்த பஸ்- பயணிகளை மயிரிழையில் காப்பாற்றிய டிரைவர்
    வாரத்தின் கடைசி 3 நாட்களுக்கு பக்தர்களுக்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் நாகை மாவட்டத்தில் நேற்று அனைத்து மத வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்டன.
    கொரோனா 3-வது அலை பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி நாகை மாவட்டத்தில் சில வழிபாட்டுத்தலங்களுக்கும் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கும் பொது மக்கள் செல்ல ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

    தற்போது நிலவிவரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் தொடர்ச்சியாக, மாவட்டத்திலுள்ள அனைத்து மத வழிப்பாட்டு தலங்களிலும் வாரத்தின் கடைசி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் வருகிற 31-ந் தேதி வரை பொதுமக்களுக்கு தரிசனம் செய்யவும், அனைத்து மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு தரிசனம் மற்றும் அந்தந்த மத ஆகம விதிகளின்படி நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் கோவில் பணியாளர்கள் மூலம் நடைபெறுவதற்கு தடை ஏதுமில்லை என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி பிரசித்தி பெற்ற நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், சவுந்தரராஜ பெருமாள் கோவில், சிக்கல் சிங்காரவேலர் கோவில், வேதாரண்யம் வேதாரண்யயேஸ்வரர் கோவில், வேளாங்கண்ணி மாதா பேராலயம், நாகூர் தர்கா, நாகூர் நாகநாதர் கோவில், நாகூர் பாத்திமா அன்னை ஆலயம் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் நேற்று மூடப்பட்டன. இதனால் ஒரு சில பக்தர்கள் வெளியில் நின்று தரிசனம் செய்தனர்.

    நாகூர் தர்கா மூடப்பட்டதால் வெளியூர், மற்றும் உள்ளூர் பக்தர்கள் ஆண்டவர் தர்கா அலங்கர வாசல், கால்மாட்டு வாசல், கீழக்கு வாசல் பகுதிகளில் வெளியில் நின்று பிரார்த்தனை செய்தனர்.
    பொறையாறு அருகே புதுவை மாநில பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் இருந்து புதுவை மாநில அரசு பஸ் இன்று காலை 30 பயணிகளுடன் காரைக்காலுக்கு புறப்பட்டது. பஸ்சை டிரைவர் செந்தில் (வயது 40) ஓட்டினார். கண்டக்டராக பரசுராமன் (46) பணியாற்றினார். அந்த பஸ் பொறையாறு பஸ் நிலையத்துக்குள் வந்து பயணிகளை ஏற்றி கொண்டு மீண்டும் காரைக்காலுக்கு புறப்பட்டது. அப்போது பொறையாறு ராஜீவ்புரம் பகுதியில் சென்றபோது எஞ்சின் மின்இணைப்பில் திடீரென கோளாறு ஏற்பட்டு பஸ் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனால் உடனடியாக பஸ்சை டிரைவர் செந்தில் நிறுத்தினார். பயணிகள் அலறியடித்து கொண்டு வேகமாக சிதறி நாலாப்புறமும் ஓடினர். சிறிது நேரத்தில் பஸ் முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருந்தது. அந்த பகுதியே தீப்பிளம்பாக காட்சியளித்தது.

    இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் பஸ் முற்றிலும் எரிந்து சேதமானது. பயணிகள் உடனடியாக இறங்கியதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இது பற்றி பொறையார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    வேதாரண்யத்தில் மயங்கி விழுந்து முதியவர் திடீர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சிக்கு உட்பட்ட புஷ்கரணி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 90). இவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருந்ததால் தொடர்ந்து மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தாராம். சம்பவத்தன்று இரவு சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட வேண்டிய மருந்து மாத்திரைகளை சாப்பிடாமல் தூங்கி விட்டதாக தெரிகிறது.

    காலையில் பார்த்த பொழுது சண்முகம் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனால் சிகிச்சை பலனின்றி சண்முகம் பரிதாபமாக இறந்துவிட்டார்.

    இதுகுறித்து புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருமருகல் அருகே கட்டையால் தாக்கி விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி அடுத்த இடையாத்தாங்குடி கன்னிகோவில் தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 55). விவசாய கூலி தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் வயது (29) என்பவரும் இடையாத்தாங்குடி சிவன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை அனுபவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஜெயக்குமார் வீட்டிற்கு அருகில் உள்ள இடத்தை புருசோத்தமன் அனுபவத்தில் வைத்துள்ளார். அங்குள்ள கருவேல மரங்களை வெட்டும் பொழுது ஜெயக்குமார் ஏன் என் இடத்தில் உள்ள மரங்களை வெட்டுகிறாய் என்று கேட்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஜெயக்குமார் ஆத்திரம் அடைந்து புருஷோத்தமனை கட்டையால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த புருஷோத்தமனை அக்கம் பக்கத்தினர் மீட்டு கணபதிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு போய் சேர்த்தனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் புருஷோத்தமன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

    இது குறித்த புகாரின் பேரில் திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    ×