என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • காய்கறிகளின் விலை விபரங்களை வியாபாரிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.
    • தானியங்கி வானிலை ஆய்வு மையத்தை ஆய்வு செய்தார்.

    சீர்காழி:

    சீர்காழி வட்டத்திற் குட்பட்ட வைத்தீஸ்வரன் கோயில், எடக்குடி வடபாதி, தென்னலக்குடி, கடவாசல் உள்ளிட்ட பகுதிகளில் வேளாண்மை , உழவர் நலத்துறையின் சார்பில் நடைபெற்று வரும் வேளாண் பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    வைத்தீஸ்வரன்கோயில் துணை வேளாண் விரிவாக்க மையத்தினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு விதை இருப்பு விவரங்களை கேட்டறிந்தார். விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் இடுபொருட்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளனவா என வேளாண்மை துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து, வைத்தீஸ்வரன் கோயில் விதை சுத்திகரிப்பு நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு விதை சுத்திகரிப்பு பணியினை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு வழங்குவதற்கு ஏதுவாக தரமான விதைகள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்தார்.

    பின்னர் எடக்குடி வடபாதி கிராமத்தில் விவசாயி ஒருவர் பயிரிடப்பட்டுள்ள பருத்திக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணியினை பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் மற்றும் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையுமா என்பதனை வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, தென்னலக்குடி கிராமத்தில் தானியங்கி வானிலை ஆய்வு மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். சீர்காழியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையினை நேரில் பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் மற்றும் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள காய்கறிகளின் விலை விபரங்கள் வியாபாரிகளிடம் கேட்டறிந்தார். உழவர் சந்தை முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்பதனையும் ஆய்வு செய்தார். மேலும் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழிசை மூவர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    இவ்வாய்வின்போது, வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர், துணை இயக்குனர் (வேளாண் வணிகம்); வெற்றிவேலன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபாலன், சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் , வேளாண்மை உதவி இயக்குனர் ராஜராஜன், தோட்டக்கலைத்துறை குமரேசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆடி உற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
    • பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டங்களுடன் ஏராளமான பக்தர்கள் கரகம் எடுத்து வந்தனர்.

    சீர்காழி:

    சீர்காழியில் உள்ள சக்தி வாய்ந்த இரட்டை காளியம்மன் கோயிலில் இந்த ஆண்டு ஆடி உற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை காப்பு கட்டி தொடங்கி நடை பெற்று வந்தது . விழாவின் முக்கிய நிகழ்வாக தீமிதி திருவிழா நடந்தது . முன்னதாக கடைவீதி செல்வ விநாயகர் கோவிலில் இருந்து பச்ச காளி பவளக்காளி ஆட்டங்களுடன் கரகம் எடுத்துக் கொண்டும் திரளான பக்தர்கள் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    • மதுரையில் வருகிற 20-ந் தேதி அ.தி.மு.க சார்பில் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது.
    • சீர்காழி சட்டமன்ற தொகுதியில் உள்ள ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

    சீர்காழி:

    மதுரையில் வருகிற 20ஆம் தேதி அ.தி.மு.க சார்பில் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதனிடையே மாநாட்டில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் உள்ள ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். தொடர்ந்து எழுச்சி மாநாட்டிற்கு பொதுமக்க ளுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் பேனர், ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி சீர்காழி பஸ் நிலையம் பகுதியில் நடைபெற்றது.

    மாவட்ட அவை தலைவர் பி.வி. பாரதி தலைமையில், நகர செயலாளர் எல்.வி.ஆர் வினோத் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் , பைக், ஆட்டோ, வேன் , கார், உள்ளிட்டவற்றில் அ.தி.மு.க எழுச்சி மாநாடு குறித்த ஸ்டிக்கர் மற்றும் பேனரை ஒட்டிப் பணிகளை அவை தலைவர் பி.வி. பாரதி தொடக்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் சீர்காழி முன்னாள் நகர செயலாளர் பக்ரிசாமி , ஜெ.பேரவை செயலாளர் ஏ.வி. மணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு பரணிதரன், தொழில் அதிபர் சீனிவாசன் , நகர்மன்ற உறுப்பினர்கள் நாகரத்தினம் செந்தில், கிருஷ்ணமூர்த்தி, பொறு ப்பாளர்கள் வக்கீல்கள் நெடுஞ்செழியன், மணிவ ண்ணன் மற்றும் சுரேஷ், ரவி சண்முகம், நகர மகளிர் அணி செயலாளர் லெட்சுமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • 907 மாணவ -மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை எம்.எல்.ஏ. வழங்கினார்.
    • ஆயங்குடி பள்ளி தலைமைஆசிரியர் நாராயணன் நன்றி கூறினார்.

    சீர்காழி:

    சீர்காழி ச.மு.இ. மேல்நிலைப்பள்ளி, சியாமளா பெண்கள் , எல்.எம்.சி , ஆயங்குடிபள்ளம் வேங்கடேசா , கோதண்ட புரம் ராமகிருஷ்ணா , திருவெண்காடு சு.சு.தி.ஆண்கள் ஆகிய 6 அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா ச.மு.இ. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பரமசிவம் தலைமை தாங்கினார். ச.மு.இ. பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி வரவேற்றார். நகர்மன்ற துணை தலைவர் சுப்பராயன், தி.மு.க ஒன்றிய செயலாளர் பிரபாகரன், நகர்மன்ற உறுப்பினர் நித்தியாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைஆசிரியை கீதா வரவேற்றார். விழாவில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பங்கேற்று மாணவ -மாணவிகள் 907 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி சிறப்புறையாற்றினார்.

    இதில் பள்ளி தலைமைஆசிரியர்கள் செல்வகுமாரி (எல்.எம்.சி பள்ளி), அருளரசன் (இராம கிருஷ்ணா), நடராஜன் (சு.சு.தி.பள்ளி) மற்றும் உதவி தலைமை ஆசிரியர்கள் துளசிரெங்கன், முரளிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    முடிவில் ஆயங்குடிபள்ளி பள்ளி தலைமைஆசிரியர் நாராயணன் நன்றி கூறினார்.

    • சீர்காழி மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவியர்களுக்கு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • மருத்துவ உதவியாளர்கள் 15க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பரிசோதனை மேற்கொண்டனர்.

    சீர்காழி:

    சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 2000-த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு அனைத்து வகையான நோய்களைக் கண்டறியும் சிறப்பு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் செயலர் வி.சொக்கலிங்கம் தலைமை வகித்தார். டி.என்.சாய் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இம்முகாமில் மருத்துவர்கள் எம். ஸ்ரீநாத் , எஸ். பாரத், எஸ்.அருண் குமார், சி.அபிநயா, எம். சுப்பிரமணியம், சிவநேசன் மற்றும் மருந்தாளுநர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் 15க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பரிசோதனை மேற்கொண்டு தேவையான மருத்துவ சிகிச்சையளித்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியினை பள்ளி தலைமையாசிரியர் அறிவுடைநம்பி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    டி.ஆர்.பார்த்தசாரதி, சத்ய சாய் சேவா நிறுவனங்களின் மாவட்டத்தலைவர் எஸ். சங்கரன், பள்ளி உதவித் தலைமையாசிரியர்கள் என்.துளசிரங்கன், டி.ஸ்ரீனிவாசன் பங்கேற்றனர்.

    நிறைவில் பள்ளி உதவித் தலைமை யாசிரியர் எஸ். முரளிதரன் நன்றி கூறினார்.

    • சீர்காழியில் இரட்டை காளியம்மன் கோயில் உள்ளது.
    • விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று மாலை தீமிதி திருவிழா நடைபெறுகிறது.

    சீர்காழி:

    சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் சக்தி வாய்ந்த இரட்டை காளியம்மன் கோயில் உள்ளது.

    இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 10 நாள் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு ஆடி மாத தீமிதி உற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    நாள்தோறும் இரட்டை காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாரதனை இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று மாலை தீமிதி திருவிழா நடைபெறுகிறது. முன்னதாக சட்டை நாதர் சுவாமி கோயிலில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம், அலகு காவடி, பறவை காவடிகள் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கோவில் சென்றடைந்து கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    தொடர்ந்து மாலை பச்சகாளி, பவளக்காளி வேடம் அணிந்து பக்தர்கள் வீதியுலா வந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருக்கும் தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற உள்ளனர் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    • சீர்காழி போலீசார் விசாரணையில் முருகன் கொலை செய்யப்பட்டு இறந்தது தெரியவந்தது.
    • விசாரணை செய்ததில் கொத்தனார் முருகனை, ராஜகோபால் கொலை செய்தது தெரிய வந்தது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தேர் மேல வீதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் மர்மமான முறையில் சாலையோரம் இறந்து கிடந்தார்.

    இது குறித்த சீர்காழி போலீசார் விசாரணையில் இறந்தவர் மயிலாடுதுறை, சீனுவாசபுரம், திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த முருகன்(50) என்பதும், கொத்தனார் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.

    இது குறித்து சீர்காழி போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் முருகன் கொலை செய்யப்பட்டு இறந்தது தெரியவந்தது.

    முருகன் சீர்காழி எவ்வாறு வந்தார். அவரை கொலை செய்தது யார் என்று சீர்காழி பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் முருகனுடன் ஒரு நபர் சேர்ந்து வருவது போன்ற காட்சி பதிவாகியிருந்ததையடுத்து அந்த நபருக்கு கொலையில் தொடர்பு இருக்ககூடும் என அந்த நபரை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் சீர்காழி சட்டநாதபுரம் பகுதியில் ஒரு நபர் இருசக்கரவாகனத்தில் சென்ற நபரை வழிமறித்து அரிவாளை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றதாக காவல்நிலையத்திற்கு வந்த தகவலையடுத்து போலீசார் மர்மநபரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த நபர் நாங்கூர் பகுதியை சேர்ந்த ராஜகோபால் (வயது 26) என்பது தெரியவந்தது.

    மேலும் கொத்தனார் முருகன் கொலை வழக்கு தொடர்பான சிசிடிவி காட்சியில் அவருடன் உள்ள நபர் ராஜகோபால் என்பதை அறிந்த போலீசார்

    தீவிரமாக விசாரணை செய்ததில் கொத்தனார் முருகனை, ராஜகோபால் கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்தார்.

    முருகனிடம் ரூ.5ஆயிரம் ராஜகோபால் கடன் வாங்கியிருந்ததாகவும், அந்த பணத்தை கேட்டுவந்த நிலையில் சம்பவத்தன்று முருகனை ராஜகோபால் சீர்காழி வரவழைத்து இரவு நேரத்தில் சாலையோரம் படுத்துறங்கும் போது கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

    சீர்காழி போலீசார் கொலைவழக்காக மாற்றி ராஜகோபாலை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.

    • திருமுல்லைவாசல் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மருத்துவக்கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாண வர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி தலைமை வகித்தார்.

    எம்.எல்.ஏ.க்கள் எம்.பன்னீர்செல்வம் (சீர்காழி), நிவேதா.எம்.முருகன் (பூம்புகார்), கோட்டாட்சியர் உ.அர்ச்சனா, ஒன்றியக்குழுத்தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா வரவேற்றார்.

    விழாவில் அமைச்சர் சிவ.வீ.மெய்யனாதன் மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி பேசுகையில், தமிழக முதல்வர் பள்ளி கல்வித்துறைக்கு 40 ஆயிரத்து 299 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் 2022 -23 கல்வி ஆண்டில் 52 அரசு மற்றும் உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் கல்விப்பயிலும் மொத்தம் 6536 மாணவ மாணவிகளுக்கு ரூ.3 கோடியே 14 லட்சத்து 81 ஆயிரத்து 100 மதிப்பில் மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளது.

    தமிழ்நாட்டில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

    மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டுமென பூம்புகார், சீர்காழி சட்டபேரவை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    அதன் அடிப்படையில் விரைவில் மயிலாடுதுறை மாவட்ட த்திற்கு மருத்துவக் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதே போல் திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் துறைமுகம் அமைக்க வேண்டும் என சட்டபேரவை உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    விழாவில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார், சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் கலந்து கொண்டனர்.

    தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

    • மணல்ேமடு பகுதியில் போலீசார் தீவிரசோதனையில் ஈடுப்பட்டனர்.
    • அவர்களிடமிருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    மயிலாடுதுறை:

    மணல்மேடு அருகே கடலங்குடி, குறிச்சி ஆகிய பகுதிகளில் சாராயம் விற்பதாக மணல்மேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மணல்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர்.

    அப்போது கடலங்குடி பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள், கடலங்குடி சிவன் கோவில் தெருவை சேர்ந்த ராமையன் மகன் ராஜேஷ் (வயது 25) மற்றும் கடலங்குடி திருமேனியார் கோவில் தெருவை சேர்ந்த கலியமூர்த்தி (60) என்பதும், அவர்கள் 2 பேரும் சாராயம் விற்றதும் தெரியவந்தது.

    இதேபோல் குறிச்சி பாலம் அருகே கண்காணித்தபோது குறிச்சி மேலத்தெருவை சேர்ந்த தர்மலிங்கம் மகன் ஸ்டாலின் (35) என்பவர் சாராயம் விற்றதும் தெரியவந்தது.

    இதுகுறித்து மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ், கலியமூர்த்தி, ஸ்டாலின் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • நேற்று முதல் தரங்கம்பாடி மீனவர்கள் தொழில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • பிரச்சினை தொடர்பாக நேற்று தரங்கம்பாடியில் 18 மீனவ கிராமங்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கடலில் நேற்று முன்தினம் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்ததாக மீன்களை ஏற்றி வந்த பைபர் படகையும், படகில் இருந்த சந்திரபாடி மீனவர்கள் மூன்று பேரையும் தரங்கம்பாடி மீனவர்கள் சிறைப்பிடித்து துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.

    இச்சம்பவம் அறிந்து வந்த கடலோர காவல் படை மற்றும் பொறையார் போலீசார் மீனவ பஞ்சாயத்தார்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சந்திரபாடி மீனவர்களை பொறையார் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

    மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் படகில் இருந்த மீன்கள் தரங்கம்பாடி துறைமுகத்தில் ஏலமிடப்பட்டது.

    இந்த பிரச்சனை தொடர்பாக நேற்று முதல் தரங்கம்பாடி மீனவர்கள் தொழில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த சுருக்குமடி வலை பிரச்சினை தொடர்பாக நேற்று தரங்கம்பாடியில் 18 மீனவ கிராமங்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் ஆறு மாவட்டங்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம் அடுத்த கட்டமாக நடத்த இருப்பதாகவும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், சுருக்குமடி வலையை முழுமையாக தடை செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, சின்னூர்பேட்டை, குட்டியாண்டியூர், வெள்ளக்கோ யில், பெருமாள் பேட்டை, புதுப்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு, வானகிரி, நாயக்கர் குப்பம், கீழ மூவர்கரை, மேலமூவர்கரை, தொடுவாய், பழையார், கொடியம்பாளையம் உள்ளிட்ட 21 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதன் காரணமாக 4000க்கும் மேற்பட்ட பைபர் படகுகள், 300 மேற்பட்ட விசை படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

    இந்த தொழில் மறியல் காரணமாக கடலோர கிராமங்களில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

    • டெல்லி மாநகராட்சி கன்வென்ஷன் வளாகத்தில் வழங்கப்பட்டது.
    • தமிழக பள்ளிக்கல்வித்துறை விருதான டாக்டர்.ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதினை பெற்றார்.

    சீர்காழி:

    சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல் நிலை பள்ளியில் 33 ஆண்டு கால பணியில் உடற்கல்வி ஆசிரியராகவும், தேசிய மாணவர் படை அதிகாரியாகவும், உடற்கல்வி இயக்குநராகவும், நாட்டு நல பணித்திட்ட அலுவலராகவும், பள்ளியின் உதவி தலைமையா சிரியராகவும் பணியாற்றி வருபவரும், சென்ற ஆண்டின் தமிழக பள்ளிக்கல்வித்துறை விருதான டாக்டர். ராதாகி ருஷ்ணன் நல்லாசிரியர் விருதினை பெற்ற எஸ்.முரளிதரனுக்கு இந்திய அரசின் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அகில இந்திய உடற்கல்வி அமைப்பு சார்பில் சிறந்த உடற்கல்வி இயக்குனர் மற்றும் சிறந்த பயிற்சியாளர்கான விருது புது டெல்லி மாநகராட்சி கன்வென்ஷன் வளாகத்தில் வழங்கப்பட்டது.

    இவ்விருதினை அவ் வமைப்பின் அகில இந்திய நிறுவன தலைவர் டாக்டர்.பியுஷ் ஜெயின் , தமிழ்நாடு பெபி அமைப்பின் பொது செயலாளர் டாக்டர் சபரி கணேஷ் முன்னிலையில், துரோணாச்சாரியர் விருது பெற்ற சர்வதேச ஹாக்கி விளையாட்டு வீரர் மற்றும் பயிற்சியாளருமான டாக்டர். ஏ.கே.பன்சல் தேசிய விருதினை சீர்காழி எஸ்.முரளிதரனுக்கு வழங்கினார்.

    இவ்விருதினை பெற்ற முரளிதரனை ,பள்ளி முன்னாள் செயலர் பாலசுப்ரமணியம், எஸ்.இராமகிருஷ்ணன் பள்ளி செயலர் சொக்கலிங்கம், பள்ளி குழு தலைவர் சிதம்பரநாதன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கபாலி, பள்ளி பழைய மாணவர் சங்க செயலர் முரளிதரன், பள்ளி தலைமையாசிரியர் அறிவுடைநம்பி,பள்ளி உதவி தலைமையாசிரியர்கள் துளசி ரங்கன்,

    சீனிவாசன் ,பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் முரளி, மார்கண்டன், சக்தி வேல், ஹரிஹரன், ராகேஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் அலுவலர்கள் பாராட்டினர்.

    • நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளுடன் கூடிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.
    • மருத்துவமனைகளில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    மயிலாடுதுறை மாவ ட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமானது மயிலாடுதுறை, சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், தரங்கம்பாடி, பொறையார், குத்தாலம் ஆகிய 6 இடங்களில் உள்ள அரசு மருத்துவ மருத்துவமனையிலும், கொள்ளிடத்தில் விஷ்னு மருத்துவமனை, மயிலாடுதுறையில் சாந்தி, கிருஸ்ணா, ராம் எலும்பு முறிவு மருத்துவமனை ஆகிய 4 தனியார் மருத்துவமனைகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஆக்கூர், திருவெண்காடு, குத்தாலம், கொள்ளிடம், மணல்மேடு ஆகிய 5 இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும்,

    கொள்ளிடத்தில் சாய் ஸ்கேன் சென்டர், மயிலாடுதுறையில் அபினி மற்றும் மயூரா, ஆகிய 3 இடங்களில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் அரசு தலைமை மருத்துவமனையில்; பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் மூலம் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை மற்றும் டயாலிஸிஸ் நோயாளிகளுக்கான உரிய சிகிச்சைகள், பொது அறுவை சிகிச்சை, பொது மருத்துவ சிகிச்சை மற்றும் புற்றுநோய் சம்மந்தப்பட்ட சிகிச்சை மற்றும் இருதய சிகிச்சைகள் உள்ளிட்ட சிகிச்சைகள் ஏழை, எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளுடன் கூடிய சிகிச்சைகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 7.5.2021 முதல் இன்று வரை முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறுநீரக சுத்திகரிப்பு சிகிச்சை (டயாலிஸிஸ் 97 நபர்களுக்கும், மூட்டு மாற்று மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை 1702 நபர்களுக்கும், காது மூக்கு தொண்டை சிகிச்சை 169 நபர்களுக்கும், கண்நோய் அறுவை சிகிச்சை 178 நபர்களுக்கு என 2146 நபர்களும், 4164 நபர்கள் பொது சிகிச்சை என மொத்தம் 6310 நபர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவமனைகளில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×