என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    கொள்ளிடம் அருகே ஆர்ப்பாக்கம் கிராமத்தில் 8 பேரை கடித்து குதறிய குரங்கை பிடிக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கொள்ளிடம்:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆர்ப்பாக்கம் கிராமம் மந்தக்கரை பகுதியில் குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றி வீடுகள் உள்ளன. இந்தநிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இரண்டு குரங்குகள் ஆர்ப்பாக்கம் கிராமத்துக்குள் வந்தன. இந்த குரங்குகள் அந்த கிராமத்தை சுற்றியுள்ள மரங்களில் தங்கி அங்கு கிடைக்கும் உணவுகளை சாப்பி்ட்டு வந்தன. சில நேரங்களில் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் நுழைந்து பொருட்களை எடுக்க முயலும் போது வீ்ட்டில் உள்ளவர்கள் விரட்டும்போது திடீரென குரங்குகள் மேலே பாய்ந்து கடித்து விடுகின்றன.

    ஆர்ப்பாக்கம் கிராமம் மந்தகரை பகுதியில் நேற்று வெங்கட்ராமன் (வயது 51) என்பவருடைய வீட்டு தோட்டத்திற்கு வந்த குரங்குகள், திடீரென கொல்லைபுறம் வழியாக வீட்டிற்குள் நுழைய முயன்றுள்ளது. உடனே அவற்றை வெங்கட்ராமன் விரட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த குரங்கு, அவர் மீது பாய்ந்து கடித்து குதறியது. இதனால் அவர் அலறியடித்து ஓடினார்.

    இதேபோல் நேற்று முன்தினம் வெங்கட்ராமனின் மனைவி பானுமதி (48). மகன்கள் ராஜேஷ் (26), விக்னேஷ் (20) ஆகியோரையும் கடித்துள்ளது. இதேபோல் அந்த பகுதியை சேர்ந்த பானு (35), விஜயலட்சுமி (20), அஸ்வின் (13) சாரதா (60) ஆகியோரையும் கடித்துள்ளது. இவர்கள் அனைவரும் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    இதுகுறித்து ஆர்ப்பாக்கம் கிராம மக்கள் கூறுகையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்த கிராமத்துக்கு 2 குரங்குகள் வந்தன.

    இந்த குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து வீட்டில் தின்பண்டங்கள் இருந்தால் அவற்றை எடுத்து சென்று விடும். ஆனால் அப்போது யாரையும் கடிக்கவில்லை. கடந்த 10 நாட்களாக இந்த குரங்குகள் விரட்டுபவர்களை துரத்தி வந்து கடித்து விடுகிறது.

    இதுகுறித்து உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து வனத்துறையினர் வந்து கூண்டு வைத்து குரங்குகளை பிடிக்க வேண்டும் என்று அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த 2 குரங்குகளால் கிராம மக்களே அச்சத்தில் உள்ளனர்.
    மணல்மேடு அருகே அண்ணன் இறந்த அதிர்ச்சியில் தம்பியும் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    மணல்மேடு:

    மணல்மேடு அருகே அண்ணன் இறந்த அதிர்ச்சியில் தம்பியும் இறந்தார். சாவிலும் இணைபிரியா சகோதரர்கள் பற்றிய பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டை அடுத்த வக்காரமாரி கீழத்தெருவில் வசித்து வந்தவர்கள் வீரமணி(வயது71), குணசேகரன்(64). இருவரும் உடன்பிறந்த சகோதரர்கள்.

    இவர்களில் வீரமணி, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். குணசேகரன், தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இருவரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீரமணிக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை மணல்மேடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தனது உடன்பிறந்த அண்ணன் இறந்த செய்தி கேட்டு துக்கம் தாளாது குணசேகரன் கதறி, கதறி அழுதார். இத்தனை ஆண்டுகள் தன்கூடவே இருந்த தனது அண்ணன் தன்னை விட்டு விட்டு சென்று வி்ட்டாரே என்று அவர் தனது மார்பில் அடித்துக்கொண்டு கதறினார். சில விநாடிகளில் குணசேகரனுக்கும் நெஞ்சுவலி ஏற்பட்டு அண்ணன் இறந்த அதிர்ச்சியில் அவரும் உயிரிழந்தார். இதனையடுத்து இருவரது உடல்களும் அவர்கள் வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு இன்று(ஞாயிற்றுக்கிழமை) இறுதி சடங்கு நடக்கிறது.

    இறந்த வீரமணியின் மனைவி பெயர் கலைவாணி. இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள். இவர்களில் மூத்த மகன் மெக்கானிக்கல் என்ஜினீயர் ஆவார். இவர், தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இளைய மகன், புதுச்சேரியில் ஓட்டல் தொழில் நடத்தி வருகிறார். மகள், வெளிநாட்டில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

    இதேபோல் இறந்த குணசேகரனின் மனைவி பெயர் ஜமுனா சங்கரி. இவர், வக்காரமேரி ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். இவர்களுக்கு 3 மகள்கள். இவர்களில் இருவர் திருமணமாகி தங்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்கள். ஒரு மகள் கோவையில் பணிபுரிந்து வருகிறார்.

    பாசப்பிணைப்பால் அண்ணன் இறந்த அதிர்ச்சியில் தம்பியும் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடமும், உறவினர்களிடமும், அந்த பகுதி மக்களிடமும் பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
    கொள்ளிடம் அருகே வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    கொள்ளிடம்:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வேட்டங்குடி கிராமம் மெயின் ரோட்டை சேர்ந்த பாஸ்கரன் மகன் பேரரசன் (வயது 28). திருமணமாகாத இவர், தினமும் மதுகுடித்துவிட்டு போதையிலேயே இருந்து வந்தார். 

    இந்தநிலையில் நேற்று முன்தினம் மது போதையில் இருந்த அவர், வீட்டில் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டார். இதனால் ஆபத்தான நிலையில் இருந்த அவரை சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பேரரசன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். 

    இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சீர்காழி ரெயில்வே ரோட்டில் புளியமரம் வேரோடு சாய்ந்தது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    சீர்காழி:

    சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் திடீரென மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த உளுந்து உள்ளிட்ட பயறு வகைகளை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதேபோல் விட்டுவிட்டு பெய்து வரும் தொடர் மழையால் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், எடமணல், கொள்ளிடம், கற்கோவில், கதிராமங்கலம், எடப்பாடி வடபாதி, காரைமேடு, அட்டகுளம், நயினார்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று அதிகாலை சீர்காழி ரெயில்வே ரோட்டில் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான புளியமரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது.

    இதனால் சீர்காழி பனங்காட்டான்குடி இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலையில் சாய்ந்து கிடந்த புளியமரத்தை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
    சீர்காழி அருகே தூக்கில் தொங்கிய நிலையில் தொழிலாளி பிணமாக கிடந்தார். தகவலறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே நிம்மேலி நடுத்தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் ( வயது 40). இவர் நெப்பத்தூரில் உள்ள தனியார் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 2 வாரத்திற்கு முன்னர் வேலையை விட்டு நிறுத்தப்பட்டாராம். தொடர்ந்து வேலை செய்த நாட்களில் வரவேண்டிய சம்பள பாக்கியை கேட்டு அவ்வபோது வந்து செல்வதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நள்ளிரவு 2 மணி அளவில் செங்கல் சூளைக்கு வந்த சீனிவாசன் அங்கிருந்த மற்ற தொழிலாளர்களிடம் பேசிவிட்டு சென்றாராம். இன்று அதிகாலை இரவு பணி முடித்து வந்த தொழிலாளிகள் செங்கல் சூளையில் செங்கல்லை காயவைக்கும் பகுதியிலுள்ள செட்டில் சீனிவாசன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ந்தனர்.

    இதுகுறித்து திருவெண்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தகவலறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், சீனிவாசன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி மங்கை மடம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் சீர்காழி தாசில்தார் ஹரிதரன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தொடர்ந்து அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    திருமண மண்டபங்களில் சமூக இடைவெளியுடன் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி மண்டபங்களை பயன்பாட்டிற்கு விடவேண்டும். விதிமுறைகளை மீறினால் ரூ5ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றார்.

    சீர்காழி:

    சீர்காழியில் வணிகர் சங்கங்கள், திருமண மண்டபம், தியேட்டர், மருந்தகம், உணவங்களின் உரிமையாளர்களுடனான ஆலோசனைக்கூட்டம் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது.

    தாசில்தார் ஹரிதரன், கோட்டாசியரின் நேர்முக உதவியாளர் சண்முகம், தேர்தல் துணை தாசில்தார் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கஜேந்திரன் (சீர்காழி), அருண்(கொள்ளிடம்), சீர்காழி இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சப்-கலெக்டர் நாராயணன் பேசுகையில், வணிக நிறுவனங்களில் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கட்டாயம் முககவசம் அணிதிருக்கவேண்டும். கடையில் வரும் வாடிக்கையாளர்களுக்கு கிருமிநாசினி, சோப்புகொண்டு கைகளை கழுவிட வசதிகள் செய்திருக்கவேண்டும். முககவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்ககூடாது.

    அதேபோல் முககவசம் அணியாத வணிக நிறுவனங்களுக்கு ரூ.200அபராதமும், சமூக இடைவெளியை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்படும். தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும். திருமண மண்டபங்களில் சமூக இடைவெளியுடன் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி மண்டபங்களை பயன்பாட்டிற்கு விடவேண்டும். விதிமுறைகளை மீறினால் ரூ5ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றார்.

    மயிலாடுதுறையில் முன்னாள் ராணுவ வீரரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை திருவிழந்தூர் நீடூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ரூபன் சார்லஸ் (வயது 52). முன்னாள் ராணுவ வீரரான இவர், மயிலாடுதுறை நகரை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அரசு மருத்துவமனை சாலையில் சென்றபோது 4 கால் மண்டபம் அருகே சாலை குறுக்கே 2 பேர் நின்று பேசி கொண்டிருந்தனர்.

    அப்போது வழியை விட்டு ஓரமாக நின்று பேசுங்கள் என்று ரூபன் சார்லஸ் அவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த 2 பேரும் சேர்ந்து ரூபன் சார்லசை திட்டியதோடு கற்களால் அடித்து தாக்கியுள்ளனர்.

    இதில் ரூபன் சார்லசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த ரூபன் சார்லஸ் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் தொடர்பாக ரூபன் சார்லஸ் கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்தனர்.

    பின்னர் வழக்கு தொடர்பாக திருவிழந்தூர் தோப்பு தெருவை சேர்ந்த ராமசாமி மகன் சாமிநாதன் (39), அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ராஜேந்திரன் (38) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    சீர்காழி நகர் பகுதியில் முக கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.200 அபராதம் விதிப்பு நகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
    சீர்காழி:

    தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்த போதிலும் தொற்று தாக்கம் அதிகரித்து வருகிறது.

    இந்தநிலையில் சீர்காழி நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி தலைமையில் பொறியாளர் தமயந்தி, மேலாளர் காதர்கான், பணி மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட குழுவினர், சீர்காழி நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் முக கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.200 அபராதம் விதித்து, எச்சரித்து அனுப்பினர்.

    இதேபோல் சீர்காழி நகர் பகுதிக்குட்பட்ட டீக்கடை, உணவு விடுதி, மளிகை கடை, சூப்பர் மார்க்கெட், மீன் கடை, கறிக்கடை உள்ளிட்ட கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும், நகராட்சி பணியாளர்கள் கேட்டுக் கொண்டனர்.

    இதேபோல் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில் ஆகிய போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமையில் முக கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளை எச்சரித்து இலவசமாக முக கவசங்களை வழங்கினர்.

    தரங்கம்பாடி அருகே இன்று காலை கடலில் வலை விரித்து மீன் பிடிப்பதில் மோதல் ஏற்பட்டதால் மீனவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள புதுப்பேட்டை சுனாமி காலனியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 42) மீனவர். இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு 1 மகன், மகள் உள்ளனர்.

    இந்நிலையில் இன்று காலை மூர்த்தி பைபர் படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். அவர் கடலில் வலையை விரித்து மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு அருகே உள்ள வானகிரி கிராமத்தை சேர்ந்த மீனவர்களும் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    திடீரென மூர்த்தி விரித்த வலை மீது வானகிரி மீனவர்களும் வலை விரித்தனர். இதனால் மூர்த்திக்கும், வானகிரி மீனவர்கள் சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே வானகிரி மீனவர்கள் ஆத்திரம் அடைந்து படகில் இருந்த கட்டையால் சரமாரியாக மூர்த்தியை தாக்கினர். இதில் ரத்தவெள்ளத்தில் படகிலேயே மூர்த்தி சரிந்து விழுந்தார்.

    இதையடுத்து மூர்த்தியை புதுப்பேட்டை மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இது குறித்து தரங்கம்பாடி கடலோர காவல் படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த காவல்படையினர் மூர்த்தியை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மூர்த்தியை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் கடலோர காவல்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சீர்காழி பகுதியில் உள்ள அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல்மூட்டைகள் மழையில் நனைந்து பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் கடந்த 3 நாட்களாக வெயில் இன்றி வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 5 மணியளவில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக மாறி 2 மணி நேரத்துக்கு மேல் பெய்தது. காற்று அதிகமாக வீசியதால் மின்சாரம் தடைபட்டது.

    இந்த பலத்த மழையால் சீர்காழி நகரின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு இந்த மழை நிம்மதியை கொடுத்தது.

    சீர்காழி பகுதியில் உள்ள அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல்மூட்டைகள் எடுக்கப்படாமல் வெயிலில் காய்ந்து வந்த நிலையில் இந்த மழையால் தற்போது மழையிலும் நனைந்து பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.


    கண்டமங்கலம் அரசினர் தொடக்கப்பள்ளி வகுப்பறை முன்பு கொட்டப்பட்டுள்ள செங்கற்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருவெண்காடு:

    சீர்காழி அருகே பாகசாலை ஊராட்சிக்குட்பட்ட கண்டமங்கலம் பகுதியில் அரசினர் தொடக்கப்பள்ளி உள்ளது.

    இந்த பள்ளியில் 125 மாணவர்கள் படித்து வருகின்றனர். மேலும் இந்த பள்ளி வளாகத்தில் குழந்தைகள் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இந்தநிலையில் இந்த பள்ளி வளாகத்தில் சமீபத்தில் பழுதடைந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. கட்டிடத்தை இடித்த போது செங்கற்களை அப்புறப்படுத்தாமல் அதே வளாகத்தில் உள்ள ஒரு வகுப்பறை கட்டிடத்தின் முன்பு கொட்டி உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கட்டிட இடிபாடுகளை வளாகத்தை விட்டு அப்புறப்படுத்தாமல், வகுப்பறை கட்டிடத்திற்கு முன்பு கொட்டி வைத்துள்ளனர்.

    கொட்டி வைக்கப்பட்டுள்ள செங்கற்கள் மீது மாணவர்கள் நடப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும். இன்னும் சில மாதங்களில் பள்ளி திறக்கப்பட உள்ள சூழ்நிலையில் மாணவர்கள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகள் அந்த வளாகத்தில் நடப்பதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வகுப்பறை முன்பு கொட்டப்பட்டுள்ள செங்கற்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    மயிலாடுதுறை அருகே மனநலம் பாதித்த 26 வயது பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே பெரம்பூர் தெற்கிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பந்தம் மகன் ராஜே‌‌ஷ்(வயது 26). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட 26 வயது பெண்ணை கர்ப்பிணியாக்கியதாக தெரிகிறது. அந்த பெண் உடல்நலம் சரியில்லாமல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அந்த பெண் 7 மாத கர்ப்பிணியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். 

    மனநலம் சரியில்லாத அந்தப் பெண் கர்ப்பமானதற்கு ராஜே‌‌ஷ்தான் காரணம் என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மனநலம் பாதித்த பெண்ணின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட மயிலாடுதுறை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
    ×