என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    சீர்காழி அரசு மருத்துவமனையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகுவதால் உடைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சீர்காழி:

    சீர்காழியில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு இதன் மூலம் நோயாளிகள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் பயன்பெற்று வந்தனர். இந்த நிலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது.

    இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் குடிநீருக்காக சிரமப்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மருத்துவமனையில் அமைக்கப்பட்ட குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மீன்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக பூம்புகாரில் மீனவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதனால் கொலையாளிகளை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் மற்றும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவெண்காடு:

    மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் வைரக்கண்ணு. இவருடைய மகன் தமிழ்வாணன்(வயது35). மீனவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவதாஸ் மகன் சுகந்தன்(25) என்பவருக்கும் மீன்பிடிப்பது தொடர்பாக கடல் பகுதியில் பிரச்சினை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 8-ந்தேதி தனது வீட்டில் தமிழ்வாணன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த சுகந்தன் மற்றும் மர்ம நபர்கள் தமிழ்வாணனை பைப், கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த தமிழ்வாணன் ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார். அவரை குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இது குறித்து பூம்புகார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தமிழ்வாணன் நேற்று அதிகாலை இறந்தார். இதைக் கேள்விப்பட்ட தமிழ்வாணனின் உறவினர்கள் மற்றும் மீனவ கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பூம்புகார் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். அப்போது அவர்கள் கொலையாளிகளை கைது செய்யக்கோரி கோஷம் எழுப்பினர்.

    இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு யுவபிரியா, பூம்புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல், மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு கொலையாளிகள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். போலீஸ் நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்தால் பூம்புகார் பகுதி முழுவதும் நேற்று பரபரப்பாக காணப்பட்டது. கொலை செய்யப்பட்ட தமிழ்வாணனுக்கு கல்வி என்ற மனைவியும் சஜி, தேவா ஆகிய மகன்களும் உள்ளனர்.
    மயிலாடுதுறை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மேலபோலகம் கிராமத்தை சேர்ந்த சாமிதுரை மகன் தினேஷ்குமார் (வயது 19). இவர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இதையடுத்து மயிலாடுதுறை அருகே சித்தர்க்காட்டில் சிறுமி உறவினர் வீட்டில் இருந்துள்ளார். அப்போது மாப்படுகை கங்கை நகரை சேர்ந்த முருகவேல் (35) என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து சிறுமி தனது ஊரான பெருஞ்சேரிக்கு வந்து மங்கநல்லூரில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது மங்கநல்லூர் அண்ணா நகரை சேர்ந்த தர்மராஜ் மகன் சிங்காரவேலன் (30) என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இந்த நிலையில் சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. இதனால் சிறுமி சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதி்க்கப்பட்டு சிகிச்சை பெற்றபோது அவள் 3 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியிடம் வாக்கு மூலம் பெற்ற மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமார், முருகவேல், சிங்காரவேலன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
    சீர்காழி அருகே கீராநல்லூரில் இறால் குட்டை அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று சீர்காழி உதவி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஒன்றியம் திருக்கருக்காவூர் ஊராட்சிக்கு உட்பட்ட கீராநல்லூர் கிராமம் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் குடியிருப்புக்கு அருகில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் இறால் குட்டை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது.

    இந்த பகுதியில் இறால் குட்டை அமைந்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும், குடிநீர் உப்பு நீராக மாறி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாலும் உடனடியாக இறால் குட்டை அமைக்கும் பணியினை தடுத்து நிறுத்த வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்

    இந்நிலையில் நேற்று கீராநல்லூர் கிராமத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சீர்காழி உதவி கலெக்டர் நாராயணனிடம் கீராநல்லூரில் இறால் குட்டை அமைக்க தடை விதிக்க வேண்டும் என கோரி மனு கொடுத்தனர்.

    அப்போது அவர்களிடம் உதவி கலெக்டர் விரைவில் இரு தரப்பையும் கூட்டி அமைதி பேச்சுவார்த்தை நடத்தி நல்ல தீர்வு காணப்படும் எனக் கூறினார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.
    சீர்காழி அருகே தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்யக்கோரி பல்வேறு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே நெப்பத்தூரில் தூக்கில் தொங்கி மர்மமான முறையில் கடந்த 17-ம் தேதி இறந்த தொழிலாளி சீனிவாசன் வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரே சீனிவாசன் உறவினர்கள் கிராமமக்கள், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழ் தேசியப் பேரியக்கம் ஆகியவற்றை சேர்ந்தவர்கள் சுமார் அரை மணிநேரம் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதையடுத்து சீர்காழி இன்ஸ்பெக்டர் இராமமூர்த்தி மறியலில் ஈடுப்பட்ட 25 பேரை கைது செய்தனர்.

    இதேபோல் கொள்ளி டத்தில் தமிழர் உரிமை இயக்க மாவட்ட செயலாளர் முரளிதரன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள், மக்கள் அதிகாரம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 35 பேரை டி.எஸ்.பி. தேன்மொழிவேல், இன்ஸபெக்டர் அமுதாராணி கைது செய்தனர்.

    இதேபோல் புத்தூர் மெயின் ரோட்டில் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த ராஜ்குமார் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட 23 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கொள்ளிடத்தில் புளியந்துறை ஊராட்சி மன்ற தலைவர் நேதாஜி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட வக்கீல் ஆனந்த செந்தில்குமார் உள்ளிட்ட 20 பேர் என மொத்தம் 103 பேரை கைது செய்தனர்.

    இதேப்போல் மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் முக்கூட்டு, செம்பனார்கோவில், பொறையார் ராஜூவ்புரம் ஆகிய பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சாலைமறியல் போராட்டம் நடைப்பெற்றது.

    மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் செம்பை ஒன்றியக்குழு உறுப்பினர் வீ.எம்சரவணன், அன்னப்பன்பேட்டை ரவி, சி.பி.ஐ சார்பில் ராதாகிருஷ்ணன், விடுதலை சிறுத்தை சார்பில் கனகசபை, வினோத், ராஜா, கலைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு உரையாற் றினர்.செம்பனார்கோவிலில் நடைப்பெற்ற மறியலுக்கு விடுதலை சிறுத்தை ஒன்றிய பொறுப்பாளர் கலைவண்ணன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் கே.பி.மார்க்ஸ், சிபிஐ ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். அதேப் போன்று ராஜூவ்புரத்தில் நடைப்பெற்ற மறியல் போராட்டத்திலும் ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

    சீர்காழியில், கடன் பிரச்சினையால் தூக்குப்போட்டு தாய்-மகன் தற்கொலை செய்து கொண்டனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தியாகராஜன் நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் காமராஜ் மனைவி சாந்தி(வயது 52) கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இவர், ஊழியக்காரன் தோப்பில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார்.

    மேலும் ஏலச்சீட்டு நடத்தி வந்த இவர், கடந்த சில மாதங்களாக கடன் தொல்லைக்கு ஆளாகியுள்ளார். இவருடன் இவரது மகன் ராம்குமாரும்(29) வசித்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

    நேற்று இவர்களின் வீடு வெகுநேரமாகியும் திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் சாந்தியின் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது சாந்தியும் அவரது மகன் ராம்குமாரும் வீட்டினுள் வெவ்வேறு இடத்தில் தூக்கில் பிணமாக தொங்கியது தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணமாக தொங்கிய தாய் மகனின் உடல்களை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடன் பிரச்சினையால் தாய்-மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
    செங்கல் சூளை தொழிலாளி சாவில் மர்மம் உள்ளதாக கூறி வழக்கை கொலை வழக்காக மாற்றக்கோரி நேற்று சீர்காழியில் உறவினர்கள், கிராம மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சீர்காழி:

    சீர்காழி அருகே நெப்பத்தூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் செங்கல் சூளையில் கடந்த 17-ந் தேதி அதே கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் (வயது 42) என்பவர் செங்கல் சூளையில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தார்.

    இதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சீனிவாசன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து திருவெண்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்தநிலையில் சீர்காழி அரசு மருத்துவமனையில் மர்மமான முறையில் உயிரிழந்த சீனிவாசனின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இதையடுத்து நேற்று முன்தினம் 4-வது நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்போடு சீனிவாசனின் உடல் சீர்காழி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் சீனிவாசனின் உடலை வாங்க உறவினர்கள், கிராம மக்கள், அரசியில் கட்சியினர் மறுப்பு தெரிவித்து,

    மர்மமான முறையில் இறந்த சீனிவாசனின் வழக்கை திருவெண்காடு போலீசார் கொலை வழக்காக மாற்றினால் தான் உடலை பெற்றுக் கொள்வோம் எனக்கூறி 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் நேற்று 5-வது நாளாக சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் இறந்த சீனிவாசனின் உறவினர்கள், கிராம பொது மக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு் கட்சி, மக்கள் அதிகாரம், உள்ளிட்ட அரசியல் கட்சியினர் 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது மர்மமான முறையில் உயிரிழந்த தொழிலாளி சீனிவாசனின் வழக்கை கொலை வழக்காக மாற்றக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதனை தொடர்ந்து உதவி கலெக்டர் நாராயணன், சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு யுவப்பிரியா, தாசில்தார் ஹரிஹரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது உதவி கலெக்டர் கூறுகையில் சீனிவாசனின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் சட்டப்படி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால் அதற்கு போராட்டக்காரர்கள் சம்மதிக்காமல் காவல்துறை, கலெக்டர், வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகளை கண்டித்து தொடர்ந்து கோஷங்கள் எழுப்பியபடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சீர்காழி பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    சீர்காழி அருகே பிரேத பரிசோதனைக்குப் பின் செங்கல் சூளை தொழிலாளி உடலை உறவினர்கள் வாங்க மறுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நெப்பத்தூர் கிராமத்தில் தனியார் செங்கல் சூளையில் பணியாற்றி வந்த நிம்மேலி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி சீனிவாசன்(40) கடந்த 17-ம் தேதி செங்கல் சூளை வளாகத்தில் மர்மமான முறையில் சடலமாக தூக்கில் தொங்கினர். இவரது சாவில் மர்மம் இருப்பதாகக்கூறி உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் மறியலில் ஈடுப்பட்டனர்.

    கடந்த 18ம் தேதி நடைபெற இருந்த சீனிவாசனின் உடற் கூறாய்வை உறவினர்கள் தடுத்து, உள்ளூர் மருத்துவர்களை கொண்டு உடற்கூறாய்வு செய்யக்கூடாது. பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து வீடியோ பதிவு மற்றும் வழக்குரைஞரை உள்ளே அனுமதிக்கவேண்டும் எனக்கூறி தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    எனினும் இந்த கோரிக்கை சுகாதாரத்துறையினரால் ஏற்கபடாததால் சீனிவாசனின் உடற்கூறாய்வு பணி நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஏப்19ம் தேதியும் அதே கோரிக்கையை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை சீனிவாசனின் உறவினர், கிராமமக்கள் சிலர் மயிலாடுதுறை கலெக்டர் இரா.லலிதாவை சந்தித்து, உடற்கூறு ஆய்வு தொடர்பாக மனு அளித்தனர்.

    இந்நிலையில் நேற்று பிற்பகல் சீனிவாசனின் சடலத்தை உடற்கூறு ஆய்வு செய்திட முடிவு எட்டப்பட்டது. ஆர்.டி.ஓ நாராயணன் முன்னிலையில்,அரசு தரப்பு வீடியோ பதிவு கொண்டு உடற்கூறுஆய்வு செய்யப்பட்டது.முன்னதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு கோரிக்கையை ஏற்று 3அரசு மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வை பார்வையிட்டனர். உடற்கூறு ஆய்வு தொடங்குவதற்கு முன்னர் இறந்த சீனிவாசனின் மனைவி மற்றும் உறவினர்கள் சடலத்தை பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டது.

    அதன்பின்னர் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது.ஆனால் உடற்கூறு ஆய்வு முடிந்தவுடன் உறவினர்கள் பிரேதத்தை வாங்க மறுத்தனர். சீனிவாசன் மர்ம சாவு தொடர்பாக கொலை முயற்சி வழக்கை,கொலை வழக்காக மாற்றி பதிவு செய்திடவேண்டும் என வலியுறுத்தினர்.உடற்கூறு ஆய்வு முடிவுகள் வந்தவுடன் தான் மேற்கண்ட முடிவு எட்டப்படும் என தெரிவிக்கப்பட்டதால், சீனிவாசனன் உடலை வாங்க உறவினர்கள் மறுத்ததால் உடல் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது.

    இந்நிலையில் கிராமமக்கள் சிலர் காவல்நிலையம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவங்களால் சீர்காழி அரசு மருத்துவமனை மற்றும் நகரில் டி.எஸ்.பி யுவபிரியா தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடபட்டுள்ளது.

    மயிலாடுதுறை அருகே கருவாழக்கரை கிராமத்தில் சூதாட்ட கிளப் நடத்தி வருவதாக செம்பனார்கோவில் சப்-இன்ஸ்பெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே கருவாழக்கரை கிராமத்தில் சூதாட்ட கிளப் நடத்தி வருவதாக செம்பனார்கோவில் சப்-இன்ஸ்பெக்டர் மங்களநாதருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்ற போது கருவாழக்கரை மருவத்தூரை சேர்ந்த பழனிவேல் (இவர் கருவாழக்கரை ஊராட்சி தலைவர்) தனது வீட்டு மாடியில் சூதாட்ட கிளப் நடந்தி வருவது தெரியவந்தது.

    இதையடுத்து அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட கருவாழக்கரை சக்திவேல், ராஜ்குமார், பழனி, பரசலூர் தங்க மாரியப்பன், பேரளம் இக்பால், கடிச்சம்பாடி ராதா ஆகிய 6 பேரை சப்-இன்ஸ்பெக்டர் மங்களநாதர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.

    சீர்காழி நகர் பகுதியில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
    சீர்காழி:

    சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளிலும் பல்வேறு சாலைகள் நீண்ட காலமாக சேதமடைந்து போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து சீர்காழி பாரதி எம்.எல்.ஏ., முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, சீர்காழி நகர் பகுதியில் சேதமடைந்து காணப்படும் சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    இதனைத் தொடர்ந்து முதல்-அமைச்சர், கோரிக்கை ஏற்று தமிழ்நாடு உட்கட்டமைப்பு சாலைகள் திட்டம், சிறப்பு சாலைகள் திட்டம் ஆகிய திட்டங்கள் சார்பில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் சேதமடைந்த சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்தார்.

    இதனைத் தொடர்ந்து சிறப்பு சாலைகள் திட்டம், தமிழ்நாடு உட்கட்டமைப்பு சாலைகள் திட்டம் ஆகிய திட்டத்தின் கீழ் ரூ.8 கோடி மதிப்பீட்டில் புளிச்சக்காடு சாலை 3 கிலோ மீட்டர் 95 லட்சம் மதிப்பீட்டிலும், எம்.எஸ்.கே.நகர் 225 மீட்டர் ரூ.18 லட்சம் மதிப்பீட்டிலும், இனம் குணதலபாடி சாலை 575 மீட்டர் ரூ.28 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டிலும் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இதேபோல் தவசி நகர், வீரம்மாள் நகர், சுந்தராம்பாள் நகர், பெரிய வகுப்பு கட்டளை தெரு, புழுகாபேட்டை, திருத்தாளமுடையார் கோவில் முதல் அகர திருக்கோலக்கா வரை உள்ள சாலை, நங்கநல்ல தெரு, தேசாய் கதிர்வேல் தெரு, தென்பாதி திருவேங்கடம்பி்ள்ளை பூங்கா சாலை, மாரிமுத்து நகர், கணபதி நகர், வ.உ.சி. கிழக்குதெரு உள்ளிட்ட சாலைகள் தார் சாலைகளாக அமைக்கப்பட்டு வருகிறது.
    குத்தாலம் அருகே விஷம் குடித்த தொழிலாளி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி சாத்தனூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தேவராயன் (வயது 30). இவர் மயிலாடுதுறையில் உரக்கடை ஒன்றில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 12-ந் தேதி வேலைக்கு செல்வதாக சொல்லி சென்றவர் மாலை வீட்டிற்கு வரவில்லை. வாணாதிராஜபுரம் பஸ் நிறுத்தம் அருகே தேவராயன் மது போதையில் கிடப்பதாக போன் மூலம் அவரது குடும்பத்தினருக்கு தகவல் வந்துள்ளது. 

    உடனே உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் விஷத்தை குடித்து விட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

    இதையடுத்து தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி தேவராயன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மயிலாடுதுறை அருகே இடத்தை விற்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் பல்லவராயன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 45). இவருடைய மனைவி வனிதா (34). சம்பவத்தன்று பாலகிருஷ்ணன் தனக்கு சொந்தமான இடத்தை தனது அண்ணனுக்கு விற்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

    இதனை அறிந்த வனிதா தனது கணவர் பாலகிருஷ்ணனிடம் எதற்காக இடத்தை விற்பனை செய்கிறீர்கள். அந்த இடத்தை விற்பனை செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளார். இதனால் வனிதாவிற்கும் பாலகிருஷ்ணனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    அப்போது பாலகிருஷ்ணன், வனிதாவை தாக்கியுள்ளார். இதில் வனிதாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த வனிதா மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    இந்த சம்பவம் தொடர்பாக வனிதா கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் பாலகிருஷ்ணனை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    ×