என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்வாணன்
    X
    தமிழ்வாணன்

    மீன்பிடிப்பதில் தகராறு: பூம்புகாரில் மீனவர் அடித்துக்கொலை

    மீன்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக பூம்புகாரில் மீனவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதனால் கொலையாளிகளை கைது செய்யக்கோரி அவரது உறவினர்கள் மற்றும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவெண்காடு:

    மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் வைரக்கண்ணு. இவருடைய மகன் தமிழ்வாணன்(வயது35). மீனவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவதாஸ் மகன் சுகந்தன்(25) என்பவருக்கும் மீன்பிடிப்பது தொடர்பாக கடல் பகுதியில் பிரச்சினை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 8-ந்தேதி தனது வீட்டில் தமிழ்வாணன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த சுகந்தன் மற்றும் மர்ம நபர்கள் தமிழ்வாணனை பைப், கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த தமிழ்வாணன் ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார். அவரை குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இது குறித்து பூம்புகார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தமிழ்வாணன் நேற்று அதிகாலை இறந்தார். இதைக் கேள்விப்பட்ட தமிழ்வாணனின் உறவினர்கள் மற்றும் மீனவ கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பூம்புகார் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். அப்போது அவர்கள் கொலையாளிகளை கைது செய்யக்கோரி கோஷம் எழுப்பினர்.

    இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு யுவபிரியா, பூம்புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல், மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு கொலையாளிகள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். போலீஸ் நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்தால் பூம்புகார் பகுதி முழுவதும் நேற்று பரபரப்பாக காணப்பட்டது. கொலை செய்யப்பட்ட தமிழ்வாணனுக்கு கல்வி என்ற மனைவியும் சஜி, தேவா ஆகிய மகன்களும் உள்ளனர்.
    Next Story
    ×