என் மலர்tooltip icon

    மதுரை

    • மதுரை அருகே பாம்பு கடித்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.
    • இதுகுறித்து உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை உத்தப்பநாயக்கனூரை அடுத்த திம்மநத்தத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 33). இவருக்கு மனைவி பிரேமா உள்ளார். விவசாயியாக வேலை பார்த்து வந்த ரஞ்சித்குமார் சம்பவத்தன்று மதியம் கொப்பிலிப்பட்டி தோட்டத்துக்கு சென்றார்.

    அப்போது அவரை பாம்பு கடித்தது. இதனால் மயங்கி விழுந்த வரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி ரஞ்சித்குமார் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளுடன் பள்ளத்தில் விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    • நேற்று முன்தினம் வேலைக்கு வந்தவர் பின்னர் வீட்டுக்கு திரும்பவில்லை.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள வடக்கம்பட்டியை சேர்ந்தவர் மணி(50). கள்ளிக்குடியில் உள்ள ஓட்டலில் ஊழியராக பணிபுரிந்தார். இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில் மகனுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு வந்த மணி, பின்னர் வீட்டுக்கு திரும்பவில்லை.

    இந்தநிலையில் கள்ளிக்குடி-டி.கல்லுப்பட்டி மெயின்ரோட்டில் அகத்தாபட்டி கண்மாய் கரையில் உள்ள பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் ஒருவர் தவறி விழுந்து இறந்து கிடப்பதாக பொதுமக்கள் கள்ளிக்குடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சென்று பார்த்த போது இறந்து கிடந்தது மணி என்பது தெரியவந்தது.

    • மதுரை-விழுப்புரம் ெரயில் வழக்கம் போல இயங்கும்.
    • இந்த தகவலை மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    மதுரை

    தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை-விழுப்புரம் ெரயில் இன்று (10-ந் தேதி) முதல் வருகிற 15-ந் தேதி வரை திண்டுக்கல்லில் இருந்து இயக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் அங்கு பராமரிப்பு பணிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எனவே மதுரை-விழுப்புரம் ெரயில் வழக்கம் போல் இயங்கும் என்று மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    • ரஜினிகாந்தை அரசியலுக்கு இழுக்கும் வகையில் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
    • மதுரை மண்ணின் மைந்தர்கள் வித்தியாசமாக யோசிக்க கூடியவர்கள்.

    மதுரை:

    தமிழ் திரை உலகில் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார். அவரது பிறந்தநாள் சில நாட்களில் வருகிறது. இதையொட்டி ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

    மதுரையில் வித்தியாசமாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், "கோடிகளை குவிக்க விளம்பரத்தில் கூட நடிக்காதவன் நீ, தேடி வந்த உயர் பதவிகளை விரும்பாதவன் நீ, இதுவே தமிழகத்தை நீ ஆள தகுதி என 7 கோடி மக்களின் தீர்ப்பு ஆயிரம் அதிசயம் அமைந்தது உன் ஜாதகம்" என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த வாசகங்கள் ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைப்பது போல உள்ளது.

    மதுரை மண்ணின் மைந்தர்கள் வித்தியாசமாக யோசிக்க கூடியவர்கள், போஸ்டர்கள் மூலம் பரபரப்பை ஏற்படுத்துபவர்கள். அந்த வகையில் இந்த போஸ்டர்களும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பெரியார் பஸ் நிலைய சிக்னலில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் படுகாயம் அடைந்தார்.
    • போக்குவரத்து போலீசார் அலட்சியத்தால் இந்த விபரீதம் நடந்தது.

    மதுரை

    மதுரை அம்பலத்தாடியை சேர்ந்தவர் சுப்புராமன் (வயது 45). சம்பவத்தன்று இரவு இவர் பெரியார் பஸ் நிலையத்துக்கு வந்தார். பெரியார் மேம்பால சிக்னலை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் சுப்புராமன் படுகாயம் அடைந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தி னர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பெரியார் பஸ் நிலையம் அருகில் உள்ள போக்குவரத்து சிக்னல் முன்பு போலீசார் நின்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவது வழக்கம்.

    அவர்களுக்கு மீனாட்சி அம்மன் கோவில் செல்லும் வழியில் (நேதாஜி ரோடு), கட்டபொம்மன் சிலை அருகில் பிரத்யேக பூத்துகள் அமைத்து தரப்பட்டது. ஆனால் போலீசார் 24 மணி நேரமும் பூத்துக்குள்ளேயே உட்கார்ந்து கொண்டி ருக்கின்றனர்.

    பெரியார் மேம்பால சிக்ன லில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில்லை. பெரியார் மேம்பாலத்தில் சிக்னலின்றி வாகனங்கள் இடதுபுறம் செல்ல தடை விதிக்கப்பட்டு அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் வாகனங்கள் அத்துமீறி செல்கின்றன.

    இதனை போக்குவரத்து போலீசார் கவனிப்ப தில்லை. அதேபோல் பெரி யார் மேம்பாலத்தில் போக்கு வரத்து சிக்னல்களை வாகன ஓட்டிகள் மதிப்பதும் இல்லை.

    இதன் காரணமாக அங்கு அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. போக்குவரத்து உயரதிகாரிகள் இந்த விஷயத்தில் உடனடியாக கவனம் செலுத்தி பெரி யார் மேம்பாலத்தில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் வகையில் போலீசாரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து விதி முறைகளை மீறி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதேபோன்று காள வாசல் சிக்னலிலும் போலீசார் பெரும்பாலும் பூத்துக்குள்ளேயே உட்கார்ந்துள்ளனர். தானி யங்கி சிக்னல் என்பதால் போலீசார் சாலையில் நின்று போக்குவரத்தை ஒழுங்கு படுத்த முன்வருவதில்லை. தானியங்கி சிக்னல் காரணமாக வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து சென்று விடுவார்கள் என்ற அலட்சிய போக்கு போலீசாருக்கு உள்ளது.

    சாலை சந்திப்பில் நின்று போக்குவரத்தை போலீசார் ஒழுங்கு படுத்தினால்தான் வாகன ஓட்டிகளும் சீராக சென்று வருவார்கள் என்பதை அவர்கள் உணரவேண்டும். காளவாசல் சிக்னல் பகுதியிலும் போலீசார் சாலையில் நின்று போக்கு வரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • போதை மாத்திரை கும்பல் தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
    • மாணவ-மாணவிகளுக்கு விற்று வந்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

    மதுரை:

    மதுரையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மர்ம நபர்கள் சிலர் போதை மாத்திரைகள் சப்ளை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே அதில் தொடர்புடை யவர்களை கைதுசெய்ய மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தர விட்டார்.

    அவரது உத்தரவின் பேரில் மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில், திடீர் நகர் உதவி கமிஷனர் ரவீந்திர பிரகாஷ் ஆலோசனையின் பேரில், எஸ்.எஸ்.காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    போதை மாத்திரை கும்பல் தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது மேலக்கால் மெயின் ரோட்டில் உள்ள பள்ளி அருகே 3பேர் மோட்டார் சைக்கிளில் வந்து மாணவ-மாணவிகளுக்கு போதை மாத்திரைகளை சப்ளை செய்வது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அந்த பகுதிக்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர். அப்போது பள்ளி மாணவ-மாணவிகளுக்கு போதை மாத்திரைகள் விற்ற 3 பேர் கையும் களவுமாக பிடிபட்டனர். அவர்களிடம் சோதனை செய்தபோது 28 போதை மாத்திரைகள் வைத்திருந்தனர்.

    இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் துவரிமான் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்த ரகு (வயது 28), கணேசபுரம் முத்து(28), எஸ்.எஸ். காலனி அருண் சக்கரவர்த்தி(25) என்பது தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகள், 2 செல்போன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் அருண் சக்கரவர்த்தி ரஷ்யாவில் மருத்துவம் படித்து பாதியிலேயே விட்டு விட்டு மதுரைக்கு வந்து மருந்து கடை நடத்தி வருகிறார்.

    அவரிடம் ரகு, முத்து ஆகிய 2 பேரும் போதை மாத்திரைகள் விற்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி உள்ளனர். அறுவை சிகிச்சை முடித்தவர்களுக்கு காயங்களை குணப்படுத்துவதற்காக சில வலி நிவாரணி மாத்திரைகளை டாக்டர்கள் பரிந்துரைப்பார்கள். அதுபோன்ற மாத்திரைகளை, போதை மாத்திரை என கூறி விற்பனை செய்ய 3 பேரும் முடிவு செய்துள்ளனர்.

    அதன்படி மாணவ-மாணவிகளுக்கு விற்று வந்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. அவர்களிடம் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கப்பலூர் டோல்கேட் எதிர்ப்பு குழுவினர் முதல்-அமைச்சரை சந்தித்து மனு அளித்தனர்.
    • இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    திருமங்கலம்

    மதுரை அருகே உள்ள கப்பலூரில் டோல்கேட் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ளது. இதை அகற்ற வலியுறுத்தி டோல்கேட் எதிா்ப்பு ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு அவர்கள் தலைமையில் போராட் டங்கள் நடந்து வருகிறது.

    இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மாதம் 22-ந் தேதி திருமங்கலம் நகர் முழுவதும் கடைய டைப்பு போராட்டம் நடந்தது. மதுரை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கப்பலூர் டோல்கேட் எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழுவினர் கப்பலூர் டோல்கேட் அகற்ற வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

    இதுகுறித்து கப்பலூர் டோல்கேட் எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த தலைவர் ஜெயராமன் கூறியதாவது:-

    மனுவை பெற்று கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பாராளுமன்றத்தில் கப்பலூர் டோல்கேட் பிரச்சினை குறித்து மாணிக்கம்தாகூர் எம்.பி. பேசியுள்ளார். மத்திய மந்திரி நிதின்கட்கரியை டெல்லியில் சந்திக்க எம்.பி. ஏற்பாடு செய்துள்ளார்.

    சமீபகாலமாக கப்பலூர் டோல்கேட் நிர்வாகம் சார்பில் அவர்களது எல்லை தொடக்கம் முதல் முடிவு வரையில் நான்கு வழிச்சாலையில் கடை அல்லது வீடு கட்டினால் ரவுடிகளை வைத்து மிரட்டி பணம் கேட்பதாக பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது டோல்கேட் ஒருங்கி ணைப்பு குழுவை சேர்ந்த வழக்கறிஞர் கனகராஜ், அனிதாபால்ராஜ், கண்ணன், செல்வம், ஆனந்தன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • மதுரை மாவட்டத்தில் 70 ஆயிரம் பேர் ரேஷன் கார்டுடன் வங்கி கணக்கை இணைக்கவில்லை.
    • உணவு பொருள் வழங்கல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மதுரை

    தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் ஏழை- எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அரசின் பணப்பலன்கள் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமும் சென்ற டைவதற்கான ஏற்பாடு களை செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

    அதன்படி மாநில உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இதற்கான நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதிலும் ரேஷன் அட்டைதாரர்களிடம் வங்கி கணக்குகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவை உடனுக்குடன் மாநில உணவு பொருள் வழங்கல் இணையதளத்தில் பதி வேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரேஷன் கார்டு தாரர்களின் வங்கி கணக்கு தொடர்பாக ஆய்வு நடத்தினார்கள். இதில் தமிழகம் முழுவதிலும் 14,86,000 பேரிடம் வங்கி கணக்கு இல்லை என்பது தெரிய வந்தது.

    அதிலும் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கள்ளிக்குடி-1029, மதுரை வடக்கு தாலுகா- 11,004, மதுரை வடக்கு- 7744, மதுரை மேற்கு- 11742, மதுரை மத்தி-7144, மதுரை கிழக்கு-7909, மதுரை மேலூர்- 6139 பேரையூர்- 4188, திருமங்கலம்- 3188, உசிலம்பட்டி-4763, வாடிப்பட்டி- 5618 ஆகிய பகுதிகளில் வசிக்கும் மேற்கண்ட ரேஷன் கார்டுதாரர்கள் வங்கி கணக்கை சமர்ப்பிக்க வில்லை என்பது தெரிய வந்துள்ளது.

    மதுரை மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 70 ஆயிரத்து 468 பேர் வங்கி கணக்கு ஒப்படைக்க வில்லை. எனவே ரேஷன் கார்டு அலுவலகத்தில் வங்கி கணக்கு சமர்ப்பிக்காத வாடிக்கையாளரிடம் கேட்டு பெறுவது, இல்லாத வர்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை மூலம் 'ஜீரோ பேலன்ஸ்' அடிப்படையில் புதிய கணக்கு தொடங்கி அதன் விவரங்களை சென்னை சேப்பாக்கம் அலுவ லகத்திற்கு சமர்ப்பிக்கும் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழக அரசின் பணப் பலன்கள் ரேசன் கார்டு மூலம் வாடிக்கையாளரை சென்றடைய வேண்டும் என்பதற்காக, வங்கி கணக்கு விவரங்கள் இணைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    • நிலம் கொடுத்தவர்கள் இழப்பீட்டு தொகையை பெற்றுக்கொள்ளலாம் என்று கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
    • இந்த நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை, அதிகாரம் பெற்ற அலுவலர் மற்றும் மதுரை மாவட்ட வருவாய் அலுவலரால் வழங்கப்பட்டு வருகிறது.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மதுரை மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலை எண். 7-ல் பெங்களூர்-சேலம்-மதுரை நான்கு வழிச்சாலை அமைத்தல் மற்றும் விரிவாக்கம் செய்தல் பணிகளுக்காக வாடிப்பட்டி வட்டத்தில், தும்பிச்சாம்பட்டி, தாதம்பட்டி, குலசேகரன்கோட்டை, தேனூர், தனிச்சியம் கிராமங்களும், மதுரை-கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை அமைத்தல் மற்றும் விரிவாக்கம் செய்தல் பணிகளுக்காக மதுரை தெற்கு வட்டத்தில் வடிவேல்கரை, பரவை பிட்-2, சமயநல்லூர் , தனக்கன்குளம், தட்டானூர், தோப்பூர், துவரிமான், விளாச்சேரி பிட்-1 கிராமங்களிலும், திருமங்கலம் வட்டத்தில், கப்பலூர், கொக்குலாஞ்சேரி, மறவன்குளம், மேலக்கோட்டை, நல்லமநாயக்கன்பட்டி, பழக்காபுதுப்பட்டி, செங்குளம், சிவரக்கோட்டை, உச்சப்பட்டி, குதிரைசாணிகுளம், கே.வெள்ளாகுளம், வேங்கிடசமுத்திரம் ஆகிய கிராமங்களிலும் நிலங்கள் 2006-ம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை, அதிகாரம் பெற்ற அலுவலர் மற்றும் மதுரை மாவட்ட வருவாய் அலுவலரால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நில உரிமையாளர்களில் ஒரு சிலர் இழப்பீட்டுத் தொகையை இதுவரை பெற்றுக்கொள்ளாமல் உள்ளனர். இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ளாதவர்கள் அலுவலக வேலை நாட்களில் நிலஉரிமை தொடர்பான சான்று ஆவணங்களுடன் மதுரை மாவட்ட வருவாய் அலுவலருக்கு விண்ணப்பித்து, அவர்களுக்கு பாத்தியப்பட்ட இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை சோழவந்தான், வாடிப்பட்டி ஆகிய பேரூராட்சி பகுதிகளில் மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசினார்.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் உள்ள சோழவந்தான், வாடிப்பட்டி ஆகிய பேரூராட்சி பகுதிகளில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பேசியதாவது;-

    தி.மு.க. அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வால் மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 8 ஆண்டுகள் மின் கட்டணம் உயர்வு இல்லை, சொத்து உயர்வு இல்லை. அப்போது மத்திய அரசு நிர்பந்தம் செய்து கூட மக்கள் மீது விலைவாசி ஏற்றத்தை சுமத்தவில்லை.

    தமிழக மக்களின் வாழ்க்கையை உயர்த்திட மக்கள் வாக்களித்தால், இன்றைக்கு மக்கள் மீது விலைவாசி உயர்வை இந்த அரசு சுமத்தி உள்ளது. எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்தபோது அங்கு அண்ணாயிசம் இல்லாத தால், அ.தி.மு.க.வை தொடங்கினார். ஆனால் இன்றைக்கு மு.க.ஸ்டாலின் எம்.ஜி.ஆர்.யிசத்தை கையில் எடுத்து எம்.ஜி.ஆர். பெரியப்பா என்று கூறு கிறார் .

    தி.மு.க.வில் கருணா நிதியை முதலமைச்சராக்க எம்.ஜி.ஆர். உழைத்தார். ஆனால் அவரை கட்சியை விட்டு நீக்கினார்கள். உழைத்தவருக்கு அங்கு இடம் இல்லை. மக்களும் அவரை தூக்கி வைத்துக் கொண்டதால் இதன் மூலம் அ.தி.மு.க.வை தொடங்கினார். 51 ஆண்டுகாலம் அ.தி.மு.க. மக்களுக்காக பொது சேவையில் தன்னை முழுமையாக அர்ப்ப ணித்துக் கொண்டது.

    அண்ணாயிசம், அம்மாயிசம், எம்.ஜி.ஆர்.யிசம் ஆகியவை அ.தி.மு.க.விற்கு தான் சொந்தம். மு.க.ஸ்டாலின் பேச்சை எந்த தொண்டனும் நம்ப மாட்டார்கள். எம்.ஜி.ஆர். கருணாநிதிக்காக உழைத்தார். அவரை கசக்கி எறிந்ததை தாய்மார்கள் இன்னும் மறக்க மாட்டார்கள். இன்றைக்கு எம்.ஜி.ஆர்.யிசத்தை கையில் எடுத்து தி.மு.க. செல்வாக்கு காணாமல் போய்விட்டது என்பதற்கு இன்றைக்கு மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டார்.தமிழகம் முழுவதும் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மழையே பெய்யதாலும் கூட எடப்பாடி கொடுத்த ஒரு உத்தரவுக்காக தொண்டர்கள் குவிந்துள்ள னர். இந்த கூட்டமே விரைவில் அ.தி.மு.க. ஆளுங்கட்சியாக வர அத்தாட்சியாக உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கும் சிறப்பு முகாம் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறுகிறது.
    • இந்த தகவலை வடக்கு கோட்ட செயற்பொறியாளர், புதூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஆகியோர் தெரிவித்தனர்.

     புதூர்

    மதுரை வடக்கு மின் கோட்டம் சார்பில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான சிறப்பு முகாம் இன்றும், நாளையும் (10-ந் தேதி) நடக்கிறது. புதூர் கவுன்சிலர் அலுவலகம், மூன்று மாவடி ரவுண்டானா, வளர் நகர், உத்தங்குடி பஸ் நிலையம் அருகில், அண்ணா நகர் அம்பிகா தியேட்டர் அருகில், வண்டியூர் கவுன்சிலர் ஆபீஸ் அருகில், அய்யர் பங்களா அய்யாவு தேவர் திருமண மண்டபம், பனங்காடி செக் போஸ்ட், நாராயணபுரம் எம்.ஐ.ஜி. காலனி, கிருஷ்ணாபுரம் காலனி மெயின் ரோடு ஆகிய இடங்களில் இந்த முகாம்கள் நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை பொதுமக்கள் இணைத்துக் கொள்ளலாம். மேற்கண்ட தகவலை வடக்கு கோட்ட செயற்பொறியாளர் மலர்விழி, புதூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் ஆகியோர் தெரிவித்தனர்.

    • சந்தன மரத்தை வெட்டி கடத்தியவர்கள் சிக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அலங்காநல்லூர்:

    மதுரை பாலமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் நேற்று நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாலமேடு ஸ்டேட் பேங்க் வழியாக சுமார் 2.30 மணியளவில் இருசக்கர வாகனத்தில் 3 பேர் வந்தனர்.

    அவர்களை சந்தேகத்தின்பேரில் போலீசார் வழிமறித்தனர். போலீசாரை கண்டதும் அந்த 3 பேரும் தப்பிச்செல்ல முயன்றனர். போலீசார் அவர்களை துரத்தி சென்று பிடித்தனர். அவர்களிடம் சோதனை செய்தபோது சந்தன மரக்கட்டைகள் மற்றும் அரிவாள், கோடாரி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. அவர்கள் யார் என்று விசாரித்தபோது திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையை சேர்ந்த முருகன் (வயது 30), சஞ்சீவி (36), மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்த மணி(26) என்பது தெரியவந்தது.

    அவர்கள் பாலமேடு அருகே உள்ள மாணிக்கம்பட்டி வனப்பகுதியில் சந்தன மரத்தை சிறிய கட்டைகளாக வெட்டி கடத்தி கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சந்தன கட்டைகள், கோடாரி, அரிவாள், மரம் அறுக்கும் ரம்பம் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும் இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்று கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பாலமேடு அருகே உள்ள பாறைப்பட்டியை சேர்ந்த செல்வம் (35) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தன மரத்தை வெட்டி கடத்தியவர்கள் சிக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×