என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு போதை மாத்திரை சப்ளை- மருந்து கடை உரிமையாளர் உள்பட 3 பேர் கைது
    X

    மதுரையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு போதை மாத்திரை சப்ளை- மருந்து கடை உரிமையாளர் உள்பட 3 பேர் கைது

    • போதை மாத்திரை கும்பல் தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
    • மாணவ-மாணவிகளுக்கு விற்று வந்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

    மதுரை:

    மதுரையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மர்ம நபர்கள் சிலர் போதை மாத்திரைகள் சப்ளை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே அதில் தொடர்புடை யவர்களை கைதுசெய்ய மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தர விட்டார்.

    அவரது உத்தரவின் பேரில் மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில், திடீர் நகர் உதவி கமிஷனர் ரவீந்திர பிரகாஷ் ஆலோசனையின் பேரில், எஸ்.எஸ்.காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    போதை மாத்திரை கும்பல் தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது மேலக்கால் மெயின் ரோட்டில் உள்ள பள்ளி அருகே 3பேர் மோட்டார் சைக்கிளில் வந்து மாணவ-மாணவிகளுக்கு போதை மாத்திரைகளை சப்ளை செய்வது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அந்த பகுதிக்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர். அப்போது பள்ளி மாணவ-மாணவிகளுக்கு போதை மாத்திரைகள் விற்ற 3 பேர் கையும் களவுமாக பிடிபட்டனர். அவர்களிடம் சோதனை செய்தபோது 28 போதை மாத்திரைகள் வைத்திருந்தனர்.

    இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் துவரிமான் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்த ரகு (வயது 28), கணேசபுரம் முத்து(28), எஸ்.எஸ். காலனி அருண் சக்கரவர்த்தி(25) என்பது தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகள், 2 செல்போன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் அருண் சக்கரவர்த்தி ரஷ்யாவில் மருத்துவம் படித்து பாதியிலேயே விட்டு விட்டு மதுரைக்கு வந்து மருந்து கடை நடத்தி வருகிறார்.

    அவரிடம் ரகு, முத்து ஆகிய 2 பேரும் போதை மாத்திரைகள் விற்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி உள்ளனர். அறுவை சிகிச்சை முடித்தவர்களுக்கு காயங்களை குணப்படுத்துவதற்காக சில வலி நிவாரணி மாத்திரைகளை டாக்டர்கள் பரிந்துரைப்பார்கள். அதுபோன்ற மாத்திரைகளை, போதை மாத்திரை என கூறி விற்பனை செய்ய 3 பேரும் முடிவு செய்துள்ளனர்.

    அதன்படி மாணவ-மாணவிகளுக்கு விற்று வந்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. அவர்களிடம் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×